பால் பொங்க இன்பம் பெருக கொண்டாடப்படும் இனிய பொங்கலின் சிறப்புகள்
தமிழர் திருநாள், உழவர் திருநாள், தை திருநாள் என்று முதலில் விவசாயிகளால் பெருமையோடு இயற்கைக்கு நன்றி தெரிவித்து கொண்டாடப்பட்டுவந்த பொங்கல் திருநாள் இன்று விவசாயிகள் மட்டுமல்லாமல் சாதி மத வேறுபாடின்றி ஆந்திரா, கேரளா, பீகார் என பல்வேறு மாநிலங்களிலும் சிங்கப்பூர், கனடா, பிரான்ஸ், மொரிசியஸ் என பல்வேறு நாடுகளிலும் மிக மிக விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படி உலகெங்கும் கோலாகலமாக கொண்டாடப்படும் பொங்கல் திருநாள் குறித்து இந்த கட்டுரையில் காண்போம்.
தமிழ்நாட்டை பொறுத்தவரையில் போகி என தொடங்கி காணும் பொங்கல் என 4 நாள் விழாவாக இது கொண்டாடப்படுகிறது. போகி நாளில் மக்கள் அதிகாலையில் எழுந்து வீட்டின் பழைய பொருட்களை எரித்து புதியவைகளை வரவேற்கின்றனர். இந்த போகி பண்டிகையானது பகவான் இந்திரனை வழிபடும் நாளாகும். புராணத்தின்படி வெயிலையும் மழையையும் படைத்த இந்திரன், தான் தான் பெரிய சக்தியுள்ளவன் என்ற அகங்காரம் கொண்டிருந்தான். அந்த அகங்காரத்தை போக்கவே பகவான் கிருஷ்ணர் யாரும் இந்திரனை வழிபடாமல் கோவர்தன மலையை வழிபடுங்கள் என்று கூறவே மக்களும் கோவர்த்தன மலையை வணங்க தொடங்கினர். இதை கண்டு ஆத்திரம் அடைந்த இந்திரன் மக்களுக்கு அதீத மழை பெய்ய செய்தான். ஆனால், பரமாத்மா கிருஷ்ணரோ தனது சுண்டு விரலால் கோவர்த்தன மலையை தூக்கி பிடித்து மக்களை காப்பாற்றினார். இவரின் செயலால் தனது தவறை உணர்ந்த இந்திர பகவான், கிருஷ்ணரிடம் மன்னிப்பு கேட்டார். தனது தவறை உணர்ந்த இந்திரனுக்கு மன்னிப்பு அருளி போகி பண்டிகையன்று மக்கள் அனைவரையும் இந்திரனை வணங்க சொல்லி அறிவித்தார். இந்த வரலாற்றின் படியே போகி பண்டிகை அன்று இந்திரனை பிரார்த்திக்கிறோம்.
சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அமைந்திருப்பதுதான் தை மாதத்தில் வரக்கூடிய தை பொங்கல். இந்த நாளில் அதிகாலை 4 மணி அளவில் எழுந்து குளித்து, புது ஆடை உடுத்தி பெரிய பெரிய வண்ண கோலங்கள் போட்டு வீட்டை பூக்களால் அலங்கரித்து சரியாக சூரிய பகவான் உதயமாகும்முன் வாசலில் பொங்கல் பானை வைத்து அந்த பானையை சுற்றி மஞ்சள் கொம்பு கட்டி மஞ்சள் குங்குமம் வைத்து வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல் என இரண்டு விதமான பொங்கலை பொங்க வைத்து பால் பொங்கும் போது பொங்கலோ பொங்கல்…பொங்கலோ பொங்கல்…. என்று குலவை போட்டு, சூரியன் மற்றும் இயற்கையை வணங்கி அறுவடை சிறப்பாக நிகழ வேண்டும் என பிரார்த்தித்து பொங்கல் வைத்து மகிழ்ந்து வருவர். அப்படி வழிபடும்போது இயற்கை தந்த காய்கறிகளை இலை போட்டு இறைவனுக்கு படைத்து பின்னர் அதை சமைத்து உண்பர். இன்றளவும் கிராமங்களில் இப்படி நடந்து வந்தாலும் நகர்புறங்களிலோ சூரியன் உதயமான பின் எழுந்து பானை இருக்கிறதோ இல்லையோ ஏதோஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து பொங்கல் செய்து சாப்பிட்டு மகிழும் விதத்தில் பழக்கங்கள் மாறிவிட்டன. பழக்கங்கள் மாறினாலும் இன்றளவும் பொங்கல் கொண்டாடும் வழக்கம் மாறாமல் இருப்பது மகிழ்ச்சிக்குரியதே. பொங்கல் வைத்து கொண்டாடுவதோடு உரியடித்தல், கரும்பு உண்ணுதல் ஆகிய போட்டிகளை நடத்தி மகிழ்கின்றனர். குறிப்பாக வீட்டில் கொண்டாடப்பட்ட பொங்கல்போய் இன்று பள்ளி, கல்லூரி, அலுவலகங்களில் கொண்டாடப்படும் விழாவாக பொங்கல் மாறிவிட்டது. பொங்கலுக்கு இவ்வளவு முக்கியத்துவம் இருந்தாலும் அந்நாளில் உடுத்தும் உடை, சமைக்கும் சமையல், விளையாடும் விளையாட்டு மூலம் வெளிப்படுவது என்னோவோ நம் தமிழரின் பாரம்பரியம்தான்.
பொங்கலுக்கு தயாராகும் காளைகள்
இப்படி கோலாகலமாக கொண்டாடப்படும் தை பொங்கலின் அடுத்த நாள் உழவுத் தொழிலுக்கு பெரிதும் உதவக்கூடிய மாட்டை போற்றி வணங்கும் கணு மாட்டு பொங்கலாகும். நந்தியை வாகனமாக கொண்டிருக்கும் சிவபெருமான் நந்தியிடம் ஒரு நாள் உலக மக்களிடம் சென்று தினமும் எண்ணெய் குளியல் செய்யவும், மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே சாப்பிட வேண்டும் என்றும் சொல்லிவரக் கூறி அனுப்பினார். ஆனால், நந்தியோ உலகத்தாரிடம் சிவன் சொன்னதற்கு அப்படியே நேர் எதிராக தினமும் சாப்பிட சொல்லியும், மாதத்திற்கு ஒருமுறை மட்டும் எண்ணெய் குளியல் செய்ய வேண்டும் என்றும் சொல்லிவிட்டு வந்தது. இதில் கோபமடைந்த சிவபெருமான் நந்திக்கு தண்டனை தரும் விதமாக நந்தியை ஆயுட்காலம் முழுக்க மக்களுக்கு உணவளிக்க உதவி செய்யுமாறு ஆணையிட்டார். அதன் பின்னரே மாடு உழவு தொழிலுக்கு உதவ தொடங்கியது. உணவுக்கு உதவி புரியும் மாட்டை வழிபடும் விதமாகத்தான் மாடுகளை அன்று நன்றாக குளிப்பாட்டி சில மாடுகளுக்கு உடை போட்டு கொம்புகளில் பலூன் கட்டி கால்களில் கொலுசு கட்டி மாடுகளை அவர்களுக்கு பிடித்த வகையில் அலங்கரித்து வழிபடுவர்.
பொங்கலின் இறுதி நாள்தான் காணும் பொங்கல். காணும் என்றால் காணுதல் என்ற பொருளுக்கேற்ப இந்த நாளன்று மக்கள் பலரும் வெளியில் சென்று உற்றார் உறவினர்களை சந்தித்து மகிழ்ந்து இன்பத்துடன் அந்நாளை கழிப்பர். இப்படி பொங்கலானது ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கலை வட இந்தியாவில் பொதுவாக மகர சங்கராந்தி என்றும், பிற இடங்களில் மாநிலத்திற்கேற்ப வெவ்வேறு பெயர்களாலும் மக்கள் கொண்டாடி வருகின்றனர். அப்படி பொங்கல் கொண்டாடும் சில மாநிலங்கள் குறித்து இங்கே காணலாம்.
ஆந்திரப் பிரதேசம்
ஆந்திரப் பிரதேசத்தில் பொங்கலை ஒட்டி நடைபெறும் சேவல் சண்டை மற்றும் மாட்டு சண்டை
தமிழ்நாட்டில் மிக விமரிசையாக கொண்டாடப்படும் பொங்கலானது, ஆந்திராவில் ‘பெத்த பாண்டுகா’ என்னும் பெயரில் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டைப் போலவே அங்கு பொங்கலானது, போகியிலிருந்து தொடங்கி காணும் பொங்கலில் நிறைவு பெறுகிறது. பொங்கலின் முதல் நாளான போகி பண்டிகை அன்று பழைய பொருட்களை எரிப்பர். இரண்டாம் நாளன்று மக்கள் வாசலில் பெரிய பெரிய ரங்கோலிகள் வரைந்து அதன் நடுவில் ‘கோப்பெம்மா’ என்று அழைக்கப்படும் மாட்டுச்சாணத்தை உருண்டை செய்து வைத்து வீதியை அலங்கரிப்பர். மேலும் மஞ்சள், கரும்பு, பருப்பு, அரிசி போன்றவற்றையும் கோலத்தில் சேர்க்கின்றனர். இது தவிர்த்து வீட்டை சாமந்தி பூ மற்றும் வண்ண வண்ண பூக்களால் அலங்கரித்து மாவிலை தோரணம் கட்டி அழகுபடுத்துவர்.
குறிப்பாக ஆந்திர மாநிலத்தில் இந்த பொங்கல் திருநாளில் காத்தாடி பறக்கவிட்டு மகிழ்வர். சேவல், மாட்டு சண்டை போன்றவையும் நடைபெறும். மக்கள் பாரம்பரிய உடை அணிந்து ‘சர்க்கரை பொங்கல்’ செய்து இறைவனை பிரார்த்தித்துக் குடும்பத்துடன் கோயிலுக்கு சென்று வழிபடுவர். இந்த சங்கராந்தி நாளில் ஹரிதாசு, பஸ்வண்ணா ஆகியோரையும் பார்க்கலாம். ஆந்திராவின் பொங்கல் ஸ்பெஷலாக அம்மாநிலத்தின் பாரம்பரிய உணவுகளான செக்கலு, சக்கராலு, அரிசிலு, புரலு, கவ்வலு, பூர்ணாலு, பூண்டி மிட்டாய், பூந்தி லட்டு, கரேலு, சக்கினாலு, நுவ்வுலா அப்பலு, கட்டே அப்பலு அல்லது கரம் அப்பலு, மதுகுலு, பெல்லம், பெல்லம் அரிசிலு, அப்பலு முதலியவற்றை செய்து பகிர்ந்து உண்பார்கள்.
கணுமா என்று சொல்லப்படும் மாட்டு பொங்கலன்று விவசாயிகள் தங்கள் கால்நடைகளை அழகாக அலங்கரித்து அவர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றனர். இங்கு பொங்கலின் நான்காவது நாள் முக்கணுமா என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் மக்கள் அசைவ உணவுகளை சமைத்து சாப்பிட்டு ஊர் சுற்றி பார்த்து மகிழ்கின்றனர்.
அசாம்
அசாம் மாநிலத்தில் ‘மாக் பிஹு’ என்னும் பெயரில் கொண்டாடப்படும் பொங்கல் மற்றும் எரிக்கப்படும் பெலகர்
அசாம் மாநிலத்தில் பொங்கல் ‘மாக் பிஹு’ என்னும் பெயரில் ஜனவரி 14 தொடங்கி ஜனவரி 15 என இருநாள் விழாவாக கொண்டாடப்படுகிறது. மாக் பிஹு கொண்டாட்டங்கள் அஸ்ஸாம் நாட்காட்டியில் 'பூஹ்' மாதத்தின் கடைசி நாளில் தொடங்குகின்றன. அசாமில் மூன்று வகையான பிஹு பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. அசாமின் புத்தாண்டு தொடக்கத்தை குறிக்கும் விதமாக ‘ரோங்காலி பிஹு’ ஏப்ரல் மாதத்திலும், நெற்பயிர்களை விதைத்து நடவு செய்ததை ‘கடி பிஹு’ என்று அக்டோபர் மாதத்திலும், அறுவடை பருவத்தின் முடிவை ‘மாக் பிஹு’ என ஜனவரியிலும் கொண்டாடப்படுகின்றன. மாக் பிஹு என்பது மகர் தோமாஹி என்றும் அழைக்கப்படுகிறது. இரண்டு நாட்கள் கொண்டாடப்படும் மாக் பிஹுவின் முதல் நாள் உருகா அல்லது பிஹு ஈவ் என்று அழைக்கப்படுகிறது. இதையொட்டி இளைஞர்கள் பெரும்பாலும், குறிப்பாக ஆண்கள் ‘வயல்களுக்குச் சென்று மூங்கில், இலைகள் மற்றும் ஓலைகள் பயன்படுத்தி குடிசைகள் அல்லது பெலகர்களைக் கட்டுகின்றனர். இந்த நாளின் இன்றியமையாத ஒன்றாக அமைந்திருப்பது மேஜி அல்லது கேம்ப் ஃபயர் தான். பிஹு அதிகாலையில் எழுந்து, நெருப்பை உண்டாக்கி கடவுளை பிரார்த்தனை செய்து மக்கள் பலவிதமான உணவுகளைத் தயாரித்து பகிர்ந்து உண்டு, உருகா இரவில் கேம்ப் ஃபயரை சுற்றி கூட்டமாக பாட்டு பாடி நடனமாடி மகிழ்கின்றனர். அடுத்த நாள் மக்கள் அதிகாலையில் குளித்து, மேஜியை எரித்துவிடுகின்றனர். இதுவே அசாம் மக்கள் கொண்டாடும் அறுவடை முறையாகும். மேலும் இந்த திருவிழாக்களில் தெகேலி போங்கா (பானை உடைத்தல்) மற்றும் எருமை சண்டை என இரண்டு பாரம்பரிய அசாமிய விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன. இது தவிர சேவல் சண்டை, முட்டை சண்டையும் உண்டு. திருவிழாவின் முக்கிய அம்சமாக கருதப்படும் அரிசி கேக் அனைவருக்கும் வழங்கப்படுகிறது. டில் (எள்), நரிகோல் (தேங்காய்), தெகேலி, கிலா மற்றும் சுங்க பித்தங்கள் என பல வகையான அரிசி கேக்குகள் பகிரப்படுகின்றன. லாரு, தேங்காய் சார்ந்த இனிப்பு வகையும் உற்பத்தி செய்யப்படுகிறது. எள், தேங்காய், பஃப்டு ரைஸ் ஆகியவற்றால் லட்டும் தயார் செய்யப்பட்டு பகிரப்படுகிறது.
கர்நாடகா
கர்நாடகாவில் கவி கங்காதரேஷ்வரா கோயிலில் சூரியனின் கதிர்கள் கருவறையில் உள்ள லிங்கத்தின் மீது விழும் அரிய காட்சி
கர்நாடகாவில், பொங்கல் 'சங்கராந்தி' என்று அழைக்கப்படுகிறது. இந்த நன்னாளில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் புத்தாடை உடுத்தி தங்களுடைய உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வதோடு எள்ளு உணவு வகைகள், கரும்புகள், உலர்ந்த தேங்காய் துண்டுகள், வேர்க்கடலை மற்றும் வறுத்த பருப்பு கலவை போன்றவற்றையும் பரிமாறிக்கொள்வர். எல்லா பரிவர்த்தனைகளிலும் இனிமை நிலவ வேண்டும் என்ற நோக்கில் இவை பரிமாறிக்கொள்ளப்படுகின்றன. மேலும் பசுக்கள் மற்றும் காளைகள் அலங்கரிக்கப்பட்டு 'பொங்கல்' உணவளிக்கப்பட்டு, மாலையில், மேளம் மற்றும் இசை முழங்க, கால்நடைகள் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுகின்றன. கோயில்களிலும், வீடுகளிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. இரவில் நெருப்பு மூட்டி விலங்குகளை நெருப்பின் மேல் குதிக்க வைக்கிறார்கள். மேலும் இந்த திருநாளில் பெங்களூரு கவிபுரத்தில் உள்ள கவி கங்காதரேஷ்வரா (சிவா) கோயிலில், மாலை நேரத்தில் சூரியனின் கதிர்கள் நந்தியின் கொம்புகள் வழியாக கருவறையில் உள்ள லிங்கத்தின் மீது விழும் ஓர் அரிய நிகழ்வும் காணப்படுகிறது.
உத்தரப் பிரதேசம்
உத்தரப் பிரதேசத்தில் பிரயாக்ராஜில் புனித நீராடும் மக்கள்
உத்தரப் பிரதேசத்தில் பொங்கல் திருநாள் ‘கிச்சேரி’ என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் கங்கை, யமுனா மற்றும் சரஸ்வதி நதிகள் ஒன்றாக பாயும் பிரயாக்ராஜில் உள்ள சங்கமத்தில் திரளான மக்கள் குவிந்து நீராடுவது மிக மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த புனித நதிகள் சங்கமிக்கும் இடத்தில் ஒவ்வொரு ஆண்டும் கும்பமேளா ஒரு மாதம் முழுவதும் நடைபெறும். உத்தரப்பிரதேசத்தின் மலைப்பகுதியில் வாழும் மக்களின் நம்பிக்கையின்படி இந்த திருநாளில் அந்நதியில் குளிக்காதவர் அடுத்த பிறவியில் கழுதையாக பிறப்பார்கள் என்ற ஆழ்ந்த நம்பிக்கை மக்களிடம் உண்டு. ஒவ்வொரு ஆண்டும் மகர சங்கராந்தியை முன்னிட்டு, அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமத்தில் ஒரு பெரிய மேளா அல்லது கண்காட்சி ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த மேளா, மாக மாத தொடக்கத்தில் நடைபெறுவதால் இத்திருவிழா மாக மேளா என்று அழைக்கப்படுகிறது. திரிவேணி தவிர, உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஹரித்வார் மற்றும் கர் முக்தேஷ்வர் போன்ற இடங்களிலும் சடங்கு ஸ்நானம் ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் பட்டம் பறக்கவிடும் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
குஜராத்
குஜராத்தில் மகர சங்கராந்தியானது ‘உத்தராயண்’ என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 13 அல்லது 14-ல் கொண்டாடப்படும் உத்தராயண் நாளில் வானத்தில் காத்தாடியை பறக்கவிடுவதோடு ஒவ்வொரு குடும்பமும் மற்றவர்களின் காத்தாடியை அறுக்க முயற்சிப்பது இந்த நாளின் மிக சிறப்பான நிகழ்வாகும். விடியற்காலை முதல் மாலை வரை எண்ணற்ற வண்ணங்கள், வடிவங்கள் மற்றும் அளவுகள் கொண்ட காத்தாடிகள் வானத்தை அலங்கரிக்கின்றன. இப்படி ஆயிரக்கணக்கான காத்தாடிகள் நிறைந்த வானம் பார்ப்பதற்கு அற்புதமான காட்சியாக இருக்கிறது.
உத்தராயண் அல்லது மகர சங்கராந்தி பண்டிகையுடன் இணைந்து ஜனவரி 14 அன்று தலைநகர் அகமதாபாத்தில் சர்வதேச காத்தாடி திருவிழாவும் நடத்தப்படுகிறது. குஜராத் மக்கள் உத்தராயணத்தை உற்சாகத்துடன் கொண்டாடும் விதமாக அனைத்து வணிகங்களும் 3 முதல் 4 நாட்களுக்கு நிறுத்தப்படுகிறது. இவ்விழாவானது குளிர்காலத்தின் முடிவைக் குறிக்கும் கொண்டாட்டமாக இருக்கிறது. காலை முதல் மாலை வரை உற்சாகத்தோடு கொண்டாடப்படுவதோடு, அந்நாளின் இரவு நேரத்திலும் ‘துக்கால்ஸ்’ என்று அழைக்கப்படும் ஒளிரும் பெட்டிக் காற்றாடிகள், பெரும்பாலும் ஒரு வரிசை தொடரில் கட்டப்பட்டு வானத்தில் பறக்கவிடப்படுகின்றன. இந்த காற்றாடிகள் இருண்ட இரவுக்கு வெளிச்சம் சேர்த்து அந்நாளை மிக உற்சாகத்துடனும் சந்தோஷத்துடனும் நிறைவு செய்கின்றன.
குஜராத்தில் ‘உத்தராயண்’ என்ற பெயரில் கொண்டாடப்படும் பொங்கல்
இப்படி பொங்கல் பண்டிகையானது, இந்தியாவின் பல மாநிலங்களில் பல பெயர்களால் கொண்டாடப்பட்டு வந்தாலும் உலகெங்கும் பல நாடுகளில் வசித்துவரும் இந்தியர்கள் மற்றும் தமிழர்கள் இந்த பொங்கல் பண்டிகையை அந்தந்த நாட்டில் மரபை மறக்காமல் மிக சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். வெறும் பொங்கல் நாட்களில் மட்டும் இன்பம் பொங்கி வராமல் ஆண்டு முழுவதும் இன்பம் பொங்க வேண்டும் என்று இறைவனை மனதார பிரார்த்தித்து இன்பம் பொங்க பொங்கல் திருநாளை கொண்டாடி மகிழ்வோம்.