"பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்

பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்

எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண்

இளைப்பில்லை காணென்று கும்மியடி" என்பது மகாகவி பாரதியின் பெண் விடுதலை பாட்டு.

பாரதியாரின் இந்த பாட்டிற்கு ஏற்ப உலக அளவில் சகல துறைகளிலும் கால்தடம் பதித்து, அவற்றில் சிறந்தும் விளங்குகிறார் இந்திய வம்சாவளி பெண்மணியான டாக்டர் ஷீபா லூர்தஸ். ஒரு பெண் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணமாக விளங்கும் ஷீபா லூர்தஸ், தமிழகத்தின் கோவையை பிறப்பிடமாகக் கொண்டவர்.


டாக்டர் ஷீபா லூர்தஸின் சேவையை பாராட்டி செங்கல்பட்டு மாவட்டம் சார்பில் வழங்கப்பட்ட பாராட்டு சான்று

2007-ல் மிஸ் தமிழ்நாடு. 2010 மிஸ் சவுத் இந்தியா போட்டியில் கண்ணழகி, கூந்தல் அழகி பட்டம். இவ்வாறு அழகி போட்டிகளில் பல பட்டங்களை வென்ற ஷீபா லூர்தஸ், தன் சமூக பணிகளால் மக்களின் மனங்களையும் வென்றார். அழகி பட்டம் வென்றுவிட்டோம் என்ற தலைக்கனம் துளியும் இல்லாமல் அப்போதே சமூக தொண்டாற்ற தொடங்கினார் ஷீபா. பெயருக்காகவும், ஊராரின் பாராட்டுக்காகவும் என்றில்லாமல், தன் மனசாட்சிக்கு உண்மையாக அந்த தொண்டை ஆற்றினார்.

அழகில் மட்டுமல்ல அறிவிலும் சிறந்தவர் ஷீபா. ஏராளமான பாடப்பிரிவுகளில் பட்டம் வாங்கியுள்ள அவர், 11 மொழிகளில் வல்லவரும் கூட. இதன் காரணமாக பல்வேறு மொழிகளில் 45 புத்தகங்கள் எழுதி வெளியிட்டுள்ளார். தான் படித்த படிப்பின் மூலம் சொந்த காலில் நின்று, இன்று சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் செயல் அதிகாரியாக உள்ளார். மேலும், உலக அளவில் தலைசிறந்து விளங்கும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களில் ஒருவராகவும் திகழ்கிறார். இவருக்கு அண்மையில் யுனெஸ்கோவின் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இன்ஜினியர்ஸ் நிறுவனம், நிலையான சூழலுக்கான கிரியேட்டிவ் இன்ஜினியர்ஸ் என்ற கருப்பொருளின் கீழ் சர்வதேச சிறந்த பெண் பொறியாளர் என்ற விருதை வழங்கி கவுரவித்தது. இவ்வாறு ஐ.டி. துறையில் கடந்த சில ஆண்டுகளாக தான் சம்பாதித்த ரூ. 4 கோடிக்கும் அதிகமான பணத்தை ஏழை மக்களின் நலனுக்காக வழங்கியுள்ளார் ஷீபா லூர்தஸ்.

அக்னி சிறகு நாயகன் அப்துல் கலாமின் பரம பக்தையான ஷீபா, கலாம் அய்யாவின் கனவை நினைவாக்கும் வகையில், "யுனைடெட் சமாரிடன்ஸ் இந்தியா" என்ற அறக்கட்டளையை தொடங்கி அதன் சர்வதேச தலைவராகவும் இருந்து வருகிறார். அந்த அறக்கட்டளையின் மூலம் ஏராளமான குழந்தைகளை படிக்கவைத்து வருவதுடன், சமூகத்தில் நலிந்த நிலையில் உள்ள பெண்களுக்கும், உடல்நலம் குன்றியவர்களுக்கும், எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கும் உதவி செய்து வருகிறார்.


"யுனைடெட் சமாரிடன்ஸ் இந்தியா" அறக்கட்டளையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின்போது

10 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டு மரக்கன்றுகளை நட்டுவரும் டாக்டர் ஷீபா, தனது வாழ்க்கையில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்களை நட்டுள்ளார். சென்னையில் ஒரே இடத்தில் 2 ஆயிரத்து 500 பேரை ஒன்றுதிரட்டி, கண் தானம் செய்ய வைத்து தெற்காசியாவில் சாதனை நிகழ்த்தியுள்ளார். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் எல்லை ஆய்வுக் கட்டுப்பாட்டிலிருக்கும் அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவளித்து வருகிறார்.

அகவை நாற்பதைக் கூட தொடாத ஷீபா, இதுவரை 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியாவின் பாரம்பரியத்தை பறைசாற்றியுள்ளார். 2 சர்வதேச நோபல் குடிமகன் விருதுகளையும் வென்றுள்ளார். சமூக தொண்டே தன் தலையாய கடமை என்று வாழ்ந்துவரும் ஷீபா, திருமணம் செய்திருந்தால் கருவுற்று, இந்நேரம் ஒன்றிரண்டு குழந்தைகளுக்கு தாயாகியிருப்பார். ஆனால் அன்னை தெரசாவைப்போல கருணை உற்றதால் மனதால் ஏராளமான குழந்தைகளுக்கு தாயாக வாழ்ந்து வருகிறார். மேலும் 4 குழந்தைகளை தனி ஒருத்தியாக தத்தெடுத்து, அவர்களுக்கு படிப்பளித்து, அதில் மூவருக்கு திருமணமும் செய்துவைத்துள்ளார். இத்தனை தொண்டுகளையும் ஷீபா, யாரிடமும் எவ்வித நன்கொடையும் பெறாமல், தனது சொந்த பணத்தில் செய்துள்ளார் என்பதுதான் ஆகச்சிறப்பு.

கல்வி, பரத நாட்டியம், பேச்சு, எழுத்து, கவிதை, இலக்கியம், பத்திரிகை, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, தொழில்நுட்பம், சமூகசேவை என அனைத்திலும் ஓய்வின்றி சுழன்று கொண்டிருப்பதற்கு பின்னால் தன் தாய், தந்தை உள்ளனர் என்று கூறும் ஷீபா லூர்தஸ், ஆச்சர்யங்களின் அணிவகுப்பு என்றே சொல்லலாம்.

Updated On 3 Jun 2024 2:00 PM IST
ராணி

ராணி

Next Story