மறைந்த செல்வி.ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் செயல்பாடுகள் குறித்து துக்ளக் பத்திரிகையின் மூத்த பத்திரிக்கையாளர் திரு.ரமேஷ் பகிர்ந்துகொண்ட நேர்காணலின் முதல் பகுதியை கடந்த வாரம் பார்த்திருந்தோம். அதன் தொடர்ச்சியாக இந்த வாரம் ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அவரின் மறைவு குறித்து பகிர்ந்துக்கொண்ட தகவல்களின் மற்றொரு பகுதியை இங்கே காணலாம்.
மறைந்த செல்வி. ஜெயலலிதா ஒரு நடிகையாக இருந்து அரசியலுக்கு வரும் பொழுது நிறைய விமர்சனங்களை எதிர்கொண்டு சிங்க பெண்ணாக வலம் வந்தார். அவரின் அந்த துணிச்சல் மிக்க செயலை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
நான் அதைப்பற்றி விரிவாக பேச வேண்டாம் என்றுதான் சுருக்கமாக, அவரை நோக்கி சுடு சொற்களை வீசியவர்களை கூட மன்னித்து ஏற்றுக் கொண்டார் என்று கூறியிருந்தேன். அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய முன்னணி தலைவர்களாக இருந்த அனைவருடனும் நெருங்கி பழகி இருக்கிறேன். அதுபற்றி விரிவாக சொல்வது சரியாக இருக்காது. திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த சிலர் அவரை பற்றி மிகவும் மோசமாக பேசியிருக்கிறார்கள். திரைப்படத்துறையில் இருந்து வந்தவர் என்பதால் அவரை பற்றி நளினமாக கணக்கு போட்டு மிகவும் கேவலமாக எல்லாம் பேசியிருக்கிறார்கள். அவருக்கு பல சோதனைகள், நெருக்கடிகள், அவமானங்கள், அச்சுறுத்தல்களை எல்லாம் ஏற்படுத்தினார்கள். உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்று சொன்னால் மறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்தபோது ஒருமுறை ஜெயலலிதா தமிழ்நாடு இல்லத்திலே தங்கி இருந்தார்.
எம்ஜிஆர் சிகிச்சை பெற்ற தருணம் - ஜெயலலிதா பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட புகைப்படம்
அப்போது நள்ளிரவு நேரத்திலே அவர் தங்கியிருந்த அறைக்கு வேறு யாரோ வருகிறார்கள், உடனே காலி செய்து வெளியேறுமாறு அரசியல் ரீதியாக நெருக்கடி கொடுக்கப்பட்டது. சொல்லப்போனால் அப்போது திமுக கூட அந்த நெருக்கடியை கொடுக்கவில்லை. ஆட்சியில் இருந்த அதிமுகதான் அந்த நெருக்கடியை கொடுத்தது. வேறு வழியின்றி அந்த நடு இரவிலே பெட்டியை எடுத்துக்கொண்டு வேறொரு ஹோட்டலுக்கு சென்று தங்கினார். ஆகவே ஏச்சுகள், பேச்சுகள், அவமானங்கள் இவற்றையெல்லாம் கடந்துதான் வந்து இருக்கிறார். அதனால்தான் நான் சொன்னேன் அரசியலில் ஈடுபடுகிற பெண்கள் மட்டுமல்ல எந்த துறையில் பணியாற்றும் பெண்களாக இருந்தாலும் எதிர்கொள்கிற சவால்களை கடந்து மனம் தளராமல் முன்னேறுவதற்கு ஜெயலலிதாவை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதிமுகவை ஜெயலலிதா அளவுக்கு யாராலும் மிகுந்த கட்டுப்பாட்டுடன் வழிநடத்தி இருக்க முடியாது என்று நீங்களே சொன்னீர்கள். ஆனால், அவரின் அந்த கட்டுப்பாடே அதிமுகவினரை அடிமைகள் போல் நடத்துவது போன்ற எண்ணத்தை பலருக்கும் ஏற்படுத்தியது. அதுபற்றி?
அடிமை மாதிரியெல்லாம் நடத்தவில்லை. ஒழுக்கம் (Discipline) என்பது வேறு, அடிமை என்பது வேறு. ஒரு கட்சி என்றால் அதில் ஒழுக்கம் என்பது இருக்க வேண்டும். ஆளாளுக்கு ஒன்று பொதுவெளியில் பேசக் கூடாது. கட்டுப்பாடுகளுக்கு பெயர் போனது காங்கிரஸ் கட்சி. ஒரு கூட்டம் என்றால் சட்டையை கிழித்துக்கொண்டுதான் வெளியில் வருவார்கள். ஒரு கட்சி என்றால் நல்லொழுக்கம், கட்டுக்கோப்பு என்பது இருக்க வேண்டும் என்பதை செயல்படுத்தி காட்டினார் ஜெயலலிதா. இன்றைக்கு சில கட்சிகளை பாருங்கள். சில சமயம் தங்கள் கட்சிகளின் நிலைக்கு மாறாகவோ அல்லது வாய் தவறி உளறுகிற வகையிலோ சில முக்கியஸ்தர்கள் பேசுகிறார்கள். அதற்கு விதி விளக்கே கிடையாது. அது திமுக, காங்கிரஸ், பிஜேபி மட்டுமின்றி இப்போது இருக்கும் அதிமுக போன்ற எந்த கட்சியாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதற்கு காரணம் கட்டுப்பாடு இல்லாததுதான். கட்சி என்றால் இன்னார் பேச வேண்டும். இப்படித்தான் பேச வேண்டும் என்ற ஒழுங்கு இருந்தால்தான் இப்படிப்பட்ட உளறல்கள் வெளியே வராது. அதை செல்வி. ஜெயலலிதா சிறப்பாக செய்து காட்டினார். அவரின் அந்த செயல் பாராட்டத்தக்க ஒன்றுதான். அது அடிமைத்தனம் எல்லாம் கிடையாது.
ஒரு நிகழ்ச்சியில் ஜெயலலிதாவும் சோனியா காந்தியும் சந்தித்து பேசிய தருணம்
ஒரு தலைவருக்கான மரியாதை என்பது நீங்கள் பார்க்கும் பார்வையை பொறுத்தது. அதுபற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து வேறுபாடு இருக்கும். நான் சொல்வதெல்லாம் யாரும் தன்னுடைய காலில் விழ வேண்டும் என்றெல்லாம் ஜெயலலிதா ஆசைப்பட்டது கிடையாது. அதை நான் பக்கத்தில் இருந்து பார்த்தவன். ஒருவர் குனியும்போதே வேண்டாம் வேண்டாம் விழாதீர்கள், வாழ்க என்றுதான் சொல்லுவார். மரியாதைக்கு அப்பாற்பட்டு சிலர் செய்வார்கள். சிலர் வேறு மாதிரி நினைத்து கூட செய்யலாம். ஆனால், அதுபோன்ற நிகழ்வை அவர் ரசித்தார், விரும்பினார் என்று கூறுவதை நான் ஏற்கவில்லை.
ஜெயலலிதா கட்டுப்பாடுகளை தனக்காக வைத்திருந்தாரா? இல்லை இயல்பாகவே அவர் அப்படித்தானா?
ஜெயலலிதா இயல்பாகவே மிகுந்த திட்டமிடுதலுடன்தான் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருவார் என்று மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். அவரின் நினைவாற்றல், அந்த திட்டமிடுதல் குறித்து வியந்து ஒரு அதிகாரி உதாரணத்திற்கு என்ன சொன்னார் என்றால், சென்ற முறை அந்த துறை சம்மந்தமாக நடந்த கூட்டத்தில் ஒரு விஷயம் பேசப்பட்டு இதை செய்ய வேண்டும், இதை follow up செய்து கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறார். அடுத்த முறை வரும் பொழுது நடக்கும் நிகழ்ச்சி வேறாக இருந்தாலும் அதை முடித்துவிட்டு, கடந்த முறை நான் ஒன்று சொல்லியிருந்தேனே அது இப்போது எந்த அளவில் இருக்கிறது என்று செல்வி.ஜெயலலிதா கேட்டாராம். சம்மந்தப்பட்ட அதிகாரியும் அதுகுறித்த லேட்டஸ்ட் தகவல்களை கையில் வைத்திருந்ததால் உடனே அவரும் பதில் அளித்துவிட்டார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் அன்றாடம் எத்தனையோ கோப்புகளை பார்த்து கையெழுத்திடும் முதலமைச்சர், எப்போதோ ஒரு மாதத்திற்கு முன்பு நடந்த கூட்டத்தில் சொல்லப்பட்ட விஷயங்களை நியாபகம் வைத்து கேட்பதுதான் என்று அவர் கூறினார்.
தோழி சசிகலாவுடன்...
அதேபோன்று திருமதி சசிகலாவும் என்னிடம் செல்வி ஜெயலலிதாவின் சின்சியரான பணிகள் குறித்து சில தகவல்களை பகிர்ந்திருக்கிறார். அதில் இரவு 12 முதல் ஒரு மணிவரை தனது செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி அன்றைய பணிகள் குறித்து விவாதித்து அவர்களை அனுப்பி வைத்து விட்டு அவர் படுக்க செல்லும் பொழுது 2, 3 மணி ஆகிவிடும் என்று. அந்த அளவுக்கு மிகவும் கடின உழைப்பாளி, டெடிகேட்டட் மைண்ட் உள்ள ஒரு பெண்மணி செல்வி ஜெயலலிதா. மேலும், சோவும் பலமுறை ஜெயலலிதா பற்றி சொல்லியிருக்கிறார். எந்தவொரு விஷயத்தையும் மிக விரைவாக கிரகித்துக்கொள்ளும் ஆற்றல் படைத்தவர் என்று.
ஜெயலலிதாவிடம் எங்காவது மக்கள் திலகம் எம்ஜிஆருடைய தாக்கம் இருந்ததாக நீங்கள் நினைத்து இருக்கிறீர்களா?
மக்கள் திலகம் எம்ஜிஆரிடம் இருந்து சில விஷயங்களில் மாறுபட்டவர் ஜெயலலிதா. ஆனால், மக்கள் திலகம் எம்ஜிஆரிடம் இருக்கும் மனிதத்தன்மை, மனிதநேய பண்பு இவரிடமும் உண்டு. அரசாங்க உதவிகள் மூலம், அரசாங்க திட்டங்கள் மூலம் அதை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். எம்ஜிஆர் அரசியலில் பதவிக்கு வருவதற்கு முன்பே பொருளாதார ரீதியாக பலருக்கு உதவியவர். ஜெயலலிதா அவர் அளவுக்கு பெரும் பொருள் ஈட்டியவர் கிடையாது. அவர் நம்பர் ஒன் நடிகராக, வாரிக்கொடுக்கிறவராக நீண்ட காலம் இருந்தவர். இயல்பிலேயே அவருக்கு ஈகை குணம் உண்டு. செல்வி. ஜெயலலிதாவும் தன்னுடைய பதவிக்காலத்தில் பலருக்கும் உதவி இருக்கிறார். தன்னுடைய திட்டங்கள் வாயிலாகவும் தன்னுடைய மனித நேயத்தை காட்டியிருக்கிறார்.
மக்கள் திலகம் எம்ஜிஆர் மற்றும் செல்வி. ஜெயலலிதா
அதற்கு உதாரணம் போயஸ் தோட்ட இல்லத்தில் அவர் வாகனம் வரும் வழிகளில் சின்னக்கடைகள் இருந்தன. ஒரு சமயம் அவை அகற்றப்பட்டுவிட்டன. இதனை கவனித்த ஜெயலலிதா இங்கு இருந்த கடைகள் எல்லாம் எங்கே என்று கேட்டு மீண்டும் அந்த கடைகளை வைப்பதற்கு உதவினார் என்று கேள்விப்பட்டேன். அந்த கடைக்காரரும் அதுகுறித்து நேர்காணல்கள் கொடுத்து இருக்கிறார். அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராகவும், ராஜ்யசபா எம்பியாகவும் இருந்த சமயத்தில் வயல் வெளிகளில் வேலை பார்க்கும் பெண்களை நேரடியாக சந்தித்து அவர்களின் கஷ்ட நஷ்டங்களை கேட்டறிந்து தன் கையில் இருப்பவற்றை கொடுத்து உதவியிருக்கிறார்.
அரசியலை தாண்டி ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கை எப்படிப்பட்டது?
ஆன்மீகத்தில் ஆழ்ந்த ஈடுபாடு உடையவர். ஒரு சமயம் நான் சட்டசபை கூட்டத்திலே 15 நாட்கள் இல்லாததை கவனித்து நான் திரும்பி வந்த பிறகு எங்கே ஆளை காணோம் என்று விசாரித்தார். நான் ஹரித்துவார், ரிஷிகேஷ் எல்லாம் சென்று வந்தேன் என்று கூறி பிரசாதத்தை கொடுத்தேன். வண்டிக்குள்ளே அவர் ஷூ அணிந்து இருப்பார். அந்த ஷூவை கழற்றிவிட்டு அந்த பிரசாதத்தை பெற்றுக்கொண்டார். பிறகு ஒருமுறை நான் அவரிடம் பேசும்போது ‘அனுமான் சாலிசா’ என்ற புத்தகம் படிப்பது பற்றி கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு ஆன்மீகத்தில் பற்று கொண்டவர். அதனை அரசியல் ரீதியாகவும் துணிச்சலுடன் வெளிப்படுத்தியதை வியந்து பார்க்கிறேன். தனிப்பட்ட முறையிலே ஆன்மீக நம்பிக்கை இருக்கலாம். ஆனால், அதனை எல்லோரும் வெளிப்படுத்துவது கிடையாது. வெளிப்படுத்தவும் தயங்குகிறார்கள். ஆனால், ஜெயலலிதா அப்படியல்ல. இந்தியாவிலேயே அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்டாமல் வேறு எங்கு கட்டுவீர்கள் என்று கேள்வி கேட்ட முதல் திராவிட இயக்கத் தலைவர் செல்வி.ஜெயலலிதா மட்டும்தான். இப்படி தன்னுடைய ஆன்மீக நம்பிக்கைகளை அழுத்தமாக பயன்படுத்தக் கூடியவர். படிப்பதில் பெரிய ஈடுபாடு உடையவர். தான் அரசியலுக்கு வந்த பிறகு தன்னால் அதிகமாக புத்தகங்களை படிக்க முடியவில்லையே என்று வருத்தப்பட்டார். அவரை சந்திக்கும் பெரும்பாலான தருணங்களில் நான் அவருக்கு புத்தகங்களைத்தான் பரிசாங்க அளிப்பேன்.
ஆன்மீகத்தில் அதீத ஈடுபாடு கொண்ட செல்வி. ஜெயலலிதா
எவ்வளவோ பெரிய அதிகாரிகள் அவரை பார்க்க காத்திருந்தபோதும் அவரை சந்திக்கும் பாக்கியம் உங்களுக்கு எளிதாக கிடைத்தது எப்படி இருந்தது?
நிச்சயம் அது அவரின் பேர் உள்ளத்தை காட்டுகிறது. மிகப்பெரிய அரசியல் தலைவர், முதலமைச்சர். அவருக்கு உளவுத்துறை மட்டுமின்றி அதிகாரிகள் தரப்பில் இருந்தும் நிறைய தகவல்கள் வரும். இருந்தும் அவரின் நலன் சார்ந்துதான் ஒரு தகவலை அவரிடம் கொண்டு போவேன் என்ற நம்பிக்கையின் அப்பாற்பட்டு என்னை அழைத்து பேசுவார். அவரின் உதவியாளர் திரு. பூங்குன்றனிடம் கூட, நான் ஏதேனும் பொது பிரச்சினைகள் தொடர்பாக எழுதி ஒட்டி கொடுத்தால் அது பிரிக்கப்படாமல் அப்படியே தன் டேபிளுக்கு வர வேண்டும் என்று ஜெயலலிதா உத்தரவிட்டிருந்ததாக அவர் சொல்லியிருக்கிறார். பொதுநலம் சார்ந்து சில பிரச்சினைகளை அவரின் கவனத்திற்கு கொண்டு சென்றதன் பலனாக கூட என் மீது அன்பும், நம்பிக்கையும் ஏற்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன்.
கம்பீர தோற்றத்தில் மறைந்த முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா
ஜெயலலிதாவுடைய மறைவில் பல விமர்சனங்கள் இன்றும் இருந்தாலும் அவர் இந்த தருணத்தில் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைத்த தருணங்கள் ஏதும் இருக்கிறதா?
அவருடைய மரணத்தை அரசியல் ஆக்குவதை நான் விரும்பவில்லை. அவரின் மரணத்தில் எந்த மர்மமும் இருந்ததாகவோ, இருப்பதாகவோ நான் கருதவில்லை. இன்னும் சில ஆண்டுகள் அவர் வாழ்ந்து நாட்டு மக்களுக்கு தொண்டாற்றி இருக்க வேண்டும். தன்னுடைய உடல் நலனில் போதுமான அக்கறை செலுத்தவில்லை என்பதுதான் உண்மை. அவருக்கு சர்க்கரை வியாதி இருந்தது. அனாலும், அதுகுறித்து கவலைப்படாமல் அதிகமான இனிப்பு வகைகளை சாப்பிட்டார். எல்லோராலும் கட்டுப்பாடாக இருக்க முடிவதில்லை. ஒருமுறை மருத்துவமனைக்கு திரு. சோவை பார்க்க வந்தபோது அம்மாவிடம் அவர் கூறினார். “அம்மு உன்னை பார்த்தால் உடல்நிலை சரியில்லாதது மாதிரி இருக்கிறது. மிகவும் தளர்ந்து காணப்படுகிறாய். உன் உடல் நிலையை பார்த்துக்கொள்வது நல்லது என்று நினைக்கிறேன். ஒருமுறை அமெரிக்கா போன்று எங்காவது சென்று பரிசோதனை செய்துகொள்ளலாம் என்று கூறினார். அதற்கு அவர் “அதெல்லாம் வேண்டாம். இங்கேயே பார்த்துக்கொள்ளலாம். நான் உங்களை பார்க்க வந்தால். நீங்கள் என் உடம்பை பார்த்துக்கொள்ள சொல்கிறீர்கள் என்று கூறியது எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. அவருக்கு வெளிநாடு சென்று உடல் பரிசோதனை செய்து கொள்வதில் நாட்டம் இல்லை என்பதை அந்த நிகழ்வு எனக்கு உறுதிப்படுத்தியது. அதே தகவலைதான் அப்பல்லோவை சேர்ந்த மருத்துவர்களும் கூறினார்கள். ஒருவேளை அவர் சென்று மருத்துவ பரிசோதனை செய்து கொண்டிருக்கலாமோ என்று எனக்கு தோன்றுகிறது. உடல் நலம் சார்ந்து அவர் பிடிவாதமாக இருந்துவிட்டார். அவர் இன்னும் ஒரு பத்து, இருபது ஆண்டுகள் இருந்திருந்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருந்து இருக்கும்.
