"தைரியமும், துணிச்சலும் ஒரு பெண்ணுக்கு அழகு!" என்று அடிக்கடி கூறுவார் மறைந்த முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா. அதனால்தான் இவரை இரும்பு பெண்மணி, சிங்கப்பெண் என்றெல்லாம் அழைக்கிறார்கள். இதெல்லாம் வெறும் வார்த்தைகளுக்காக கூறப்பட்டவை அல்ல. நிஜமாகவே அவரின் செயல்பாடுகளை கண்டு வியந்தவர்கள் மனதார கூறி அழைத்த, அழைக்கும் வார்த்தைகள். எந்தவொரு பெண்ணும் கோழையாக இருக்கக்கூடாது. துணிச்சலும், போராட்ட குணமும் எல்லோரிடமும் இயல்பாகவே இருக்க வேண்டும் என்று பலருக்கும் எடுத்துக்காட்டாக இந்த பூமியில் வாழ்ந்து மறைந்தவர். அப்படிப்பட்ட துணிச்சல்மிக்க பெண்ணான ஜெயலலிதா இன்று நம்மிடம் இல்லாவிட்டாலும் அவரின் ஆளுமைத்திறன், கட்டுக்கோப்பான அரசியல் நகர்வு, துணிந்து எடுக்கும் சில முடிவுகள் எப்போதும் நம் நினைவில் இருக்கும். அந்த வகையில். அவரை பற்றி நன்கு அறிந்து, அவருடன் பல நிகழ்வுகளை பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பை பெற்ற துக்ளக் பத்திரிகையின் மூத்த பத்திரிகையாளரான திரு. ரமேஷ் அவருடனான தனது நினைவுகளை நம்முடன் பகிர்ந்துகொண்டார். அந்த நேர்காணலின் தொகுப்பை இந்த கட்டுரையில் காணலாம்.
45 ஆண்டுகளாக பத்திரிக்கை துறையில் பணியாற்றும் உங்களுக்கு ஜெயலலிதா என்ற பெயரை கேட்கும் பொழுது வரக்கூடிய நினைவுகள் என்னவாக இருக்கும்?
மறைந்த முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதாவுடன் கடைசி ஒரு 15 முதல் 20 ஆண்டுகள் நெருங்கி பழகும் வாய்ப்பு துக்ளக் பத்திரிகை வாயிலாக கிடைத்தது. குறிப்பாக துக்ளக் ஆசிரியர் மறைந்த திரு.சோ ராமசாமி, மறைந்த செல்வி.ஜெயலலிதாவுடன் அவரின் இளம் பிராயத்தில் இருந்து மிக நெருக்கமாக பழகியவர். அதேபோன்று செல்வி. ஜெயலலிதாவும், சோவை தன் மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவராக மட்டுமின்றி தனக்கு மிகச் சிறந்த ஆலோசனைகளை கூறக்கூடிய, தன் நலனில் மிகவும் அக்கறை காட்டக் கூடிய மனிதராகவும் கருதினார். சோ, ஜெயலலிதாவை சந்திக்கச் செல்லும் தருணங்களில் எல்லாம் நானும் அவருடன் சென்றிருக்கிறேன். அதுமட்டுமின்றி வெவ்வேறு பத்திரிகைகள் மற்றும் ஆல் இந்தியா ரேடியோ, தொலைக்காட்சிகள் போன்றவற்றில் செய்தியாளராக பணியாற்றும் பொழுது, சட்டப்பேரவை நிகழ்வுகளை சேகரித்து கொடுக்கும் வாய்ப்பை பெற்றவன். கிட்டத்தட்ட 35 முதல் 40 ஆண்டுகள் சட்டமன்ற நிகழ்வுகளை பதிவு செய்து வந்து இருக்கிறேன். அந்த வகையிலும், செல்வி. ஜெயலலிதாவை கூர்ந்து கவனித்து வந்து இருக்கிறேன். நான் அதிமுக சார்பு பத்திரிகைகளில் பணியாற்றிக் கொண்டிருந்த சமயத்தில் 1982-ல் செல்வி. ஜெயலலிதா தன்னை அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைத்துக் கொண்டார்.
அரசு தேநீர் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் சோவுடன், செல்வி.ஜெ.ஜெயலலிதா
அவர் சுற்றுப்பயணம் செய்யும் பொழுது கட்சி பத்திரிகைகளில் பணியாற்றும் நிருபராக நான் அவருடன் பயணித்திருக்கிறேன். திரு. சோலை என்பவர் வழியாக அந்த டூருக்கு சென்ற நான், அண்ணா பத்திரிகையில் பணியாற்றிய மறைந்த திரு. கண்ணன், மக்கள் குரல் ஜானகிராமன் ஆகியோரால் ஜெயலலிதாவின் அறிமுகத்தை பெற்றேன். 1988 மற்றும் 89 சமயங்களில் எம்ஜிஆரின் மறைவுக்கு பிறகு ஜெ அணி என்ற ஒரு கட்சிக்கு தலைவராக இருந்த சமயத்தில் போயஸ் தோட்டத்தில் ஒரு கூட்டத்தில் உரையாற்றும் பொழுது நான் அவரை பார்த்திருக்கிறேன். இப்படி நிறைய தருணங்களில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததால், இவர் ரமேஷ், இந்த பத்திரிகையின் நிருபர் என்ற அறிமுகம் அப்போது முதலே ஜெயலலிதாவிடம் கிடைத்துவிட்டது. பின்னாளில் துக்ளக் பத்திரிகைக்கு வந்த பிறகு அது வளர்ந்தது. அதிகமான பரிட்சயம், அடிக்கடி சந்தித்து பேசும் வாய்ப்பு எப்போது கிடைத்தது என்றால் 1996 ஆட்சியை இழந்து 1998-ல் மீண்டும் தேர்தலை சந்தித்த போது தொடங்கி அவர் மறையும் வரை இருந்தது.
திரு. சோ ராமசாமி தெரிவிக்கும் தகவல்களை ஜெயலலிதாவிடம் தெரிவிப்பவராகவும், ஜெயலலிதா தெரிவிக்கும் தகவல்களை சோவிடம் தெரிவிப்பராகவும் இருக்கக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. என்னுடைய மதிப்பீடு இந்திய அரசியலில் திருமதி. இந்திரா காந்தி அம்மையாருக்குப் பிறகு ஒரு இரும்புப் பெண்மணி என்று சொன்னால் அது செல்வி. ஜெயலலிதா மட்டும்தான். அவர் அரசியலில் கண்ட உயரம் குறித்து திரு. சோவும் கூறியிருக்கிறார். “அவர் அரசியல் அறிமுகம் கிட்டுவதற்கும், அரசியலில் ஒரு கட்சியில் அறிமுகம் பெறுவதற்கும், அந்த இயக்கத்தில் இருக்கக்கூடியவர்களின் அன்பை பெறுவதற்கும் மறைந்த மக்கள் திலகம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உதவினார் என்றாலும் கூட, அவரால் கொள்கை பரப்புச் செயலாளர், ராஜ்யசபா உறுப்பினர் ஆனாலும் கூட அஇஅதிமுக என்ற இயக்கத்தை எம்ஜிஆர் காலத்தை விட பலமடங்கு வலிமை மிகுந்ததாக உயர்த்தி காட்டியவர் ஜெயலலிதாதான். அந்த பெருமை அவர்களை மட்டுமே சாரும்.
அதிமுக கட்சியினருடன் மகிழ்ச்சியான தருணம் ஒன்றில் செல்வி. ஜெயலலிதா
அதேபோன்று அவரின் அரசியல் உயர்வு என்பது சாதாரணமாக நிகழ்ந்துவிடவில்லை. கடும் போராட்டங்கள், சோதனைகள் என்று பல தடைகளை கடந்து எதிர்நீச்சல் போட்டுத்தான் இந்த உயரத்தை எட்டினார். எம்ஜிஆர் அளித்த உயர்வை பொறுத்துக்கொள்ள முடியாமல் அதிமுகவில் இருந்தவர்களே ஜெயலலிதாவை தூற்றினார்கள். திமுகவில் இருந்தவர்ளை விட, அதிமுகவில் இருந்தவர்கள்தான் ஜெயலலிதாவை வீழ்த்துவத்தில் மிகவும் மும்மரம் காட்டினார்கள். ஆனால், அந்த முயற்சியில் பரிதாபமாக தோற்றுப்போனார்கள். ஜா., ஜெ என்று இரண்டு அணிகளாக அதிமுக பிளவு பட்டிருந்த சமயத்தில் யாரெல்லாம் ஜெயலலிதாவை தூற்றினார்களோ அவர்களையெல்லாம் அவர் மன்னித்து 1991-ல் தன்னுடைய அமைச்சரவை அமைந்தபோது அவர்களுக்கும் அந்த மந்திரி சபையில் இடம் கொடுத்தார். ஜெயலலிதாவின் இந்த செயல்களை மக்கள் திலகம் எம்ஜிஆரோடு பொருத்தி பார்க்கிறேன்.
அறிஞர் அண்ணா காலம் தொட்டு திராவிட கழகத்தின் வளர்ச்சியில் மிகப்பெரிய பங்கு வகித்தவர் எம்ஜிஆர். 1967-ல் அண்ணா ஆட்சி அமைப்பதற்கும் சரி, 1971-ல் மறைந்த டாக்டர் கலைஞர் ஆட்சி அமைப்பதற்கும் சரி எம்ஜிஆரின் பங்கு மகத்தானது. அப்படிப்பட்ட எம்ஜிஆர் அவர்களையே திமுக கழகத்தில் இருந்து வெளியேற்றிய போது கலைஞர் மந்திரி சபையில் இருந்த ஒன்றிரண்டு பேர் “எம்ஜிஆர் எல்லாம் அரசியலில் வெற்றிபெற முடியுமா? சினிமா மார்க்கெட் எல்லாம் கை கொடுத்துவிடுமா?” என்றெல்லாம் கேலி பேசினார்கள். அப்படி கேலி பேசியவர்களைத்தான் 1977-ல் எம்ஜிஆர் ஆட்சி அமைத்து முதலமைச்சரான போது தன்னுடைய மந்திரி சபையில் சேர்த்துக் கொண்டார். அவர்களுக்கும் எம்ஜிஆரின் தலைமையை ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதே நிலைமைதான், யாரெல்லாம் ஜெயலலிதாவை இகழ்ந்து பேசினார்களோ அவர்களுக்கும் ஏற்பட்டது. அவரின் தலைமையை ஏற்றுக் கொண்டது மட்டுமின்றி அவரால் மட்டும்தான் இந்த கட்சியை கட்டி காப்பாத்த முடியும் என்று தன்னை தூற்றியவர்களே சொல்லும் அளவுக்கு சாதனை படைத்துக் காட்டியவர் ஜெயலலிதா. இப்படி தன்னுடைய ஒவ்வொரு பதவி காலத்திலும் முத்திரை பதித்தார்.
எம்.ஜி.ஆர்-க்கு ஜெயலலிதா செங்கோலை அளிக்கும் காட்சி
1991 முதல் 96 வரையிலும் முதலமைச்சராக அவருடைய முதல் பதிவிக்காலம். அந்த பதவிக்காலத்தில்தான் தொட்டில் குழந்தை திட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் போன்ற அற்புதமான திட்டங்களை கொண்டு வந்தார். அடுத்ததாக 2001 முதல் 2006 வரை இரண்டாம் முறை பதவிக்காலத்தில், புதிய வீராணம் திட்டம், சந்தன கடத்தல் வீரப்பன் அட்டகாசத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது, அவரின் அற்புதமான சிந்தனையில் உதித்த வீடுகளில் மழைநீர் சேகரிப்பு திட்டம் போன்றவற்றை கொண்டுவந்தார்.
இதற்கு பிறகு 2011 முதல் 16 வரையிலான ஆட்சி காலத்திலும் அவரது பெயரை இன்றும் நினைவு கூறக் கூடிய வகையில் அம்மா உணவகம் என்ற மகத்தான திட்டத்தை கொண்டு வந்தார். அந்த உணவகம் மூலமாக மலிவான விலையில் உணவை கொடுத்து ஏழை - எளியவர்கள் மட்டுமின்றி பிழைப்புக்காக வெளியூரில் இருந்து சென்னை வரக்கூடிய லட்சக்கணக்கான பேர் பயனடையும்படி செய்தார். இப்படி எண்ணற்ற பல திட்டங்களை கொண்டு வந்தார். ஜெயலலிதாவின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முழு கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. அவருடைய ஆட்சியில் ரவுடிகள் அட்டகாசம் எல்லாம் செல்லுபடியாகாது. இரும்பு பெண்மணி என்று வெறும் வார்த்தைகளில் சொல்லிவிட முடியாதபடி இரும்புக்கரம் கொண்டு அடக்குபவராக இருந்தார். அவருடைய ஆட்சியில் தயவு தாட்சண்யம் பார்க்காமல் நடவடிக்கை எடுப்பார் என்கிற பயம் சமூக விரோதிகள் மத்தியிலே இருந்தது. இப்படி தமிழ்நாட்டிற்கு தன்னுடைய மிகச்சிறப்பான பங்களிப்பை ஜெயலலிதா கொடுத்து இருக்கிறார். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் 69 சதவிகித இட ஒதுக்கீடு புரட்சி இந்தியாவில் எந்த மாநிலத்திலும் கிடையாது. அதை செய்து காட்டிய ஒரே முதலமைச்சர், அதற்காக சட்ட பாதுகாப்பு தேடி தந்த ஒரே முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதா மட்டும்தான்.
அம்மா உணவகம் திட்டத்தை தொடங்கி வைத்தபோது...
இப்படி அவருடைய செயல்பாடுகளை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். மனிதநேயம் மிக்க மகத்தான தலைவர். சமூகத்தில் தகுதியான பலபேருக்கு சரியான நேரத்தில் உதவிக்கரம் நீட்டியிருக்கிறார். ஒரு கட்சியை எப்படி ராணுவ கட்டுப்பாட்டோடு நடத்துவது என்பதை நடைமுறையில் செய்து காட்டியிருக்கிறார். வெவ்வேறு கட்சி தலைவர்களுக்கும் செல்வி.ஜெயலலிதா போன்று கட்சியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால், அவர்களால் முடியவில்லை. கட்டுப்பாடு என்றால் ஜெயலலிதாவிடம் மட்டும்தான் பார்க்க முடியும் என்பதை செய்து காட்டியவர் அவர் ஒருவர்தான். கண்டிப்பும் உண்டு. கட்டுப்பாடும் உண்டு. அன்பு செலுத்துவதும் உண்டு. அவர் ஆட்சியில் இருந்தபோது பொதுப்பிரச்சினைகள் தொடர்பாக நான் கூறினால் அதை உடனே சரி செய்து கொடுத்திருக்கிறார். அந்த வகையிலே அப்படியான பிரச்சினைகளை நான் சுட்டிக் காட்டியதற்காக என்னை பாராட்டியிருக்கிறார். என்னிடம் மிகுந்த அன்பு காட்டுவார்.
ஒருமுறை கூட என்னிடம் கூறினார். “நிறைய பொது பிரச்சினைகளை என் கவனத்திற்கு கொண்டு வருகிறீர்கள். உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்படுகிறதா? என்று கேட்டார்”. அதற்கு நான் “உங்கள் வாழ்த்துதான் எனக்கு மிகப்பெரிய உதவி, அதை நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள்” நன்றி என்று சொன்னேன். ஒவ்வொரு சமயமும் பல சிக்கலான நிகழ்வுகளை எடுத்து கூறியிருக்கிறேன். அம்மா உணவகம் விரிவுபடுத்ததப்பட வேண்டும். அதுகுறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று ஒரு feedback வேண்டும் என்று என்னிடம் கேட்டார்கள். ஒரு மூன்றே நிமிடத்தில் இந்த திட்டம் மிகவும் பலனளிப்பதாக மக்கள் கூறுகிறார்கள் என்று நான் கேள்விப்பட்ட நேரடியாக பார்த்த அத்தனையையும் பேசி முடித்துவிட்டு இந்த திட்டம் வரலாற்றில் உங்கள் பெயரை கூறக் கூடிய திட்டமாக இருக்கப் போகிறது. இதை நீங்கள் தமிழகம் முழுவதும் உள்ள பிற நகரங்களுக்கும் விரிவுபடுத்துங்கள் என்று கூறினேன். உடனே அவர் “எனக்கும் அந்த திட்டம் இருக்கிறது. நிதி என்பதும் மிக முக்கியமான ஒன்று. அதனையும் சீர்தூக்கி பார்த்துதான் நாம் செயல்படுத்த வேண்டும். உங்கள் யோசனைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி” என்று கூறினார்.
செல்வி.ஜெயலலிதா குறித்து பேசிய மூத்த பத்திரிகையாளர் ரமேஷ்
ஜெயலலிதாவுடைய தைரியத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? நீங்கள் அவரிடம் பார்த்து வியந்த நிகழ்வு எது?
நிச்சயம் அவர் துணிச்சலுக்கு பெயர் போனவர். உறுதியான முடிவுகளை எடுக்கக் கூடியவர் என்பதை தன் நிர்வாக திறமையின் மூலமாக முத்திரை பதித்திருக்கிறார். காவேரி நீர் பிரச்சினைக்காக அவர் மேற்கொண்ட உண்ணாவிரதம் மட்டுமின்றி அதற்காக பல சட்ட போராட்டங்களை நடத்தி அரசிதழில் இடம்பெறச் செய்தவர். பாராட்டு விழாக்களை விரும்ப மாட்டார். காவேரிக்காக விவசாயிகள் பாராட்டு விழா நடத்த வேண்டும் என்று கேட்ட பொழுது அவர் ஒப்புக் கொள்ளவே இல்லை. மத்திய அரசு விஷயங்களிலும் பெரும்பாலும் இணங்கி போகும் போக்கை கையாள்வது எம்ஜிஆரின் அணுகுமுறை. ஆனால், தமிழகத்தின் ஜீவாதார பிரச்சினை, உரிமை பிரச்சினை என்று சொன்னால் மத்திய அரசோடு மோதுவதற்கும் தயங்காதவர் ஜெயலலிதா.
2014 நாடாளுமன்ற தேர்தலின் போது மோடியா? லேடியா? என்று முழக்கமிட்ட ஜெயலலிதா
அதேபோல் இந்தியாவையே ஆளக்கூடிய அளவுக்கு தகுதி படைத்தவராக இருந்தார். அதனால்தான் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனித்து போட்டியிட்டும் வெற்றி பெற முடியும் என்பதை சவாலாக எடுத்துக்கொண்டு 2016 தேர்தலில் செயல்பட்டு நிரூபித்தும் காட்டினார். 2014 நாடாளுமன்ற தேர்தலில் கூட மோடியா? லேடியா? என்ற அவரின் வாதம் தமிழ்நாட்டு வாக்காளர் மத்தியில் நெருப்பாக பற்றிக்கொண்டது. அவரின் அந்த பேச்சை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்டதால்தான் அந்த முறை தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிவாகை சூடியது. ஜெயலலிதா போர்க்குணம் மிக்க தலைவர் என்பதை அவரின் எதிரிகள் கூட ஒத்துக்கொள்வார்கள். அதற்கு உதாரணமாக, ஒருமுறை நான் திமுகவின் நாடாளுமன்ற குழு தலைவர் திருமதி. கனிமொழியிடம் ஜெயலலிதாவிடம் உங்களை கவர்ந்த விஷயம் எது என்று கேள்வி எழுப்பிய போது கூட “அவருடைய துணிச்சல்” என்று அவர் பதில் சொன்னார். இன்னும் சொல்லப்போனால் அரசியலில் ஈடுபடும் பெண்கள் கொஞ்சமும் தயக்கம் இல்லாமல் துணிச்சலோடு செயல்பட வேண்டும் என்றும், பெண்களுக்கு அது இயல்பாக இருக்க வேண்டும் என்றும் செல்வி. ஜெயலலிதா நினைத்தார்.
