இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

பூமியின் சொர்க்கம் அதாவது "பாரடைஸ் ஆஃப் வேர்ல்ட் " என்றழைக்கப்படும் இடம் எது என்று உங்களுக்கு தெரியுமா? வேறு எதுவும் இல்லை நம் இந்திய வரைபடத்தில் கிரீடமாக இருக்கும் காஷ்மீர்தான். காஷ்மீர் என்று சொன்னாலே பனி மூடிய சிகரங்களும், பனி படர்ந்த மலைப் பாதைகளும், வெள்ளி போன்ற பால் ஆறுகளும்தான் நம் நினைவுக்கு வரும்! இளைஞர்களுக்கும், சாகச பிரியர்களுக்கும், புதுமண தம்பதிகளுக்கும், இயற்கை ஆர்வலர்களுக்கும் மிகவும் பிடித்த இடமாக காஷ்மீர் உள்ளது. அல்பைன் புல்வெளிகள், படிக தெளிவான ஏரிகள், பனி மூடிய சிகரங்கள், இலையுதிர் காலத்தில் மரங்களின் அம்பர் சாயல்கள், படகு இல்லங்கள், கோண்டோலாக்கள், ஆப்பிள் பழத்தோட்டங்கள் என நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது காஷ்மீரின் அழகு. காஷ்மீர் குறித்தும், அங்கு பார்த்து ரசிக்க வேண்டிய இடங்கள் என்னென்ன ? என்பதை பற்றியெல்லாம் இக்கட்டுரையில் காணலாம்.


ஸ்ரீநகரிலுள்ள நிகின் ஏரி

நிகின் ஏரி - ஸ்ரீநகர்

ஸ்ரீநகரில் அமைந்திருக்கும் நிகின் ஏரி, போட் ஹவுஸிற்கு மிகவும் பெயர்போனது. காஷ்மீரை பொறுத்தவரை கண்டிப்பாக சுற்றி பார்க்க வேண்டிய இடங்களில் ஸ்ரீநகரும் உண்டு. அதிலும் குறிப்பாக நிகின் ஏரி ஸ்ரீநகரில் மிகவும் பிரபலம். இங்கு இருக்கும் போட் ஹவுஸ்களுக்கு, உலகளவில் சுற்றுலா ரசிகர்கள் இருக்கிறார்கள். தால் ஏரியின் ஒரு பகுதிதான் நிகின் ஏரி. இந்த ஏரி முழுவதும் வில்லோ மரங்களால் சூழப்பட்டிருக்கும். நிகின் ஏரியில் இருக்கும் லால் பஜார் மார்க்கெட்டில் கிடைக்காத பொருட்களே இல்லை. குறிப்பாக அங்கு கிடைக்கும் போர்வைகள் மற்றும் ஸ்வெட்டர்கள் உலகம் முழுவதும் பிரபலம். அதுமட்டுமில்லாமல் இந்த இடம் தேனிலவுக்கு ஏற்ற இடமாகக் கூறப்படுகிறது. இந்த இடத்திற்கு எதற்கு நிகின் என்கிற பெயர் வந்ததென்றால் ஹரி பர்பாத் என்கிற மலையை சுற்றி இந்த ஏரி, நகை அணிந்திருப்பது போல் இருக்கும். அதனாலேயே உருது சொல்லான நிகின் என்கிற பெயர் ஏரிக்கு வந்துள்ளது.


ஜம்மு & காஷ்மீரின் குப்வாராவிலுள்ள பாங்கஸ் என்ற அழகிய பள்ளத்தாக்கு

பாங்கஸ் பள்ளத்தாக்கு :

பச்சை மலைகள், நீரோடைகள் மற்றும் புல்வெளிகளுக்கு இடையில் ஜம்மு மற்றும் காஷ்மீரின் குப்வாராவிலுள்ள ஒரு அழகிய பள்ளத்தாக்குதான் பாங்கஸ் பள்ளத்தாக்கு. இங்கு, விவசாயிகளின் கால்நடைகள் எப்பொழுதும் அலைந்து கொண்டே இருப்பது பள்ளத்தாக்கிற்கு கூடுதல் அழகை தருகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த இடத்தில் பறவைகள் அதிகமாக இருப்பதால் அவைகளின் ஒலி கேட்டு கொண்டே இருப்பது இன்னொரு சிறப்பு. இந்த பள்ளத்தாக்கு கடல் மட்டத்திலிருந்து சுமார் 10,000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் குப்வாரா மாவட்ட நிர்வாகமும், சுற்றுலாத் துறையும் இணைந்து ஆகஸ்ட் மாதம் பங்கஸ் மேளா என்ற 2 நாள் விழாவை நடத்துவார்கள். இந்த நிகழ்வானது இப்பகுதியின் மரபுகள் மற்றும் கலாச்சாரத்தை மையமாகக் கொண்டது. இசைக் கலைஞர்கள், பாடகர்கள், காஷ்மீரி ரோப் டான்சர்கள் என்று இந்த விழாவே கோலாகலமாக இருக்கும். LBDDA ( Lolab Bangus Drang Development Authority) மூலம் சுற்றுலாப் பயணிகளுக்கான இரவு தங்கும் கூடாரங்கள் அமைக்கப்படும். இங்கு பலவிதமான பறவைகள் மற்றும் பூக்கள் பார்வையாளர்களை அதிகம் ஈர்க்கின்றன. வெயில் காலத்தில் செல்ல உகந்த இடமாக இது பார்க்கப்படுகிறது.


புதுப்பிக்கப்பட்ட பத்திரகாளி மந்திர் கோவில்

பத்திரகாளி மந்திர் :

குப்வாரா மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலில் பழங்கால பத்ரகாளி சிலை காணாமல் போனது. பல ஆண்டுகளுக்கு பிறகு அந்த சிலை கண்டு பிடிக்கப்பட்டு மீண்டும் அந்த கோவில் புதுப்பிக்கப்பட்டது. 1981-இல் காணாமல் போன சிலை 2019 ஆம் ஆண்டுதான் கிடைத்தது. அதை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு மார்ச் மாதமும் பத்திரகாளி மந்திர் என்கிற திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இப்பகுதிக்கு பைக் மூலமாக மட்டும்தான் செல்ல முடியும். மலைகளுக்கு நடுவே இது ஒரு அழகிய கோவில். கொரோனா தொற்றுக்கு பிறகு மட்டும் இந்த கோவிலுக்கு சுமார் 3 கோடி மக்கள் வந்து சென்றுள்ளதாக காஷ்மீர் சுற்றுலாதுறை கூறியுள்ளது.


குளிர்கால விளையாட்டுகளின் சொர்க்க பூமியான குல்மார்க்

குல்மார்க் :

"இந்தியாவில் குளிர்கால விளையாட்டுகளின் சொர்க்க பூமி" என்று குல்மார்க் அழைக்கப்படுகிறது. ஆசியாவின் ஏழாவது சிறந்த ஸ்கைடைவிங் செய்வதற்கு சிறந்த இடமாகவும் குல்மார்க் விளங்குகிறது. இந்த நகரத்தை ஸ்ரீநகரில் இருந்து டாங்மார்க் சாலை வழியாக வந்து சேரலாம் . 12 கி.மீ பரப்பளவில் பைன் மரங்கள் இருப்பதால் பனிக்காலத்தில் இந்த நகரம் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். பனிச்சறுக்கு, டோபோகேனிங் பனிச்சறுக்கு மற்றும் ஹெலி-பனிச்சறுக்கு போன்ற குளிர்கால விளையாட்டுகள் இங்கு பிரபலம்.


பஹல்கம் கிராமத்தின் அழகிய நீரோடை

பஹல்கம் :

ஆடு மேய்ப்பவர்களின் கிராமம்தான் இந்த பஹல்கம். இங்கு சுற்றுலா பயணிகள் செல்வதே மன அமைதியை தேடித்தான். பெரிதாக ஆள் நடமாட்டம் இருக்காது. ஏனென்றால் பாகிஸ்தான் எல்லையில் இந்த கிராமம் உள்ளதால் மக்களின் நடமாட்டம் குறைவாகவே இருக்கும். இது ஒரு பிரபலமான சுற்றுலா தலமாகவும், மலை வாசஸ்தலமாகவும் உள்ளது. அதன் பசுமையான புல்வெளிகள் மற்றும் அழகிய அருவிகளை பார்ப்பதற்கு ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இது அனந்த்நாக்கிலிருந்து 45 கிலோமீட்டர் (28 மைல்) தொலைவில் லிடர் ஆற்றின் கரையில் 7,200 அடி (2,200 மீ) உயரத்தில் அமைந்துள்ளது. அனந்த்நாக் மாவட்டத்தின் 11 தாலூக்காக்களில் ஒன்றின் தலைமையகம் பஹல்கம் ஆகும்.

Updated On 18 March 2024 11:51 PM IST
ராணி

ராணி

Next Story