செயற்கை நுண்ணறிவியலின் நன்மை, தீமைகள் - விளக்குகிறார் ரோபோடிக்ஸ் நிபுணர்
கால சூழல்கள் மாற மாற மனிதர்களைப் போலவே தொழில்நுட்ப வளர்ச்சியும் பல்வேறு பரிணாமங்களை பெற்று மாறிக் கொண்டுதான் இருக்கிறது. இப்படி மாறி வரும் தொழில்நுட்பங்களால் மனிதர்களாகிய நமக்கு பலவிதமான நன்மைகளும், தீமைகளும் ஏற்படுகின்றன. அந்த வகையில் தற்போதைய ட்ரெண்டிங் தொழில்நுட்பமாக விளங்கி கொண்டிருப்பது தான் ஏ.ஐ என்று சொல்லக்கூடிய செயற்கை நுண்ணறிவியல். இந்த செயற்கை நுண்ணறிவியலால் ஏற்படும் நன்மைகள் என்ன? தீமைகள் என்ன? செயற்கை நுண்ணறிவுக்கும் ரோபோக்களுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன என்பதை விளக்கமாக விளக்கியுள்ளார் ரோபோடிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறையில் நிபுணத்துவம் பெற்ற கென்னித்ராஜ்.
செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன?
செயற்கை நுண்ணறிவு என்பது இயந்திரங்களை சிந்திக்க வைக்க கூடியது. மனிதனின் மூளை எவ்வாறு சிந்தித்து நம்மை செயல்பட வைக்கிறதோ, அது போலவே இயந்திரங்கள், ரோபோக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று சிந்திப்பதே செயற்கை நுண்ணறிவு ஆகும்.
செயற்கை நுண்ணறிவு உருவானது எப்படி?
மனிதர்களால் 24 மணி நேரமும் அயராது உழைக்க முடியாது என்பதால்தான் ரோபோ என்ற ஒன்று உருவாக்கப்பட்டது. ரோபோக்கள் மனிதர்களின் வேலைகளைச் செய்யும். ஆனால் அந்த ரோபோக்கள் என்ன வேலைகளை செய்ய வேண்டும் என்பதை நிர்ணயிப்பதும், அதற்கான தகவல்களை இயந்திரங்களுக்குள் புகுத்தி செயல்பட வைப்பதும் மனிதன்தான். இதனால் மனிதனுக்குத்தான் வேலை அதிகம். எனவே மனிதனின் வேலையை குறைத்து, இயந்திரங்களே சிந்திக்கும் ஆற்றலை பெறும்படி செய்யப்பட்ட தொழில்நுட்பமே இந்த ஏ.ஐ.
AI ரோபோட்டிக்ஸ்
செயற்கை நுண்ணறிவு அனுபவத்தை தருகிறதா? அல்லது ஆபத்தை தருகிறதா?
நாம் பயன்படுத்தும் அனைத்திலும் நல்லது கெட்டது இருப்பது போன்று, இந்த செயற்கை நுண்ணறிவிலும் இருக்கிறது. எப்படி கணினி உருவான போது மக்களுக்கு வேலையின்மையை ஏற்படுத்தியதோ, அதே கணினி தான் பலருக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. செயற்கை நுண்ணறிவின் நெகடிவ் என்று பார்த்தால் செயற்கை நுண்ணறிவுகளின் வகைகளான சூப்பர் நுண்ணறிவு மற்றும் பொது நோக்கம் செயற்கை நுண்ணறிவு ஆகியவை மக்களை முந்தி கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அதை கட்டுப்படுத்துவதற்கான விஷயங்களை கையாள்வது என்பது மனிதனுக்கு பெரும் சவாலாக அமைகிறது. காரணம், அதற்குரிய போதிய உபகரணங்கள் நம்மிடம் இல்லாததே.
போதிய அளவில் இல்லாத AI-யை கட்டுப்படுத்தும் உபகரணங்கள்
செயற்கை நுண்ணறிவுகளில் உள்ள வகைகள் என்ன?
செயற்கை குறுகிய நுண்ணறிவு (ANI), செயற்கை பொது நுண்ணறிவு (AGI), செயற்கை சூப்பர் நுண்ணறிவு (ASI) என்று மூன்று வகைகள் இருக்கிறது. ஆனால் நாம் உபயோகிப்பது செயற்கை குறுகிய நுண்ணறிவு (ANI) மட்டும் தான். இது குறிப்பிடும் பணியை செய்யக்கூடிய நுண்ணறிவாகும். போக்குவரத்து கேமராக்கள், தரவு அல்காரிதங்கள், பைப்லைன், தானியங்கி கணிப்பு அமைப்பு, வானிலை முன்னறிவிப்பு போன்றவற்றில் குறுகிய நுண்ணறிவுதான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ANI, AGI, ASI இந்த மூன்று வகைகளிலும் உள்ள வேறுபாடுகள் என்ன?
இந்த மூன்று செயற்கை நுண்ணறிவுகளும் செய்யக்கூடிய வேலைப்பாடுகள் ஒன்று தான். தரவு கையாளுதலின் அளவு (Amount Of Data Handling), நியூரல் நெட்வொர்க் வகைப்பாடுகள் (Categorisation of Neural Network) ஆகியவற்றின் frequency யும், algorithm மும் மாறுபடுவதை பொறுத்து எந்த நுண்ணறிவு வேண்டும் என்பதை தேர்வு செய்து கொள்ளலாம்.
AI ரோபோட்டிக்ஸ் வகைகள்
ஏ. ஐ என்று அழைக்க கூடிய செயற்கை நுண்ணறிவு எவ்வளவு தான் நன்றாக செயல்பட்டாலும் அதற்கு படைப்பாற்றல் இருக்காது என்று கூறுகிறார்களே... இந்த கூற்றை எப்படி பார்க்கிறீர்கள்?
சமீபத்தில் கலிஃபோர்னியாவில் இமேஜ் போசிங் ஏ.ஐ சிறப்பாக பயிற்சி அளிக்கப்பட்டு ஹிஸ்டரி ஆப் கிரைம்ஸ் பதிவு செய்யப்பட்டு முகம் பின்னடைவு செய்து செயல்படுத்தி வைத்திருந்தனர். திடீரென்று மனித குரங்கு ஒன்று ஒரு காரை சேதப்படுத்தி விட்டது. ஆனால் அங்கு பொருத்தப்பட்டிருந்த ஏ.ஐ கேமரா அந்த மனிதக் குரங்கை தவறுதலாக கருப்பு அமெரிக்கன் என்று கணித்து விட்டது. இந்த ஏ.ஐ கணித்த அந்த கருப்பு அமெரிக்கனை கண்டுபிடித்து வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்த ஏ.ஐ யின் தவறுதலான கணிப்புகளால் அங்கு பெரிய கலவரம் நடந்தது. அடுத்து டீப்ஃபேக் டெக்னாலஜி. மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தை மார்பிங் செய்யப்பட்டதா அல்லது உண்மையான படமா என்பதை கண்டறிய பயன்படுத்துவதே டீப் லேர்னிங் நுட்பம். இந்த டீப் லேர்னிங் உபயோகித்து டீப் ஃபேக் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டால் அதை கண்டறிவது கடினமான விஷயமாக இருக்கிறது. அப்படி கண்டுபிடித்தாலும் அதற்கு நீண்ட காலம் எடுக்கும். அதற்குள் இது இன்னும் பெரிய கலவரமாக மாற வாய்ப்பிருக்கிறது.
இமேஜ் போசிங் AI
“ஏ.ஐ அணுக்களை விட ஆபத்தானது” என்னும் எலான் மஸ்கின் கூற்றை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
உண்மையில் சொல்லப்போனால் ஏ.ஐ சற்று ஆபத்தானது தான். சமீபத்தில் கூட சீன பிரதமர் பேசாத ஒன்றை அவர் பேசியவாறு வீடியோ வைரலானது. இதனால் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் பனிப்போர் ஏற்படும் அளவிற்கு நிலைமை ஏற்பட்டுவிட்டது. இதுபோன்ற சம்பவங்கள் நேர்வதால் ஏ.ஐ சற்று ஆபத்தானதே. இதை மறுக்க முடியாது.வட கொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் பிரச்சனை ஏற்பட்டபோது ‘விரல் நுனியில் உங்கள் நாட்டை ஒழித்து விடுவேன்’ என்று கூறினார். இதற்கான காரணம் அமெரிக்காவின் 30% விமான போக்குவரத்து மற்றும் விமான ஏவுகணைகளின் கட்டுப்பாடுகள் செயற்கை நுண்ணறிவின் கீழ் இருக்கிறது. இது குறித்த தரவுகளை வட கொரியா கையகப்படுத்த தொடங்கிவிட்டது. அணுக்களை விட ஏ.ஐ ஆபத்தானதுதான். இதை தவறான நோக்கங்கள் கொண்டு தவறாக பயன்படுத்துவதால்தான் மனிதர்களுக்கு இது பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. இதனை சிறப்பாக பயன்படுத்துபவர்களுக்கு இது ஒரு சிறந்த தொழில்நுட்பமே.
எலான் மஸ்க்
செயற்கை தொழில்நுட்பத்திற்கும் ரோபோக்களுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?
பொதுவாக ரோபோக்கள் எந்தெந்த செயல்களை செய்ய வேண்டும் என்னும் தகவல்களை மனிதர்களாகிய நாம்தான் தீர்மானிக்கிறோம். அதுவும் மனிதர்களாகிய நாம் கொடுக்கும் கட்டளைகளைத்தான் அவை செய்யும். ஆனால் இந்த செயற்கை நுண்ணறிவு என்பது நாம் அளித்த உள்ளீடுக்கு சரியான வெளியீடு கொடுக்க முடியவில்லை என்றால் அது தானாகவே தனது திட்டத்தை மாற்றி செயல்பட்டு தக்க வெளியீட்டை கொடுக்கும். ஆனால் ரோபோக்கள் நாம் அளித்த உள்ளீட்டை தவிர்த்து தாமாகவே மாற்று திட்டத்தை அமைத்து செயல்படாது.
ஏ.ஐ மற்றும் ரோபோட்டிக்ஸ் பொறியாளரான நீங்கள் கிளாரா ரோபோவை உருவாக்கியது எப்படி? எதற்காக உருவாக்கினீர்கள்?
நீட் தேர்வு மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக தான் முதலில் கிளாரா என்கிற ரோபோ உருவாக்கப்பட்டது. நீட் தேர்வில் உடன்பாடு இல்லை என்றாலும் நீட் தேர்வினால் கஷ்டப்படும் மாணவர்களுக்கு என் துறையிலிருந்து என்ன செய்யலாம் என்று யோசித்தபோது தான் ரோபோ ஒன்றை உருவாக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. அப்போது தான் கிளாரா என்ற ரோபோவை நீட் தேர்வுக்கு பயிற்சி அளிப்பதற்காக உருவாக்கினேன். ஒரு மாணவன் நீட் தேர்வு குறித்து மிகுந்த பயத்துடன் இருந்தான். அவனின் பயத்தை போக்க முடிவு செய்தேன். மேலும் ஆசிரியரிடம் சந்தேகம் கேட்க தயங்கும் மாணவனாக இருப்பதால் ரோபோ ஒன்றை உருவாக்கினால் அவன் அவற்றுடன் எளிதாக உரையாடுவான், எந்த ஒரு தயக்கமும் இன்றி சந்தேகங்கள் கேட்பான் என்ற நோக்கத்துடன் நீட் பாடத்திட்டங்கள் கற்றுக் கொடுப்பதற்காக இந்த கிளாரா 1.2 ரோபோ உருவாக்கப்பட்டது. இதனால் அரசு பள்ளி மாணவர்களுக்கும் நீட் தேர்வு குறித்து கவலைப்படும் மாணவர்களுக்கும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 2018 இல் கிளாராவின் முதல் கட்டம் முடிக்கப்பட்டது. 2021 இல் இரண்டாம் கட்டம் ஆரம்பித்து இப்போது நிறைவு செய்துள்ளோம். 2025 இல் நடக்கக்கூடிய கிளாராவை உருவாக்க உள்ளோம். பதிப்பு 1 இல் வெறும் பேச்சுத் திறன் கொண்ட கிளாராவை உருவாக்கினோம். 2-வது பதிப்பில் நுண்ணறிவை புகுத்தினோம். 3 வது பதிப்பில் கிளாராவை ஒரு முழு மனித தோற்றத்தில் பேசும் நடக்கும் ரோபோவாக தயாரிக்க திட்டமிட்டுள்ளோம்.
நீட் தேர்விற்காக உருவாக்கப்பட்டதுதான் AI
ரோபோடிக்ஸில் உங்களின் அடுத்த திட்டங்கள் என்ன?
முன்னர் செய்ததை பெரிதாக்க வேண்டும். முதலில் கண்டுபிடித்த வாயு பகுப்பாய்வு கருவியை (வடிகால்களில் உள்ள வாயுக்கள் பாதிப்பிற்குரியதா என்பதை கண்டறியும் கருவி) எல்லோரும் உபயோகிக்கும்படி அதன் பயன்பாடு மற்றும் இணையதளமற்ற ஜி.பி.எஸ் உபயோகிப்பதை அதிகரிக்க வேண்டும். இந்த நிகழ்வுகள் அனைத்தையும் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் முதலில் விளம்பரப்படுத்த வேண்டும் என்பதே முதல் நோக்கமாக இருக்கிறது. இதற்கடுத்து பயோனிக் சிப்ஸ் உருவாக்குவதே என் அடுத்த திட்டம். இந்த பயோனிக் சிப்ஸை வயல்களில் பொருத்துவதன் மூலம் அந்த வயலில் என்ன வளரும், அப்படி வளரும் பயிர்களை எப்படி நோய்கள் தாக்குகிறது, அதற்கு என்ன உரங்கள் மற்றும் மருந்துகள் பயன்படுத்தலாம் என்பதையும், வானிலை முன்னறிவிப்புகளை தெரிவிக்கும் விதமாகவும் இந்த சூப்பர் பயோனிக் சிப்ஸ் செய்ய ஆரம்பித்திருக்கிறோம். விரைவில் அதுவும் நிறைவடையவுள்ளது.