இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

தொழில்நுட்பம் நாளுக்கொரு வளர்ச்சி கண்டுகொண்டிருக்கிறது. உலக மக்கள் அணு ஆயுதப் போர் வரக்கூடாது என்ற அச்சத்தில் இருக்கின்றனர். ஆனால் இதே 2024ல் ஒரு பழங்குடியின குழு ஆதிகால வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறது. இங்கு வெறும் ஐநூறுக்கும் குறைவான மக்கள் தொகை, உடலைத் துளைத்து வெளியேறும் வில் அம்புகள், குழந்தை போன்ற முக அமைப்பு இருந்தாலும், அவர்களின் விரிந்த கண்கள் எப்பேர்ப்பட்ட பயில்வானையும் தொடை நடுங்க வைத்துவிடும். ஆம், இவர்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேறினால் ஒட்டுமொத்த நாடும் கதி கலங்கிவிடும். நீங்கள் அவர்களை பார்க்க முடிவு செய்தால் கூட, அவர்கள் வசிக்கும் தீவில் கால் வைப்பதற்கு முன்னரே கொல்லப்படுவீர்கள். அதிகாரப்பூர்வமாக இந்தியாவின் ஒரு பகுதியாக, இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள வடக்கு செண்டினல் தீவில்தான் அந்த பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். உலகின் மிகவும் ஆபத்தான தீவாக செண்டினல் தீவு கருதப்படுகிறது. அப்படி அங்கு வாழ்பவர்கள் யார்? சோழர்களுக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு? செண்டினல் தீவு மக்களை பற்றி விரிவாக பார்ப்போம்.


செண்டினல் தீவில் வசிக்கும் விசித்திர பழங்குடி மக்கள்

உயிரை எடுக்கும் மக்கள்

இந்தியாவில் இருக்கும் 7 யூனியன் பிரதேசங்களில் ஒன்றான அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைநகர் போர்ட் பிளேர். இப்பகுதியில் அங்கொன்றும், இங்கொன்றுமாக மொத்தம் 572 தீவுகள் இருக்கின்றன. அவற்றில் 36 தீவுகளில்தான் மக்கள் வசித்து வருகிறார்கள். அவற்றுள் ஒன்று தான் இந்த உயிர் கொல்லித் தீவும். இத்தீவின் உண்மையான பெயர் யாருக்கும் தெரியாது? ஊர் பேர் கேட்க கிட்ட நெருங்கினாலே நம் உயிரைக் கொன்று உணவாக உண்டுவிடுவர் இங்கு இருக்கும் பழங்குடியின மக்கள். செயற்கையான மற்றும் நவீனத்தன்மை அற்ற இத்தீவின் பெரும்பகுதி காடுகளே. இத்தீவைச் சுற்றி உள்ள கடற்கரைப் பகுதியில் கூட வேற்றுப்பகுதி மக்கள் கால் வைக்க நினைத்தால் அவர்களுக்கும் மரணம் நிச்சயம்.


சமூக வாழ்க்கையிலிருந்து ஒதுங்கி வாழும் செண்டினல் பழங்குடிகள்

செண்டினல் பழங்குடிகளின் தோற்றம்

இந்த உலகில் இதுவரை நாகரிக சமூகத்தால் நெருங்கவே இயலாத ஒரே ஒரு பழங்குடி இனம் இருக்கிறது என்றால் அது செண்டினல் பழங்குடி இனம்தான். இவர்கள் 60,000 ஆண்டுகள் வரலாறு கொண்டவர்கள் எனக் கருதப்படுகிறது. இவர்களின் தீவை சுற்றி 3 மைல் தூரம் வரை இந்திய கடற்படை பாதுகாத்து வருகிறது. செண்டினல் பழங்குடிகள் நெக்ரிடோ இனத்தவர். நெக்ரிடோ பழங்குடிகள் ஆப்பிரிக்காவை பிறப்பிடமாகக் கொண்டவர்கள். இவர்கள் இந்தியாவுக்கு 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்தோனேசியா வழியாக வந்தவர்களாக அறியப்படுகிறார்கள். இவர்களின் மொழி செண்டினலீஸ் என்று கூறப்படுகிறது. ஆனால் இவர்கள் யாருடனும் தொடர்பு கொள்வதில்லை என்பதால் இவர்களின் மொழி வகைப்படுத்தப்படாத மொழியாகவே உள்ளது.

சுற்றுலா பயணிகளுக்கு தடை

இந்த பழங்குடி மக்கள் தங்கள் எல்லையைக் காப்பதில் தீவிரமாக இருப்பார்கள். பலமுறை இவர்கள் இருக்குமிடத்தை அடைய சாதாரண மக்கள் முயன்றுள்ளனர். ஆனால் ஒவ்வொரு முறையும் தோல்வியுடன்தான் திரும்பியுள்ளனர். 1974ல் ஒரே ஒரு முறை இவர்கள் சுற்றுலா பயணிகளிடமிருந்து உணவுப் பண்டங்களை பெற்றுக் கொண்டனர். ஆனால் 1992ல் இந்திய அரசு பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் செண்டினல்களை அணுக முற்படக் கூடாது என்று தடை விதித்தது. அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று செண்டினல்களால் மக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். இன்னொன்று நம்மால் செண்டினல்களுக்கு நோய்த்தொற்று அபாயம் ஏற்படலாம். தடுப்பூசிகள், சிகிச்சைகள் என எதற்கும் பழக்கப்படாத அந்த மக்களுக்கு மனிதர்கள் மூலம் நோய் தாக்கம் ஏற்பட்டால் அவர்கள் மொத்தமாகவே அழியக்கூடும் என்பதால் இந்தத் தடை விதிக்கப்பட்டது.


சுற்றுலா பயணிகளை தங்கள் இடத்திற்குள் அனுமதிக்காத செண்டினல் மக்கள்

செண்டினல் மக்களை பாதுகாக்கும் இந்திய அரசு

1956ஆம் ஆண்டின் பழங்குடியின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், செண்டினல் தீவும் அதன் குடிமக்களும் பாதுகாக்கப்பட்டுள்ளனர். இந்தச் சட்டத்தின் கீழ், தீவிற்கு எந்த விதமான பயணமும், ஐந்து கடல் மைல்களுக்கு (9.26 கி.மீ.) அருகாமையில் எந்த அணுகுமுறையும் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது. இரு தரப்பு மக்களையும், வசிப்பவர்களையும், நெருங்கி வருபவர்களையும் பாதுகாப்பதற்காகவே கட்டுப்பாடு உள்ளது. இந்த தீவை நெருங்குவது இந்திய சட்டத்தின்படி, தண்டனைக்குரிய குற்றமாகும்.

ஏழாம் அறிவு கொண்டவர்கள் என்று கூறப்படும் செண்டினல் மக்கள்

செண்டினல்கள் ஏழாம் அறிவு கொண்டவர்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2004 டிசம்பர் 26ல் மிகப்பெரிய சுனாமி சுமத்ரா, அந்தமான் நிகோபார் தீவுகளை தாக்கியது. அதில் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். இந்திய ராணுவம் ஹெலிகாப்டர் மூலம் பழங்குடியின மக்களை கண்காணிக்க ஆய்வு நடத்தியது. அப்போது செண்டினல்கள் பத்திரமாக இருந்தனர். அதனை ஏரியல் வியூவாக பார்த்து இந்திய ராணுவம் ஆச்சர்யப்பட்டது. செண்டினல்கள் பற்றி அரசு அதிகாரிகளும், மானுடவியலாளர்களும் கூறுகையில் அவர்கள் தங்கள் சக்தி மூலம் அசம்பாவிதம் வருவதை உணர்ந்து தற்காத்துக் கொண்டனர் என்றனர். ஆசிஷ் ராய் என்ற மானுடவியலாளர் செண்டினல்களுக்கு ஏழாம் அறிவு இருக்கிறது எனக் கூறுகிறார். அவர்களால் காற்றின் வாசத்தை உணர முடியும் என்று தெரிவிக்கிறார்.


செண்டினல் மக்களை சந்தித்த மதுமாலா சத்தோபத்யாய்

செண்டினல்களிடம் நட்பு பாராட்டிய பெண்

1991ல் மதுமாலா சத்தோபத்யாய் என்ற பெண்ணும், அவருடைய சக பண்டிட்டும் செண்டினல் ஒருவரை நெருங்கினர். மதுமாலா ஒரு தேங்காயை அவரிடம் கொடுக்கும் புகைப்படம் ஒன்று உள்ளது. தேங்காய் வைத்திருந்தால் சமாதானத்தோடு வந்திருக்கிறோம் என்று அர்த்தமாம். இவரின் மூலம் செண்டினல்கள் வெளிமக்களுக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளனர். "எங்களை யாரும் தொடர்புகொள்ள வேண்டாம். நாங்கள் தனியாக இருக்கவே விரும்புகிறோம்" என்பதுதான் செண்டினல் மக்கள் இந்த உலகுக்கு வைக்கும் ஒரே கோரிக்கை. பழங்குடியின மக்கள், நாம் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம். அவர்களை பாதுகாக்க நாம் மெனக்கெட வேண்டாம். அவர்கள் கேட்கும் அந்தத் தனிமையைக் கொடுத்தாலே போதுமானது!

Updated On 11 Nov 2024 6:30 PM GMT
ராணி

ராணி

Next Story