இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

காற்று மாசுபாடு காரணமாக உலகமே நிலைகுலைந்து போயிருக்கும் இன்றைய சூழலில், இயற்கை பாதுகாப்பு என்பது ஒரு சவாலான விஷயமாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாக பிளாஸ்டிக் கழிவுகளால் நம் நிலம் தொடங்கி நீர் வரை அனைத்துமே மாசாகி வருவது ஒருபுறம் இருக்க, இதற்கு மாற்று வழியே இல்லையா என்கிற சிந்தையும் நமக்குள் எழத்தான் செய்கிறது. அந்த வகையில், இந்த பிரச்னைக்கான தீர்வை நோக்கி நம்மை அழைத்து செல்லும் விதமாக 'கோலி சோடா' என்கிற நிறுவனத்தை துவங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார் ஸ்ருதி ஹரிஹர சுப்ரமணியன். ஒரு இயற்கை ஆர்வலராக, தொழிலதிபராக மட்டும் அல்லாமல் மாடலிங், சினிமா என அனைத்து துறைகளிலும் சாதனை புரிந்துள்ள இவர், 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற 63வது தேசிய விருது பட்டியலில் சிறந்த கலை மற்றும் பண்பாட்டு பிரிவிலும், ஆவண படங்களுக்கான சிறந்த இசை பிரிவிலும் இரண்டு தேசிய விருதுகளை வென்று சாதனை படைத்தவர் ஆவார். இது தவிர 2002-ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் சென்னை போட்டியிலும் பங்கேற்று வெற்றி பெற்றுள்ள இவர், ஏ.ஆர்.ரகுமான், மணிரத்னம் போன்ற ஜாம்பவான்களுடன் இணைந்து பணியாற்றி இயக்குநராகவும் கவனம் பெற்றவரும் கூட. இப்படி பல சாதனைகளை நிகழ்த்தி இன்று இயற்கை பாதுகாப்பிலும் புதிய முயற்சிகளை மேற்கொண்டுவரும் ஸ்ருதி ஹரிஹர சுப்ரமணியன் தன்னுடைய பயணம் குறித்து நம்மோடு பகிர்ந்துக் கொண்டார். அந்த தொகுப்பை இந்த பதிவில் காணலாம்.

இன்று 'கோலி சோடா' என்கிற நிறுவனத்தை துவங்கி வெற்றிகரமாக நடத்தி வரும் நீங்கள், துவக்கத்தில் மாடலிங் மற்றும் சினிமாவில்தான் கவனம்செலுத்தி உங்களுடைய பயணத்தை தொடங்கியுள்ளீர்கள். அந்த ஆர்வம் உங்களுக்கு எப்படி வந்தது?

எனக்கான ஆர்வம் எங்கிருந்து துவங்கியது என்பது எனக்கே தெரியவில்லை. ஏனென்றால் எங்கள் குடும்பத்தில் யாருக்குமே சினிமா மீது பெரிதாக ஆர்வம் இருந்ததில்லை. ஏன் நாங்கள் திரையரங்குகளுக்கு கூட ஒன்றாக சேர்ந்து பெரியளவில் போனது கிடையாது. நான் ஸ்கூல் படிக்கும் போதுதான் நண்பர்களுடன் சேர்ந்து சினிமாவிற்கு செல்லும் பழக்கமே எனக்கு ஏற்பட்டது. அப்போது தான் இந்த சினிமா உலகத்திற்குள் நாமும் இருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. ஆனால் எந்த துறையில் பயணிப்பது என என்னால் முடிவு செய்ய முடியவில்லை. இருப்பினும் சிறுவயதிலிருந்தே கலை சார்ந்த விஷயங்களில் எங்கள் குடும்பத்தினருக்கு ஆர்வம் இருந்ததோடு, நடனம், பாட்டு போன்றவற்றை கற்றுக்கொள்ளவும் எங்களை அனுமதித்தார்கள். அந்த வகையில் கலை சார்ந்த மொத்த விஷயங்களுமே சினிமாவை நோக்கியே குவிந்திருந்ததால், எனக்கு சினிமா மீது ஆர்வம் ஏற்பட்டிருக்கலாம். அதற்குள் நுழைந்திருக்கலாம்.


சீரியல்களில் நடிக்க ஆரம்பித்த பிறகுதான் டைரக்‌ஷன் மீது ஆர்வம் ஏற்பட்டது - ஸ்ருதி

இதேபோல் மாடலிங்கும் திடீரென நடந்த நிகழ்வுதான். அதற்காக எந்த முன்னெடுப்பும் நான் செய்யவில்லை. நான் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்து கொண்டிருந்தபோது, இன்டர்ன்ஷிப் செய்வதற்காக ஒரு ஈவன்ட் மேனேஜ்மென்ட் கம்பெனியில் சேர்ந்தேன். அப்போது அவர்கள் மிஸ் சென்னை நிகழ்ச்சியை நடத்துவதற்கான முன்னேற்பாட்டில் இருந்தார்கள். அந்த நேரம் அங்கு பணி புரிந்தவர்கள் 'நீ எதற்காக இன்டர்ன்ஷிப் செய்கிறாய்? பேசாம நீயும் ஒரு போட்டியாளரா மிஸ் சென்னை ஈவன்ட்ல பங்கேற்கலாமே?' என்று கூறினார்கள். இதை கேட்டவுடன் எனக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், சரி முயற்சித்துதான் பார்ப்போம் என அந்த போட்டியில் பங்கேற்றேன். எத்தனையோ அனுபவம் வாய்ந்த போட்டியாளர்களுக்கு மத்தியில், மாடலிங்கில் பெரிய அனுபவமே இல்லாமல் பங்கேற்ற நான் மூன்று விருதுகளை வென்றேன். இந்த நிகழ்வு எனக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்ததோடு, மாடலிங் துறையில் தொடர்ந்து பயணிக்க என்னை ஊக்கமும்படுத்தியது. அதன் பிறகு நூற்றுக்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் நான் நடித்தேன். இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர் இயக்கிய 'சஹானா' தொலைக்காட்சித் தொடரிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதன் பின்னும் சில சீரியல்களில் நடித்த எனக்கு, நடிப்பை தாண்டி இயக்கத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது. பின்னர் சிறிது காலம் அனுபவம் வாய்ந்த இயக்குநர்களிடம் உதவியாளராக பணிபுரிந்த பிறகே முழு இயக்குநராக மாறினேன்.

நீங்கள் உங்கள் பயணத்தில் மணிரத்னம், ஏ.ஆர்.ரகுமான் போன்ற மிகப்பெரிய ஆளுமைகளோடு இணைந்து பணியாற்றியுள்ளீர்கள்.. அந்த அனுபவத்தை பற்றி சொல்லுங்கள்?


இயக்குநர் மணிரத்னத்துடன் ஸ்ருதி ஹரிஹர சுப்ரமணியன்

எனக்கு சினிமா ஆர்வம் ஏற்பட்ட சமயங்களில் எல்லாம் மணிரத்னம், ஏ.ஆர்.ரகுமான் போன்ற மிக சிறந்த ஆளுமைகளோடு இணைந்து பணியாற்றுவேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. சினிமாவிற்குள் நுழைந்த நேரங்களில் உடன் இருப்பவர்களிடம் நகைச்சுவையாக சொல்லுவேன், குறைந்தபட்சம் ஏ.ஆர்.ரகுமான் சாருக்கு ஒரு டீயாவது கொடுக்குற வாய்ப்பு கிடைக்கணும், மணி சாருக்கு ஒரு குடையாவது பிடிக்கணும் என்று. ஆனால் கடவுளின் அனுக்கிரகத்தால், ஒரு இயக்குநராக எனக்கு அவர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக ''ஹார்மனி வித் ஏ.ஆர்.ரகுமான்'' ஆவண படத்தில் ஏ.ஆர்.ரகுமானை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததை என்னால் மறக்கவே முடியாது. அதன் தொடர்ச்சியாகவே இயக்குநர் மணிரத்னம் என்னை அழைத்து 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்திற்கு ப்ரோமோஸ் செய்து தர கூறினார். சொல்லப்போனால் எனக்கு அந்த ஜானர் ஃபிலிம் மேக்கிங்கில் அனுபவமே கிடையாது. இருப்பினும் மணி சார் என்மீது வைத்த நம்பிக்கையை நிரூபித்து காட்ட வேண்டும் என்று, அவர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்தேன். அதிலும், அப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது, ரஜினி கமல் இருவரையும் வைத்து நாங்கள் தயார் செய்திருந்த மேஷப் வீடியோ வைரல் ஆன நிகழ்வை என்னால் மறக்கவே முடியாது.


இசை நிகழ்ச்சி ஒன்றில் ஏ.ஆர்.ரகுமானுடன் ஸ்ருதி இணைந்து பணியாற்றிய தருணம்

2015-ஆம் ஆண்டு 'ஏ ஃபார் ஆஃப்டர்ணூன்' ஆவண படத்துக்காக உங்களுக்கு தேசிய விருது கிடைத்தது. அந்த நிகழ்வு குறித்து சொல்லுங்கள்?

அந்த நிகழ்வு நடந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இருப்பினும் என்னால் மறக்கவே முடியாது. எனக்கு 'ஏ ஃபார் ஆஃப்டர்ணூன்' ஆவண படத்துக்காக இரண்டு தேசிய விருதுகள் கிடைத்தன. ஒன்று சிறந்த கலை மற்றும் பண்பாட்டு பிரிவிலும், மற்றொன்று ஆவண படங்களுக்கான சிறந்த இசை பிரிவிலும் கிடைத்தது. 'ஏ ஃபார் ஆஃப்டர்ணூன்' ஆவண படத்தின் மையப்புள்ளி என்னவென்றால், ஒரு ஓவிய கலைஞர் வண்ணத்தை தீட்டும்போதும் அவரது மனதில் என்னென்ன எண்ணங்கள் தோன்றும் என்பதுதான். முழு படமே ஒரு ஓவியம் வரைய துவங்கி அது முடிவதற்குள் என்ன நடக்கிறது என்பதை விளக்குவதே ஆகும். நான் இயக்கிய முதல் ஆவண படம் அதுதான். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் எடுத்தேன். ஆனால் பல விருதுகளை அள்ளி எனக்கு ஒரு அடையாளத்தை அப்படம் பெற்று தந்தது மிகப்பெரிய மகிழ்ச்சியே.

உங்களின் புதிய அடையாளமாக மாறியிருப்பது 'கோலி சோடா' நிறுவனத்தின் வாயிலாக நீங்கள் முன்னெடுத்துள்ள மறுபயன்பாட்டு முறை. இயற்கை பாதுகாப்பின் புதிய முயற்சியான இந்த சிந்தனை உங்களுக்கு எப்போது தோன்றியது?


'கோலி சோடா' நிறுவனத்தின் வாயிலாக முன்னெடுக்கப்பட்டுள்ள மறுபயன்பாட்டு முறை

எனக்கு சிறு வயதிலிருந்தே இயற்கை மற்றும் விலங்குகள் பாதுகாப்பில் அதிக ஆர்வம் இருந்தது. சொல்லப்போனால் என்னுடைய ஆறு வயதிலேயே அசைவ உணவுகள் சாப்பிடுவதை நான் தவிர்த்துவிட்டேன். தோல் சார்ந்த பொருட்கள், பட்டு போன்றவற்றை கூட நான் பயன்படுத்துவது கிடையாது. இந்த சிந்தனை எதனால், எப்போது தோன்றியது? என்று எனக்கு தெரியவில்லை. பள்ளியில் படிக்கும்போதே இயற்கை சார்ந்த விஷயங்களில் ஆர்வம் காட்டி பல குழுக்களுடன் இணைந்து பணிபுரிந்து வந்தநான், கல்லூரியிலும் அதனை தொடர்ந்து ஒரு இயற்கை ஆர்வலராகவே மாறிபோனேன். சொல்லப்போனால் இயற்கையும் நாமும் தனி தனி கிடையாது. இருவருமே ஒன்றுதான். அதை பல நேரங்களில் நாம் மறந்துவிடுகிறோம். நிலத்தின் அன்னையாக இருக்கக்கூடிய பூமாதேவியின் நலன் குறித்து நாம் சிந்திப்பதே கிடையாது. தனிப்பட்ட முறையில் சில முயற்சிகள் நான் எடுத்தாலும், ஒரு கட்டத்தில் ஒரு நிறுவனமாக மாற்றி அதனை முன்னெடுக்க நினைத்தேன். பொதுவாக நாம்வரும் வழியில் குப்பைகள் கிடந்தால், அரசினை குறை கூறுவோம். ஆனால் அங்கு கிடக்கும் குப்பைக்களில் நம் வீட்டு குப்பையும் கிடக்கிறது. அதுவும் மக்காமல் இருக்கிறது என்பதை நாம் நினைப்பதே இல்லை. இதனை மனதில் நிறுத்தியே 'கோலி சோடா' என்கிற நிறுவனத்தை துவங்கினேன். இதன் நோக்கம் எக்கோ ஃப்ரண்ட்லியான பொருட்களை தயாரித்து நாம் இருக்கும் பகுதிகளில் குப்பை சேராமல் பார்த்துக் கொள்வதுதான். துவக்கத்தில் இரண்டு கடைகள் திறக்கப்பட்டன. தற்போது ஆன்லைனிலும் வாங்கி பயன்பெறும் வகையில் இணையதளத்தின் வாயிலாகவும் விற்பனை செய்து வருகிறோம்.

ஆன்லைனில் எந்தெந்த மாதிரியான பொருட்களை நீங்கள் விற்பனை செய்து வருகிறீர்கள்?


'கோலி சோடா' நிறுவனத்தின் வாயிலாக ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் பொருட்கள்

முக்கியமாக எக்கோ ஃப்ரண்ட்லியான பொருட்களைதான் நாங்கள் விற்பனை செய்து வருகிறோம். அதிலும் குறிப்பாக, தினம் தினம் நாம் பயன்படுத்தும் பொருட்களை எக்கோ ஃப்ரண்ட்லியான ப்ராடெக்ட்டாக மாற்றி மக்களிடம் கொண்டு சேர்ப்பதே எங்களின் முதல் குறிக்கோள். அது பல் துலக்கும் பிரஷிலிருந்து ஷாம்புவரை அனைத்திலுமே கொண்டு வந்துள்ளோம். உதாரணமாக நாம் குழந்தையாக இருக்கும்போது பயன்படுத்திய பிளாஸ்டிக் பிரஷ் இன்றும் மக்காமல் ஏதோ ஒரு இடத்தில் குப்பையாக கிடக்கிறது. இந்த நிலையை மாற்றத்தான் நாங்கள் இந்த புதிய முயற்சியை மேற்கொண்டு வருகிறோம். அதற்காக வேப்பம் குச்சியில் பல் துலக்க சொல்லவில்லை. எங்கள் 'கோலி சோடா' நிறுவனத்தின் வாயிலாக நாங்கள் முன்னெடுத்திருப்பது பிளாஸ்டிக் டூத் பிரஷ்களுக்கு பதிலாக, மூங்கிலால் தயாரிக்கபட்ட டூத் பிரஷ்கள்தான். இவை பயன்படுத்தப்பட்டு தூக்கியெறியப்படும்போது எளிதில் மக்கிவிடும். அதே போல் ஷாம்பு, சோப்பு போன்றவைகளிலும் இயற்கை சார்ந்தவற்றை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுபவையே எங்களின் முக்கிய விற்பனை பொருட்களாக இருக்கின்றன. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், நாங்கள் தலைக்கு பயன்படுத்தப்படும் ஷாம்புவில் இருந்து, ஃபேஸ் கிரீம், சோப்பு என அனைத்துமே பார்களாகதான் விற்பனை செய்கிறோம். காரணம் நீர்ப்பு தன்மையுடன் இருக்கக்கூடிய ஷாம்பு, கிரீம் போன்றவற்றில் வேதிப்பொருட்கள் அதிக அளவு பயன்படுத்தப்பட்டிருக்கும். அவை நம் உடலுக்கு தீங்கு விளைவிப்பதோடு, நீரிலும் கலந்து மண்ணையும், இயற்கையையும் நாசமாக்கும். அதனால் நாங்கள் விற்பனை செய்யும் பார்கள் அத்தனையுமே முழுக்க முழுக்க எக்கோ ஃப்ரண்ட்லியாக உருவாக்கபடுவதோடு, நம் உடலுக்கு நன்மை பயக்கக்கூடிய பாக்டீரியாக்களையும் சேர்த்து அதனை நீர் வழியாக இயற்கையோடும், நீரோடைகளிலும் கலக்கவைத்து சுத்தப்படுத்த முனைந்திருக்கிறோம். இது நம்மையும் இயற்கையையும் ஒரே நேரத்தில் பாதுகாக்கும் ஒரு முயற்சியாகும்.

Updated On 9 Sept 2024 9:54 PM IST
ராணி

ராணி

Next Story