சென்னையில் ஷேர் ஆட்டோ பயணிகளிடம் திருடும் நூதன கொள்ளையர்கள்! மக்களே உஷார்!
சென்னையில் ஷேர் ஆட்டோவை ஷேர் செய்து பயணிகளிடம் நூதன முறையில் கொள்ளையடித்த "பலே ஷேர் ஆட்டோ கொள்ளையர்கள் " சிக்கியது எப்படி என விவரிக்கின்றது இந்த எச்சரிக்கை பதிவு... உங்களது கவனத்திற்காக....
வகை வகையா கொள்ளையடிக்கிறாங்களேய்யா!
"வகை வகையா கொள்ளையடிக்கிறாங்களேய்யா உக்காந்து யோசிப்பாங்களோ " என்ற நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் காமெடி தற்போது உண்மையாகியுள்ளது. பொதுவாக பல்வேறு விதமான கொள்ளைச் சம்பவங்களை பற்றி நாம் கேள்வி பட்டிருப்போம்.. ஆனால் ஷேர் ஆட்டோக்களில் பயணிகளை ஏற்றிக்கொண்டு அவர்களிடம் பேச்சு கொடுத்துக் கொண்டே "அவர்களது பணம், செல்போன் மற்றும் உடமைகளை ஆட்டைய போடும் " நூதனமான கொள்ளையர்களை பற்றியோ, கொள்ளைச் சம்பவங்களைப் பற்றியோ நாம் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். ஆனால் சமீபத்தில் அப்படிப்பட்ட ஒரு நூதனமான திடுக்கிட வைக்கும் கொள்ளைச் சம்பவம் சென்னை வால்டாக்ஸ் ரோட்டில் அரங்கேறியுள்ளது.
ஷேர் ஆட்டோவில் அரங்கேறும் நூதன கொள்ளை!
ஷேர் ஆட்டோக்களில் அரங்கேறும் கொள்ளைச் சம்பவங்கள்
சென்னை கொண்டித்தோப்பு பகுதியில் வசித்து வரும் நபர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை வால்டக்ஸ் ரோட்டில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே ஷேர் ஆட்டோ ஒன்றில் ஏறியுள்ளார். அவர் ஏறிய ஆட்டோவில், பயணிகள் போல ஒரு பெண்மணி உட்பட இரண்டு நபர்கள் ஏற்கனவே அமர்ந்து வந்துள்ளனர். ஆட்டோவில் ஏறிய புதிய பயணியிடம், நன்கு பழகுவதுபோல பேச்சு கொடுத்துக்கொண்டே வந்துள்ளனர். இதனை சற்றும் அறியாத அந்த அப்பாவி நபரும் அவர்களுடன் சகஜமாக பேசத் தொடங்கியுள்ளார். அப்போது அந்த ஆட்டோவை ஓட்டுநர் நிறுத்த, நீங்கள் சொன்ன இடத்துக்கெல்லாம் இந்த ஆட்டோ போகாது, இங்கேயே இறங்கிக்கோங்க என்று ஆட்டோவில் இருந்த நபர்கள் கூறியுள்ளனர். வேறு வழியின்றி அந்த அப்பாவி நபரும் இறங்கி கொண்டார். உடனே ஆட்டோ மின்னல் வேகத்தில் ஓடி மறைந்துள்ளது. அப்போதுதான் ஆட்டோவில் இருந்து இறங்கிய அந்த நபர் தன்னிடம் இருந்த உயர் ரக ஐ-போன் திருடு போயிருப்பதைக் கண்டு அதிர்ந்துள்ளார். உடனடியாக சுதாரித்துக் கொண்ட அவர், இது குறித்து ஏழு கிணறு காவல்துறையில் புகாரளித்துள்ளார்.
கொள்ளையர்கள் வசமாக சிக்கியது எப்படி?
புகாரைப் பெற்றுக் கொண்ட ஏழு கிணறு குற்றப்பிரிவு காவல்துறை, கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படை அமைத்து உடனடியாக களத்தில் இறங்கியது. கொள்ளைச்சம்பவம் தொடர்பாக அங்கிருந்த சிசிடிவி கேமராக்களின் உதவியோடு துப்பு துலக்கியது. அந்த விசாரணையில் மணலி, எண்ணூர், தண்டையார்பேட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 4 ஆண்கள் மற்றும் ஒரு பெண் என 5 பேர் ஷேர் ஆட்டோ கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையின் அதிரடி நடவடிக்கையில் 4 ஆண்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தில் தப்பியோடிய கொள்ளைக்கும்பலில் ஒருவரான அந்த பெண்ணைத் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நால்வரிடம் இருந்து மொத்தம் 44 செல்போன்கள், 2 டேப்லெட்கள், 1 இருசக்கர வாகனம் மற்றும் 1 ஷேர் ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட 4 கொள்ளையர்கள்
காவல்துறையினர் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிட வைக்கும் தகவல்கள் கிடைத்துள்ளன. அதாவது ஷேர் ஆட்டோவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்லும்போது "பயணிகளோடு பயணிகளாய் பயணம் செய்யும்" கொள்ளையர்கள் ஆட்டோவில் ஏறும் நபர்களிடம் பேச்சுக்கொடுத்துக் கொண்டே அவர்கள் வைத்திருக்கும் செல்போன், பணம், எலெக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து வந்ததும், சென்னை ஏழு கிணறு, பூக்கடை, யானைக்கவுனி, வண்ணாரப்பேட்டை, மணலி ஆகிய பகுதிகளில் ஷேர் ஆட்டோவில் ஏறிய பயணிகளின் கவனத்தைத் திசை திருப்பி கொள்ளையடித்து வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
எது எப்படியோ, இந்த ஷேர் ஆட்டோ கொள்ளைச் சம்பவம் ஷேர் ஆட்டோவில் பயணிக்கும் அனைவருக்குமே ஒரு எச்சரிக்கையான நல்லதோர் பாடத்தை கற்றுக்கொடுத்திருப்பது நிஜம்.
இப்படிப்பட்ட குற்ற நிகழ்வுகளிலிருந்து மக்கள் தற்காத்துக் கொள்வது எப்படி?
கொள்ளையர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள், டேப்லெட்கள், இருசக்கர வாகனம் மற்றும் ஷேர் ஆட்டோ
எந்த வாகனத்தில் பயணித்தாலும் அந்த வாகனத்தின் மேல் கவனம் இருக்கட்டும். அறிமுகமற்ற நபர்களிடம் பேசுவதை தவிர்க்கவும். அறிமுகமற்ற நபர்கள் வாங்கித் தரும் உணவுப் பண்டங்களைத் தவிர்க்கவும். வாகனங்களில் எடுத்துச் செல்லும் உடமைகளின் மேல் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். பயணிக்கும் வாகனத்திலிருந்து இறங்குவதற்கு முன், உடமைகளை சரிபார்த்துக் கொண்டு இறங்க வேண்டும். நம் கவனத்தை திசை திருப்ப முயலும் எந்தவொரு நிகழ்விற்கும் இடம்கொடுக்கக் கூடாது. நம் பயணத்தின் பாதுகாப்பு என்பது நம் வசமே உள்ளது.
