இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

சின்னத்திரை சீரியல் நடிகை ஆல்யா மானசாவின் பெயர், அவரது வீடியோ பேட்டி மற்றும் பிரபல ஆங்கில தினசரி பத்திரிகையின் இணையதள பெயரை பயன்படுத்தி பல கோடிகளில் பொதுமக்களிடம் பணம் சுருட்ட முயன்ற திடுக்கிட வைக்கும் மோசடி கும்பலின் பின்னணியை விவரிக்கின்றனது இந்தப் பதிவு.

ஆல்யா மானசா பெயரில் மோசடி

நடிகை ஆல்யா மானசாவும், அவரது கணவரான நடிகர் சஞ்சீவும் சின்னத்திரை சீரியல்களில் மிகவும் பிரபலமானவர்கள். அவர்கள் சென்னை சைபர் கிரைமில் புகார் ஒன்றை அளித்துள்ளனர். அந்த புகாரில் தங்களது பெயரையும், எப்போதோ சன் தொலைக்காட்சிக்கு தாங்கள் அளித்த பேட்டியையும் மார்ஃபிங் செய்து ஆடியோவை மாற்றி பண மோசடி விளம்பரம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அத்துடன் ஆல்யா மனசா, தான் இணையதள டிரேடிங் வர்த்தகத்தின் மூலமாக 26 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்துள்ளதாகவும், அந்த முதலீட்டை செய்த மறுநாளே தனது பணம் லட்சங்களில் இரட்டிப்பு ஆனதாகவும் இணையத்தில் வீடியோ உலாவிக் கொண்டிருப்பதாகவும், அது போலியான வீடியோ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ரிசர்வ் வங்கியை தொடர்புபடுத்தியும் போலி வீடியோ!


கணவர் சஞ்சீவுடன் ஆல்யா மானசா மற்றும் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தருணம்

ஆல்யா மானசாவின் வீடியோ லிங்கை உடனடியாக அழிக்கவேண்டும் என்றும், இந்த பண இரட்டிப்புக்கு அவர் பதில் சொல்லவேண்டும் என்றும், ரிசர்வ் பேங்க் செய்தி வெளியிட்டுள்ளதாகவும், அது பிரபல ஆங்கில நாளேடான இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளியாகியுள்ளது போன்றும் சித்தரித்து இணையதள லிங்க், முகமறியாத முகநூல் நபர்களால் நிறைய பேருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் பிரபல ஆங்கில நாளேடான தி இந்தியன் எஸ்பிரஸில் பணி புரியும் ஒரு இணையாசிரியரும் கூட இந்த லிங்கை தொட்டு முதலீடு செய்து பெரும் பணம் ஈட்டியுள்ளதாகவும், அவர் தனது நாற்காலியில் அமர்ந்து டிரேடிங் செய்வது போன்றும் அந்த வீடியோவில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

கோடிகளில் சம்பாதிக்கலாம் என்பதைக் கேட்டு ஏமாறாதீர்கள்!

இந்த பண மோசடி விளம்பர பின்னணியின் உண்மைத்தன்மை என்ன? எப்படி நடக்கின்றது இந்த விளம்பர பண மோசடி? இதற்கு யார் உடந்தை? பாதிக்கப்பட்டோர் எத்தனை பேர்? இதற்கு விடிவுதான் என்ன? என்பது குறித்து பார்ப்போம்.

ஆல்யா மானசா இப்படித்தான் சம்பாதிக்கிறார். நீங்களும் கோடீஸ்வரர் ஆகணுமா? நீங்களும் கோடிகளில் சம்பாதிக்கலாம் என்று வலை விரிக்கிறது வீடியோ லிங்க். லிங்கை தொட்டு உள்ளே சென்றால் ரூ.25,000 முதலீடு செய்யுங்கள் லட்சங்களில் சம்பாதிக்கலாம் என்று குறிப்பிட்டு மோசடி வலை விரிக்கப்படுகிறது. இதையடுத்து நடிகை ஆல்யா மானசா, இது ஒரு மோசடி. தான் அப்படி பேசவே இல்லை. யாரும் அப்படி பணத்தை செலுத்தி ஏமாறாதீர்கள் என்று ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்து அனைவரையும் அலெர்ட் செய்திருக்கிறார்.


ரிசர்வ் வங்கியையும் தொடர்புபடுத்தி, இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டதாக வெளியான போலி தகவல்

ஆல்யா மானசா மட்டுமின்றி வேறுசில பிரபலங்களின் பெயர்களிலும் இதுபோன்ற மோசடிகள் நடைபெற்று வருகின்றன. முகம் தெரியாத தொழில்நுட்ப திருடர்களால் சமூக வலைத்தளங்கள் மற்றும் AI (Artificial Intelligence) என்று சொல்லப்படும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி, இல்லாத ஒன்றை இருப்பதாக காண்பித்து பொதுமக்களிடம் அவர்களது ஆசையை தூண்டி, அதனை பேராசையாக மாற்றி, இது போன்ற வீடியோ லிங்குகளை அனுப்பி, அதை அவர்கள் கிளிக் செய்வதன் மூலம் அவர்களது சேமிப்பு பணத்தை சுருட்டிக் கொள்வதுடன், தனிப்பட்ட அனைத்து ரகசியங்களையும் திருடிக்கொள்கின்றனர். இதனால் பணத்தையும் பொருளையும் இழந்து நிற்கும் பலர் இதனை வெளியில் சொல்ல அச்சப்பட்டுக்கொண்டு நிம்மதியில்லாமல் தவித்து வருகின்றனர். இன்னும் சிலர் தற்கொலை முடிவை நாடுகின்றனர்.


முகம் தெரியாத தொழில்நுட்ப திருடர்களால் சமூக வலைத்தளங்களில் அறங்கேற்றப்படும் ஸ்கேம் தொடர்பான புகைப்படம்

இது குறித்து ஆல்யாவும், அவரது கணவரும் வெளியிட்டுள்ள வீடியோவில், வீடியோ லிங்கை கிளிக் செய்தால் பணம் சம்பாதிக்கலாம் என தாங்கள் எந்த விளம்பரமும் செய்யவில்லை என்று கூறியுள்ளனர். மேலும், தாங்கள் அப்படி சம்பாதிக்கவில்லை என்றும், மக்கள் அனைவரும் சம்பாதிப்பதைப் போலவே, படிப்படியாக தாங்கள் முன்னேறி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். தங்களின் பெயரை பயன்படுத்தி இதுபோன்று வரும் வீடியோ லிங்க் மோசடிகளில் சிக்கி மக்கள் ஏமாற வேண்டாம் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பேராசை கூடாது

எது எப்படியோ பணத்தாசை என்பது மனிதர்கள் அனைவருக்குமே பொதுவான ஒன்றுதான் என்றாலும் கூட அந்த ஆசை பேராசையாகும் போது "கையில் உள்ள பணமும் காற்றில் பறந்து போய் முகமறியாத இது போன்ற இணையதள லிங்க் திருடர்களின் கைக்குப் போய்ச் சேருகின்றது என்பதே உண்மை".

Updated On 4 March 2024 6:18 PM GMT
ராணி

ராணி

Next Story