இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

பிசினஸ் தொடங்க நினைப்பவர்கள் எல்லாரும் செய்வதையே செய்யலாம் என பத்தில் ஒன்றாக இருக்கக்கூடாது. நாம் இருக்குமிடத்தில் என்ன தேவை பூர்த்தி செய்யப்படாமல் இருக்கிறதோ அதை தொழிலாக எடுத்து செய்யும்போது நாம் செய்யும் முதலீட்டைவிட அதிக வருமானம் கிடைக்கும் என்கிறார் மினியேச்சர் ஆர்ட்டிஸ்ட் ஸ்ரீஹரி. சினிமா நட்சத்திரங்கள் முதல் அரசியல் தலைவர்கள்வரை அனைவரையும் நுணுக்கமான வேலைப்பாட்டுடன் மினியேச்சர்களாக செய்துகொடுத்து அசத்திவரும் இவர், தான் தொழிலில் முன்னேறியது குறித்தும், புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்கள் செய்யவேண்டியது குறித்தும் நம்முடன் உரையாடுகிறார்.

நீங்கள் செய்ததிலேயே மிகவும் சிரமமான மினியேச்சர் எது?

சாய்பாபா சிலைதான். அதில் நிறைய பிழை திருத்தம் செய்துதான் கடைசியில் நல்ல வடிவத்தை கொண்டுவந்தோம். இதுவரைக்கும் நாங்கள் செய்ததிலேயே நீண்டநேரம் செய்தது அதுதான். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததுடன் அதனால் நிறைய ஆர்டர்களும் கிடைத்தன.

டிஃபன் உணவுவகை மினியேச்சர்களை பார்த்துவிட்டு ஹோட்டல் ஆர்டர்கள் கிடைத்திருக்கிறதா?

டிஃபன் வகை மினியேச்சர்களை ஃப்ரிட்ஜ் மேக்னட்களாக செய்கிறோம். இதுபோன்ற ஃப்ரிட்ஜ் மேக்னட் சேகரிப்பவர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள். அவர்கள் மிகவும் விருப்பப்பட்டு வாங்குகிறார்கள். இதில் நிறைய நுணுக்கமான விஷயங்களை செய்யவேண்டி இருக்கும். இது பார்ப்பதற்கே மிகவும் நன்றாக இருக்கும். இதுபோன்ற மினியேச்சர் மேக்னட்களை ஹோட்டல்கள் வாங்குவதைவிட சேகரிப்பவர்கள்தான் அதிகம் வாங்குகின்றனர்.


டிஃபன் மினியேச்சர் மேக்னட்களை விரும்பும் சேகரிப்பாளர்கள்

இறக்குமதி செய்யப்பட்ட பொம்மைகளுக்கும் இங்கு தயாரிக்கப்படும் மினியேச்சர் பொம்மைகளுக்கும் என்ன வித்தியாசம்?

செராமிக்கில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சினையே குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு அதில் வெடிப்புவிழ தொடங்கும். நாங்கள் முதலில் மினியேச்சர் செய்ய தொடங்கியபோது, சிந்தட்டிக் செராமிக்கின் தன்மை தெரியாமல் பொம்மைகளை செய்து டெலிவரியும் செய்துவிட்டோம். ஆனால் உள்ளே இருக்கு காற்றானது வெளியே வரும்போது 10 நாட்கள் கழித்து கொஞ்சம் கொஞ்சமாக வெடிப்பு வர ஆரம்பிக்கும். அதனை சரிசெய்யவே மெட்டீரியலை r&d செய்து, மினியேச்சர்களை செய்கிறோம். அதுவே இறக்குமதி செய்யப்படும் பொம்மைகளுக்கு உறுதித்தன்மை இருக்காது. ஆனால் எங்களுடைய மெட்டீரியல் என்பதால்தான் நாங்கள் 10 ஆண்டுகள் தைரியமாக வாரண்டி கொடுக்கிறோம். அதுவே இறக்குமதி செய்யப்படும் பொம்மைகளை மலிவான விலையில் விற்கப்படுகிறதே என்று வாங்கினால் பொருளின் அழகானது விரைவில் மங்கிவிடும். நிறையப்பேர் இதை ஒரு எமோஷனலான பொருளாக பார்ப்பதால் அது உடைந்தாலோ அல்லது அதன் தன்மை மாறினாலோ மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். எனவேதான் முதலில் எங்களிடம் வரும் வாடிக்கையாளர்களிடம் பொருளின் தரம் மற்றும் தன்மை குறித்து தெளிவாக எடுத்துக்கூறுவோம். அதனால் விலை சற்று கூடுதலாக இருந்தாலும் பொருளின் தரம் நன்றாக இருப்பதால் நிறைய வாடிக்கையாளர்கள் வெளிநாடுகளில் இருந்துகூட மொத்தமாகவும் ஆர்டர் செய்கிறார்கள்.


புதிய பிசினஸ் தொடங்கும் முன்பு செய்யவேண்டியவை

பிசினஸ் தொடங்க நினைப்பவர்களுக்கு உங்களுடைய அட்வைஸ் என்ன?

புதிதாக பிசினஸ் தொடங்குபவர்கள் பெரிய அளவில் முதலீடு செய்யாமல் சிறிதாக தொடங்கலாம். நாங்கள் முதலில் பிசினஸ் தொடங்கியபோது கஸ்டமரிடமிருந்து முதலில் பணத்தை வாங்கித்தான் வேலைகளை செய்வோம். அடுத்து தொழிலை தேர்ந்தெடுக்கும்போது எல்லாரும் செய்வதையே நாமும் செய்வோம் என்று நினைக்காமல் தனித்துவமான தொழிலை தேர்ந்தெடுக்கவேண்டும். இல்லாவிட்டால் எவ்வளவு சிரத்தை எடுத்து வேலைசெய்தாலும் அதைவிட குறைந்த வருமானம்தான் கிடைக்கும். அதுவே நிறைய ரிசர்ச் செய்து, நம்மை சுற்றி இருக்கும் ஒரு தேவை என்ன? அதை இதுவரை யாருமே பூர்த்தி செய்யவில்லை என்பதை கண்டறிந்து அதை பிசினஸாக தொடங்கவேண்டும். சூழ்நிலை அப்படி இருந்தாலே நமக்கான தொகையை நாமே நிர்ணயிக்கலாம். அதன்மூலம் செலவைவிட வருமானமும் அதிகமாக கிடைக்கும். எனவே புதிதாக ஒரு பிசினஸை சிறிய அளவில் தொடங்குவது நல்லது.

கார்ப்பரேட் ஆர்டர்கள் வருவதுண்டா?

இதுபோன்ற கார்ப்பரேட் கிஃப்டிங் செய்வதற்காகவே நிறைய கம்பெனிகளில் பதிவு செய்யப்பட்ட விற்பனையாளர்களாக இருக்கிறோம். அவர்களுக்கு மினியேச்சர் ஆர்டர்களை செய்து கொடுப்பதோடு மட்டுமல்லாமல் அந்த நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு பேக், டீஷர்ட் மற்றும் மக் போன்ற கிஃப்ட் ஆர்டர்களையும் செய்து கொடுக்கிறோம். ஆனால் இதுபோன்ற கிஃப்ட் ஆர்டர்கள் 100க்கும் மேற்பட்டதாக இருந்தால் மட்டுமே எடுத்துக்கொள்கிறோம். ரீடெய்லில் செய்வதில்லை.


கார்ப்பரேட் கிஃப்ட் ஆர்டர்களை டீல் செய்யும் முறை

ஆர்டர் எடுத்து வேலை செய்தபிறகு வேண்டாம் என்று வாடிக்கையாளர்கள் சொன்னதுண்டா?

சிலர் தங்களுடைய உருவத்தை தானே செய்யக்கூடாது, உயிரோடு இருப்பவர்களுக்கு சிலை செய்யக்கூடாது என்று சொல்வார்கள். சிலர் ஆர்டர் செய்தபிறகு வீட்டிலிருப்பவர்கள் வேண்டாம் என்று சொல்லிவிட்டதாக சொல்வார்கள். அதுபோன்ற சமயங்களில் பணத்தை வாங்காமல் பொருட்களை வாடிக்கையாளரிடமே கொடுத்திருக்கிறோம். ஆனால் நிறையப்பேர் இப்போது அதுபோன்று பார்ப்பதில்லை.

சென்டிமென்ட்டாக கிடைத்த பெஸ்ட் காம்ப்ளிமென்ட் எது?

முதன்முதலாக அப்படி காம்ப்ளிமென்ட் கிடைத்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஒருசில ஆர்டர்களை இரண்டு மூன்று மாதங்கள் பண்ணுவோம். நிறைய திருத்தங்களை சொல்வார்கள். கடைசியாக கஸ்டமரிடம் கொடுக்கும்போது, அவர்கள் எமோஷனலாக நிறைய கமெண்ட்ஸ் கொடுப்பார்கள். அது அவர்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை பார்க்கும்போது பணத்தையும் தாண்டி மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.


நூல் ஆர்ட்டில் அழகிய பெண் உருவம்

மினியேச்சர் மற்றும் சிலைகள் தாண்டி வேறு என்னென்னவெல்லாம் செய்கிறீர்கள்?

மினியேச்சரைத் தாண்டி சிலை போன்ற பொம்மைகளை செய்கிறோம். இறந்துபோனவர்களின் உருவங்களை சிலைபோல வைக்க நினைப்பவர்களுக்கு மோனோ கலர்களில் செய்து கொடுப்பதுண்டு. அந்த உருவங்களை மிகவும் நுணுக்கமாக செய்யவேண்டும். அதுபோக, movie merchandiser-க்கு ஒரு திரைப்படம் தொடர்பான சிலைகள், கீசெய்ன்கள், டீஷர்ட் போன்றவற்றை செய்துகொடுக்கிறோம்.

நூல் ஆர்ட் எப்படி செய்கிறீர்கள்?

இது மிகவும் சுலபம்தான். எங்கெல்லாம் முகத்தில் நிழல் இருக்கிறதோ அங்கெல்லாம் அதிக நூல் தேவைப்படும். மற்ற இடங்களில் குறைவான நூல்கள் பயன்படுத்தப்படும். இதற்கு முதலில் தேவையான உருவத்தை வரைந்து அதன்மீது நூல் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இதற்கு பயிற்சி தேவை. இது 24 இன்ச், 20 இன்ச் மற்றும் 16 இன்ச் என மூன்று சைஸ்களில் செய்து தரப்படுகிறது. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விலை நிர்ணயிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு, 24 இன்ச்சில் ஒரு முகம் மட்டும் வரையவேண்டுமென்றால் ரூ.3,300-ம், அதுவே இரண்டு முகங்களை வரையவேண்டுமென்றால் ரூ.5,500-ம் வசூலிக்கப்படுகிறது.

Updated On 4 Nov 2024 6:40 PM GMT
ராணி

ராணி

Next Story