மைக்ரோசாஃப்ட் தொழில்நுட்ப கோளாறு காரணமாக உலகம் முழுவதும் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் விமான சேவைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், வங்கி சேவைகள் உள்ளிட்டவை முடங்கியுள்ளன. இதுகுறித்து விளக்கமாக பார்க்கலாம்.

மைக்ரோசாஃப்ட் தொழில்நுட்ப கோளாறு

உலகம் முழுவதும் பெயர்பெற்ற மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு 40 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். மைக்ரோசாஃப்ட் விண்டோஸை பயன்படுத்தி பல்வேறு நிறுவனங்களின் பணிகள் அமைந்துள்ளன. இந்நிலையில்தான், நேற்று பிற்பகல் (19.07..24) மைக்ரோசாஃப்ட் முடங்கியது. மைக்ரோசாஃப்ட் பயனாளர்களின் கம்ப்யூட்டர்களில் Blue Screen of Death Error ஏற்பட்டது. இந்த பாதிப்பு Mac, Linux உள்ளிட்டவற்றில் இயங்கும் கணினிகளை பாதிக்கவில்லை. விண்டோஸ் பயன்பாட்டு கணினிகளை மொத்தமாக முடக்கியது.

மைக்ரோசாஃப்ட் பிரச்சினைக்கு காரணமான "Crowdstrike"

அமெரிக்காவை சேர்ந்த ‘கிரவுட்ஸ்டிரைக்’ என்ற நிறுவனம், உலகம் முழுவதும் பல்வேறு முன்னணி மென்பொருள் நிறுவனங்களுக்கு சைபர் பாதுகாப்பு சேவையை அளித்து வருகிறது. கூகுள், மைக்ரோசாஃப்ட் உள்பட 23,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அதன் வாடிக்கையாளராக உள்ளன. ‘கிரவுட்ஸ்டிரைக்’ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் சைபர் பாதுகாப்பை உறுதி செய்ய தனது ‘பால்கன் சென்சார்’ மென்பொருளை அவ்வப்போது அப்டேட் செய்வது வழக்கம். அந்த வகையில், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சைபர் பாதுகாப்பை உறுதிசெய்ய கிரவுட்ஸ்டிரைக்கின் ‘பால்கன் சென்சார்’ மென்பொருள் நேற்று பிற்பகல் அப்டேட் செய்யப்பட்டது. இதில் எதிர்பாராத விதமாக தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு மைக்ரோசாஃப்டின் சர்வர் முடங்கியது.

உலகம் முழுவதும் பாதிப்பு

மைக்ரோசாஃப்ட் தொழில்நுட்ப பிரச்சினையால், அதன் சேவைகளை பயன்படுத்தும் நிறுவனங்களின் செயல்பாடுகள் முற்றிலும் முடங்கியுள்ளன. லட்சக்கணக்கான கணினிகள் செயலிழந்துள்ளன. அமெரிக்கா, பிரிட்டன், ஃபிரான்ஸ், மலேசியா, ஜப்பான், இந்தியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளின் விமான சேவைகள், வங்கி சேவைகள், தகவல் தொழில்நுட்ப சேவைகள், ரயில் சேவைகள், பங்குச்சந்தை உள்ளிட்டவை பாதிக்கப்பட்டுள்ளன.

சென்னை ஐடி நிறுவனங்களுக்கும் பாதிப்பு

தமிழகத்திலும் ஐடி நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. குறிப்பாக தலைநகர் சென்னையில் ஓஎம்ஆர் பகுதியில் செயல்பட்டு வரும் பல்வேறு ஐடி நிறுவனங்களின் சேவைகள் முடங்கியுள்ளன.

மைக்ரோசாஃப்ட் அறிக்கை

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழில்நுட்ப பிரச்சினைக்கு முன்னுரிமை அளித்து தீர்வுகாண முயற்சி செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாங்களே பொறுப்பு

சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப பிரச்சினைக்கு நாங்களே பொறுப்பேற்பதாக ‘கிரவுட்ஸ்டிரைக்’ நிறுவன தலைமை செயலதிகாரி ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்பதாக அவர் கூறியுள்ளார். அத்துடன், தொழில்நுட்ப பிரச்சினைக்கு தீர்வு காண அவகாசம் தேவைப்படும் என்றும், இது சைபர் தாக்குதல் அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சைபர் பாதுகாப்பு நிபுணர்களின் கருத்து

கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் மென்பொருள் மீது ‘வான்னாகிரை’ என்ற வைரஸ் தாக்குதல் நடத்தப்பட்டபோது, 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் 3 லட்சத்துக்கும் அதிகமான கணினிகள், மடிக்கணினிகள் உள்ளிட்டவை செயலிழந்து, தொழில்நுட்ப சேவைகள் பாதிக்கப்பட்டதாக சைபர் பாதுகாப்பு துறை நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 7 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அதேபோன்ற சூழல் உருவாகியுள்ளதாகவும், இந்த முறை பாதிப்பு அதிகமாக உள்ளதாகவும் கூறியுள்ளனர். அத்துடன் இப்பிரச்சினைக்கு முழுமையான தீர்வு காண எத்தனை நாட்கள் ஆகும் என்பதை உறுதியாக கூற முடியாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவின் நொபிலியம் குழு சைபர் தாக்குதலை நடத்தியிருக்க அதிக வாய்ப்பிருப்பதாகவும் அவர்கள் குறிப்பட்டுள்ளனர்.

எலன் மஸ்க் கமெண்ட்

மைக்ரோசாஃப்ட் பிரச்சினை குறித்து சமூக வலைதள பதிவு வெளியிட்டுள்ள டெஸ்லா நிறுவனர் எலன் மஸ்க், “உலக வரலாற்றில் இது மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப தோல்வி’’ என்று தெரிவித்துள்ளார்.

மைக்ரோசாஃப்ட் தொழில்நுட்ப கோளாறால் உலகமே முடங்கியுள்ளபோதும், ரஷ்யா, சீனாவில் எவ்வித பாதிப்பும் இல்லை என்று அந்நாட்டு அரசுகள் அறிவித்துள்ளன.

Updated On 20 July 2024 2:45 PM IST
ராணி

ராணி

Next Story