இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

சினம், இரக்கம், தைரியம், வெறுப்பு, பயம், சிரிப்பு, அன்பு, அமைதி, ஆச்சர்யம் என நவரச உணர்வுகள் மனிதனுள் புதைந்திருந்து எப்போதெல்லாம் வேண்டுமோ அப்போதெல்லாம் வெளிப்படுகிறது. ஆனால், பலரினுள் தேவையற்ற இடங்களில், தேவையற்ற பல விஷயங்களில் மிக எளிமையாக வெளிப்படுவதென்னவோ கோபம்தான். சிலருக்கு கோபம் ஒரு கவசமாக இருக்கிறது. இன்னும் சிலருக்கு கோபமே அழிவாக இருக்கிறது. இப்படி அழிவை தரக்கூடிய கோபம் எதற்காக வருகிறது? அதை எப்படி கட்டுப்படுத்துவது? ‘கோபக்காரனிடத்தில்தான் குணம் இருக்கும்’ என்று கூறுவது ஏன்? போன்று கோபம் குறித்த கேள்விகளுக்கு விரிவாக பதிலளித்திருக்கிறார் இந்தியாவின் முதல் ஊடக உளவியலாளர் ஐஸ்வர்யா.

ஒரு நபருக்கு எந்தெந்த விஷயங்களுக்கு கோபம் வரும்?

எந்தெந்த விஷயங்களுக்கு கோபப்படுகிறோம் என்பது ஒவ்வொரு நபரை பொறுத்திருக்கிறது. கோபம் என்பது நாம் ஒரு விஷயத்தில் காயமடைவதன் வெளிப்பாடு. இரண்டாம் நிலை உணர்வு. கோபத்தின் நோக்கமே நம்மை பாதுகாப்பதுதான். சிலர் கோபப்படாமல் பொறுமையாக இருந்து அவர்களுக்கு சாதகமாக எதுவும் நடக்கவில்லை என்னும்போது கோபத்தை கவசமாக பயன்படுத்துவார்கள். அவர்களைத்தான் கோபக்காரர்கள் என்று சொல்லுகிறோம். இதற்கு உதாரணமாக ‘அன்பறிவு’ திரைப்படத்தில் வரும் அன்பு கதாபாத்திரத்தை சொல்லலாம். இன்னும் சிலர் பிறர் தம்மை கண்டு பயப்பட வேண்டும் என்பதற்காக கோபத்தை ஒரு சக்தியாக பயன்படுத்துகிறார்கள். இன்னும் சிலர் அவர்களின் காரியம் வெற்றிகரமாக நடக்க வேண்டும் என்பதற்காக கோபப்படுகிறார்கள். இன்னும் சிலர் அவர்களின் கடந்தகால வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களுக்காக கோபப்படுகிறார்கள். சிலரோ, வீட்டிலிருப்பவர்கள் கோபப்படுவதை பார்த்து பழகி, கோபம் என்பது வழக்கமான குணமாக கருதுகின்றனர்.

கோபப்படுவதற்கு முன்னர் இதை கருத்தில் கொண்டால் கோபம் கொள்ளாமல் இருக்கலாம் என்றால் அது எவை?

முன்னர் கூறியது போலவே கோபம் என்பது ஒருவர் நமக்கு பிடிக்காத அல்லது காயப்படுத்தும் விதமாக ஒரு செயலை செய்வதால் ஏற்படக்கூடிய உணர்வாகும். ஒரு விஷயத்திற்கு கோபப்படுவதற்கு முன்னர் எதிரில் இருப்பவர்களின் எண்ணம் எதை குறிக்கிறது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். அதேபோல அவர்கள் யார்? எதற்காக அப்படி கூறுகிறார்கள் என்பதை கருத்தில் கொள்ளலாம். பொதுவாகவே நாம் நமக்கு நம்பகமானவர்களிடம்தான் அதிக கோபம் கொள்வோம். அப்படி கோபம் கொள்ளும்போது அந்த நபர் என்ன கூற வருகிறார்கள் என்பதை உட்கவனிக்காமல் கோபத்தை முன்னிலைப்படுத்துவதால் அவ்விடத்தில் பேச்சு தொடர்பு உடைகிறது. எனவே கோபம் கொள்வதற்கு முன்னர் எதிரில் இருப்பவர்களின் எண்ணம் என்ன? அவர்கள் யார்? எதற்காக அப்படி கூறுகிறார்கள்? என்ன கூற வருகிறார்கள்? என்பதை கருத்தில் கொண்டாலே கோபப்படுவதை தடுக்கலாம்.


கோபம் கொள்வதற்கு முன்பாக சிந்தித்தல் அவசியம்

சிலர், தான் செய்வது தவறு என்பதை அறிந்திருந்தும், தான் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக கோபம் கொண்டு உரத்த குரலில் விவாதம் செய்தால் ஜெயித்து விடுவோம் என்று நினைக்கிறார்கள். இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

ஆம்! சிலர் தான் செய்தது தவறு என்பதை அறிந்திருந்தும் ஒப்புக்கொள்ளாமல் தான் ஜெயிக்க வேண்டும் என்பதற்காவே தேவையற்ற கோபம் கொண்டு விவாதத்தில் ஈடுபடுவார்கள். இன்னும் சிலர் தவறு செய்திருந்தாலும் அவர்கள் நினைப்பதுதான் சரி என்னும் எண்ணத்தை கொண்டு மற்றவர்கள் நம்புவதில்லை என்னும் ஆத்திரத்தில் கோபம் கொண்டு கத்துவதுண்டு. ஒரு கேள்விக்கு விடை தெரிந்து கொள்ள வேண்டுமானால் அதனை கத்தி கேட்டால் கிடைக்காது. பொறுமையாக கேட்டால் மட்டுமே அதற்கான விடையை தெரிந்து கொள்ள முடியும். கத்தி கேட்டால் ஏதோ கத்துறான்… என்றுதான் தெரியுமே தவிர்த்து என்ன கேட்கிறான் என்பது தெரியாது.

'கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும்’ என்னும் கூற்று எப்படி உருவானது?

ஒருவன் ஒரு இடத்தில் கோபம் கொள்ளும்போது அவன் என்ன செய்கிறான் என்பதறியாது அவன் மனதில் இருக்கும் அனைத்தையும் வெளிபடுத்திவிடுவான். அப்படி கோபப்படும்போது அவனுக்கென்று எந்த ஒரு கட்டுப்பாடும் இருக்காது. அவன் எதுவும் மூடிமறைக்காமல் வெளிப்படையாக எல்லாவற்றையும் வெளிகாட்டிவிடுவான். எனவேதான் கோபப்படும்போது எந்தஒரு ஒளிவுமறைவின்றி அவன் யார் என்ற குணம் அப்படியே வெளிவருவதால்தான் ‘கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும்’ என்ற கூற்று உண்டாயிற்றே தவிர கோபப்பட்டால்தான் குணம் என்பதில்லை.

டாக்ஸிக் பெற்றோர்கள் செய்யக்கூடாதவைகள் என்னென்ன?

‘டாக்ஸிக் பெற்றோர்கள்’ என்பது மனிதர்களாகிய நாம் பதித்த முத்திரைதான். அதனால் டாக்ஸிக் பெற்றோர்கள் என்றில்லாமல் பொதுவாகவே பெற்றோர்கள் என்ன செய்யக்கூடாது என்பதை சொல்கிறேன். தனது குழந்தையை யாரிடமும் ஒப்பிடுதல் கூடாது. சோறு போடுகிறேன், உடை அளிக்கிறேன் அதனால் நாங்கள் சொல்வதைத்தான் நீ கேட்க வேண்டும் என்று பெற்றோர்களின் தலையாய கடமையை ஒருபோதும் சுட்டிக்காட்ட கூடாது. அவமானப்படுத்தி ஒரு செயலை செய்ய வைக்கவோ அல்லது கற்றுத்தரவோ கூடாது. ஒரு குழந்தை தனது பெற்றோரிடம் வந்து ஏதோ தவறு நடந்துவிட்டது அல்லது தவறாக தொட்டுவிட்டார்கள் என்று கூறும்போது பெற்றோர்கள்தான் குழந்தைகளுக்கு தைரியம் தெரிவிக்க வேண்டுமே தவிர, ஐயோ… இப்படி ஆகி விட்டதே… என்னாலதான் இப்படி ஆச்சு… நான்தான் சரியில்லை… என்று பெற்றோர்கள் தங்களையே பழிசொல்லிக்கொள்ள கூடாது. இறுதியாக, குழந்தைகள் பெற்றோர்களிடம் இதை மாற்றி கொள்ளுங்கள், இதை எனக்காக செய்யுங்கள் என்று கேட்கும்போது. முடியாது, நான் கெட்ட அப்பாவாக அல்லது கெட்ட அம்மாவாகவே இருந்துவிட்டு போகிறேன் என்று தங்களை தாங்களே குழந்தைகளிடம் குறைத்து கூறக்கூடாது. இப்படி கூறுவதால் பல குழந்தைகள் தங்கள் பெற்றோர்களிடம் எதையும் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். மேலும் அவர்களும் அவர்களின் குழந்தைகளிடம் இப்படித்தான் நடந்து கொள்வார்கள்.


குழந்தைகளிடம் பெற்றோர்கள் செய்யக்கூடாதவை

எந்தெந்த விஷயங்களை பார்ட்னரிடம் பகிர்ந்து கொள்ளக்கூடாது?

என்னை பொறுத்தவரையில் அனைத்தையும் பகிரலாம். ஆனால், எப்படி பகிர வேண்டும் என்பதை அறிந்து கொண்டு பகிர்ந்து கொள்ளலாம். நாம் சொல்வதை மட்டும் கேட்டு நமது பார்ட்னர் எதுவும் ரியாக்ட் செய்ய கூடாது என்று நினைப்பவர்கள் கண்டிப்பாக எதையும் பகிர முடியாது. அதேபோல, நாம் சொல்வதை நமது பார்ட்னர் கேட்டுக்கொண்டு, ஏதாவது ஒரு விஷயம் பேசும்போது அதை சுட்டிக்காட்டி பேசினாலும் நாம் நமது பார்ட்னரிடம் அனைத்தையும் பகிர முடியாது. இப்படி பல விஷயங்களை அறிந்து நாம் பகிரும் விஷயத்தை எப்படி பகிர வேண்டும் என்பதை புரிந்து பகிர வேண்டும்.

அதிகப்படியான சிந்தனையை (Overthinking) எவ்வாறு கையாள்வது?

சிந்தனை என்பது ஒரு செயல்முறை. தேவையற்ற நேரங்களில் தேவையில்லாமல் சிந்திப்பதே அதிகப்படியான சிந்தனையாகும். அப்படி நம்மை மீறி நாம் யோசிக்கும் போது முதலில் நாம் நமக்குள்ளே இது நமக்கு அவசியமானதா என்பதை யோசிக்க வேண்டும். அவசியமற்றதாக இருந்தால் அதை மறக்க கூடாது முற்றிலுமாக அதை அழித்து விட வேண்டும். அப்படி மேலும் மேலும் சிந்தனை ஏற்பட்டு கொண்டே இருந்தால் அதற்கான போதிய தெரபியை எடுத்து கொள்ளலாம்.

Updated On 26 Dec 2023 12:54 AM IST
ராணி

ராணி

Next Story