இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

மனித வரலாற்றில் மிகவும் தொன்மையான விஷயங்களில் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுவது ஓவியங்கள்தான். மொழி என்ற ஒன்று தோன்றுவதற்கு முன்பாக மக்கள் தங்கள் கருத்துகளை பரிமாறிக்கொள்ள ஓவியங்களைத்தான் அதிகம் பயன்படுத்தியதாக கூறப்படுவதுண்டு. அப்படி பழமை வாய்ந்த கலைகளில் ஒன்றான ஓவியங்கள் இன்று நம் வீடுகளை அலங்கரித்துக்கொண்டு இருக்கின்றன. நம் வீட்டு வரவேற்பறையில் விருந்தினர்களை வரவேற்கும் விஷயங்களில் ஓவியங்களும் பிரதானமான ஒன்றாக இருக்கும். அப்படியான ஓவியங்களை உலக அளவில் கொண்டு சென்று புகழ் சேர்க்கக் கூடிய ஓவியர்களில் மிக முக்கியமானவராக பார்க்கப்படுபவர் பேராசிரியர் திருநாவுக்கரசு. பெண்ணியம், இயற்கை சூழல், நகரங்கள் தொடங்கி கட்டிட கலைகள் வரை அனைத்தையும் மிக அழகான படைப்புகளாக உருவாக்கி காட்சி படுத்துவதில் வல்லவரான இவர் ஓவியம் தொடர்பாக நம்மோடு பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல்களை இந்த கட்டுரையில் காணலாம்.

உங்களுடைய ஓவிய பயணம் எங்கிருந்து எப்படி ஆரம்பித்தது?

சிறுவயதில் இருந்தே வரைவதில் மிகுந்த ஆர்வம் உண்டு. என்னுடைய அந்த ஆர்வத்தை பெற்றோர்களும் ஊக்குவித்தார்கள். 1992-ஆம் ஆண்டிலேயே 10-ம் வகுப்பு முடித்த கையோடு அரசு ஓவியக் கல்லூரியில் சேர்ந்து படிக்கலாம் என்ற வரைமுறை இருந்தது. ஆனால், 12-ம் வகுப்பு முடித்த பிறகுதான் அப்படியொரு கல்லூரி இருப்பதே எனக்கு தெரிந்தது. அதன் தொடர்ச்சியாகத்தான் நுழைவுத்தேர்வுகள் எழுதி கல்லூரிக்குள் நுழைந்தேன். கல்லூரியில் சேர்வதற்கு முன்புவரை நாம் வரைவதுதான் ஓவியம் என்ற மனநிலையில் இருந்தேன். ஆனால், இங்கு வந்த பிறகுதான் ஒரு ஓவியத்தை வரைவதற்கான அடிப்படை விஷயங்களை தெரிந்துகொண்டேன். எனது கிராமத்திற்கு அருகிலேயே கும்பகோணத்தில் கல்லூரி இருந்ததால் சென்று படித்து வர மிகவும் வசதியாக இருந்தது. இருந்தும் நண்பர்களுடன் இணைந்து ரூம் எடுத்து தங்கி படித்ததுதான் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள உதவியாக இருந்தது.


ஓவியர் திருநாவுக்கரசு மற்றும் பெண்ணியம் தொடர்பாக அவர் வரைந்த ஓவியம்

கிராமப்புறங்களில் மருத்துவர், இன்ஜினியர் ஆக வேண்டும் என்றுதான் எல்லா பெற்றோர்களும் விரும்புவார்கள். ஆனால், உங்களுக்கு ஓவியத்தின் மீது ஆர்வம் வர தூண்டுகோலாக இருந்தது எது?

பிறந்து ஒரு வயது, எட்டு மாதம் ஆன குழந்தைகள் பேசுவதற்கு முன்பாக கிறுக்குதல் என்ற ஒரு விஷயத்தைத்தான் கையில் எடுப்பார்கள். அந்த விஷயத்தை பின்பற்றிதான் நான் வந்திருக்கிறேன். பள்ளியில் படிக்கும் காலங்களில் நான் வரைவதற்கு என்று ஒரு பாட வேலை இருக்கும். அப்படியான நேரங்களில் நான் வரைவதை பார்த்து ஆசிரியர்கள் பாராட்ட அதுவே போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை வெல்லும் அளவுக்கு கொண்டு சென்றது. ஒரு கட்டத்தில் அதையே தொழிலாக எடுத்து படிக்க வேண்டும் என்று முடிவு செய்து ஆரம்பித்ததுதான் இந்த பயணம். இதன் மூலமாக நான் மற்றவர்களுக்கு சொல்லவருவது என்னவென்றால், நீங்கள் உங்கள் குழந்தைகளை மருத்துவர், இன்ஜினியர் என எதற்கு வேண்டுமானாலும் படிக்க வையுங்கள். ஆனால், அதே நேரம் அந்த சிறுவயதில் விளையாட்டுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களோ, அதே அளவுக்கு வரையவும் ஊக்கப்படுத்துங்கள். ஏனென்றால் எந்த துறையை தேர்ந்தெடுத்தாலும் குழந்தைகளுக்கு கிரியேட்டிவிட்டி மிகவும் முக்கியம். காரணம் இந்த சமுதாயத்தில் ஒரு சிறந்த மனிதராக தன்னிச்சையாக வருவதற்கு அவர்களுக்கு அடிப்படை சக்தியாக இருப்பது இந்த ஓவியங்கள்தான். அதன் மூலம் தோல்வியையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் அவர்களுக்கு கிடைக்கும். அதனால் குழந்தைகளுக்கு ஓவியம் கற்றல் அவசியமான ஒன்று.

இந்த துறையை ஒரு தொழிலாக தேர்வு செய்யும்போது பயம் ஏதும் இல்லையா? நம்மாலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை எப்படி வந்தது?


பரதம் ஆடுவது போன்ற அழகிய பெண் ஓவியங்கள்

ஓவியத்தின் மீது எனக்கு இருந்த தன்னம்பிக்கைதான் என்னை இங்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. ஓவியர்களாக இருந்தாலும் சரி, எழுத்தாளர்களாக இருந்தாலும் சரி எப்போதுமே அவர்கள் தன்னம்பிக்கை மிக்கவர்களாகத்தான் இருப்பார்கள். இன்றைக்கு தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றுபவர்கள் எந்த அளவுக்கு சம்பாதிக்கிறார்களோ அதே அளவுக்கான வருமானம் ஓவியத்துறையிலும் கிடைக்கும். ஆனால், அது பலருக்கும் தெரிவதில்லை. இன்றைக்கு சினிமாத்துறையில் பல விஷயங்களுக்கு ஒரு கிரியேட்டர் தேவைப்படுகிறான். அதுபோலவே அன்றைக்கு ஒரு ஓவிய ஆசிரியராக இருந்துகூட என் குடும்பத்தினரை காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. அப்படியே ஒரு பேராசிரியராகவும் என் பயணம் தொடர்ந்தது. பிறகு என்னை போன்ற மற்ற மாணவர்களுக்கும் நான் வழிகாட்டியாக இருக்க விரும்பி ஓவியம் தொடர்பான இன்ஸ்டிடியூட் ஒன்று ஆரம்பித்தேன். அதில் பணம் உள்ளவர்கள், இல்லாதவர்கள் என பலரும் வந்து படித்தார்கள். இருந்தும் ஆசிரியர் பணி தொடர்ந்ததால் சென்னை வந்து இங்கு அரசு ஓவியக்கல்லூரியில் பணியாற்றினேன். நிறைய கஷ்டங்கள், பிரச்சினைகள் எது வந்தாலும் தன்னம்பிக்கையோடு இந்த துறையில் தொடந்து பயணித்துக் கொண்டிருக்கிறேன்.

உங்களின் முதல் படைப்பு என்னவாக இருந்தது? அதனை கண்காட்சியில் இடம்பெறச் செய்தபோது, மற்றவர்களின் கமெண்ட்ஸ் எப்படி இருந்தது?

கும்பகோணம் என்பது ஒரு கோயில் நகரமாக இருந்தாலும் கூட, கிராமத்து வாசனை வீசிக்கொண்டே இருக்கும். இது இங்கு மட்டும் இல்லை தஞ்சாவூர், புதுக்கோட்டை என எதை எடுத்துகொண்டாலும் கிராமத்து சூழல்தான் இருக்கும். அப்படியான ஒரு சூழலில் இருந்து எப்படி நகரத்தை நோக்கி செல்வது என்ற ஒரு பயம் இருந்தது. இருந்தும் மாஸ்டர் டிகிரி படித்துக்கொண்டிருந்த நான் எனது ஆசிரியர்களின் உதவியுடன் எனது படைப்புகளை லாரியில் ஏற்றி சென்னை வந்து இங்கு அப்போது ஓவியத்தில் புகழ்பெற்ற விஸ்வம் மற்றும் ஆதிமூலம் ஆகியோரின் ஒத்துழைப்புடன் லலித் கலா அகாடமியில் காட்சிப்படுத்தினேன். 2000-ஆம் ஆண்டில் முதல் முதலாக நான் காட்சிப்படுத்தியபோது அப்போது பிரபலமாக இருந்த பத்திரிகை ஊடகங்கள் அவற்றை எடுத்து செய்திகளாக வெளியிட்டன. கிராமத்தில் வாழ்ந்த நான் ஊடகம் என்ற ஒன்றை சந்திப்பது அதுதான் முதல் முறை. அப்போதுதான் உணர்ந்தேன் மக்களுக்காக நீங்கள் படைக்கும் படைப்புகளை நேர்த்தியாக செய்தால் எந்த இடத்திற்கு போவோம் என்பதனை நன்கு உணர்ந்தேன். அங்கு ஆரம்பித்த எனது முதல் படைப்பு 24-ஆண்டுகளாக தொடர்ந்துகொண்டு இருக்கிறது.


ஓவியரும், பேராசிரியருமான திருநாவுக்கரசு வரைந்த ஓவியங்கள்

இந்தியா தொடங்கி வெளிநாடுகள் வரை உங்களது படைப்புகள் காட்சிப்படுத்தப்படுகிறது. அந்த படைப்புகளுக்கு கிடைக்கும் பாராட்டுகள் எப்படி இருக்கிறது?

பாராட்டுகள் என்பது மிகவும் அவசியமான ஒன்று. அதுதான் நம்மை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் ஒரு உந்து சக்தி. வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை எங்களது ஓவியங்களை காட்சி படுத்துவோம். அப்படி சென்னையில் இருக்கக்கூடிய முக்கியமான ஆர்ட் கேலரியில் எனது படைப்புகள் வைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று ஓவியரும், இயக்குநருமான ராஜா மகேஷின் ஸ்டுடியோவிலும் எனது படைப்புகள் வைக்கப்பட்டுள்ளன. டெல்லி, பெங்களூர், ஹைதராபாத் போன்ற முக்கியமான இடங்களில் உள்ள ஆர்ட் கேலரியிலும் எனது படைப்புகளை வைத்துள்ளேன். இதுதவிர அரபு நாடுகளிலும், ஜெர்மன், பிரான்ஸ் போன்ற நாடுகளில் இருந்தும் எனது படைப்புகள் பற்றி தெரிந்தவர்கள் நேரடியாக தொடர்பு கொண்டு கேட்டும் ஓவியங்களை பெற்றுக்கொள்வார்கள் அல்லது எனது படைப்புகள் இடம்பெற்றுள்ள கேலரிக்கும் வருகை தந்து பெற்று செல்வார்கள். இதுதான் நமது படைப்புகளுக்கு கிடைக்கும் ஒரு பாராட்டு, அங்கீகாரமாக நான் பார்க்கிறேன். நமது பயணம் எப்படி இருக்கிறதோ அதற்கு தகுந்த மாதிரி மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கும் என்பதற்கு இந்த நிகழ்வுகள் ஒரு உதாரணம்.

உங்களது படைப்புகளுக்கு கிடைத்த மறக்க முடியாத பாராட்டு என்றால், அது யாரிடம் இருந்து வந்தது?


ஓவியர் திருநாவுக்கரசு கைவண்ணதில் அழகிய பெண் ஓவியம்

முதலில் எனது குடும்பத்தை சேர்ந்தவர்களும், என்னுடைய மாணவர்களும் எனது படைப்புகளை பார்த்து பாராட்டினால்தான் நான் அடுத்த கட்டத்துக்கு போக முடியும். அவர்களுடைய உத்வேகமே எனக்கு முதலில் கிடைத்த பாராட்டாக இருக்கும். அதற்கு பிறகு வண்ணக்கலை பிரிவில் சிறந்த ஓவியருக்கான விருது தமிழக அரசிடம் இருந்து கிடைத்தது. இதனை தொடர்ந்து நுண்கலை பிரிவு போன்ற பல தலங்களில் விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்றிருக்கிறேன். இதுபோன்ற பாராட்டுகளை மிகப்பெரிய விஷயமாக நான் பார்க்கிறேன்.

பெண்ணியம் தொடர்பாக நிறைய ஓவியங்கள் வரைந்திருக்கிறீர்கள்? பெண்ணியம் பற்றி ஓவியம் வரைய வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது?

குடும்பமாக இருந்தாலும், நாடாக இருந்தாலும் அது பெண் என்ற கட்டமைப்பை சார்ந்துதான் இருக்கிறது. தன்னிச்சையாக இயங்க முடியாது. ஒரு குடும்பத்தின் அடித்தளமும் அவர்கள்தான், அழகும் அவர்கள்தான் எனும்போது நம்மை வழிநடத்தும் சக்தியை நாம் மதித்தால்தான் நமது படைப்புகள் வளரும் என்பது எனது நம்பிக்கை. அதனாலேயே அவர்கள் தொடர்பான கலைகளை முன்னெடுத்து எனது படைப்புகள் வாயிலாக வெளிப்படுத்தினேன். இப்போது எனது படைப்புகளை இன்னும் வித்தியாசமாக அனைத்து தலங்களிலும் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் கட்டுமானம், இயற்கை சார்ந்த விஷயங்களிலும் கவனம் செலுத்தி கொண்டு செல்கிறேன்.

Updated On 11 Jun 2024 3:08 PM IST
ராணி

ராணி

Next Story