
‘கிங் ஆப் இந்தியன் ரோட்ஸ்’ - அம்பாசடரின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்
பல ஆண்டுகள் கடந்தாலும் இந்திய மக்களின் நெஞ்சில் நீங்காத இடம்பிடித்து, இன்று வரை பலரால் பெரிதும் போற்றி பேசப்படும் கார்களில் ஒன்று ‘அம்பாசடர்’. ‘தி கிங் ஆப் இந்தியன் ரோட்ஸ்’ என்ற பெருமை இந்த காருக்கு உண்டு. ஒரு காலத்தில் அம்பாசடரின் வளர்ச்சி கொடிகட்டிப் பறந்தாலும், இதன் வீழ்ச்சியும் பெரிய அளவில் பேசுபொருளானது. இந்தியர்களின் பெருமையாகக் கருதப்பட்ட அம்பாசடர் வாகனத்தின் வரலாறும் தயாரிப்பிற்கு முற்றுப்புள்ளியிட்டதற்கான காரணங்களும் பின்வருமாறு.
அம்பாசடரின் தொடக்கம்:
முதன்முதலில் 1958ஆம் ஆண்டு ஹிந்துஸ்தான் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது அம்பாசடர் கார். சி.கே பிர்லா நிறுவனத்தின் ஒரு அங்கமான ஹிந்துஸ்தான் நிறுவனம் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகே உள்ள உத்தரபாரா என்ற ஆலையில் தயாரிக்கப்பட்ட வாகனமாகும்.
அம்பாசடர் காரை தயாரித்த ஹிந்துஸ்தான் நிறுவனம்
இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட்ட முதல் கார் என்ற பெருமையைக்கொண்ட இந்த வாகனம், 1956 முதல் 1959 வரை UK -இல் உள்ள கவுளி, ஆக்ஸ்போர்டில் ‘மோரிஸ் மோட்டோர்ஸ் லிமிடெட்’ மூலம் முதன்முதலில் தயாரிக்கப்பட்ட மோட்டார்ஸ் ஆக்ஸ்போர்டு சீரீஸ் 3 என்ற மாடலை அடிப்படையாகக் கொண்டு அம்பாசடர் உருவாக்கப்பட்டது. கருப்பு, வெள்ளை, பச்சை என பல வண்ணங்களில் வெளிவந்து ஏராளமான மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அம்பாசடர் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டன. 90-களில் இந்தியாவில் பெரும்பாலானோருக்கும் பிடித்தமான வாகனமாக இருந்ததுள்ளது. அதுமட்டுமல்லாமல் உலகளவில் தலைசிறந்த டாக்ஸி அம்பாசடர்தான் என்பதை பிபிசி நிறுவனத்தின் ஆய்வுத் தரவுகள் தெரிவிக்கின்றன. மேலும் ஐக்கிய ராச்சியத்தில் நடைபெற்ற கார் கண்காட்சியில் வாடகைக் கார் வரிசையில் சிறந்த வாகனம் என்ற பெருமையையும் அம்பாசடர் பெற்றுள்ளது.
வசதிப்படைத்தவர்கள் முதல் ஏழைகள் வரை உகந்த கார்
சாமானியர்களின் வாகனம்:
ஒருகாலத்தில் பெரும் பதவியில் இருக்கும் அரசியல்வாதிகள், பெருந்தலைவர்கள், அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள் என்றாலே அவர்கள் அம்பாசடர் காரில்தான் பயணம் செய்வார்கள். அந்த அளவிற்கு இந்த வாகனத்தை பயன்படுத்துவதே கௌரவமாக கருதப்பட்டது. அதேசமயம் வசதி படைத்தவர்கள் மற்றும் பெரிய பொறுப்புகளில் இருந்தவர்கள் மட்டுமின்றி, நடுத்தர குடும்பத்தினரும்கூட இந்த வாகனத்தை வாங்கிப் பயன்படுத்தும் அளவிற்கு இதன் விலைமதிப்பை நிர்ணயித்திருந்தது ஹிந்துஸ்தான் நிறுவனம்.
மேலும் 90-களில் சொந்தமாக கார் வாங்க இயலாதவர்களும்கூட அம்பாசடர் என்ற சொகுசு காரின் அனுபவத்தை பெறும் வகையில் அன்றைய டாக்ஸி நிறுவனங்களும்கூட அம்பாசடர் காரையே பயன்படுத்தின. அம்பாசடர் கார் எந்த அளவுக்கு பிரபலமாகி இருந்தது என்பதை இன்றும் நாம் பார்க்கும் 90-களின் சினிமாக்களில் நம்மால் காணமுடிகிறது. இந்திய பொருளாதாரத்தில் சமநிலை என்னும் புரட்சியை ஏற்படுத்திய பெருமை அம்பாசடரையே சேரும் என்றுகூட சொல்லலாம்.
அம்பாசடர் ஃபேமஸ் மாடல்கள்
அம்பாசடர் மாடல்கள்:
தொழிநுட்ப ரீதியாக இதன் மேம்பாடு குறித்துப் பார்த்தால் சற்று பின்தங்கியே இருந்திருக்கிறது. ஏனெனில் ஹிந்துஸ்தான் நிறுவனத்தின் தலைவராக ஒரே தலைமுறையைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இருந்ததால், ஒவ்வொரு முறையும் புதுபுது மேம்பாடுகள் கொண்டுவரப்பட்ட போதிலும் அதில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெரிதளவில் மாற்றங்கள் செய்யப்படவில்லை என்பதே உண்மை. இருப்பினும் பல ஆண்டுகளாக சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு புது மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அவை, MK I (1957 – 1963), MK II (1963 - 1975), MK III (1975 - 1979), MK IV (1979 - 1990), NOVA (1990 -1999), CLASSIC (1992 - 2011), GRAND (2003 - 2013), AVIGO (2004 - 2007), ENCORE (2013 - 2014).
தயாரிப்பிற்கு முற்றுப்புள்ளி:
ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் இந்தியாவில் 1958ஆம் ஆண்டு அம்பாசடரை விற்பனை செய்யத் தொடங்கி 2014 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து விற்பனை செய்தது. ஆண்டுகள் கடந்தாலும் வாகனத்தில் பெரிய அளவில் மாற்றங்கள் எதுவும் ஏற்படாமல் இருந்ததும், அதே சமயத்தில், நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் கொண்ட வாகனங்களின் போட்டி அதிகரித்ததும் அம்பாசடரை பின்னுக்குத் தள்ளின. இருப்பினும், அரை நூற்றாண்டு பழைமையான மாடலை ஹிந்துஸ்தான் நிறுவனம் தொடர்ந்து விற்பனை செய்தது.
அம்பாசடர் உற்பத்தி நிறுத்தம்
ஒருகட்டத்தில் மேற்கு வங்க மாநிலம் உத்தரபாராவில் உள்ள அம்பாசடர் தயாரிப்பு தொழிற்சாலை மூடப்பட்டது. அதற்கு விற்பனை குறைந்ததையும், அதிக நஷ்டம் ஏற்பட்டதையும் ஹிந்துஸ்தான் நிறுவனம் காரணமாகக் கூறியது. 20-களின் தொடக்கத்தில் இந்தியாவில் பிற வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் கார்களை அதிகளவில் அறிமுகப்படுத்தத் தொடங்கின. அதனால் அம்பாசடருக்கு மார்க்கெட்டில் போட்டியும் அதிகரித்தது. தொழில்நுட்பம் வளர வளர அதற்கேற்ப தன்னை மாற்றியமைத்துக்கொள்ள தவறியது அம்பாசடர். மேலும் பிற கார்களுடன் ஒப்பிடும்போது அம்பாசடரின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாததும், பராமரிப்பதற்கான செலவுகள் அதிகமாக இருந்ததுமே வாடிக்கையாளர்களை திசைதிருப்பியது.
ஒரு கட்டத்தில் மார்க்கெட்டில் தாக்குபிடிக்க முடியாத ஹிந்துஸ்தான், 24 மே 2014 அன்று, இந்தியாவில் அம்பாசடரின் உற்பத்தியை நிறுத்தியது. தற்போது இந்தியத் தெருக்களில் லட்சங்கள் முதல் கோடிகள் வரையிலான கார்கள் வலம்வந்தாலும் ஆங்காங்கே அம்பாசடர் கார்களை நம்மால் பார்க்கமுடிகிறது. ஒவ்வொரு முறை அம்பாசடர் கார்களை பார்க்கும்போதும் மீண்டும் புது வடிவில் சந்தைக்கு வராதா என்ற ஏக்கத்தை முந்தைய தலைமுறையினரின் கண்களில் காணமுடிகிறது.
