இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

"கானா ஒரு கலாசார அடையாளம். அடித்தட்டு மக்களின் குதூகலம்."இப்படியான அடையாளத்துடன் அறிமுகமான இந்த கானா பாடல்கள் இன்று உலகம் முழுக்க கலக்கிக் கொண்டிருக்கின்றன. வேகமான தாளத்துடன் எளிமையான வார்த்தை கோர்ப்புகளுடன், அதற்கு ஏற்றவாறு ஒலிகளை எழுப்பி பாடப்படும் பாடல்கள் வெறும் சென்னை மக்களின் அடையாளமாக மட்டும் பார்க்கப்படாமல் உலகம் முழுவதும் பரவி நிற்பதற்கு தமிழ் சினிமாக்களும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் ஒரு காரணம் என்று கூட சொல்லலாம். இசையமைப்பாளர் தேவா துவங்கி, கானா உலகநாதன், கானா பாலா என்று கானா பாடல்களை பாடி பிரபலமானவர்கள் ஏராளம். இவர்களை பின்பற்றி ஆண்கள், பெண்கள் என்று, இன்று பலரும் போட்டி போட்டு கானா பாடல்களை பாடிவரும் நிலையில், கானா தொடர்பான இசை கச்சேரிகளை நடத்திவரும் டீசன்ட் மணி என்பவர் தனது கானா அனுபவம் பற்றி பகிர்ந்து கொள்கிறார். அதனை இந்த தொகுப்பில் காணலாம்.

கானா பாடல் எப்படி உருவானது, இதனுடைய வரலாறு என்ன?

கானா எந்த வகையான பாட்டு? எந்த காலக்கட்டத்தில் இருந்து புழக்கத்துக்கு வந்தது? என்பது நமக்கு தெரியாவிட்டாலும், இறந்தவர்கள் வீட்டில்தான் முதன் முதலாக பாடப்பட்டது என்பது நம்மில் பலருக்கும் தெரியாத ஒன்றுதான். பொதுவாக மரண வீடுகளில் இறந்தவரின் உடலை மயானத்திற்கு எடுத்து செல்லும்வரை இரவில் யாரும் தூங்கக்கூடாது என்பார்கள். அத்தகைய நேரங்களில் கானா பாடல் பாடக்கூடிய நபர்கள் அங்கு சென்று விடிய விடிய பாட்டு பாடி, அங்கு இருப்பவர்களை தூங்காமல் பார்த்துக்கொள்வார்கள். என்னுடைய சிறு வயதிலேயே அந்த சமயத்தில் இருந்த பல கானா கலைஞர்கள், மரண வீடுகளில் பாடும் பாடல்களை நான் கேட்டிருக்கிறேன். அவர்களை அப்போது நான் பார்க்கும் போதெல்லாம் நாமும் இவர்களை போல கானா பாடல்கள் பாட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டதுண்டு. அதன் தொடர்ச்சியே தற்போது நான் கானா பாடகராக மாற்றியுள்ளேன்.

எந்த வயதில் இருந்து நீங்கள் கானா பாடல்களை பாட ஆரம்பித்தீர்கள்?

என்னுடைய 14 வயதில் இருந்தே நான் கானா பாடல்கள் பாட ஆரம்பித்துவிட்டேன். எங்கள் பகுதியில் உள்ள மரண வீடுகளில் பாடப்படும் கானா பாடல்களை ஆவலோடு கேட்டு வளர்ந்து அதை நான் கற்றுக் கொண்டாலும், இறந்தவர்கள் வீட்டில் பாடப்படும் பாடல் என்பதால் சிலர் இதனை துச்சமாக எண்ணி அவமானப்படுத்துவார்கள். இருந்தும் கானா பாடல்கள் மேல் இருந்த விருப்பத்தால் பள்ளி நண்பர்களுடன் இணைந்து பாட ஆரம்பித்த நான், ஒரு கட்டத்தில் நானே சில மரண வீடுகளுக்கு சென்று எங்களை பாட அனுமதிக்குமாறு கேட்டு கானா பாடல்களை பாட ஆரம்பித்தேன். சொல்லப்போனால் இதை யாரும் எங்களுக்கு கற்றுத்தரவில்லை, எங்களின் ஆர்வமே இந்த கானாவை கற்று தேற வைத்தது. பொதுவாகவே மரண வீடுகளில் பாடப்படும் கானா பாடல்கள் அங்கு யார் இறந்தார்களோ அவரின் பெயரை வைத்து தொடங்கி, அவர் குறித்த சில தகவல்கள் கலந்த வரிகளோடு கூடிய பாடல்களாக பாடப்படும். நாங்களும் அவ்வாறுதான் பாடி வருகிறோம்.


சந்தானத்தின் 'பாரிஸ் ஜெயராஜ்' படத்தில் வரும் "காவா உள்ள கல்லுடி" என்னும் கானா பாடலின் காட்சி

ஏன் பெரும்பாலான கானா பாடல்களில் பெண்களை கிண்டல் செய்கிறார்கள்? ஆண்களை கேலி செய்து நீங்கள் பாடியுள்ளீர்களா?

நாங்கள் ஆண்களை கேலி செய்தும் பாடல்கள் பாடி இருக்கிறோம். குறிப்பாக ஆண்களை சுட்டிக்காட்டி பாடும்போது, குடித்துவிட்டு சீரழியாதே உன் குடும்பத்தை பார்த்துக்கொள் போன்ற அறிவுரைகளை கூறி பாடுவோம். அதற்கு நல்ல வரவேற்பும் கிடைக்கிறது. பெண்களை பொறுத்தவரை அவர்களை கிண்டல் செய்வது எங்களது குறிக்கோள் அல்ல. எல்லா பெண்களும் எங்களுக்கு அக்கா, தங்கை போன்றவர்கள்தான். யாரையும் நாங்கள் தவறாக பாடமாட்டோம். எங்களது பாடல்களில் சில கேலிகள் இருந்தாலும், அதனையும் பல பெண்கள் ரசிக்கின்றார்கள். அதுதான் கானாவின் சிறப்பே.

நீங்கள் எத்தனையோ கானா பாடல் பாடி இருக்கிறீர்கள், அதில் உங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு எது?

இப்போது நான் சொல்லக்கூடிய சம்பவம் பாராட்டு என்பதை தாண்டி, என் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வாக சொல்லலாம். ஒரு காலகட்டத்தில் என்னுடைய பாடல்களுக்கு கவனம் கிடைக்காத நேரத்தில், பலர் என் கானா திறமையை கிண்டல் செய்வார்கள். அந்த சமயத்தில் எல்லாம் என்மீதே எனக்கு வெறுப்பு இருந்து வந்த சூழலில் ஒருமுறை எனக்கு ஒரு ஃபோன் கால் வந்தது. என்னுடைய யூடியூப் பக்கத்தில் கொடுக்கப்பட்டிருந்த போன் நம்பரை வைத்து தொடர்புகொண்ட அந்த நபர், ''உங்களது கானா பாடல்கள் என் குழந்தைக்கு மிகவும் பிடிக்கும், உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் சரியாக பேசுவதற்கு கூட சிரமப்படுகிறார். அப்படி இருந்தும் உங்கள் கானா பாடல்களை விரும்பிக் கேட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார். சமீபத்தில் நீங்கள் பகிர்ந்திருந்த கானா ஆல்பம் ஒன்றைத்தான் அவர் தற்போது அடிக்கடி கேட்டு வருகிறார் '' என தெரிவித்தார். இந்த சம்பவம் வாழ்க்கையில் எதையோ சாதித்தது போன்ற உணர்வை எனக்கு கொடுத்தது.


கானா பாடகர் டீசன்ட் மணி மற்றும் காவல்துறையினர் ஒரு நிழச்சியில் அவரை வாழ்த்திய தருணம்

சினிமாவில் பாடும் வாய்ப்பு உங்களுக்கு கிடைத்திருக்கிறதா? அதற்காக முயற்சி ஏதும் செய்துள்ளீர்களா?

ஆம், நான் பாடியிருக்கிறேன். சுமார் 5 ஆண்டுகளுக்கு முன் சினிமாவில் பாடும் வாய்ப்புக் கிடைத்து இரண்டு பாடல்கள் நான் பாடினேன். ஆனால் என்னுடைய துரதிஷ்டம் அந்த படங்கள் ரிலீஸ் ஆகவில்லை. அதே போல் பல சமயங்களில் சினிமாவில் பாடும் வாய்ப்பு அமைவதற்கான சூழ்நிலையும் உருவானது. ஆனால் கடைசி நேரத்தில் கை நழுவி அந்த வாய்ப்பு பிறருக்கு சென்றுவிடும். இத்தகைய நிகழ்வுகள் எனக்கு வருத்தத்தைக் கொடுத்தாலும், நிச்சயம் ஒருநாள் சினிமாவில் பாடுவேன் அந்த நம்பிக்கை எனக்கு உள்ளது.

அவர் நம்பிக்கை சாத்தியப்பட வாழ்த்து தெரிவித்த நாங்கள், மேலும் சில கேள்விகளை அவர் முன் வைத்தோம். அதற்கான பதில்கள் அடுத்த பதிவில்...

Updated On 5 Feb 2024 6:56 PM GMT
ராணி

ராணி

Next Story