காதல் திருமணத்தில் விவாகரத்து அதிகம் காணப்படுவதற்கு காரணம் இதுதான்! - வழக்கறிஞர் பிரிசில்லா பாண்டியன்
இப்போது அனைத்து பெண்களுமே வேலைக்குச் செல்கின்றனர். தங்களுக்கு பிடித்தமான துறையை தேர்ந்தெடுத்து படிக்கின்றனர். ஆனால் 20 ஆண்டுகளுக்கு முன்பு பெரும்பாலான குடும்பங்களில் பெண்களுக்கு கல்வி என்பதே மறுக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் எப்படியாவது பள்ளிப்படிப்பை முடித்துவிட வேண்டும் என பல பெண்கள் போராடி இருக்கின்றனர். இருப்பினும் அப்போதே சில பெண்கள் எப்படியாவது தங்களுடைய கனவை நனவாக்கிட பல போராட்டங்கள் மற்றும் எதிர்ப்புகளை தாண்டி இப்போது உயர்ந்த பதவியில் இருக்கின்றனர். அவர்களில் ஒருவர்தான் வழக்கறிஞர் பிரிசில்லா பாண்டியன். சட்டப்படிப்பை படிக்கவேண்டும் என்ற ஆசை குடும்பத்தால் நிராகரிக்கப்பட்டு, பின்னர் தனது கணவனின் உதவியுடன் படித்து இன்று தமிழ்நாடு மற்றும் புதுவை பார் கவுன்சிலின் நிர்வாகக்குழு தலைவராக பதவி வகித்து வருகிறார். அவருடைய அனுபவத்தை நம்முடன் பகிர்கிறார்.
வழக்கறிஞராகும் கனவு சின்ன வயதிலிருந்தே இருந்ததா? அல்லது வீட்டாரின் உந்துதலின் பேரில் வழக்கறிஞரானீர்களா?
சமுதாயத்தில் நிறைய விஷயங்களை பார்த்து பார்த்து சின்ன வயதிலிருந்தே நீதிக்காக நிற்கவேண்டும் என்ற தாக்கம் எப்போதும் இருந்தது. இப்போது சமூக ஊடகங்கள் எப்படி தாக்கத்தை ஏற்படுத்துகின்றனவோ, அது போல அந்த காலத்தில் சினிமாக்கள் தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படி ‘விதி’ என்ற படத்தை பார்த்தபோது அது என் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அப்போதுதான் நாம் எப்படியாவது வழக்கறிஞராகி நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று யோசித்தேன்.
தமிழ்நாடு மற்றும் புதுவை பார் கவுன்சிலின் நிர்வாகக்குழு தலைவர் பிரிசில்லா பாண்டியன்
நான் பன்னிரெண்டாவது முடித்துவிட்டு சட்டக்கல்லூரியில் சேருவதற்கு வீட்டில் கேட்டபோது முடியாது என்று சொல்லிவிட்டார்கள். ஏனென்றால் அப்போதெல்லாம் சட்டக்கல்லூரி என்றாலே ஸ்ரைக், போராட்டம், அடிதடி அதிகம் நடக்கும். அதனால் நான் பி.எஸ்சி. சேர்ந்தேன். அதை பாதியிலேயே விட்டுவிட்டு காதல் திருமணம் செய்துகொண்டேன். காதலிக்கும்போதே சட்டப்படிப்பின்மீது எனக்கு இருக்கும் ஆர்வம் குறித்து எனது கணவரிடம் பகிர்ந்திருந்தேன். அதனால் மீண்டும் கல்லூரியில் சேர்ந்து பி.ஏ மற்றும் எம்.ஏ ஆங்கில இலக்கியம் படித்து முடித்துவிட்டு பிறகு சட்டக் கல்லூரியில் சேர்ந்தேன். படிக்கும்போது பல பிரச்சினைகள் வந்தபோதும் கணவனின் உதவியால் படித்து முடித்தேன். இப்போது பல கட்டங்களை கடந்து தமிழ்நாடு மற்றும் புதுவை பார் கவுன்சிலின் நிர்வாகக்குழு தலைவராக பதவி வகித்து வருகிறேன்.
லாயராக மறக்கமுடியாத நிகழ்வு என்று இருக்கிறதா?
ஆரம்பத்தில் என்னுடைய கணவருடைய வழக்கு அமர்வு நீதிமன்றத்தில் நடந்தபோது நாங்கள்தான் எடுத்து நடத்தினோம். நிறைய கொலை வழக்குகள் குறித்து நீதிமன்றத்தில் ஏற்கனவே வாதாடிய அனுபவங்கள் இருந்ததால் அந்த வழக்கை எளிதில் முடித்துவிடலாம் என்று நினைத்தோம். எனது கணவரை குற்றவாளியாக்கும்படியான சாதகங்கள் அந்த வழக்கில் இல்லை என்பதும் தெரிந்தது. ஆனால் அதில் பல இழுபறிகள் ஏற்பட்டு, நிறைய பிரச்சினைகளை சந்திக்கவேண்டி இருந்தது. இந்த துறையில் நாம் இருந்தும்கூட கணவரின் வழக்கில் ஜெயிக்க முடியவில்லையே என்ற தாக்கம் அப்போது அதிகமாக இருந்தது. அது தொழில் ரீதியாகவும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் அந்த வழக்கை மறுபடியும் சுப்ரீம் கோர்ட் வரை கொண்டுசென்று வெற்றிபெற்றோம். அதுவே தொழில் ரீதியான முன்னேற்றத்துக்கு வாய்ப்பாக அமைந்தது. அந்த அனுபவத்தை என்றுமே மறக்கமுடியாது.
பிரிசில்லா பாண்டியனுக்கு வழக்கறிஞர்கள் மரியாதை செலுத்திய தருணம்
இதுவரை உங்களுக்கு மிரட்டல்கள் ஏதாவது வந்ததுண்டா?
என்னுடைய கணவர் சமுதாயத்திற்காக சில விஷயங்களை பேசுவார். அதனாலேயே அவரை இல்லாமல் ஆக்கிவிடுவோம் என்று எழுதி நிறைய போஸ்ட் கார்டு மற்றும் கடிதங்கள் எனது அலுவலகத்திற்கு வரும். டெலிபோனில் கூப்பிட்டு மிரட்டுவார்கள். ஆரம்பத்தில் மிகவும் பயந்தேன். ஆனால் வழக்கறிஞரான பிறகு அதை சந்திக்கும் தைரியத்தை வளர்த்துக்கொண்டேன்.
உங்களுடைய அடுத்த இலக்கு என்ன?
இப்போது பார் கவுன்சிலின் தலைவராக இருக்கிறேன். எப்போதுமே அடுத்த லெவலிற்கு போகவேண்டும் என்ற ஆசை எல்லாருக்குமே இருக்கும். கடவுளின் ஆசி இருந்தால் அடுத்த நிலைக்கு என்னை கொண்டுபோவார். நீதிபதியாக அமரவேண்டும் என்ற ஆசை எனக்குள் இருக்கிறது.
பார் கவுன்சில் கூட்டத்தில் பிரிசில்லா பாண்டியன் உரையாற்றியபோது
உங்களுக்கு பிடித்த பெண் வழக்கறிஞர் மற்றும் நீதிபதி யார்?
பெண் வழக்கறிஞராக என்னை கவர்ந்தவர் பானுமதி அம்மா என்பவர். திருநெல்வேலி அமர்வு நீதிமன்றத்தில் நான் வழக்கறிஞராக பயிற்சி பெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில் அங்கு நீதிபதியாக அவர் இருந்தார். மிகவும் நேர்மையான நீதிபதி. யாரை பார்த்தும் பயப்பட மாட்டார். அவரிடம் யாருமே நெருங்க முடியாது. யாராலும் அவ்வளவு சீக்கிரத்தில் அவரிடம் பேசிவிட முடியாது. அவர் நினைத்ததைத்தான் செய்வார். அவருடன் இணைந்து சில வழக்குகளில் வேலை செய்திருக்கிறேன்.
அதன்பிறகு அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்தபோதும் அவரிடம் சில வழக்குகளில் பணியாற்றி இருக்கிறேன். அவர் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதியாக பதவியேற்கும்வரை பல்வேறு போராட்டங்களை சந்தித்திருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். அவரைப்போலவே வரவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். வழக்கறிஞர்களில் நிறையப்பேரை எனக்கு பிடிக்கும். தாங்கள் எடுக்கும் வழக்குகளில் ஆணித்தரமாக வாதாடி வெற்றிபெறவேண்டும் என்ற கொள்கைகொண்ட நிறைய பெண் வழக்கறிஞர்கள் என்னை மிகவும் கவர்ந்திருக்கிறார்கள். அதேபோல் ஆண் வழக்கறிஞர்கள் பலரை பார்த்து வியந்திருக்கிறேன். அவர்களைப்போல நமக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லையே என்று யோசித்து கவலைப்பட்டும் இருக்கிறேன்.
குடும்ப நீதிமன்றங்களில் விவாகரத்து வழக்குகள் அதிகமாகிவிட்டதாக கூறுகிறார்களே? உண்மையா?
கணவன் - மனைவியாக இணைபவர்கள் ஆறு மாதம்கூட சேர்ந்து வாழும் தன்மையானது இப்போது குறைந்துவிட்டது. அதற்கு egoism அதிகமாவதுதான் காரணம். ஒருவரிடம் ஒருவர் விட்டுக்கொடுக்கக்கூடாது, நாம் இருவரும் சமம்தானே என்ற எண்ணம் குடும்பத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இன்று நிறையப்பெண்கள் வேலைக்குச் செல்வதால் தனியாக நிற்கக்கூடிய சக்தி அவர்களுக்குள் உருவாகிறது.
பெண் வழக்கறிஞர்கள் போராட்டத்தை தலைமையேற்று நடத்தியபோது
அதேசமயத்தில் பெண்கள் பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்யும்படியாக படைக்கப்பட்டவர்கள். அதை புரிந்துகொண்டாலே ego வராது. இதற்கு நாம் பிறந்து வளரும் சூழ்நிலையும் முக்கியப் பங்காற்றுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரே குழந்தையாக பிறந்து வளரும்போது பெற்றோர் அதிக செல்லம் கொடுக்கின்றனர். அவர்களுக்கு விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையே இருக்காது. சிங்கிள் பேரண்ட்ஸ், சிங்கிள் சைல்டு இருக்கும் வீடுகளில் இதை அதிகம் பார்க்க முடிகிறது. அதேபோல் சமூக ஊடகங்கள் மற்றும் டிவியின் தாக்கங்களும் அன்றாட வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
எதில் விவாகரத்து அதிகமாக இருக்கிறது? காதல் திருமணத்திலா? அல்லது பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணத்திலா?
இன்று காதல் திருமணத்தில்தான் விவாகரத்து அதிகம் காணப்படுகிறது. காதலிக்கும்போது இரண்டு பேரும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும்தான் பார்ப்பார்கள். பேசுவார்கள். அப்போது இருவரிடமும் இருக்கும் நல்ல விஷயங்களை மட்டும்தான் காட்டிக்கொள்வார்கள். ஆனால் குடும்பம் என்றாகிவிட்ட பிறகு, ஆண் - பெண் இருவருக்குமிடையே இருக்கும் திரை முழுவதும் விலக ஆரம்பிக்கும். அப்போது இருவரின் குணாதியசங்களும் முழுமையாக இருவருக்கும் தெரியவரும். அப்போது எதிர்பார்ப்புகள் அனைத்தும் ஏமாற்றத்தில் முடியும்போது, விரிசல் ஏற்படும் சூழ்நிலை உருவாகும். அந்த நேரத்தில் இருவரும் தங்களுடைய இணையிடம் பிடித்த விஷயம் எதுவோ அதை முன்னிலைப்படுத்தி வாழ்க்கையை கொண்டுபோனால் வாழ்க்கை நன்றாக இருக்கும்.