இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

ஆண்கள்தான் இந்த வேலையை செய்யவேண்டும். பெண்கள் இந்தந்த வேலைகளை செய்யக்கூடாது என்ற நிலைமை மாறி இன்று அனைத்துத் துறைகளிலுமே பெண்கள் கால்பதித்து சாதனை படைத்து வருகின்றனர். ஆனால் இந்த இடத்தை பெண்கள் அவ்வளவு எளிதாக பெற்றுவிடவில்லை. உலக நாடுகளில், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவரவும், குடும்ப வன்முறைகளில் பெண்களுக்கு நீதி கிடைக்கவும், அவர்களுடைய முன்னேற்றத்துக்கு வழிவகுக்கவும் அந்தந்த நாட்டு அரசாங்கத்திற்கு எதிராக பெண்கள் பல்வேறு காலகட்டங்களில் போராட்டங்களை முன்னெடுத்தனர். அதன்விளைவாக பெண்கள் தங்களுக்கான உரிமைகளை நிலைநாட்டினர். இப்படி பெண்களுக்காக அமெரிக்கா உள்ளிட்ட ஒருசில நாடுகளில் தேசிய மகளிர் தினம் அனுசரிக்கப்பட்டு வந்த நிலையில், ஐ.நா ஒரு பிரகடனத்தை ஏற்படுத்தி சர்வதேச மகளிர் தினம் கொண்டாட வழிவகை செய்தது. அதன்படி, பெண்களின் திறமைகளையும் சாதனைகளையும் அங்கீகரிக்கும் விதமாக இனம், மொழி, கலாச்சாரம், அரசியல் மற்றும் நாடுகளின் பாகுபாடின்றி ஆண்டுதோறும் மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் பலதுறைகளில் சாதனை புரியும் பெண்கள் குறித்து பேசப்பட்டாலும், இன்றும் குறிப்பிட்ட சில தொழில்களை பெண்கள் செய்யக்கூடாது என்ற கட்டுப்பாடுகள் ஒருசில நாடுகளில் இருக்கத்தான் செய்கின்றன. குறிப்பாக, இந்தியாவில் பெண்கள் ஈடுபடாத தொழில்களில் ஒன்றாக இருக்கிறது பிணங்களை அடக்கம்செய்யும் தொழில். ஆனால் அதுபோன்ற கட்டுப்பாடுகளைத் தாண்டி ஒருசில பெண்கள் அந்த தொழிலிலும் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் ஒருவரான சென்னை மாதானங்குப்பம் சுடுகாட்டில் உடல்களை அடக்கம் செய்யும் எரிக்கும் பணிகளை மேற்கொண்டுவரும் ஸ்ரீதேவி, தன்னுடைய தொழில் குறித்தும், அதில் அவர் சந்திக்கும் சவால்கள் குறித்தும் ராணி நேயர்களுடன் பகிர்கிறார்.

எத்தனை வருடங்களாக பிணங்களை எரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறீர்கள்?

என்னுடைய தாத்தா, அப்பா காலத்திலிருந்தே நாங்கள் இந்த தொழிலைதான் செய்துவருகிறோம். என்னுடைய அப்பாவிற்கு அடுத்து இப்போது நான் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். இந்த வேலையை என்னால் விடமுடியாது. இதை செய்வதற்கு வெட்கப்படவும் மாட்டேன். என்னுடைய அப்பா இறந்து 6 வருடங்களாகிறது. அன்றிலிருந்து நான் இந்த தொழிலை செய்துவருகிறேன்.

இந்த தொழிலுக்கு விரும்பி வந்தீர்களா? அல்லது வேறு வழியில்லாமல் பழகிக்கொண்டீர்களா?

விரும்பிதான் வந்தேன்.

பெண்கள் சுடுகாடு பக்கமே போகக்கூடாது என்று சொல்லப்படுகிறது. அப்படியிருக்கும்போது நீங்கள் எப்படி இதற்குள் வந்தீர்கள்?

இது அசிங்கம், இந்த தொழிலை செய்தால் பேய் பிடித்துக்கொள்ளும் என்றெல்லாம் கிடையாது. அப்பா செய்த வேலையை நானும் செய்கிறேன். அதற்கு எனக்கு தைரியம் இருக்கிறது. அப்பாவுக்கு நிகராக நானும் பிணங்களை எரிப்பேன். குழிதோண்டி புதைக்கவும் செய்வேன்.


சுடுகாட்டில் தகனம் செய்வது குறித்து பகிரும் ஸ்ரீதேவி

முதன்முதலாக தனியாய் இந்த வேலையை செய்யும்போது எப்படியிருந்தது?

சிறுவயதிலிருந்தே அப்பாவுடன் வந்து எனக்கு பழக்கம் இருக்கிறது. அப்போதே நாங்கள் தனியாக இருக்கக்கூடாது என சுடுகாட்டிற்கு அவருடன் கூட்டிவந்து எங்களுக்கு டீ அல்லது ஜூஸ் வாங்கிக்கொடுத்து ஏதாவது ஒரு சமாதிமீது உட்கார வைத்துவிடுவார். அப்பா வேலையை முடித்தபிறகு கூடவே சென்றுவிடுவோம். அப்படி பார்த்து பார்த்து எங்களுக்கும் பழகிவிட்டது.

அமானுஷ்யம், பேய், பிசாசு என்றெல்லாம் சொல்கிறார்களே?

அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது. இங்கு படுத்தால் நன்றாக தூக்கம் வரும். எந்தவொரு பயமும் இருக்காது. சாமி இருக்கும் இடம்தான் இது. வெறும் கட்டை மட்டும்தான் இங்கு வேகிறது. அதன் ஆவியெல்லாம் வேறு எங்கோ இருக்கிறது. பரிசுத்தமான இடம் இதுதான். வீட்டில் ஏதாவது பிரச்சினை என்றால்கூட நான் இங்குவந்து உட்கார்ந்து பிரார்த்தித்துவிட்டு செல்வேன். உடனே மனது ரிலாக்ஸாகிவிடும்.

சுடுகாட்டில் குறிப்பிட்ட இடத்திற்கு போனால் பயமாக இருக்கும் அல்லது அந்த இடத்தில் வேறு மாதிரி உணர்வு ஏற்படும் என்று ஏதாவது இருக்கிறதா?

இரவு 9, 10 மணி வரைக்கும் பிணம் எரிக்கவேண்டி இருந்தால் இங்குதான் இருப்போம். ஒரு பிணம் எரிந்து சாம்பலான பிறகுதான் எங்களால் வெளியே போகமுடியும். ஏனென்றால் ஒருசில பிணங்கள் முழுவதும் எரிவதற்கு கட்டையோ அல்லது வறட்டியோ பற்றாக்குறையாகிவிடும். நேரம், காலம் பார்த்து அஸ்தி எடுக்க வருபவர்களுக்கு சரியாக எடுத்துக்கொடுக்க வேண்டும். ஒருவேளை பிணம் வேகாவிட்டால் எங்கள்மீது புகார் கொடுத்துவிடுவார்கள். மழை, இடி, வெயில் என எதுவாக இருந்தாலும் இங்குதான் இருப்போம்.

எந்த மாதிரியான உடல் எரிய நீண்ட நேரம் ஆகும்?

ஒரு உடல் முழுமையாக எரிய 3 மணிநேரம் ஆகும். ஒருசில உடல்கள் 4 மணிநேரம்கூட எரியும். உடல் எடை அதிகமாக இருப்பவர்கள், உடலில் கொழுப்பு அதிகம் இருக்கும் இளம்வயது உடல்கள் ஆகியவை எளிதில் எரியாது. வயதானவர்கள் உடல் என்றால் சீக்கிரத்தில் எரிந்து சாம்பலாகிவிடும்.


முழு உடலும் எரியும்வரை கட்டைகளை முறையாக பயன்படுத்துவது குறித்து...

உடலிலேயே எந்த உறுப்பு சீக்கிரத்தில் எரியாது?

சிலருக்கு இதயம் எரியாமல், தலை எரியாமல் இருக்கும். பெரும்பாலும் நிறையப்பேருக்கு மார்பு பகுதி சீக்கிரத்தில் எரியாது. எனவே அந்த பகுதி முழுமையாக எரிவதற்கு கட்டையால் திருப்பி திருப்பி போடுவோம். முழுமையாக எரிந்தபிறகு கட்டைகளை சாம்பல்மீது அடுக்கி போட்டுவிடுவோம். அடுத்த நாள் காலை சம்பந்தப்பட்டவர்கள் வந்து சாம்பல் கேட்கும்போது, தலை, இதயம், கை, கால் என ஒவ்வொரு பகுதியிலிருந்தும் சிறிது சாம்பலை எடுத்து சிறிய குடுவையில் போட்டுக்கொடுப்போம். அவர்கள் அதை கடலில் கரைப்பார்கள்.

சில உடல்களை எரிக்கும்போது எழுந்து உட்காரும் என்று சொல்கிறார்கள். அது எப்படி?

மனித உடலில் இருக்கும் நரம்புகள் அப்படியே எழுந்துகொள்ளும். சில நேரங்களில் கால் மட்டும் மேலே தூக்கும். சில நேரங்களில் கை மட்டும் தூக்கும். அந்த நேரத்தில் ஒரு கட்டையால் மெல்ல தட்டினால் விழுந்துவிடும்.

இந்த தொழில் குறித்து மற்றவர்கள் உங்களிடம் என்ன கேட்பார்கள்?

நிறையப்பேர் பயமாக இல்லையா என்று கேட்பார்கள். எதற்கு பயம்? நானும் ஒரு பெண்தானே! எனக்கு எதற்கு பயம் இருக்கவேண்டும் என்று கேட்பேன். பெண்கள் தைரியமாக இருந்தால்தான் எதையும் சாதிக்கமுடியும். எனக்கு கடவுள் நிறைய தைரியம் கொடுத்திருக்கிறார். எனக்கு அது போதும்.

உறவுகள் உங்களிடம் எப்படி பேசி பழகுவார்கள்? அவர்கள் வீட்டு விசேஷங்களுக்கு கூப்பிடுவார்களா?

என்னை கூப்பிடாமல் இருக்கமாட்டார்கள். நீ வரவேண்டும், வந்தால்தான் ஃபங்ஷனே கலைகட்டும் என்று சொல்வார்கள். நாங்களும் நன்றாக டிரெஸ் போட்டுக்கொண்டு, ஆட்டம் பாட்டம் என மகிழ்ச்சியாக இருப்போம். இந்த வேலை செய்கிறாளே என்று நினைக்கமாட்டார்கள். பண்டிகைகள் மட்டுமல்லாமல் இறப்புகளில்கூட நான் சென்று உடலுக்கு செய்யவேண்டிய கடைசி மரியாதையெல்லாம் செய்ய உதவுவேன். பிணத்தை எடுக்கும்போதுகூட நானும் கூடவே வருவேன். நெருப்புச்சட்டியையும் கையில் பிடித்துக்கொண்டு வருவேன். அதற்கெல்லாம் வெட்கப்பட மாட்டேன். திருடக்கூடாது, தவறு செய்யக்கூடாது. என்னுடைய உழைப்பு இது. இதில் அசிங்கப்பட என்ன இருக்கிறது? என்னை பொருத்தவரைக்கும் ஒரு வேலையில் இறங்கிவிட்டால், அது கஷ்டமோ நஷ்டமோ செய்து முடித்துவிட்டுதான் வெளியே வரவேண்டும். இதுபோக, அரசு பொது கழிப்பிடங்களை சுத்தம் செய்யும் பணியையும் செய்து வருகிறேன்.


ஒவ்வொருவரின் மண்டை ஓட்டிலும் இருக்கும் ஆயுட்கால தலையெழுத்து குறித்து விளக்கம்

இத்தனை வருடங்களில் இதுவரை எத்தனை பிணங்களை எரித்திருக்கிறீர்கள்? அடக்கம் செய்திருக்கிறீர்கள்?

இதுவரை எத்தனை பிணங்கள் வந்திருக்கின்றன என்ற எண்ணிக்கையெல்லாம் தெரியவில்லை. கார்ப்பரேஷனில் எங்களுக்கென்று நோட்டு புத்தகம் இருக்கிறது. அதை பார்த்தால்தான் தெரியும். அந்த நோட்டில் கையெழுத்து போட்டு ஒரு ரசீது வாங்கிவந்து பிணம் கொண்டுவருபவர்களுக்கு நான்தான் கொடுக்கவேண்டும்.

எந்த உடலையாவது எரிக்கும்போது கவலைப்பட்டிருக்கிறீர்களா?

கவலை என்று சொல்லமுடியாது. ஒருமுறை கனமழை பெய்த சமயத்தில் ஒரு ஆண் மற்றும் பெண்ணின் உடலை எரிக்க நேரிட்டது. இரண்டையும் ஒன்றாக மேடையில் அடுத்தடுத்து வைத்து எரித்துக்கொண்டிருந்தபோது, அந்த பெண்ணின் தலை எரிந்து வெடித்து என் மடிமீது வந்து விழுந்தது. ஒரு பழைய துணியில் அந்த தலையை எடுத்து மீண்டும் நெருப்பில் போட்டேன். நிறையப்பேரின் குடும்பத்தினர் அழும்போது நானும் அதை பார்த்து மிகவும் அழுதிருக்கிறேன். கடைசியாக அந்த முகத்தை பார்ப்பது நானாகத்தான் இருக்கும். இளம்வயதினர் தற்கொலை செய்துகொண்டோ அல்லது விபத்தில் இறந்தோ பிணத்தை கொண்டுவரும்போது அதை பார்த்து பார்த்து அழுவேன்.

மந்திரம் செய்ய, மை செய்ய மண்டை ஓட்டை எடுக்க சுடுகாட்டுக்கு நள்ளிரவில் வருவார்கள் என்று சொல்கிறார்களே. அது உண்மையா?

நமது ஊர் சுடுகாடுகளில் அதுபோன்று இல்லை. அதெல்லாம் இங்கு நான் கேள்விப்பட்டதும் இல்லை. வேறு ஊர்களில் அப்படி செய்வதாக சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்.

மண்டை ஓடுகளில் தலையெழுத்து இருக்கும் என்று சொல்கிறார்களே. அது உண்மையா?

ஹார்ட்டுக்கு இசிஜி எடுப்பதை போன்று தலையில் இருக்கும். சிலருக்கு அந்த கோடு முன்பே முடியும். சிலருக்கு நடுவில் முடியும், சிலருக்கு கடைசிவரை இருக்கும். வயதாகி இறப்பவர்களுக்கு அந்த கோடு கடைசிவரை இருக்கும்.


தைரியமாக சுடுகாட்டில் பிணங்களை எரித்துவிட்டு பூட்டிவரும் ஸ்ரீதேவி

சுடுகாட்டிற்கு பெண்கள் வருகிறார்களா?

பெரும்பாலும் வரமாட்டார்கள். ஆனால் ஒருசில பெண்கள் வருவார்கள்.

இந்த சுடுகாட்டிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட பாடம் உண்டா?

நான் துணிச்சலாக இந்த வேலையை செய்வதால் நிறையப்பேர் என்னிடம் இதுகுறித்து கேட்பார்கள். ஆனால் இதில் என் குடும்பம் சாப்பிட வருமானம் கிடைக்கிறது. இதுவும் ஒரு வேலை என்று நினைத்து செய்கிறேன்.

பெண்களுக்கு என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?

தைரியமாக இருங்கள். எந்த வேலையாக இருந்தாலும் துணிச்சலாக செய்யுங்கள். எதற்காகவும் வெட்கப்படக்கூடாது. இதுதான் வாழ்க்கை, இப்படித்தான் இருக்கவேண்டுமென மற்ற பெண்களுக்கும் முன்னுதாரணமாக திகழ வேண்டும். 100 ஆண்கள் வருகிற இந்த இடத்தில் நான் ஒரே பெண்ணாக தனியாகத்தான் இருப்பேன். என் கணவரும் எதுவும் கேட்கமாட்டார். வருகிற ஆண்களும் எதுவும் கேட்கமாட்டார்கள். அப்படியே கேட்டாலும் இந்த வேலையை நீங்கள் செய்கிறீர்களா? என்று திருப்பி கேட்பேன். அவர்கள் உடனே எதுவும் பேசாமல் அடங்கிவிடுவார்கள். பெண்களால்தான் எல்லாமே உருவாகிறது. பெண்கள் இல்லாமல் இங்கு எதுவும் இல்லை.

Updated On 4 March 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story