சர்வதேச யோகா தினம் 2024 - ஆசனங்கள் மட்டும் யோகா கிடையாது! விரிவான வரலாறு!
மனதை அலைபாய விடாமல் ஒருமுகப்படுத்துவதே 'யோகா' என்று சொல்லப்படுகிறது. ஆசனம் என்ற சொல்லுக்கு 'இருக்கை' என்பது பொருள். எனவே உடலை ஒரு நிலையில் குறிப்பிட்ட நேரம் இருக்கச் செய்யும் உடற்பயிற்சியையும், அவை சார்ந்த நிலைகளையும் குறிக்கும் சொல்லே "யோகாசனம்". தமிழில் இது "ஓக இருக்கை" என்று அழைக்கப்படுகிறது. அப்படிப்பட்ட யோகாசனத்தின் மூலம் உலகளாவிய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நல்லிணக்கம் மற்றும் அமைதியை மேம்படுத்தவும் ஆண்டுதோறும் ஜூன் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படுகிறது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
ஏன் யோகா?
நாகரிகம் என்ற பெயரில் இன்றைய மனிதனிடம் கோபம் அதிகமாகிவிட்டது. தன் அகச் செயல்களுக்கும், புறச்செயல்களுக்கும் இடையே இருந்த நல்லுறவை மனிதர்கள் இழந்து கொண்டிருக்கிறோம். ரசாயன மருந்துகளையும், நச்சுப் பொருள் கலந்த உணவுகளையும் பயன்படுத்தி இயற்கையின் விதிகளுக்கு முரணாக உடலையும் பாழ்படுத்திக் கொண்டிருக்கிறோம். இப்படிப்பட்ட சூழலில் மகிழ்ச்சியான மனநிலையில் நோயற்ற வாழ்வை வாழ மனிதனுக்கு யோகா தேவைப்படுகிறது.
இந்தியாவில் தோன்றிய யோகக்கலை!
4500 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் தோன்றிய உடற்பயிற்சிதான் யோகக்கலை. பழங்காலத்தில் வாழ்ந்த யோகிகள் காட்டில் மிருகங்கள் மற்றும் பறவைகளின் செயல்களை பார்த்து வடிவமைத்ததுதான் யோகாசனம் என்று பல தகவல்கள் இருந்தாலும், இந்த அரிய பொக்கிஷத்தை முதன் முதலில் உலகுக்கு எழுத்து வடிவில் அளித்தவர் பதஞ்சலி முனிவர். பல சகாப்தங்களுக்கு முன் பதஞ்சலி முனிவர், மனிதனின் விடுதலைக்கான எட்டுக்கதவுகளை விவரித்திருக்கிறார். அதையே நாம் இன்று 'அஷ்டாங்க யோகா' என்று கூறுகிறோம். யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணம், தியானம், சமாதி ஆகியவையே அந்த அஷ்டாங்க யோகாக்கள்.
யோகாவை உலகுக்கு எழுத்து வடிவில் அளித்த பதஞ்சலி முனிவர் மற்றும் யோகாவை உலகளவில் பிரபலமாக்கியவர்களில் ஒருவரான பட்டாபி
ஆசனங்கள் மட்டும் யோகா கிடையாது!
யோகா என்றாலே ஆசனங்கள்தான் என்று சிலர் நினைத்துக் கொண்டுள்ளனர். ஆனால் அது உண்மையில்லை. ஆசனங்கள் என்பது யோகாவின் ஒரு பகுதி மட்டுமே. மேலே குறிப்பிட்டுள்ள அஷ்டாங்க யோகாவில் ஆசனமும் ஒன்று.
அஷ்டாங்க யோகாவில், "யமம்" என்பது அகிம்சை, வாய்மை, களவு செய்யாது இருத்தல், பிரம்மச்சர்யம், பேராசயை அடக்குதல் போன்றவற்றை வலியுறுத்துகிறது. தூய்மையான எண்ணங்கள், போதுமென்ற மனம், தீய பண்புகளை நீக்குதல், வேதங்களை படித்தல், இறைவழிபாடு ஆகியவற்றை "நியமம்" வலியுறுத்துகிறது. ஆசனம் என்பது வெறும் கை, கால்களை அசைக்கும் உடற்பயிற்சி மட்டுமே கிடையோது. இதுதொடர்பாக பதஞ்சலி மகரிஷி சொல்வது என்னவென்றால், திடமாகவும், சுகமாகவும் அமர்ந்திருக்க வேண்டும். இல்லையென்றால் அது ஆசனம் இல்லை என்று குறிப்பிடுகிறார். மூச்சுக்காற்றை ஒழுங்குப்படுத்துவதே "பிராணாயாமம்".
"பிரத்தியாகாரம்" என்பது அனைத்து புலன்களையும் கட்டுப்படுத்துவது. மொத்தம் 11 புலன்கள் உள்ளன. அதாவது ஐந்து உணர்வுகள், ஐந்து செயல் புலன்கள் மற்றும் ஒரு மனம். அடுத்ததாக "தாரணம்". ஒரு இடத்தில் மனதை பொருத்துதலே தாரணம் என்று சொல்லப்படுகிறது. அடுத்த நிலை "தியானம்". பொருந்திய மனதை அங்கேயே நிலைநிறுத்தச் செய்யும் முயற்சியே தியானம். இறுதியாக "சமாதி நிலை". சமா என்றால் சமம். இதிலிருந்து வந்த வார்த்தைதான் சமாதி. ஆன்மா மற்றும் உச்ச ஆத்மாவின் சமத்துவ நிலை சமாதி என்று அழைக்கப்படுகிறது. சமாதி என்பது சரியான யோக நிலையின் வெளிப்பாடு.
யோகாவின் மும்மூர்த்திகள்
கே. பட்டாபி ஜோயிஸ், பி.கே.எஸ். ஐயங்கார் மற்றும் பிக்ரம் சௌத்ரி ஆகிய மூன்று இந்தியர்கள் மூலம் யோகாவின் பல்வேறு முறைகள் உலகளவில் பிரபலமாகின. இவற்றில் பட்டாபி ஜோயிஸ், யோகாவின் பண்டைய வடிவமான ‘அஷ்டங்க யோகா’வை பிரபலப்படுத்தினார். பி.கே.எஸ். ஐயங்காரின் யோகா முறை, ’ ஐயங்கார் யோகா’ என்று அவரது பெயரிலேயே அழைக்கப்பட்டது. இந்த மூன்று பேரில் பட்டாபி ஜோயிஸ் மற்றும் ஐயங்கார், தங்களின் யோகா பயிற்சி மையத்தின் அடித்தளத்தை இந்தியாவில் அமைத்திருந்தனர். அத்துடன், யோகாவை கற்றுக்கொடுக்கவும், பரப்பவும், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு பயணங்களையும் மேற்கொண்டனர். உலகின் பல்வேறு பகுதிகளில் பயிற்சி மையங்களை உருவாக்கவும் செய்தனர். பிக்ரம் செளத்ரி, 1990-களில் தனது பெயரிலான யோகா பயிற்சி மையங்களை அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் நிறுவினார்.
வெளிநாட்டவர் மத்தியிலும் பிரபலமாக இருக்கும் யோகக்கலை
யோகாசனம் செய்யும்போது கடைபிடிக்க வேண்டியவை
நல்ல சுத்தமான காற்றோட்டமான இடத்தை தேர்வு செய்ய வேண்டும்.
அதிகாலை 4 முதல் 6 மணிக்குள் செய்தால் பலன் அதிகம். அல்லது காலை 8 மணிக்குள் செய்து முடிக்க வேண்டும். மாலையில் சூரியன் மறையும் நேரத்தில் செய்ய வேண்டும். அதாவது 5.30 முதல் 7 மணிக்குள் செய்ய வேண்டும்.
ஆசனம் பயிற்சி தொடங்கும் முன் சிறுநீர்ப்பையையும், மலக்குடலையும் காலி செய்ய வேண்டும். காலி செய்த பிறகே யோகாசனத்தை செய்ய வேண்டும்.
யோகாசனத்தை வெறும் வயிற்றில் செய்வது நல்லது. ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றினால், யோகா செய்வதற்கு 30 நிமிடத்திற்கு முன்னால் ஓரு கப் பால் குடிக்கலாம். மாலை வேளையில் செய்யும்போது சாப்பிட்டு நாலு அல்லது ஐந்து மணி நேரத்திற்கு பிறகு செய்வது நல்லது.
இறுக்கம் இல்லாமல் தளர்ச்சியான உடையே அணிய வேண்டும்.
ஓவ்வொரு ஆசனத்திற்கும் மற்றொரு ஆசனத்திற்கும் இடையே நிதானமாக ஆழமாக மூச்சை இழுத்துவிட்டு அடுத்த ஆசனத்தை தொடர வேண்டும்.
உடல் நோய் இருப்பின் அந்த நோய்க்கான யோகப்பயிற்சியை அதிக முனைப்புடன் செய்யலாம்.
கடினமான ஆசனங்களை ஆசிரியர் உதவியுடன்தான் செய்திடல் வேண்டும்.
யோகாசனத்தின்போது செய்யக்கூடாதவை
அவசர அவசரமாக யோகா செய்யக்கூடாது. மிகவும் நிதானமாக செய்ய வேண்டும்.
மது, புகை, டீ, காபி, அதிக காரம், உப்பு, புளி, அசைவம் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
வியர்வை வரும்படி யோகாசனம் செய்யக்கூடாது.
தனக்கு வராத ஆசனங்களை மிக கஷ்டப்பட்டு செய்யக்கூடாது.
மலச்சிக்கல் இருப்பின் மிகவும் எளிமையான ஆசனத்தை மட்டுமே செய்ய வேண்டும்.
முழு வயிறு உணவு உண்ட பிறகு ஆசனங்கள் செய்யக்கூடாது.
பெண்கள் மாதவிலக்கு நாட்களில் ஆசனம் செய்வதை தவிர்ப்பது நலம்.
கருவுற்ற தாய்மார்கள், முதல் 4-5 மாதங்கள் வரை யோகா செய்யலாம். இது குழந்தை பேறுக்கு உதவும். குழந்தை பேறுக்கு பின் மூன்று மாதங்களுக்குப் பிறகு யோகா செய்யலாம்.
யோகாவால் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும் - உலக சுகாதார நிறுவனம்
யோகாவின் பயன்கள்
எதற்கும் வளைந்து கொடுக்கும் தன்மை, மன அழுத்தத்தில் இருந்து நிவாரணம், ஒட்டுமொத்த உடல்நலத்தை மேம்படுத்துதல் போன்றவை யோகாவை செய்வதால் தங்களுக்கு கிடைப்பதாக, வழக்கமாக யோகா பயிற்சி மேற்கொள்ளும் பெரும்பாலான மக்கள் தெரிவிக்கின்றனர். யோகா பயிற்சியை மேற்கொள்பவர்களால் உடல் மற்றும் மனரீதியான மறுமலர்ச்சியை உணர முடிவதாக கூறுகின்றனர். யோகா பயிற்சியை தொடர்ந்து மேற்கொள்ளும் ஒருவரால் அவரின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும் என்று உலக சுகாதார நிறுவனமும் கூறுகிறது.
இதனிடையே, யோகா என்பது மதம் சார்ந்தது என சிலர் விமர்சித்தாலும், உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு யோகா சிறந்தது என பெரும்பாலான உலக மக்கள் உணர்ந்துகொண்டுள்ளனர் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இன்று உலகம் முழுவதும் யோகா பரவியுள்ளது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை என்றும், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலும்கூட மக்கள் தற்போது யோகாசனம் செய்து வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
உலகிற்கு இந்தியாவின் கொடை யோகா
இந்தியாவில் தோன்றி, பண்டைய காலத்தில் ஆன்மிகத்தின் அங்கமாக விளங்கி வந்த யோகக்கலை, இப்போது உலக அளவிலான கலையாக கருதப்படுகிறது. இதன் வெளிப்பாடாக ஆண்டுதோறும் ஜூன் 21ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா. 2015ஆம் ஆண்டு அறிவித்தது. இந்த அறிவிப்புக்கான முன்மொழிவை ஐ.நா. அவையில் செய்தவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி.
உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, மன அழுத்தங்களை குறைத்து அமைதி தருவது மட்டுமன்றி, இலக்கின்றி அலையும் மானுட வாழ்வில் இலக்கை நிர்ணயித்து, சேர வேண்டிய இலக்கில் கொண்டு போய்ச் சேர்க்க யோகா ஒரு சிறந்த கருவியாக இருக்கிறது என்பது நிதர்சனம்.