பிரபல தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா காலமானார். அவருக்கு வயது 86. இந்திய தொழில்துறையின் டைட்டனாக விளங்கிய டாடாவின் சாதனை வரலாற்றை திரும்பி பார்ப்போம்...

மும்பையில் 1937-ஆம் ஆண்டு நாவல் டாடா, சூனி டாடா தம்பதிக்கு மகனாக பிறந்தார் ரத்தன் டாடா. அவருக்கு 17 வயது ஆனபோது பொறியியல் கற்க அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். உயர்கல்விக்குப் பிறகு தனது 25 வயதில் டாடா நிறுவனத்தில் உதவியாளரகச் சேர்ந்தார். நிறுவனத்தில் படிப்படியாக தகுதிப்பெற்று 1974-ல் டாடா நிறுவனத்தின் இயக்குநரானார். 1975-ஆம் ஆண்டு, அமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் வணிக மேலாண்மைப் பட்டம் பெற்றார். தனது சிறப்பான செயல்திறன் மூலம் 1981-ஆம் ஆண்டு டாடா நிறுவனங்களின் தலைவராக நியமிகப்பட்டார் ரத்தன் டாடா. 1991-ஆம் ஆண்டு, டாடா சன்ஸ் மற்றும் டாடா அறக்கட்டளைகளுக்குத் தலைவரனார். அந்த பதவியில் அமர்ந்த ரத்தன் டாடா, டாடா நிறுவனத்தை மறுசீரமைப்பு செய்யத் தொடங்கினார். 50 ஆண்டுகள் டாடா குழுமத்தின் தலைவராக இருந்த அவர், கடந்த 2012-ஆம் ஆண்டு அப்பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். அதன்பின் டாடா சன்ஸின் கௌரவத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இந்திய தொழில்துறையின் முகம் டாடா!

டாடா குழுமத்தின் தலைவராக ரத்தன் டாடா இருந்த காலத்தில்தான், ஆங்கிலோ-டச்சு எஃகு நிறுவனமான கோரஸ், பிரபல கார் பிராண்டுகளான ஜாகுவார், லேண்ட் ரோவர், உலகின் இரண்டாவது பெரிய தேயிலை நிறுவனமான டெட்லி உள்ளிட்ட பல பெரிய நிறுவனங்களை டாடா குழுமம் தன்வசப்படுத்தியது. இன்று டாடா குழுமத்தின் ஆண்டு வருமானம், இந்திய மதிப்பில் சுமார் 8.4 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேலாக உள்ளது.

பெரும் செல்வந்தராக இருந்தபோதும், பாமர மக்களின் நிலையை புரிந்துவைத்திருந்த ரத்தன் டாடா, இறுதி வரை எளிமையான வாழ்க்கையே வாழ்ந்தார். இந்தியாவில் நடுத்தரவர்க்கத்தினரும் கார் வாங்க வேண்டும் என்று நோக்கில், கடந்த 2008-ஆம் ஆண்டு "டாடா நானோ" என்ற மிகவும் விலை குறைந்த 1 லட்சம் ரூபாய் காரை அறிமுகப்படுத்தினார். இது டாடாவின் பெரும் திட்டங்களில் முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது. இந்தியத் தொழிற்துறைக்கு ரத்தன் டாடாவின் சேவைகளை அங்கீகரிக்கும் விதமாக 2008-ஆம் ஆண்டு அவருக்கு மத்திய அரசு பத்ம விபூஷன் விருது வழங்கி கவுரவித்தது.

எளிமையின் சிகரம் டாடா!

டாடா குழுமத்தில் பணியில் இணைந்த காலத்தில், தனது "டாடா" என்ற குடும்ப பெயரை ஒரு சுமையாகவே கருதினாராம் ரத்தன் டாடா. பெரும்பாலான இந்திய பணக்காரர்களுடன் ஒப்பிடும்போது ரத்தன் டாடாவின் வாழ்க்கை முறை மிகவும் கட்டுப்பாடாகவும் எளிமையாகவும் இருந்துள்ளது. தனக்கென பெரிதாக உதவியாளர்கள் கூட்டத்தை வைத்துக்கொள்ளாதவர் டாடா. இதனை கண்டு உலகின் பல பெரும் பணக்காரர்கள் வியந்துள்ளனர். மேலும், தனது வீட்டு காலிங் பெல் சத்தம் கேட்டால், அவரே வந்துதான் வீட்டின் கதவை பெரும்பாலும் திறப்பாராம். மும்பையின் கொலாபாவில் கடற்கரைக்கு அருகே இருக்கும் டாடாவின் வீடு எளிமையுடன் ரசனையையும் பிரதிபலிக்கிறது.

டாடாவின் 2 நெருங்கிய நண்பர்கள்!

திருமண பந்தத்தில் இணையாமல் தனியாக வாழ்ந்து வந்த ரத்தன் டாடா, நட்புக்கு பெரும் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்! அவருக்கு 'டிட்டோ' மற்றும் 'டேங்கோ' என 2 நெருங்கிய நண்பர்கள் இருந்துள்ளனர். பெயரை கேட்டால் மனிதர்களை போல தோன்றும், டிட்டோவும், டேங்கோவும் அவரது ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்கள். இவர்களைத் தவிர வேறு யாரும் அவரை நெருங்கவே முடியாதாம்.

2018 பிப்ரவரியில், ரத்தன் டாடாவுக்கு அவரது பொதுநலப் பணிகளை பாராட்டி 'ராக்ஃபெல்லர் அறக்கட்டளையின் வாழ்நாள் சாதனையாளர்' விருதை பிரிட்டன் இளவரசர் சார்லஸ் வழங்கியிருந்தார். விருதை பெற ரத்தன் டாடா இங்கிலாந்தில் பக்கிங்ஹாம் அரண்மனையில் இருக்க வேண்டும். இதற்காக இங்கிலாந்து சென்ற டாடா, விருது வழங்கும் விழாவுக்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, தனது நாய் டிட்டோவுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து விழாவில் கலந்துகொள்ள முடியாது என்று விழா ஏற்பாட்டாளர்களிடம் தெரிவித்துவிட்டாராம். அவர்கள் தகவலை இளவரசர் சார்லஸிடம் தெரிவித்துள்ளனர். தகவலை அறிந்த சார்லஸ், அதுதான் நல்ல மனிதனின் குணம் என்று பாராட்டினாராம். அப்படிப்பட்ட மாமனிதன்தான் ரத்தன் டாடா என்று, அவரை நன்கு அறிந்தவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.

ரத்தன் டாடாவுக்கு இறுதி மரியாதை

எப்படிப்பட்ட மனிதனையும் தன்னுள்ளே இழுத்துக்கொள்ளும் மரணம், ரத்தன் டாடாவை அக்டோபர் 9-ஆம் தேதி தன்னகத்தே அழைத்துக்கொண்டது. டாடாவின் இழப்பு இந்திய தொழில்துறைக்கு மட்டுமல்லாது உலகிற்கும் பேரிழப்பே! மும்பையில் வசித்துவந்த ரத்தன் டாடாவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மஹாராஷ்ட்ரா அரசு அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துள்ளது. அவரது மறைவுக்கு ஜார்கண்ட் மாநில அரசும் ஒருநாள் அரசு துக்கம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், டாடா சன்ஸின் தற்போதைய தலைவர் நடராஜன் சந்திரசேகரன் வெளியிட்டுள்ள இரங்கல் அறிவிப்பில், ரத்தன் டாடா ‘உண்மையிலேயே அசாதாரணமான தலைவர்’ என்று கூறியிருக்கிறார். ஆம் ரத்தன் டாடா ‘உண்மையிலேயே அசாதாரணமான தலைவர்’தான்!

Updated On 12 Oct 2024 4:35 AM GMT
ராணி

ராணி

Next Story