12,000 -த்திற்கும் அதிகமான ஆதரவற்ற பிணங்களை அடக்கம் செய்திருக்கிறேன்!
மனிதராய் பிறந்த ஒவ்வொருவரின் வாழ்க்கையிலுமே பிறப்பு மற்றும் இறப்பு, என இரண்டுமே ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகும். ஒருவரின் பிறப்பில் சூழும் மக்கள், இறப்பு வரை இருப்பார்களா என்பது நிச்சயம் இல்லாத ஒன்று தான். இங்கு ஒவ்வொரு நாளும் ஆதரவற்ற அடக்கம் செய்ய இயலாத பிணங்களின் எண்ணிக்கை என்பது அதிகம். அந்த வகையில், ஆதரவற்ற பிணங்களுக்கான இறுதி சடங்குகளை முன்னின்று செய்து வருவதோடு, பிற மக்கள் நலம் சார்ந்த பொதுச் சேவைகளிலும் ஈடுபட்டு வரும் ரோஜா, 'மிஞ்சி இருப்பது மனிதம் மட்டுமே' என்ற முன்னோர்களின் வரிகளுக்கேற்ப மனிதம் ஒன்றையே இலக்காக வைத்து தன்னை வறுமை சூழ்ந்தாலும், பல தடைகளையும் தாண்டி, பொது சேவைகளில் பிறரையும் தூண்டி வருகிறார்… தடைகளைத் தகர்த்தெறிந்து சேவையில் களமிறங்கி கலக்கும் பெண்ணாக வலம் வரும் சென்னையைச் சேர்ந்த ரோஜாவுடன் நடத்திய உரையாடல் பின்வருமாறு...
ஆதரவற்ற பிணங்களுக்கு இறுதிச் சடங்குகளை செய்வதற்கான ஆர்வம் உங்களுக்கு எங்கிருந்து வந்தது?
என்னுடைய பதினான்காம் வயதில் தொடங்கியது தான் இந்த ஆதரவற்ற பிணங்களுக்கு இறுதி சடங்குகள் செய்வதற்கான எனது சேவை. கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக செய்து வருகிறேன். என்னுடைய சிறுவயதில் மயானக்கொள்ளை திருவிழா என்று சொல்லக்கூடிய சுடுகாட்டில் நடக்கும் திருவிழா ஒன்றுக்கு நான் சென்றிருந்த போது, அங்கு நாய்கள் பிராண்டியவாறு இறந்தவரின் உடல் துர்நாற்றம் வீசக் கிடந்ததை கண்டேன். அது எனக்கு மிகவும் மன வேதனையை ஏற்படுத்தியது. என்னுடன் இருந்த அனைவரும் காவல்துறைக்கு தகவல் அளித்த பின்னர் அவரவர் சென்றுவிட்டனர். ஆனால் என்னால் அந்த அனாதை பிணத்தை அந்த மோசமான நிலையில் விட்டுவர இயலவில்லை. காரணம் நானும் ஒரு அனாதை தான். எனக்கும் அம்மா கிடையாது. எனவே அந்த ஆதரவற்ற அனாதை பிணத்தை முதன் முதலில் நானே அன்று அடக்கம் செய்தேன்.
இடுகாட்டில் ஆதரவற்ற பிணங்களை அடக்கம் செய்யும் ரோஜா
உங்கள் குடும்பத்தினரின் ஆதரவு உங்களுக்கு எந்த அளவில் இருந்தது?
நான் இந்த சேவையில் ஈடுபடுவதை என்னுடைய இருவதாவது வயதில் தான் குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தினேன். ஆரம்பத்தில் பெரியளவில் குடும்பத்தில் இருந்து ஆதரவு கிடைக்கவில்லை என்பது தான் உண்மை. இது போன்ற காரியங்களிளெல்லாம் ஈடுபட கூடாது என்று தடை போட்டனர். ஆனால் நான் இதைத்தான் செய்வேன் என்று முழுமனதோடு இன்றளவும் ஈடுபட்டு வருகிறேன்.
உங்களின் வாழ்வாதாரம் மற்றும் அத்தியாவசிய தேவைக்காக என்ன பணி செய்து வருகிறீர்கள்?
நான் தற்போது பிரிண்டிங் பிரஸ்சில் தான் பணி புரிந்து கொண்டிருக்கிறேன். அதில் வரும் வருமானம் தான் எனக்கு என்னுடைய அத்தியாவசிய தேவை மற்றும் வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருந்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் பல சமயங்களில் ஆதரவற்ற பிணங்களை அடக்கம் செய்ய இந்த வருமானம் தான் உதவிகரமாக உள்ளது. ஆனால் தற்போது எனக்கு பத்திரிக்கைகள் மற்றும் ஊடகங்களின் உதவியால் அதிகளவிலான நண்பர்கள் கிடைத்துள்ளனர். அவர்களும் என்னுடைய இந்த சேவைக்கு ஏராளமான உதவிகளை செய்து வருகின்றனர்.
பிரிண்டிங் பிரஸ் மற்றும் ரோஜா
பெண்கள் சுடுகாட்டிற்குள் செல்லவே அனுமதி மறுக்கும் இந்த காலத்தில், நீங்கள் அதை உடைத்து உள்ளே சென்ற போது உங்களுக்கு எழுந்த விமர்சனங்கள் என்னென்ன?
ஆண், பெண் இருவரும் ஒரு தாயின் வயிற்றில், பத்து மாதம் இருந்து தான் பிறந்து இந்த பூமிக்கு வருகிறோம். ஆனால் பெண்கள் மட்டும் ஏன் செல்லக்கூடாது? என்கிறார்கள் என்று தெரியவில்லை. மனிதனாய் பிறந்த அனைவருமே சுடுகாட்டுக்குள் செல்லலாம். விமர்சனங்களை பொறுத்தவரையில் ஆயிரம் பேர் நல்லதை சொல்லுகிறார்கள் என்றால், அதே ஆயிரம் பேர் கெட்டதையும் சொல்லத்தான் செய்வார்கள். இந்த சேவையை நான் ஒரு வியாபாரமாக அல்ல, சேவையாகத்தான் பார்க்கிறேன். ஏழ்மை என்னை சூழ்ந்து இருந்தாலும் நான் சமூக சேவை மனப்பான்மையோடு தான் இதனை செய்து வாழ்ந்து வருகிறேன்.
இடுகாட்டில் அனாதைப் பிணங்கள் மற்றும் காவல்துறையினருடன் ரோஜா
இதுவரை நீங்கள் எத்தனை அனாதைப் பிணங்களை அடக்கம் செய்திருக்கிறீர்கள்?
இவ்வுலகில் பிறந்த யாரும் அனாதைகள் அல்ல. கடைசி காலத்தில் அவர்களுக்கென்று உதவ கடவுளின் வடிவில் யாரோ ஒருவர் இருக்கத்தான் செய்கிறார்கள். நான் இந்த ஆதரவற்ற பிணங்களை அடக்கம் செய்யும் சேவையை தொடங்கி முப்பது ஆண்டுகள் ஆன நிலையில், இதுவரை நான் 12,000-த்துக்கும் அதிகமான பிணங்களை அடக்கம் செய்துள்ளேன்.
நீங்கள் இதுவரை அடக்கம் செய்த பிணங்களில் ஏதாவது ஒன்றை கண்டு அஞ்சியது உண்டா?
நிச்சயமாக பேய்கள் மற்றும் பிணங்களைக் கண்டு எல்லாம் நான் ஒருநாளும் அஞ்சியதே இல்லை. நான் மனிதர்களைக் கண்டு மட்டும்தான் இதுவரை அஞ்சி இருக்கிறேன். புளுவோடு இருக்கும் பிணங்களைக்கூட சுத்தம் செய்து அருகில் இருக்கலாம். ஆனால் இந்த மனிதர்கள் தான் இங்கு உண்மையான பேயாக இருக்கின்றனர். அதுபோக இரவு நேரங்களில் எனக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் காவல்துறை நண்பர்கள், குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் இரவு நேரங்களில் தனி ஒரு பெண்ணாக எக்கச்சக்கமான பிணங்களை அடக்கம் செய்தபோது துணையாக இருந்த காவல் துறையினர் என்னை எப்பொழுதுமே ஒரு சகோதரியாக பார்ப்பார்கள்.
ஆதரவற்ற பிணங்களை அடக்கம் செய்யும் போது
உங்களுக்கு மனிதர்கள் மீது ஏன் இவ்வளவு கோபம்?
எனக்குப் மனிதர்கள் மீது கோபம் எதுவும் இல்லை. அவர்கள் என்னை நோக்கி கூறும் வார்த்தைகள் தான் எனக்கு மிகுந்த மன வேதனையை அளிக்கும். அடக்கம் செய்துவிட்டு வீட்டினுள் நுழையும் போதெல்லாம் அவர்கள் பேசும் சொற்கள் தான் என்னை அதிக அளவில் காயப்படுத்தும் . அதிலும் கொரோனா காலத்தில் பிணங்களை அடக்கம் செய்துவிட்டு வந்த ஒரே காரணத்திற்க்காக, அக்கம் பக்கம் இருப்பவர்கள் என்னை முழுவதுமாக ஒதுக்கி வைத்தனர். ஆனால் அந்த நிலை தற்போது கொஞ்சம் மாற்றம் பெற்று, அவர்கள் சகஜமாக என்னுடன் பழக தொடங்கிவிட்டனர்.
அதிகளவில் ஆதரவற்ற பிணங்கள் அடக்கம் செய்யப்படுவது ஆண்களுடையதா அல்லது பெண்களுடையதா?
பெண்களுடன் ஒப்பிடுகையில் ஆண்கள் தான் அதிக அளவில் ஆதரவற்ற பிணங்களாக வருகின்றனர். வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் மற்றும் குடும்பத்தினரால் கைவிடப்பட்டவர்கள் என்ற காரணங்களின் அடிப்படையில் ஏராளமான ஆதரவற்ற பிணங்கள் வருவதுண்டு.
பிணங்களை அடக்கம் செய்ய தேவைப்படும் செலவுகளை எவ்வாறு சமாளிக்கிறீர்கள்? நமது அரசாங்கம் உங்களுக்கு எந்த வகையில் உதவி செய்கிறது?
என்னுடை 25 வயது வரை நான் என்னுடைய சொந்த செலவில் தான் இந்த சேவையை செய்து வந்தேன். ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாக விளம்பரங்கள் மற்றும் பத்திரிக்கைகள் மூலம் எனக்கு ஒரு சில நல்ல நண்பர்கள் அறிமுகமானார்கள். அவர்களும் எனக்கு இப்பொழுது உதவி செய்து வருகின்றனர். நமது அரசாங்கத்தை பொறுத்தவரையில் எந்த ஒரு உதவியும் இதுவரை எனக்கு கிடைத்ததே இல்லை. அரசாங்கம் குறித்து பேசவே நான் விரும்பவில்லை. என்னிடம் சொந்தமாக ஒரு வீடு கூட இல்லை, என்றாலும் கூட இந்த அடக்கம் செய்யும் சேவையை தொடர்ந்து என்னுடைய இறுதி மூச்சு வரை செய்து கொண்டுதான் இருப்பேன்.
காவல்துறையிடம் இருந்து பெறப்படும் இறந்தவர்களின் உடல்கள்
ஆதரவற்ற குழந்தைகள் அதிகளவில் அடக்கம் செய்யப்படுகிறது என்ற செய்தி அதிகம் வெளிவருகிறது அது உண்மையா?
ஆம், அது உண்மைதான் பிஞ்சு குழந்தைகளை அடக்கம் செய்யும் போதெல்லாம் எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். இறந்த குழந்தைகளை கால்வாய்களில் இருந்து கண்டெடுப்பது, தொப்புள் கொடியோடு கண்டு எடுப்பது போன்றவை ஏராளமான எண்ணிக்கையில் அரங்கேறுவது வழக்கம் தான். இந்த மாதிரியான நிகழ்வுகளைக் கண்டு யாரை நொந்து கொள்ள முடியும். அந்த குழந்தைகளை பெற்று இந்த மாதிரியான நிலைக்கு தள்ளி விட்டுச் செல்லும் பெற்ற அம்மாக்களை தான் நாம் கடிந்து கொள்ள வேண்டும். மனதில் துளிகூட அச்சம் இல்லாமல் பத்து மாதம் கருவில் சுமந்து இந்த மாதிரியான கொடூரங்களை செய்துவிட்டு போவதற்கு, அதனை பெற்று இந்த உலகத்திற்கு கொண்டு வராமலே இருக்கலாம்.
சாலையோரங்களில் பசியால் வாடும் குழந்தைகள் மற்றும் மக்களுக்கு உணவு வழங்கும் ரோஜா
அனாதை பிணங்களை அடக்கம் செய்வதை தவிர வேறு என்னென்ன மாதிரியான சேவைகளில் ஈடுபடுகிறீர்கள்?
சாலையோரங்களில் உணவின்றி பசியால் தவிக்கும் மக்களுக்கு, உணவு வழங்குவது, வீட்டில் இருக்கும் ஊனமுற்ற குழந்தைகளுக்காகவே அவர்களின் வீடு தேடிச் சென்று அரிசி, பருப்பு போன்ற சமையலுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பது போன்ற என்னால் முடிந்த பிற சேவைகளையும் செய்து வருகிறேன்.