இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

ஒவ்வொரு வீட்டிலும் ஒன்றிரண்டு கடிகாரங்கள் வைத்திருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். கடிகாரம்மீது ஆசைகொண்ட சிலர் ஒவ்வொரு அறையிலும் வித்தியாசமான கடிகாரங்களை மாட்டி கவனத்தை ஈர்ப்பதுண்டு. ஆனால் வீடுமுழுக்க விதவிதமான கடிகாரங்களை மாட்டி வைத்து, அனைவரையும் வியப்படையச் செய்வதுடன், அவை அனைத்தையும் பாதுகாத்து பராமரித்து வருகிறார் சென்னை ஆர்.ஏ.புரத்தைச் சேர்ந்த சண்முகம். பிரிண்டிங் தொழில் செய்துவரும் இவருக்கு கடிகாரங்கள்மீது ஆசை எப்படி வந்தது? இவரிடம் எத்தனை வகையான கடிகாரங்கள் இருக்கின்றன? என்பதை நம்முடன் பகிர்ந்துள்ளார். சண்முகம் அவர்களின் ஹோம் டூர் ராணி நேயர்களுக்காக...

2004ஆம் ஆண்டிலிருந்து கடிகாரங்களை வாங்க ஆரம்பித்திருக்கிறார் சண்முகம். ஆரம்பத்தில் ஒன்றிரண்டு கடிகாரங்களை இவர் வாங்கி வைத்திருந்ததை பார்த்த சிலர், புதுமையான கடிகாரங்களை பார்க்கும்போது இவரிடம் வந்து சொல்லியிருக்கின்றனர். அப்படி அவர்கள் சொல்லும்போது அந்த கடிகாரங்கள் வித்தியாசமாக இருந்தால் அதனை வாங்கிவிடுவாராம். அப்படி இவர் வீட்டில், 1840ஆம் ஆண்டு தயாரித்த போர்டிகோ கடிகாரம், ஸ்விங் கடிகாரம் போன்றவற்றை வரவேற்பறையில் விருந்தாளிகளை வரவேற்கும்விதமாக வைத்திருக்கிறார். அப்படியே சற்று திரும்பி பார்த்தால் அமெரிக்காவில் மிகச்சிறந்த தயாரிப்பான ஆன்சோனியா காஸ்ட் ஐரன் க்ளாக் வைக்கப்பட்டிருக்கிறது. அதன் பக்கத்திலேயே பிரான்ஸ், ஜெர்மன், ஜப்பான் போன்ற பல்வேறு நாடுகளின் கடிகாரங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. அதுபோக, விமானத்தில் பயன்படுத்தும் கடிகாரம், கப்பல் கடிகாரம், மார்பிள் கடிகாரங்கள், கிச்சனில் பயன்படுத்தும் பீங்கான் கடிகாரங்கள், இரும்பு கடிகாரங்கள், பேட்டரியில் இயங்கக்கூடிய குக்கூ கடிகாரங்கள், மெக்கானிக்கல் குக்கூ கடிகாரங்கள், அலாரம் கடிகாரங்கள் போன்ற பல வகைகளை வரிசையாக அடுக்கியும், சுவரில் மாட்டியும் வைத்துள்ளார்.


வித்தியாசமான பர்த்டே க்ளாக்ஸ்

இவருக்கு கடிகாரங்களை சேகரிக்கும் ஆசை எங்கிருந்து வந்தது என்று கேட்டால், “2004ஆம் ஆண்டு முதன்முதலில் ஒரு க்ளாக் வாங்கினேன். அதன் கீழ்ப்பகுதியில் ஆடிய பெண்டுலம் எனக்கு வித்தியாசமாக தெரிந்தது. அதை எனது வாட்ச் மெக்கானிக்கிடம் கொண்டுசென்று காட்டினேன். இது என்ன வித்தியாசமாக இருக்கிறது? என்று கேட்டேன். அதற்கு அவர், கீழே இப்படி பெண்டுலம் ஆடுவதை பர்த்டே க்ளாக் அல்லது ஆனிவர்சரி க்ளாக் என்பார்கள் என்று சொன்னதுடன், எனக்கு அதுபோன்ற வேறு கடிகாரத்தையும் வாங்கிக் கொடுத்தார். மேலும் புதுபுது கடிகாரங்கள் வரும்போது அவரே என்னை கூப்பிட்டு சொல்லுவார். இப்படி தொடங்கியது என் க்ளாக் கலெக்‌ஷன்ஸ். சுவர் கடிகாரங்கள் மட்டுமல்லாமல், கைக்கடிகாரங்கள், டேபிள் கடிகாரங்கள் போன்றவற்றையும் சேகரிக்கத் தொடங்கினேன்” என்கிறார்.

தரை சமநிலையில் இருந்தால்தான் பெண்டுலம் கடிகாரங்கள் இயங்கும். எனவே அதுபோன்ற கடிகாரங்களை விமானங்கள் மற்றும் கப்பல்களில் பயன்படுத்த முடியாது. குறிப்பாக, கப்பல் போன்று சமநிலையற்ற, காற்று மற்றும் அலையின் இயக்கத்திற்கு அசைகின்ற இடங்களில் பயன்படுத்துவதற்காகவே பிரத்யேக கடிகாரங்கள் இருக்கின்றன. அதுபோன்ற கப்பல் கடிகாரம் ஒன்றையும் தனது வீட்டின் ஒரு நிலைக்காலில் பொருத்தியிருக்கிறார் சண்முகம். அதுபோலவே, விசிபிள் எஸ்கேப்மெண்ட் க்ளாக், வெயிட் வைத்து மட்டுமே ஓடக்கூடிய கடிகாரங்கள், விதவிதமான பெண்டுலம் கடிகாரங்கள் போன்றவற்றையும் சிறிய பெரிய அளவுகளில் வைத்திருக்கிறார்.


கீ கொடுத்தால் இயங்கக்கூடிய விதவிதமான குக்கூ கடிகாரங்கள்

இவற்றில் பெரும்பாலானவை கயிற்றை இழுத்துவிடும் மாடல்கள், கீ கொடுக்கும் மாடல்கள் மற்றும் பேட்டரி மாற்றக்கூடிய மாடல்கள்தான். எனவே இவை அனைத்தும் சரியாக இயங்கவேண்டும் என்றால் அவற்றை முறையாக பராமரிக்கவேண்டும் என்பதற்காகவே வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் வெளிவேலைகளை தவிர்த்து, அனைத்து கடிகாரங்களின் இயக்கங்களை சரிசெய்வதையே தனது கடமையாக வைத்திருக்கிறார் சண்முகம். அனைத்து கடிகாரங்களையும் சுத்தமாக வைத்திருப்பதை குடும்பத்தாருக்கு ஒரு வேலையாகவே ஒதுக்கியிருப்பதாக கூறுகிறார் இவர்.

பல வெளிநாட்டு கடிகாரங்கள் வைத்திருந்தாலும் ஸ்விட்சர்லாந்தில் உருவாக்கப்பட்ட விலையுயர்ந்த இரு கடிகாரங்களை அலங்காரப் பொருள்போன்று வைத்திருக்கிறார். இதுபோன்ற கடிகாரங்கள் உள்ளூரில் கிடைத்தாலும் வாங்கிக்கொள்வாராம். வெளிநாடுகளுக்கு செல்வோரும் இவரது கடிகார ஆர்வத்தை பார்த்து வாங்கி வருவார்களாம். அவர்களிடம் விலைகொடுத்து வாங்கிக்கொள்வாராம். நூற்றுக்கணக்கில் கடிகாரங்களை அடுக்கி வைத்திருந்தாலும், அவற்றில் ஒன்று ஓடவில்லை என்றாலும் அதற்காக மிகுந்த சிரத்தை எடுத்து சரிசெய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.


விலையுயர்ந்த வெளிநாட்டு கடிகாரங்கள்

என்னதான் வீடுமுழுக்க கடிகாரங்களால் நிறைந்தாலும் சண்முகத்திற்கு பல ஆண்டுகளாகவே ரயில்கள்மீது அதீத ஆர்வம் உள்ளதாம். 1971லிருந்து விதவிதமான குட்டி ரயில்களை வாங்க ஆரம்பித்திருக்கிறார். ஒரு பள்ளியில் நடந்த கண்காட்சிக்கு சென்றபோது, அங்கு வரிசையாக ரயில்கள் அடுக்கி வைத்திருப்பதை பார்த்திருக்கிறார். அவற்றை பார்த்ததிலிருந்து தானும் அதுபோல் சேகரிக்கவேண்டும் என்ற எண்ணம் இவருக்குள் தோன்றியிருக்கிறது. அதுகுறித்து தனது நண்பர்களிடம் கேட்க முதலில் சிறிய செட் ஒன்றை வாங்கிக் கொடுத்திருக்கின்றனர். ஆனால் தனக்கு பெரியதுதான் வேண்டுமென அடம்பிடித்து வாங்கினாராம்.

மேண்டல் கடிகாரத்தில் சிங்கிள் கீ க்ளாக், ஸ்விங் க்ளாக், ரொட்டேட்டிங் பெண்டுலம் க்ளாக், ஹவர் க்ளாஸ் க்ளாக், எலக்ட்ரோ மேக்னட்டிக் க்ளாக், டச்சு க்ளாக், ஸ்கெளிட்டன் க்ளாக், 3 கீ, 2 கீ க்ளாக்ஸ், கேரியிங் கடிகாரங்கள், நூறு வருடங்கள் பழைமையான கடிகாரங்கள் போன்ற சில அரியவகை கடிகாரங்களையும் வைத்திருக்கிறார் சண்முகம். இவற்றில் சில தினமும் கீ கொடுக்கவேண்டியவை, சில 8 நாட்களுக்கு ஒருமுறை கீ கொடுக்கவேண்டியவை. அதுபோக, கார் டேஷ்போர்டில் இருக்கும் கடிகாரம், வெர்ஜ் கடிகாரம் போன்றவற்றையும் தனியாக வாங்கி அதை தானே வீட்டில் வைப்பதற்கேற்ற கடிகாரமாக உருவாக்கியிருக்கிறார். வீடு முழுக்க கடிகாரங்களால் நிறைந்திருந்தாலும் வீட்டில் அனைவருமே நேரத்திற்கு எழுந்திருப்பதால் அலாரம் என்பதே வைக்கமாட்டார்களாம் சண்முகம் குடும்பத்தினர்.

Updated On 7 Jan 2025 9:01 AM IST
ராணி

ராணி

Next Story