நின்றுகொண்டு, அண்ணாந்து பார்த்தபடி தண்ணீர் குடிப்பவரா நீங்கள்? இதை தெரிந்துகொள்ளுங்கள்!
உடல் ஆரோக்கியமாக இருக்கவேண்டும், எந்தவித பிரச்சினைகளும் வரக்கூடாது என்பதுதான் நம் அனைவரின் ஆசை. ஆனால் உடல் அதற்கு ஒத்துழைக்கிறதா என்றால் அதுதான் இல்லை. ஏனெனில் தினசரி வேலைக்கு செல்லுதல், பல்வேறு மன அழுத்தங்களுக்கு ஆளாதல், முறையற்ற உணவு பழக்கவழக்கங்கள், போதிய உடற்பயிற்சியின்மை போன்ற பல்வேறு காரணங்களால் உடலில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, ஷிஃப்ட் வேலைகளுக்கு செல்பவர்கள் தூக்கமின்மை பிரச்சினையால் பெரிதும் அவதிப்படுகின்றனர். கம்ப்யூட்டர் முன்பே அமர்ந்து வேலைசெய்யும் பெரும்பாலானோர் முதுகு மற்றும் மூட்டு பிரச்சினைகள், தைராய்டு, ஒபிசிட்டி போன்ற உடல்நல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு அதனை சரிசெய்ய ஆயிரக்கணக்கில் செவழிக்கின்றனர். இதுபோன்ற பிரச்சினைகளை தவிர்க்க தினசரி வாழ்க்கை முறையில் சிறுசிறு மாற்றங்களை கொண்டுவந்தாலே போதும் என்கிறார் பல்துறை வல்லுநர் தாமரைச்செல்வி. மேலும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வழிகளை அவர் நமக்கு கற்றுக்கொடுக்கிறார்.
ஐடி துறையில் இருப்பவர்கள் அதிகம் சந்திக்கும் பிரச்சினைகள் என்னென்ன? அவற்றை எப்படி சரிசெய்வது?
ஆண், பெண் இருபாலருமே இப்போது அதிகமாக நைட் ஷிஃப்ட் வேலை பார்க்கின்றனர். அவர்கள் இரவில் தூங்கக்கூடாது என்பதற்காக நள்ளிரவில் டீ குடிப்பது, ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிடுவது போன்ற காரணங்களால் ஒபிசிட்டி பிரச்சினை அவர்களுக்கு வருகிறது. குறிப்பாக, தொப்பை விழுந்து, இடுப்புக்கு கீழ் எடை அதிகரித்து காணப்படுகிறது. இப்படி எடை அதிகரிக்கும்போது தைராய்டு பிரச்சினைகள் வர ஆரம்பிக்கிறது. உடல் ஆரோக்கியமாக இருக்க ஒவ்வொரு உள்ளுறுப்பும் எப்படி வேலை செய்யும் என்பதை மறந்து வேலை, டென்ஷன் என இருக்கிறோம். பெரிய சிக்கல் வந்தபிறகுதான் வருத்தப்படுகிறோம். உதாரணத்திற்கு 25 வயதில் வேலைக்கு செல்லும் ஒரு நபரை எடுத்துக்கொள்ளலாம். அவர் ஒரே இடத்தில் கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்தே வேலை செய்யும்போது ஒரு நாளைக்கு குறைந்தது மூன்றரை லிட்டர் தண்ணீர் குடிக்கவேண்டும். தண்ணீரை மடமடவென நின்றுகொண்டே குடிக்காமல் உட்கார்ந்துகொண்டு அண்ணாந்து குடிக்காமல் வாயில் வைத்துதான் குடிக்கவேண்டும். அதேபோல் வெளியே சாப்பிடுபவர்கள் வீட்டிற்கு வந்ததும் ஒரு ஸ்பூன் கடுக்காய் பொடியை அரை ஸ்பூன் தேன்கலந்து சாப்பிட்டுவிட்டு, ஒரு தம்ளர் சுடுதண்ணீர் குடித்துவிட வேண்டும். இப்படி தொடர்ந்து செய்துவருவதால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருப்பதுடன், வயிறு உப்புசம், வாயுத்தொல்லை போன்றவை இருக்காது. வாயுத்தொல்லை அதிகமாகும்போது பேக் பெய்ன் வர ஆரம்பிக்கும். அதனால் நகர்ந்து நகர்ந்து உட்காரும்போது தோள்பட்டை வலி வரும். இதனால் மூட்டுவலி வரும். இதுபோக, கண் பிரச்சினையும் வரும். இவை அனைத்தும் ஒன்றுசேரும்போது தூக்கமின்மை பிரச்சினையும் ஏற்படும்.
நைட் ஷிஃப்ட் வேலை செய்பவர்கள் கடுக்காய் பொடியை சாப்பிட்டு உடலை டீடாக்ஸ் செய்தல் அவசியம்
நிறையப்பேர் தூங்குவதற்கு முன்பும், தூங்கி எழுந்தவுடனேயும் ஃபோன் பயன்படுத்துகிறார்கள். இந்த பழக்கத்தை மாற்றுவது எப்படி?
உடல் ஆரோக்கியம் முக்கியம் என்ற பய உணர்வு வரவேண்டும். நிறையப்பேர் ஃபோனை ஹாலில் வைத்துவிட்டு தூங்கசெல்லும் பழக்கத்தை உருவாக்கி வருகிறார்கள். வேலைப்பளு, பல்வேறு கேள்விகள் மனதில் ஓடிக்கொண்டே இருப்பதால் இப்போது 99% பேர் தூக்கமின்மையால் அவதிப்படுகின்றனர். நாம் கட்டுப்பாட்டில் இருக்க நினைத்தாலும் மூளை கட்டுப்பாட்டில் இருக்காது. நிறையப்பேர் காலையில்தான் நன்றாக தூங்குவார்கள். இதனால் கணையம் சூடாகும். இப்படி சூடாகும்போது உடல் எடை அதிகரிப்பு, மூட்டு வலி, தோள்பட்டை வலி, முதுகு வலி, தலைமுடி கொட்டுதல் போன்ற பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். இதுபோன்ற பிரச்சினை இருப்பவர்கள் கசகசாவை நன்றாக வறுத்து பொடியாக்கி வைத்துக்கொள்ள வேண்டும். இதை சூடான பால் அல்லது சுடுதண்ணீரில் சிறிது சர்க்கரை மற்றும் 2 ஏலக்காயுடன் கலந்து குடித்தால் ஆழ்ந்த தூக்கம் வருவதுடன் மன அழுத்தமும் நீங்கும். கசகசா அதிகம் சாப்பிட்டால் எடை கூடும் என்று நினைப்பார்கள். ஆனால் இப்படி செய்வதால் எடை கூடாது. தூங்காமல் அவதிப்படும் குழந்தைகளுக்கு ஒரு ஸ்பூன் கசகசா நீருடன் 5 ஸ்பூன் மாதுளம்பழச்சாறு சேர்த்து குடிக்க கொடுத்தால் நன்றாக தூங்குவார்கள்.
விடுமுறை நாட்களில் ரிலாக்ஸாக சூப் குடித்தல் மற்றும் மூச்சுப்பயிற்சி மேற்கொள்ளுதல்
ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் மட்டுமே விடுமுறை இருப்பவர்கள் காலை எழுந்தவுடன் தலைமுதல் பாதம்வரை நன்றாக எண்ணெய் தேய்க்கவேண்டும். குறிப்பாக, தொப்புளில் எண்ணெய் வைத்து குறைந்தது 45 நிமிடங்கள் சூரிய ஒளியில் நின்றால் வைட்டமின் டி உடலுக்கு கிடைக்கும். அதன்பிறகு கல் உப்பை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குளிக்கவேண்டும். சைனஸ் பிரச்சினை இருப்பவர்கள் தண்ணீரில் யூகலிப்டஸ் எண்ணெய் சிறிது சேர்த்துக்கொள்ளலாம். குளித்துவிட்டு வந்தபிறகு 1 மணிநேரம் கழித்து ஏதாவது ஒரு வெஜிடபிள் சூப் அல்லது மட்டன் சூப் குடித்துவிட்டு, 10 நிமிடங்கள் அமைதியாக உட்கார வேண்டும். அதன்பிறகு மூச்சுப்பயிற்சி எடுக்கவேண்டும். இதனால் அழுத்தம் குறைந்து, டென்ஷன் இல்லாமல் இருக்கமுடியும். பிறகு நன்றாக தூங்கிவிட்டு எழுந்து, வயிறு நிறைய ஃபுல் மீல்ஸ் சாப்பிடலாம். அப்படி சாப்பிடும்போது நன்றாக மென்று, மெதுவாக சாப்பிடவேண்டும். மாலை வெளியே எங்காவது சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தபிறகு, இரவில் நான் வெஜ் சாப்பிடவேண்டாம். விடுமுறை நாளை ஒரு டீடாக்ஸ் நாளாக மாற்றிக்கொள்ளலாம். வயதாக வயதாக உறுப்புகளின் தன்மையும் மாறுபடும். எனவே ரத்தம் சூடாகாமல் பார்த்துக்கொண்டாலே பல பிரச்சினைகளை தவிர்க்கலாம். மேலும் நம்மை நாமே கவனித்துக்கொள்ளலாம்.
எடை குறைப்பு உணவுகளை எடுத்துக்கொள்ளுதலும், மஞ்சள் கலந்த நீரில் குளித்தலும் அவசியம்
நிறையப்பேருக்கு உடல் எடை பிரச்சினை இருக்கிறது. அவர்கள் கொள்ளுப்பயிறை வாங்கி முளைக்கட்டியோ அல்லது சூப்பாகவோ அல்லது துவையலாகவோ உட்கொள்ளலாம். வாரத்திற்கு குறைந்தது 3 நாட்களாவது கீரை எடுத்துக்கொள்ள வேண்டும். முருங்கைக்கீரை மற்றும் முருங்கைக்காய் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். இதனால் மூட்டுகள் பலப்படும். புளிச்ச கீரை, மணத்தக்காளிக்கீரை உள்ளிட்டவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ளவேண்டும். அதுபோக, தண்ணீரை மூன்றரை லிட்டர் வரையிலும் தாராளமாக குடிக்கலாம். அதேபோல் ஒருநாளைக்கு 6, 7 முறைவாது சிறுநீர் கழிக்கவேண்டும். அந்தரங்க உறுப்புகளில் கடுகடுப்பு அல்லது எரிச்சல் இருப்பவர்கள் வாரத்தில் ஒருநாளாவது வெதுவெதுப்பான தண்ணீரில் மஞ்சள் மற்றும் கடுக்காய்ப்பொடி சேர்த்து கழுவ வேண்டும். குளிக்கும் தண்ணீரிலும் மஞ்சள்த்தூள் சேர்த்து குளிப்பது, ஆண்கள் கடலைமாவு மற்றும் பால் சேர்த்து தேய்த்து குளிப்பது போன்ற பழக்கங்களை மேற்கொள்ளலாம். வாரத்திற்கு ஒருநாள் கட்டாயம் ஹாட் ஆயில் மசாஜ் எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால் நரம்புகள் பலப்படும். முதுகு தண்டுவடத்தை பலப்படுத்தும் உடற்பயிற்சிகளை செய்யவேண்டும். அதேபோல் கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து வேலைசெய்பவர்களுக்கு கூன் விழுதல் போன்ற பிரச்சினைகள் உருவாகும். இவர்கள் தினசரி ஒன்றிரண்டு உடற்பயிற்சிகளையாவது செய்யவேண்டும். மலச்சிக்கல் இல்லாமல் உடலை பார்த்துக்கொண்டாலே மூட்டு வலி, வாயுத்தொல்லை, ஒபிசிட்டி, தைராய்டு போன்ற பிரச்சினைகள் வராது.
![ராணி ராணி](/images/authorplaceholder.jpg?type=1&v=2)