மூதாதையர்களின் பொருட்களை பாதுகாக்கும் குடும்பம்! பூஜை அறையில் பொக்கிஷங்கள்! - பிரம்மாண்ட ஹோம் டூர்
வித்தியாசமான மற்றும் பழங்கால பொருட்களை பார்ப்பதற்காகவே நாம் அருங்காட்சியகங்கள் மற்றும் கண்காட்சிகளுக்கு போவதுண்டு. ஆனால் ஒரு வீட்டுக்குள் நுழைந்தவுடன் திரும்பும் இடமெல்லாம் விதவிதமான கடிகாரங்கள், படியேறினால் அழகழகான புகைப்படங்கள், மாடிக்குச் சென்றால் அங்கு வெவ்வேறு சைஸ்களில் ரயில் செட்-அப்ஸ், அப்படியே மொட்டை மாடிக்குச் சென்றால் அங்கு அலங்கரிக்க போன்சாய் செடிகள், கீழே இறங்கினால், பழங்கால தெய்வங்களின் ஓவியங்கள் வைக்கப்பட்டிருக்கும் அழகிய பூஜை அறை, காற்றோட்டமான இயற்கை மூலிகைகள் மற்றும் கொடி, மரங்கள் அடங்கிய தோட்டம் என பார்ப்போரை ஆச்சரியப்படுத்துகிறது சென்னை ஆர்.ஏ புரத்தைச் சேர்த்த சண்முகம் என்பவரின் வீடு. ஒவ்வொரு வீட்டிலும் நம் முன்னோர்கள் பயன்படுத்திய சில பொருட்களை வைத்திருப்போம். ஆனால் ஒரு வீடே பழமைகளின் பொக்கிஷமாக இருப்பது ஆச்சர்யம்தானே! அப்படி சண்முகம் அவர்களின் வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு பொருட்களுமே நாம் பெரிதும் பார்த்திராதவை. முதல் பகுதியில் வீட்டிலிருக்கும் கடிகாரங்களை பற்றி பார்த்தோம். இந்த பகுதியில் மீதமுள்ளவற்றை பார்க்கலாம்.
தானே அமைத்த ட்ரெய்ன் - செட் அப்!
வீட்டின் செல்ஃபில் பல நாடுகளிலுள்ள பலவிதமான ரயில்களின் மாடல்கள் வைக்கப்பட்டிருந்தாலும், மற்றொரு அறையில், இயங்கக்கூடிய ரயில்களை தானே செட் செய்திருக்கிறார் சண்முகம். ஒரு அறையில் ஒரு பகுதி முழுக்க, மேடை அமைத்து அவற்றில் சிறிய, பெரிய, மீடியம் என பல வகைகளில் வட்டவடிவில் ட்ராக் செட் செய்து, அவற்றில் அந்தந்த அளவிற்கு ஏற்ப, ரயில்களை நிறுத்தி, மின்சாரத்துடன் இணைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையை சேர்ந்தவை என்பதால் அவை இயங்குவதற்கு ஏற்ப கனெக்டர்களின் உதவியுடன் மின்சாரம் கொடுக்கும்போது ரயில்கள் இயங்குகின்றன. ரயில்கள் இயங்கும் திசையையும், வேகத்தையும் கட்டுப்படுத்த கன்ட்ரோலும் செட் செய்யப்பட்டிருக்கிறது. இதுபோன்று இயங்கும் ரயில்களை பார்க்கும்போது சிறுவர்கள் மிகவும் விரும்புவார்கள் என்று பலரும் நினைப்போம், ஆனால் பெரும்பாலும் வயதானவர்கள்தான் அதிகம் விரும்பி வாங்குவதாக ஜெர்மனியில் ஒரு கடைக்காரர் கூறியதாக சொல்கிறார் சண்முகம்.
வெளிநாட்டிலிருந்து வாங்கி வரப்பட்ட இயங்கும் ரயில் செட்-அப்
வீட்டில் இதுபோன்று வித்தியாசமான பல பொருட்கள் வைத்திருந்தாலும் அவற்றை பராமரிக்கவும், பாதுகாப்பாக கையாளவும் அவருடைய மனைவி ஷோபா உறுதுணையாக இருப்பதாக கூறுகிறார் சண்முகம். மேலும் சண்முகத்தின் அப்பாவிற்கு வீட்டு சுவற்றில் ஆணியடிப்பது பிடிக்காது என்பதாலேயே பெரும்பாலான பொருட்களை மாட்டிவைக்காமல் டேபிள்மீதுதான் வைத்திருப்பதாக கூறுகிறார். தனது கணவர் குறித்து ஷோபா கூறும்போது, “என் கணவர் கடிகாரங்களுக்கு கீ கொடுக்கும்போது எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருக்கும். ஏனென்றால் நாம் சிறிய விஷயங்களைக்கூட ஞாபகமறதியால் மறந்து விட்டுவிடுவோம். ஆனால் இவர் ஒவ்வொரு க்ளாக்கிற்கும் எந்த சாவியோ அதை சரியாக எடுத்து கீ கொடுப்பார். அதேபோல் நேரம் ஒரு நிமிடம்கூட மாறிவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருப்பார். அப்படி அவர் கீ கொடுக்கும்போது நான் எந்த தொந்தரவும் செய்யமாட்டேன். எனக்கு கிச்சன் வேலைகளில் ஈடுபாடு அதிகம் என்பதால் பெரும்பாலும் நான் அங்குதான் இருப்பேன். சுத்தம் செய்வதற்கு மட்டும் உதவிசெய்வேன். என் மகனுக்கும் சமையல் மற்றும் பெயிண்ட்டிங்மீது ஆர்வம் என்பதால் நாங்கள் இருவரும் ஒன்றாக இருப்போம்” என்கிறார்.
நாம் பெரிதும் பார்த்திராத பழங்கால பொருட்கள் - சிகரெட் மெஷின்
புத்தகங்களும் பழங்கால பொருட்களும்!
கடிகாரங்கள் மற்றும் ரயில்கள் மட்டுமல்லாமல் பழங்கால பொருட்களை சேகரிப்பதிலும் சண்முகத்திற்கு ஆர்வம் அதிகமாகவே இருக்கிறது. குறிப்பாக, புத்தகங்கள் அதிகம் படிக்கும் பழக்கம் இவருக்கு இருப்பதால், புத்தகங்களை வாங்கி படித்துவிட்டு, அவற்றை நூலகங்களுக்கு கொடுத்துவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அதுபோக, ஜப்பானில் வாங்கிய பழங்காலத்து நகைப்பெட்டி, வெளிநாட்டு ஃபிங்கர் பௌல், முன்னோர்கள் பயன்படுத்திய முத்து, பவளம் எடைபோடும் தராசுப்பெட்டி, சிகரெட் பெட்டி, தேங்காய் ஓட்டினால் செய்த கப்கள் என விதவிதமான பொருட்கள் ஒரு அலமாரியை அலங்கரிக்கின்றன.
வீட்டின் முன்பு வளர்க்கப்படும் அலங்கார மற்றும் மூலிகைச் செடிகள்
செடிகளை பராமரிப்பதில் ஆர்வம்!
சிட்டி வீடுகளில் வளர்ப்பதற்கு ஏற்றவாறு தண்ணீர் அதிகம் தேவைப்படாத பலவகையான போன்சாய் செடிகள் சண்முகத்தின் வீட்டு மாடியில் வைக்கப்பட்டிருக்கின்றன. அவை பாலைவனங்கள் மற்றும் வறண்ட நிலங்களில் வளரக்கூடிய செடிகள் என்பதால் தண்ணீர் ஊற்றத் தேவையில்லை. சூரிய ஒளி மட்டுமே போதுமானது. ஒவ்வொரு செடியில் இருக்கும் பிரச்சினைகளை கண்டறிந்து அவற்றை பராமரிக்க வேண்டுமென்பதால் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் வேலையை மட்டும் தான் செய்வதாகவும் மற்ற அனைத்து பராமரிப்பு மற்றும் சுத்தம் செய்யும் வேலைகளையும் குடும்பமாக இணைந்து செய்வதாகவும் கூறுகிறார் சண்முகம். ஒவ்வொரு செடி, கொடிகள் வளருவதற்கு ஏற்றவாறு பைப்கள் மற்றும் குழாய்களைக்கொண்டு அழகிய சிறு தோட்டத்தையும் கீழே வடிவமைத்திருக்கிறார். மேலும் வீட்டிற்கு வருவோர் மற்றும் நண்பர்களுக்கு பரிசாக கொடுப்பதற்காகவும் சிறுசிறு செடிகளை வளர்த்து வருகிறார். மா, வாழை , பன்னீர், பப்பாளி, வேப்பமரம் போன்ற பல மரங்களும் வீட்டின் முன்புள்ள தோட்டத்தில் இடம்பெற்றிருக்கின்றன.
150 வருடங்கள் பழமையான ராமர் பட்டாபிஷேக தஞ்சை ஓவியம்
பூஜை அறை
பூஜை அறைக்குள் நுழைந்தவுடன் பக்கவாட்டு சுவரை 150 வருடங்கள் பழமையான மிகப்பெரிய தஞ்சை ஓவியம் அலங்கரிக்கிறது. ராமர் பட்டாபிஷேக காட்சியை வர்ணிக்கும் அந்த ஓவியம் முழுக்க தங்க துகள்கள், ஒரிஜினல் மரகதம், புஷ்பராக கற்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன. வருடத்திற்கு ஆறுகால பூஜை செய்யக்கூடிய நடராஜர் - சிவகாமி அம்மாள், மாணிக்கவாசகர் அடங்கிய ஊஞ்சல் உருவம் வைக்கப்பட்டிருக்கிறது. அதுபோக, சுவர் முழுக்க, பல்வேறு சாமி படங்கள் மாட்டப்பட்டிருக்கின்றன. எப்போதும் அணையாத வகையில் விளக்கும் ஏற்றப்பட்டிருக்கிறது. அதுபோக, ஒவ்வொரு பண்டிகைகளுக்கும் ஏற்றவாறு பூஜை செய்வதற்கு ஏற்ப சிறு சிறு தெய்வங்களின் உருவங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. பூஜை சாமான்கள் நிறைய பெரிய அலமாரி முழுக்க வைக்கப்பட்டிருக்கிறது. முன்னோர்களை தெய்வங்களாக வழிபடும் பழக்கம் இவர்களுக்கு இருப்பதால் தாத்தா, பாட்டி போன்றோரின் புகைப்படங்களும் சாமி அறையில் வைக்கப்பட்டிருக்கின்றன. தினசரி பூஜைக்கு ஏற்றவாறு ஸ்படிக லிங்கம் உள்ளிட்ட சிலவும் தனியாக வைக்கப்பட்டிருக்கின்றன.