இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

உலகம் முழுக்க அனைத்து மதத்தவராலும், இனத்தவராலும் கொண்டாடப்படும் பண்டிகை என்றால் அது ஆங்கில வருடப் பிறப்பு. இந்த நாளில் அனைத்து இடங்களிலும் பட்டாசு வெடித்து, வான வேடிக்கைகளுடன் சிறப்பு நிகழ்ச்சிகளும் கொண்டாட்டங்களும் களைகட்டும். குறிப்பாக, ஒவ்வொரு நாட்டின் முக்கிய நகரங்களிலும், நட்சத்திர ஹோட்டல்களிலும் அவரவர் கலாச்சாரத்திற்கு ஏற்ப புத்தாண்டை மகிழ்வுடன் கொண்டாடி இனிப்புகள் மற்றும் பூக்களை ஒருவருக்கொருவர் பரிமாறி வரவேற்பர். ஆண்டுமுழுக்க சோகம், மகிழ்ச்சி, அழுகை, துயரம் என பலவற்றை நாம் சந்தித்திருந்தாலும் புத்தாண்டு பிறக்கும்போது அந்த வருடம் முழுக்க நல்லவை நடக்கவேண்டும் என்ற நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் எதிர்பார்ப்புடனும் வருடத்திற்குள் அடியெடுத்து வைக்கிறோம். கஷ்டங்கள் வரும் என்று நமக்கு தெரிந்திருந்தாலும், ஆண்டை தொடங்கும்போதே அதைப்பற்றி யோசித்தால் ஆண்டுமுழுக்க துயரங்களையே சந்திக்க நேரிடும் என்பதாலேயே புதிய ஆண்டில் என்னென்ன செய்யவேண்டும்? என்னென்ன செய்யக்கூடாது? என்ற உறுதிமொழிகளை ஏற்பதை அனைவருமே வழக்கமாக கொண்டுள்ளனர். கிறிஸ்து பிறப்புக்குப் பின் - கி.பி என கணக்கிடப்பட்டு ஆண்டுகள் அழைக்கப்படுகின்றன. ஆண்டாண்டு காலமாக புத்தாண்டு கொண்டாடப்பட்டாலும் இதற்கு பின்னால் பெரிய வரலாறே இருக்கிறது.

ஆங்கில புத்தாண்டு வரலாறு

கடந்த 500 வருடங்களாக ஆங்கில புத்தாண்டு ஜனவரி 1ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆனால் அதற்கு முன்புவரை மார்ச் 25ஆம் தேதியைத்தான் புத்தாண்டாக கொண்டாடிவந்தனர். ஏசு உலகத்தில் மானுடராக அவதரித்த பிறகு கிறிஸ்துவுக்கு பின் என ஆண்டுகள் கணக்கிடப்படும் நிலையில், கிட்டத்தட்ட 1500 ஆண்டுகள் மார்ச் மாதம்தான் ஆண்டின் முதல் மாதமாக இருந்தது. ஒரு வருடத்தில் மொத்தம் 10 மாதங்களே இருந்த நிலையில் ஏசுவின் தாயான மரியாள், அவரை கருத்தரித்த நாள் என்று சொல்லப்படுகிற மார்ச் 25ஆம் தேதியை புத்தாண்டு தினமாக கொண்டாட ஆரம்பித்தனர் மெசபடோனியர்கள். அதன்பிறகு எகிப்து மற்றும் ரோம தேசங்களில் சூரியனை முதன்மை கடவுளாக வழிபடுவதால் சூரியனின் நகர்வு மற்றும் பூமியின் சுழற்சியை கணக்கில்கொண்டு மார்ச் 1ஆம் தேதியை புத்தாண்டாக அறிவித்து கொண்டாடி வந்தனர். மார்ஷியஸ் நினைவாக மார்ச்சை இப்படி முதல்மாதமாக அனுசரித்தனர். இந்நிலையில் ரோமானிய மன்னரான நூமா பொம்பிலியஸ் மார்ச்சை முதல் மாதமாகவும் கடைசியில் இரண்டு மாதங்களை சேர்த்து வருடத்திற்கு மொத்தம் 12 மாதங்கள் என்றாக்கினார். ரோமானிய கடவுளான ஜனஸ் என்பதன் நினைவாக ஜனவரியஸ், பிப்ரவரியஸ் ஆகிய மாதங்கள் இணைக்கப்பட்டன. கி.பி 46இல் ரோமானியர்களை ஆண்ட ஜூலியஸ் சீசர் மன்னன், ஜனவரி முதல் நாளை புத்தாண்டு தினமாக அறிவித்தார். ஆனாலும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் ஏசு பிறந்த தினமான டிசம்பர் 25ஆம் தேதியை புத்தாண்டாக கொண்டாடியதுடன், உலகம் முழுக்க அதை பின்பற்றவும் வலியுறுத்தி வந்தனர்.


ஜனவரி 1ஆம் தேதியை புத்தாண்டாக அறிவித்த போப் கிரிகோரி

இப்படி ஜனவரி 1ஆம் தேதியா அல்லது டிசம்பர் 25ஆம் தேதியா என்ற கேள்வியும் குழப்பமும் நீடித்துவந்த நிலையில், கி.பி 1500களில் வாழ்ந்த போப் ஆண்டவர் கிரிகோரி 1582ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதியை அதிகாரப்பூர்வ புத்தாண்டு தினமாக அறிவித்து, பிப்ரவரில் ஒரு தேதியை சேர்த்து லீப் வருடம் என்ற கருத்தையும் உருவாக்கினார். காரணம், மெசபடோமியர்கள் மற்றும் ரோமானியர்கள் அனைவருமே பூமி சூரியனை ஒருமுறை சுற்றிவர ஆகும் காலத்தை வைத்தே ஒரு ஆண்டு என்பதை கணக்கிட்டாலும், பூமி ஒருமுறை சுற்றிவர ஆகும் முன்னூற்று அறுபத்தைந்தே கால் நாட்களில், கால் நாளை கணக்கில் எடுக்காமல் விட்டுவிட்டனர். அதனால் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒருநாள் எந்த மாதத்திலும் சேராமல் தனியாக நின்றது. அதனை கருத்தில்கொண்ட கிரிகோரி, அந்த நாளை நான்காவது வருடத்தின் பிப்ரவரி மாதத்தில் சேர்த்தார். அதுமுதல் 3 வருடங்கள் 365 நாட்கள் ஒரு ஆண்டு எனவும், நான்காவது ஆண்டு 366 நாட்களுடன் லீப் வருடம் என்றும் பின்பற்றப்படுகிறது. அன்றுமுதல் கிரிகோரியன் காலண்டர் உலகம் முழுவதும் பொதுவாக பின்பற்றப்படுகிறது. இருப்பினும், ஜப்பான், சீனா மற்றும் இந்தியா போன்ற ஒருசில நாடுகளில் அந்தந்த மொழிகள் மற்றும் காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப தனி நாள்காட்டிகள் உருவாக்கப்பட்டு அதுவும் ஆங்கில நாட்காட்டியுடன் சேர்த்தே பயன்படுத்தப்படுகிறது. அதிலிருந்து ஜூலியன் காலண்டரும் உலகம் முழுவதும் பின்பற்றப்படும் கிரிகோரியன் காலண்டரும் ஒத்திருந்ததால் ஜனவரி 1ஆம் தேதியே அனைவராலும் வருட பிறப்பு என்று அனுசரிக்கப்படுகிறது. 1544ஆம் ஆண்டு ஜெர்மனியும், 1556ஆம் ஆண்டு ஸ்பெய்ன், போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளும், 1564ஆம் ஆண்டு பிரான்ஸும், 1599ஆம் ஆண்டு ஸ்வீடன், நார்வே, டென்மார்க் ஆகிய நாடுகளும், 1600ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தும், 1725ஆம் ஆண்டு ரஷ்யாவும், 1752ஆம் ஆண்டு இங்கிலாந்து, அயர்லாந்து, வேல்ஸ், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளும் ஜனவரி 1ஆம் தேதியை புத்தாண்டாக கொண்டாட ஆரம்பித்தன.


ரோமானியர்களின் கடவுளான ஜனூஸ் மற்றும் ஜூலியஸ் சீசர்

12 மாதங்களின் பெயர்கள் உருவானது எப்படி?

ஒருவழியாக ஒரு வருடத்திற்கு 12 மாதங்கள் என முடிவு செய்யப்பட்டாலும் உலகம் முழுவதுமே எப்படி ஒரே மாதிரி ஜனவரி முதல் டிசம்பர் வரை அனைத்து மாதங்களையும் ஒரே பெயரில் அழைக்கின்றனர்? என்ற கேள்வி பெரும்பாலானோருக்கு இருக்கும். ரோமானியர்கள் எந்தவொரு செயலை செய்வதற்கு முன்னும் ஜனூஸ் என்னும் கடவுளை வணங்கித்தான் தொடங்குவார்கள். ஏனென்றால் இந்த கடவுளுக்கு கடந்த காலம் மற்றும் வரக்கூடிய காலத்தை குறிக்கும் வகையில் 2 தலைகள் இருக்கும். அந்த கடவுளை குறிக்கும்பொருட்டு, ஜனவரி என பெயரிடப்பட்ட மாதத்தை முதல் மாதமாக்கினர். ரோமானியர்களின் முக்கிய விழாக்களில் ஒன்று ஃபெப்ருவா. அதாவது அந்த நாளில் தாங்கள் வசிக்கும் பகுதியை தூய்மைப்படுத்தி புதிதாக்குவர். அந்த விழாவை குறிக்கும்பொருட்டு இரண்டாவது மாதத்தை பிப்ரவரி என்று அழைத்தனர். அடுத்து விவாசய கடவுளான மார்ஸ். எல்லா ஊர்களிலுமே விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதுண்டு. அந்த கடவுளை குறிக்கும் பொருட்டு மூன்றாம் மாதத்தை மார்ச் என்று அழைத்தனர். அடுத்து ஏப்ரல் மாதம். ‘திறப்பு’ என்று பொருள்படுகிற லத்தீன் வார்த்தையான ஏப்ரிலிஸ் என்ற வார்த்தையை நான்காம் மாதமாக்கினர். இந்த மாதத்தை பூக்கள் மலரும் காலம் என்கின்றனர். ரோமானியர்கள் மற்றும் கிரேக்கர்கள் இருவருக்குமே குழந்தை வரம் கொடுக்கும் கடவுளான மையா என்ற பெண் தெய்வத்தை குறிக்கும் பொருட்டு, மே என்ற பெயர் ஐந்தாம் மாதத்திற்கு சூட்டப்பட்டது. கடவுள்களின் ராணி என்றழைக்கப்படுகிற ஜூனோவின் நினைவாக ஆறாம் மாதத்திற்கு ஜூன் எனவும், ஜூலியஸ் சீசரின் நினைவாக ஏழாம் மாதத்திற்கு ஜூலை எனவும் பெயர்சூட்டினர். ரோம நாட்டின் சர்வாதிகாரியான அகஸ்டஸ் சீசர் என்பவரை அங்குள்ள மக்கள் பெரிதும் மதிப்பதுண்டு. அவருக்கு மரியாதை கொடுக்கும்விதமாக ஆகஸ்ட் என்ற பெயர் எட்டாம் மாதத்திற்கு வைக்கப்பட்டது. ரோமானிய மொழியில் செப்டம் என்றால் ஏழை என்று பொருள். நாவெம் என்றால் எட்டு. டீசம் என்றால் பத்து. முதன்முதலில் உருவாக்கப்பட்ட காலண்டரில் மொத்தம் 10 மாதங்கள்தான் இருந்தநிலையில், இவை கடைசி மூன்று மாதங்களாக இருந்தன. இதன்பிறகுதான் முதலில் ஜனவரியஸ் மற்றும் பிப்ரவரியஸ் சேர்க்கப்பட்டிருந்தாலும் பிறகு அவை முதல் இரண்டு மாதங்களாக மாற்றியமைக்கப்பட்டன.


புத்தாண்டு கொண்டாட்டத்தை முதலில் தொடங்கும் நியூசிலாந்து

எங்கு முதலில் புத்தாண்டு பிறக்கிறது?

ஜனவரி 1ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறக்கிறது என்றாலும் எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் ஜனவரி 1 பிறப்பதில்லை. பூமியானது தன்னைத்தானே சுற்றும்போது புரோகிராட் இயக்கத்தில் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி சுழல்வதாக கருதப்படுகிறது. ஆனால் சூரியனை சுற்றிவரும்போது கிழக்கிலிருந்து மேற்காக சுழல்வதாகத் தோன்றுகிறது. அதற்கு காரணம் பூமியின் சுழற்சியால் சூரியன் கிழக்கில் தோன்றி மேற்கில் மறைவதாக நாம் கணக்கில் எடுத்துக்கொள்வதுதான். அப்படி பார்த்தோமானால் உலகிலேயே நியூசிலாந்து நாட்டின் சமோவா பகுதியில்தான் முதன்முதலில் புத்தாண்டு தொடங்குகிறது. அதாவது இந்திய நேரப்படி டிசம்பர் 31ஆம் தேதி மாலை 4.30 மணியளவில் அங்கு ஜனவரி 1ஆம் தேதி பிறக்கிறது. அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் இந்திய நேரப்படி மாலை 6.30 மணியளவில் புத்தாண்டு தொடங்குகிறது. புத்தாண்டு என்றாலே உலகம் முழுக்க வான வேடிக்கைகளும், பட்டாசுகளும் வெடித்து கொண்டாடப்படுவதுடன், இனிப்புகள் மற்றும் பூக்கள் கொடுத்து வரவேற்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

Updated On 31 Dec 2024 12:00 AM IST
ராணி

ராணி

Next Story