புத்தாண்டின் வரலாறும், அதை வித்தியாசமாக கொண்டாடும் நாடுகளும்
‘நல்லா இருப்போம் நல்லா இருப்போம் எல்லோரும் நல்லா இருப்போம்’ என்று திருமலை திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஜோதிகாவின் வசனத்தை போலவே ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என எல்லோரையும் நல்லா இருப்போம் என்று சத்தத்தோடு இன்முகத்துடன் வாழ்த்தும் நாள்தான் புத்தாண்டு. ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு வருவதற்கு முன்னாள் அவ்வாண்டில் நடந்த துன்பங்கள், இன்னல்கள், சோகங்கள் மற்றும் ஏமாற்றங்களை எல்லாம் தூக்கி எரிந்து, வரும் ஆண்டாவது நல்ல ஆண்டாக அமைய வேண்டும் என்று புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவு 12 மணியளவில் மக்கள் இறைவனை பிரார்த்திப்பதும், சிலர் நண்பர்களுடன் சேர்ந்து மகிழ்வதுமாக புதிய ஆண்டை வரவேற்பது வழக்கம். இந்த சந்தோஷம் நிறைந்த புத்தாண்டு ஜனவரி ஒன்று அன்று கொண்டாடப்படுவது ஏன்? அதன் பின் இருக்கும் வரலாறு என்ன? எந்தெந்த நாடுகள் ஜனவரி முதல் நாளை புத்தாண்டாக கொண்டாடுகின்றன? எப்படி கொண்டாடுகின்றன? என்ற புத்தாண்டு குறித்த ஒரு தொகுப்பை இங்கு காண்போம்.
புத்தாண்டு வரலாறு
365 நாட்களை வெற்றிகரமாக பயணம் செய்து மீண்டும் ஒன்றாம் நாளில் காலடி எடுத்து வைக்கும் அந்த புதுமை நிறைந்த நன்னாளான ஜனவரி ஒன்று, 500 வருடங்களுக்கு முன்பாகத்தான் புத்தாண்டாக கொண்டாடப்பட்டது. கி.மு 45-களில் ரோமானியர்கள் பயன்படுத்திய ரோம நாட்காட்டியின்படி மார்ச் 1 முதல் டிசம்பர் 31 ஆம் தேதி என 10 மாதங்கள் மட்டுமே இருந்தன. இந்த 10 மாதங்களில் மார்ச் ஒன்று புது வருடமாக கணக்கிடப்பட்டு வந்தது. ஆனால், ரோமானிய மன்னன் நுமபொம்பிலி, ரோமை ஆட்சி செய்து வந்த கி.மு 715 முதல் கி.மு 673 காலகட்டத்தில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களையும் சேர்த்து 1 வருடம் என்பது 12 மாதங்கள் என திருத்தி அமைத்தார்.
ஜனவரி, பிப்ரவரி சேர்க்கப்பட்ட முதற்காலகட்டத்தில் இவ்விரு மாதங்களும் ஆண்டின் இறுதி மாதங்களாகவே இருந்து வந்தன. ஆனால், நாளடைவில் அது ஆண்டின் ஆரம்ப மாதங்களாக ஆக்கப்பட்டது. ஆண்டின் முதல் மாதமாக அமைந்திருக்கும் ஜனவரி என்னும் சொல் ரோமானிய நாட்டின் வாயில் கடவுளாக விளங்கிய ‘ஜானுஸ்’ என்னும் சொல்லிலிருந்து பிறந்தது. அக்காலத்தில் பலரும் ஜனவரி ஒன்றை ஆண்டின் முதல் நாளாக ஏற்க மறுத்தனர். அதன் பின் கி.மு 46-ல் ரோமன் நாட்டை ஆண்ட ஜூலியஸ் சீசர், ஜூலியன் நாட்காட்டியை உருவாக்கி ஜனவரி ஒன்றாம் தேதியே ஆண்டின் முதல் நாள் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
புத்தாண்டு கொண்டாட்டம்
ஜூலியஸ் சீசரின் இந்த ஜூலியன் நாட்காட்டியானது கிரேக்க கணிதவியலாளர்களாலும், அலெக்ஸாண்ட்ரியாவின் வானியலாளர்களாலும் வடிவமைக்கப்பட்டது. ஜூலியஸ் சீசரின் ஆட்சி காலம் முடிந்து ரோமன் நாட்டை அடுத்தடுத்து ஆண்ட மன்னர்கள் இந்த ஜனவரி ஒன்றாம் தேதியை ஆண்டின் முதல் நாளாக எண்ணாமல் கன்னி மரியாள் கருவுற்ற நாளான மார்ச் 25 ஆம் தேதியையே ஆண்டின் முதல் நாளாக கொண்டாடி வந்தார்கள். இப்படி ஆண்டின் முதல் நாள் எது என்பதை தீர்மானம் செய்வதில் பல குழப்பங்கள் எழும்பின.
இறுதியாக போப் XIII கிரிகோரி மன்னன் 1582 இல் ஜூலியன் நாட்காட்டியை முற்றிலுமாக ரத்து செய்து 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படக்கூடிய லீப் ஆண்டை அறிவியல் பூர்வமாக இயற்றி, ஒரு ஆண்டுக்கு 365.25 நாட்கள் என்று ஆண்டின் நீளத்தை கணக்கிட்டு கிரிகோரியன் நாட்காட்டியை கொண்டு வந்தார். இந்த கிரிகோரியன் நாட்காட்டியை பல நாடுகள் ஒப்புக்கொண்டு ஜனவரி ஒன்றாம் தேதியை ஆண்டின் முதல் நாளாக ஏற்றுக்கொண்டன. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான் என கிரிகோரியன் காலண்டரை பின்பற்றும் பல நாடுகளும் வெவ்வேறு நேரங்களில் புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடுகின்றனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்தின் வண்ணமயமான காட்சிகள்
புத்தாண்டை முதன்முதலில் கொண்டாடியது மெசபடோமியா நாடாகும். மேலும் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டை ஓசியானியா தீவு முதலில் கொண்டாடுகிறது. புத்தாண்டை இறுதியாக கொண்டாடும் நாடாக பேக்கர்ஸ் தீவு இருக்கிறது.
இந்திய நேரப்படி புத்தாண்டை கொண்டாடும் நாடுகள்
டிசம்பர் 31
நியூசிலாந்து - பகல் 3.30 மணி
ஆஸ்திரேலியா - மாலை 6.30 மணி
ஜப்பான், தென் கொரியா மற்றும் வட கொரியா - இரவு 8.30 மணி
சீனா, பிலிப்பைன்ஸ் மற்றும் சிங்கப்பூர் - இரவு 9.30 மணி
பங்களாதேஷ் - இரவு 11.30 மணி
நேபாளம் - இரவு 11.45 மணி
ஜனவரி 1
இந்தியா மற்றும் இலங்கை - நள்ளிரவு 12.00 மணி
பாகிஸ்தான் - நள்ளிரவு 12.30 மணி
ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, பெல்ஜியம் மற்றும் ஸ்பெயின் - அதிகாலை 4.30 மணி
இங்கிலாந்து, அயர்லாந்து, ஐஸ்லாந்து, போர்ச்சுகல் - அதிகாலை 5.30 மணி
பிரேசில் (சில பகுதிகள்) - காலை 7.30 மணி
அர்ஜென்டினா, பிரேசில் (சில பகுதிகள்), சிலி மற்றும் பராகுவே - காலை 8.30 மணி
நியூயார்க், வாஷிங்டன், டெட்ராய்ட் - காலை 10.30 மணி
சிகாகோ - காலை 11.30 மணி
கொலராடோ மற்றும் அரிசோனா - நண்பகல் 12.30 மணி
நெவாடா - நண்பகல் 1.30 மணி
அலாஸ்கா - நண்பகல் 2.30 மணி
ஹவாய் - நண்பகல் 3.30 மணி
ஹவ் லேண்ட் மற்றும் பேக்கர் தீவுகள் - மாலை 5.30 மணி
புத்தாண்டை கொண்டாடும் நாடுகள்
கிரிகோரியன் நாட்காட்டியை பின்பற்றும் ஒவ்வொரு நாடும் ஜனவரி ஒன்றாம் தேதியை மிக விமரிசையாக அவரவர் கலாச்சாரத்திற்கேற்ப கோலாகலமாக புத்தாண்ட கொண்டாடி மகிழ்கின்றனர். அப்படி கிரிகோரியன் நாட்காட்டியை பயன்படுத்தி புத்தாண்டை கொண்டாடும் நாடுகளில், சில நாடுகளின் கொண்டாட்ட முறையை பின்வருமாறு காணலாம்.
இத்தாலி
உலகத்திலுள்ள ஒவ்வொரு நாடும் புத்தாண்டை அவர்களின் மரபு மற்றும் கலாச்சாரத்திற்கேற்ப கொண்டாடுகின்றனர். அவ்வகையில் போகி பண்டிகை அன்று பழைய பொருட்களை நம் வீட்டிலிருந்து நீக்குவது போல இத்தாலி நாட்டில் புத்தாண்டு அன்று பழைய ஆண்டின் பிரச்சினைகள் எல்லாம் நீங்கி, வரும் ஆண்டில் இன்புற்று வாழ வேண்டும் என்பதற்காக மக்கள் தங்கள் வீட்டு ஜன்னல்களின் வழியாக பழைய பொருட்களை வீசி புத்தாண்டை கொண்டாடுவார்கள்.
வீட்டு ஜன்னல் வழியாக வீசப்படும் பழைய பொருட்களும், மணிக்கூண்டும்
ஜப்பான்
ஜப்பான் நாட்டில் புத்தாண்டு தொடங்கும் போது வெவ்வேறு சத்தத்தில் 108 முறை மணிகள் ஒலிப்பதை கேட்கலாம். மேலும் அந்நாட்டில் புத்தாண்டு பிறந்தவுடன் அங்கு வசிக்கும் மக்கள் அனைவரும் சத்தமாக சிரிப்பார்களாம். ஏனென்றால் அங்கு சிரிப்பானது அதிர்ஷ்டத்தை பெற்று தரும் என்று நம்பப்படுகிறது. மேலும் ஜப்பானில் ஜனவரி ஒன்று முதல் மூன்று வரை புத்தாண்டு விடுமுறையாக கடைபிடிக்கப்படுகிறது.
வெனிசுலா
நம் கலாச்சாரத்தின்படி மஞ்சள் மங்களகரமானது என்பதைப் போல வெனிசுலாவிலும் மஞ்சள் நிறம் அதிர்ஷ்டம் தரும் என்ற நம்பிக்கைக் கொண்டு புத்தாண்டன்று மஞ்சள் நிற உள்ளாடை அணிந்து கொண்டாடுவர். மேலும் மக்கள் தங்களுடைய விருப்பங்களை எல்லாம் ஒரு காகிதத்தில் எழுதி கூட்டாக சேர்ந்து புத்தாண்டு தொடங்கியவுடன் அந்த காகிதத்தை எரித்து விடுவர்.
பிரான்ஸ்
பிரான்ஸ் நாட்டில் ‘சத்தம், கெட்ட ஆவிகளை துரத்தும்’ என்னும் பழைய நம்பிக்கை ஒன்றுள்ளது. அந்த நம்பிக்கையின்படி புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் மொத்த பிரான்ஸ் நகரமும், வாணவேடிக்கைகளுடன் மிக சத்தமாக காணப்படும். மேலும் புத்தாண்டு பிறக்கும் அந்நேரத்தில் வீட்டிற்குள் நுழையும் முதல் நபரானவர் அந்த ஆண்டு எப்படி இருக்கும் என்பதைக் குறிக்கும் நபராக இருக்கிறார் என்று பிரெஞ்சுக்காரர்கள் நம்புகிறார்கள்.
பிலிப்பைன்ஸ்
பிலிப்பைன்ஸில் புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவில் அந்நாட்டிலுள்ள குழந்தைகள் 10 முறை குதித்தாள் உயரமாக வளருவார்கள் என்று நம்பப்பட்டு, அங்குள்ள குழந்தைகள் புத்தாண்டு பிறப்பில் குதித்து குதித்து புத்தாண்டை கொண்டாடுகின்றனர்.
புத்தாண்டை குதித்து கொண்டாடும் பிலிப்பைன்ஸ் குழந்தைகள் மற்றும் உடைந்து கிடக்கும் தட்டுகள்
டென்மார்க்
டென்மார்க்கில் வசிக்கும் டேனிஷ் மக்கள் ஆண்டு முழுவதும் உணவுகளை சேகரித்து பின்னர் புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவில், சேகரித்த உணவுகளை தங்கள் நண்பர்களின் கதவுகளில் வீசுவார்கள். புத்தாண்டு காலையில் தங்களின் வீட்டு வாசலில் நிறைய உடைந்த தட்டுகள் இருந்தால் அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்று அர்த்தமாம். மேலும் அவரது வாழ்க்கை நன்றாக இருக்கிறது என்றும், அவருக்கு நிறைய நண்பர்கள் இருப்பார்கள் என்றும் நம்பப்பட்டு புத்தாண்டானது மிகவும் வித்தியாசமாக கொண்டாடப்படுகிறது.
லூனார் நாட்காட்டியை பின்பற்றும் நாடுகளின் புத்தாண்டு கொண்டாட்டம்
கிரிகோரியன் நாட்காட்டி பயன்படுத்தி வரும் பல நாடுகள் ஜனவரி ஒன்றை புத்தாண்டாக கொண்டாடி வந்தாலும் சீனா, வியட்நாம், சிங்கப்பூர், தென் கொரியா, மலேசியா ஆகிய நாடுகள் லூனார் நாட்காட்டியை பின்பற்றி வருகின்றன. இந்த நாட்காட்டியின்படி புத்தாண்டானது ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு நாளைக்கு மாறும். லூனார் நாட்காட்டிபடி 2024 இல் பிப்ரவரி 10 ஆம் தேதி அன்று புத்தாண்டானது கொண்டாடப்படவுள்ளது. லூனார் நாட்காட்டியை பின்பற்றும் பல நாடுகள் அவர்களின் கலாச்சாரத்திற்கேற்ப புத்தாண்டை கொண்டாடுவர். உதாரணத்திற்கு சீனாவில் புத்தாண்டானது பதினைந்து நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது. இப்படி ஒவ்வொரு நாட்டின் கொண்டாட்டமானதும் மாறுபடுகிறது.