இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

ஹாலோவீன் என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருவது பெரிய பெரிய பூசணிக்காய்கள், விதவிதமாக ஆடைகளை உடுத்திக்கொண்டு கையில் வாளியுடன் வலம்வரும் குழந்தைகள், கலர் கலர் மிட்டாய்கள், அறுசுவை விருந்து மற்றும் வீடுகளின் முன்பு பயமுறுத்தும் பேய் அலங்காரங்கள்தான். அமெரிக்கா, கனடா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் ஹாலோவீன் தினமானது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டு வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. உலகளவில் பிரம்மாண்டமாக கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அடுத்து மேற்கத்தியர்களால் பெரிய அளவில் கொண்டாடப்படும் பண்டிகை என்றால் அது ஹாலோவீன். குறிப்பாக, அமெரிக்காவில் மிட்டாய் விற்பனையில் ஓராண்டில் கால் பங்கு விற்பனை இந்த பண்டிகை நாட்களில்தான் நடக்கிறது. மேலும் ஆண்டுதோறும் சுமார் 9 பில்லியன் டாலர்களை ஹாலோவீன் கொண்டாட்டத்திற்காக அமெரிக்கர்கள் செலவழிக்கிறார்கள். இப்போது இந்த நாள் கொண்டாட்டம், உற்சாகம் மற்றும் இனிப்புகளை பகிர்ந்துகொள்ளும் நாளாக அனுசரிக்கப்பட்டாலும் ஹாலோவீன் தினத்திற்கு பின்னால் மிகப்பெரிய வரலாறே இருக்கிறது. ஹாலோவீன் என்றால் என்ன? இந்த நாளை எதற்காக கொண்டாடுகின்றார்கள்? இதன் பின்னணி மற்றும் வரலாறு என்ன? என்பது போன்ற விவரங்கள் நிறைய மேற்கத்தியர்களுக்கே தெரிவதில்லை.

ஹாலோவீன் வரலாறு

1900 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வட ஃபிரான்ஸ் போன்ற மேற்கத்திய நாடுகளில் வாழ்ந்த சம்ஹைன் எனப்படும் மதத்தை பின்பற்றும் காடுகளில் வாழும் மக்கள் கொண்டாடும் திருவிழாவான செல்ட்டிக் அல்லது கெல்ட்டிக் அறுவடைத் திருவிழாவிலிருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நாளை கோடைகாலத்தின் முடிவு என்றும், அறுப்பு மற்றும் குளிர்காலத்தின் தொடக்கவிழாவாகவும் அங்குள்ள மக்கள் கருதினர். இப்படி ஒளி குறைந்து குளிரான இருள் பரவத் தொடங்கும் காலம் என்பதால் இறந்தவர்கள் பேய்களாக அவர்களுடைய இடத்திற்கு வருவதாகவும், அவர்கள், அறுவடைக்கு தயாராக இருக்கும் பயிர்களையெல்லாம் சேதப்படுத்துவதாகவும் நினைத்து பயப்பட்டனர். அதாவது இறந்தவர்களின் ஆத்மாக்கள் குளிர்காலத்தை வரவேற்கும்விதமாக வெளியே சுற்றித்திரிந்ததாகவும், அவை அங்கு வாழும் மக்களை பயமுறுத்துவது, அவர்களுடன் மோசமான தந்திர யுக்திகளை பயன்படுத்தி விளையாடுவது மற்றும் பல்வேறு தீங்குகளை விளைவிப்பது போன்ற செயல்களை செய்ததால் அந்த பேய்களை பதிலுக்கு பயமுறுத்தி விரட்ட, சுடுகாட்டிற்கே சென்று அங்கு பேய்களுக்கு பிடித்தமான உணவுகள் மற்றும் இனிப்புகளை வழங்கி, விலங்குகளின் தலைகள் மற்றும் தோல்களை பயன்படுத்தி பேய்களை போலவே வேடமிட்டு, அவற்றை ஓரிடத்திற்கு கூடிவரச்செய்து, அங்கு நெருப்பை ஏற்றி விரட்டியடித்ததாக வரலாறுகள் கூறுகின்றன. கிபி 43க்கு பிறகு, ரோமானிய அரசு செல்ட்டிக் பிரதேசத்தின் பெரும்பான்மையான பகுதிகளை கைப்பற்றியது. அவர்கள் செல்ட்டிக் மக்களின் பண்டிகையுடன் சேர்த்து தங்களது மரபையும் இணைத்து பண்டிகை தினத்தன்று ஆப்பிள்களை சாப்பிடுவது மற்றும் பிறருக்கு கொடுப்பதை வழக்கமாக மாற்றினர்.


சம்ஹைன் இன மக்களின் செல்ட்டிக் பண்டிகையிலிருந்து தோன்றிய ஹாலோவீன்

ரோமானிய ஆட்சிக்காலத்தில்தான் அங்கு கிறிஸ்தவர்களும் செல்லத் தொடங்கினர். இப்படி புனித பேட்ரிக் மற்றும் பல கிறிஸ்தவ மிஷனரிகளால் மேற்கத்திய நாடுகளில் கிறிஸ்தவ மதம் பரவ தொடங்கியபோது, சம்ஹைன் மற்றும் பேகன் (ஆபிரகாமின் சந்ததியிலிருந்து தோன்றிய கிறிஸ்துவம், யூதம் மற்றும் இஸ்லாம் போன்ற மதங்களை தவிர்த்து மற்ற சிலை வழிபாடுகளை பின்பற்றும் மதங்களையெல்லாம் பேகனிசம் என்பர்) போன்ற மதங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கின. இருப்பினும் பேய்களை விரட்டும் பண்டிகையானது அந்த மக்களால் தொடர்ந்து அனுசரிக்கப்பட்டதை பார்த்த போப் கிரிகோரி, அதற்கு அடுத்த நாளான நவம்பர் 1ஆம் தேதியை ஆல் செயின்ட்ஸ் டே என அறிவித்தார் . குறிப்பாக, அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்திலிருந்து பெரும்பான்மையான மக்கள் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த காலத்தில் அவர்கள் அங்கு ஹாலோவீன் கொண்டாட்ட வழக்கத்தையும் பிரபலப்படுத்தினர். 20ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் மிகவும் பிரபலமாக இந்த பண்டிகை கொண்டாடப்பட்டதால் பிற நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களும்கூட இந்த பண்டிகையை கிறிஸ்தவ மதத்துடன் இணைத்து ஆல் ஹாலோஸ் ஈவ் என்று அனுசரிக்கத் தொடங்கினர். அதிலிருந்து ஆண்டுதோறும் அக்டோபர் 31ஆம் தேதி ஆல் ஹாலோஸ் ஈவ் அல்லது ஹாலோவீன் என்று கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படி கிறிஸ்தவ மதத்துடன் சம்பந்தமே இல்லாத செல்ட்டிக் பண்டிகையானது ஹாலோவீன் டே என மாறி இப்போது கிறிஸ்தவர்களின் முக்கிய கொண்டாட்டங்களில் ஒன்றாகிவிட்டது.


இறந்தவர்களின் ஆத்மாக்களை வரவேற்று அவர்களுக்கு விருந்தளிக்கும் தினம் ஹாலோவீன்

ஹாலோவீன் எப்படி கொண்டாடப்படுகிறது?

ஹாலோவீன் தினத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பே வீடுகளை மக்கள் அலங்கரிக்கத் தொடங்கிவிடுவர். ஜாக் ஓ விளக்குகள் என்று சொல்லக்கூடிய பெரிய பெரிய பூசணிக்காய்களின் சதைப்பகுதியை நீக்கிவிட்டு, அதில் பேய் முகம் போன்று செதுக்கி, அதற்குள் வண்ண விளக்குகளை வைத்து இரவு நேரங்களில் வீட்டின்முன்பு அவற்றை வைப்பார்கள். மேலும் சிலந்தி வலைகள், பேய் மற்றும் ஆவிகளின் முகமூடிகளை வீட்டின்முன்பு மாட்டி, பயமுறுத்தும் வண்ண விளக்குகளால் அவற்றை அலங்கரிப்பர். சிலர் தங்களுடைய வீட்டையே பேய் வீடாக மாற்றி பயமுறுத்துவர். இந்த கொண்டாட்டமானது அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளில் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் மிகவும் பிரபலமடைந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை விதிவிதமான கெட்டப்களில் உடைகள் மற்றும் அலங்காரங்களை செய்துகொண்டு, கையில் வாளியுடன் கொண்டாட்டம் நடைபெறும் பொது இடங்கள் மற்றும் வீடுகளுக்கு சென்று இனிப்புகளை சேகரிப்பார்கள். ஹாலோவீன் கொண்டாட்டத்தின் மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், trick or treat. இது 1950களில் ஹாலோவீன் கொண்டாட்டத்தில் பிரபலமடைந்த ஒரு வார்த்தை. அதாவது வித்தியாசமான கெட்டப்களில் வீடு வீடாக செல்லும் குழந்தைகள் அவர்களிடம் trick or treat என்று கேட்பார்கள். அவர்கள் trick என்று சொன்னால் ஏதேனும் ஒரு மேஜிக்கை அவர்களுக்கு செய்து காண்பிக்க வேண்டும். அதுவே treat என்று சொன்னால் அவர்கள் மிட்டாய் அல்லது இனிப்புகளை வழங்குவார்கள். இதற்காகவே ஹாலோவீன் உடைகள் என்றே பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக, அமெரிக்காவில் மிட்டாய் விற்பனையின் மிகப்பெரிய விடுமுறை என்று ஹாலோவீன் அழைக்கப்படுகிறது. கார்கள் மற்றும் ஜீப்களை குறிப்பிட்ட இடங்களில் ஒன்றாக நிறுத்தி அவற்றின் பின்புறத்தை அலங்கரித்து அவற்றில் சாக்லெட்கள் மற்றும் மிட்டாய்களை கொட்டிவைத்து, வேடமிட்டு வரும் குழந்தைகளுக்கு பெரியவர்கள் கொடுப்பது சமீபத்திய ஆண்டுகளில் கொண்ட்டாட்டத்தின் ஒருபகுதியாக மாறிவருகிறது. இதனை அமெரிக்கர்கள் ‘ட்ரங்கோ ட்ரீட்’ என அழைக்கின்றனர்.


குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாடி மகிழும் ஹாலோவீன் பண்டிகை

ஹாலோவீன் கொண்டாட்டத்தின் முக்கியத்துவம்

குழந்தைகள் ஹாலோவீன் விழாவை வெறும் கொண்டாட்டம் மற்றும் மகிழ்ச்சிக்குரிய நாளாக பார்த்தாலும், ஆவிகள், பேய், பிசாசுகள் போன்றவை தங்களை அண்டாது என்ற நம்பிக்கை மேற்கத்திய நாடுகளில் பெரியவர்களிடையே மிகவும் அதிகமாகவே காணப்படுகிறது. இந்தியாவில், குறிப்பாக இந்துக்கள், இறந்தவர்கள் வீட்டிற்கு வருவார்கள் என்பதற்காக புரட்டாசி மாதத்தில் மஹாளய அமாவாசையை எப்படி கடைபிடிக்கிறார்களோ, அதுபோலத்தான் மேற்கத்தியர்கள் ஹாலோவீனை அனுசரிக்கிறார்கள். எமதர்மனின் அனுமதியுடன் இறந்தவர்கள் வீடுகளுக்கு வரும்போது அவர்களை வரவேற்று, பிடித்த உணவுகளை அவர்களுக்கு படையலிடும் இந்துக்களை போலவே, செல்ட்டிக் பண்டிகையும் அனுசரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அது கிறிஸ்தவ மதத்துடன் இணைக்கப்பட்டதால், அதற்கு அடுத்த நாளை, All Saints Day என்று கொண்டாடுகின்றனர். அக்டோபர் 31ஆம் தேதி பேய்களை விரட்டும் மாலையாக ‘ஹாலோவ் ஈவ்’ கொண்டாடப்பட்ட பிறகு, இறந்த புனிதர்களின் ஆத்மாக்களை மதிக்கும் விதமாகவும், அவை சொர்க்கத்திற்கு செல்லவேண்டும் என பிரார்த்திக்கும் தினமாகவும் நவம்பர் 1ஆம் தேதியை புனித திருநாளாக அனுசரிக்கின்றனர். ஹாலோவீனுக்கு முன்பு புனித திருநாளானது ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு நாட்களில் அனுசரிக்கப்பட்டு வந்த நிலையில், போப் போனிஃபெஸ் அனைத்து நாட்டினரும் ஒரே நாளில் அனுசரிக்கும் வகையில் அதை மாற்றியமைத்தார்.

இப்போது மேற்கத்திய கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் பண்டிகையாக ஹாலோவீன் பார்க்கப்பட்டாலும் இது ஒரு பேகன் திருவிழா என்றுதான் இன்றும் பெரும்பாலானவர்களால் நம்பப்படுகிறது. அதாவது பிசாசுகளை வழிபடும் விழாவாகத்தான் பார்க்கப்படுகிறது. சிலை வழிபாட்டை ஏற்றுக்கொள்ளாத கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் யூதர்கள் இந்த ஹாலோவீனை கொண்டாடுவதில்லை. பேய்களை மக்கள் வரவேற்பதால் அவை பூமியில் அதிகம் நடமாடும் இரவாக ஹாலோவீன் இருப்பதாகவும், அதனால் அந்த நாளில் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் இவர்கள் நம்புகின்றனர். எனவே ஹாலோவீன் மாலை முதல் அடுத்த நாள் காலைவரை வெளியே செல்வதை இவர்கள் தவிர்த்து குடும்பத்துடன் சேர்ந்து நேரம் செலவிட வலியுறுத்துகின்றனர்.

Updated On 4 Nov 2024 6:36 PM GMT
ராணி

ராணி

Next Story