![காதலர் தினம் ஒரு நாள் அல்ல! ஒரு வாரக் கொண்டாட்டம்! அரசு விடுமுறையும் கூட! காதலர் தினம் ஒரு நாள் அல்ல! ஒரு வாரக் கொண்டாட்டம்! அரசு விடுமுறையும் கூட!](https://www.ranionline.com/h-upload/2025/02/10/386460-valentines-day-dp.webp)
காதலர் தினம் ஒரு நாள் அல்ல! ஒரு வாரக் கொண்டாட்டம்! அரசு விடுமுறையும் கூட!
உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் எப்படி பிரசித்தமோ அதேபோல் மற்றொரு நாளையும் வெகு விமரிசையாக கொண்டாடுகிறார்கள் என்றால் அது காதலர் தினம் என்று சொல்லலாம். அதாவது வாலண்டைன்ஸ் டே என்று சொல்லப்படுகிற பிப்ரவரி 14ஆம் தேதியன்று காதலர்கள் மட்டுமன்றி, கணவன் - மனைவி, நண்பர்கள் என பலரும் தங்களது அன்பை வெளிப்படுத்தும்விதமாக, சாக்லெட்ஸ், ரோஜாக்கள், கிரீட்டிங் கார்டுகளை பரிசாகக் கொடுப்பர். அந்த கார்டுகளில் தங்களது மனதில் இருப்பதை எழுதி கொடுத்து அசத்துவர். இப்போதெல்லாம் காதலர் தினம் வருகிற அந்த ஒரு நாள் மட்டுமன்றி, பிப்ரவரி மாதம் என்றாலே அதை காதலர்களுக்கான மாதம் என்றே அழைக்கத் தொடங்கிவிட்டனர். குறிப்பாக, காதல் வாரம் என்று சொல்லப்படுகிற பிப்ரவரி 7ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை ஒவ்வொரு நாளையும் சிறப்பிக்கும்விதமாக ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு பரிசை கொடுத்து அசத்துவது கடந்த சில வருடங்களில் ட்ரெண்டாகிவிட்டது. சரி, இப்படி உலகமே ரசித்து கொண்டாடும் காதலர் தினத்தின் வரலாறு உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? நாம் கொண்டாட்டத்தின் நாளாக கருதும் இந்நாள் காதலுக்காக ஒரு நபர் உயிரை கொடுத்த நாள் என்று உங்களுக்கு தெரியுமா? காதலர் தின கொண்டாட்டத்துடன் அதன் வரலாற்றையும் கொஞ்சம் தெரிந்துகொள்ளலாம்.
வாலண்டைன் யார் என்று தெரியுமா?
கி.பி 200 முதல் கி.பி 300 வரையிலான காலகட்டத்தில் அதாவது, கி.பி 3ஆம் நூற்றாண்டில் பண்டைய ரோமானிய சாம்ராஜ்யமானது உலகம் முழுவதும் பரவியிருந்தது. உலகையே இப்பேரரசு ஆட்சிசெய்த காலத்தில் இரண்டாம் கிளாடியஸ் மிமி, திருமணமாகாத இளம்வீரர்களின் கவனம் முழுவதும் நாட்டின்மீது இருப்பதாகவும், அவர்கள்தான் சிறந்த போர்வீரர்களாக உருவாவதாகவும் நினைத்தான். எனவே அவனுடைய ஆட்சி அதிகாரம் சிறந்து விளங்கிய ரோமாபுரி நாடு முழுவதுமுள்ள இளைஞர்கள் யாரும் இனிமேல் திருமணம் செய்துகொள்ளக்கூடாது எனவும், ஏற்கனவே திருமணம் நிச்சயத்திருந்தவர்களும் அதை ரத்துசெய்யவேண்டுமெனவும் அதிரடியாக ஆணை ஒன்றை பிறப்பித்தான். இதனால் திருமணம் செய்துகொள்ள முடியாமல் இளைஞர்கள் தவித்தனர். இந்த சமயத்தில்தான் வாலண்டைன் என்ற பாதிரியார் மன்னனுக்கு தெரியாமல் அங்குள்ள இளைஞர்களை தங்களுக்கு பிடித்தவர்களுடன் ரகசியமாக திருமணம் செய்துவைத்தார். இந்த விஷயம் மன்னனின் காதுகளுக்குப் போக, வாலண்டைனை சிறைப்பிடித்ததுடன், அவருக்கு மரண தண்டனையும் விதித்தார். சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாதிரியார், சிறைக்காவலனின் பார்வையிழந்த மகள் அஸ்டோரியஸ்மீது காதல் வயப்பட்டார். இருவரும் காதலித்துவந்த செய்தி சிறைக்காவலனுக்கு தெரியவர, தனது மகளை வீட்டுக்காவலில் அடைத்தான். இதற்கிடையே வாலண்டைனுக்கு மரண தண்டனை நிறைவேற்றும் நாள் வந்தது. தனது இறப்புக்கு முன்பு காதலியை சந்திக்கமுடியாத வாலண்டைன், தனது கடைசி வாழ்த்தை மடல்மூலம் அனுப்பிவைத்தார். அதில் ‘From your Valentine’ என்று குறிப்பிட்டு அனுப்பியதே இன்றும் மரபாக பின்பற்றப்படுகிறது. கி.பி 270ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதியன்று தலை துண்டிக்கப்பட்டு அவர் கொல்லப்பட்டார். இப்படி அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
காதலர்களை சேர்த்து வைத்ததற்காக உயிர் தியாகம் செய்த பாதிரியர் வாலண்டைன்
அந்த நாள்தான் இன்று வாலண்டைன்ஸ் டே என்று கொண்டாடப்படுகிறது. வாலண்டைன் கொல்லப்பட்டவுடனே இந்த நாள் கொண்டாட்டமாக மாறவில்லை. அதற்கும் ஒரு பின்னணி இருக்கிறது. ரோமானியர்கள் விவாசய கடவுளான ஃபான்ஸ் மற்றும் ரோமானிய பேரரசு வேரூன்ற காரணமாக இருந்த ரோமுல்ஸ் மற்றும் ரெமுஸ் ஆகியோரை கௌரவிக்கும்விதமாக அங்கு பிப்ரவரி 13 முதல் 15 வரை லூபர்காலியா என்ற பண்டிகை கொண்டாடப்படும். அந்த கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக திருமணமாகாத பெண்களின் பெயர்கள் எழுதி ஒரு பெட்டியில் போடப்படும். திருமணமாகாத ஆண்கள் அதிலிருந்து ஒரு பெயரை எடுப்பார்கள். அந்த பெண்ணே அந்த நபரின் துணையாக அறிவிக்கப்படுவார்கள். இப்படி கொண்டாடப்பட்டுவந்த லூபர்காலியா விழாவை மேலும் சிறப்பிக்கும்விதமாகவும், மனதுக்கு பிடித்தவரை இளைஞர்கள் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்பதற்காக உயிர்தியாகம் செய்த வாலண்டைன்ஸை நினைவுகூறும்விதமாகவும் கி.பி 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த போப் கொலாஷியஸ், பிப்ரவரி 14ஐ காதலர் தினமாக அறிவித்தார். அதுமுதல் ஆண்டுதோறும் அந்த நாளில் காதலர்கள் தங்களது இணையிடம் அன்பை வெளிப்படுத்தும்விதமாக வாழ்த்து அட்டைகள், பூக்கள் மற்றும் இனிப்புகளை வழங்கி சிறப்பிக்கின்றனர்.
லூபர்காபியா பண்டிகையில் போற்றப்படும் ரோம பேரரசின் வேர்களான ரோமுல்ஸ் மற்றும் ரெமுஸ்
காதலர் தின அட்டை உருவானது எப்படி?
ஆண்டுதோறும் காதலர் தினத்தன்று காதித அட்டைகளை ஒருவருக்கொருவர் அளித்து வாழ்த்து தெரிவித்துவந்த நிலையில், 17ஆம் நூற்றாண்டில் இந்த அட்டைகளில் காதல் செய்திகள் மற்றும் கவிதைகள் அடங்கிய வாசகங்களை எழுதிக் கொடுப்பதை பழக்கினர். குறிப்பாக, இங்கிலாந்தில் அந்த சமயத்தில் காதல் அட்டைகளை கலர் கலர் ரிப்பன்கள் மற்றும் சரிகைகளால் அலங்கரித்து அதை ஞாபகார்த்தமாக வைத்துக்கொள்ளும்படி கொடுத்தனர். அதன்பின்பு , 19ஆம் நூற்றாண்டில் தொழில்புரட்சி ஏற்பட்டபோது, காதலர் தினத்துக்கென்றே பிரத்யேகமாக கார்டுகள் தயாரிக்கப்பட்டன. அவை காதலர்களை ஈர்க்கவே, அன்றுமுதல் காதலை வெளிப்படுத்த விரும்பும் இளைஞர்கள் காதல் அட்டையை வாங்கி அதை பரிசாகவே கொடுத்தனர். குறிப்பாக, 1913ஆம் ஆண்டு கன்சாஸ் சிட்டியில் ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட கார்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த சமயத்தில்தான் அமெரிக்காவில் காதலர் தினத்தை வெகு விமரிசையாக கொண்டாடத் தொடங்கினர். 1840களில் அமெரிக்க நாட்டில் அதிகளவில் காதலர்களை ஒன்றுசேர்த்துவைத்தார் எஸ்தர் ஹவ்லாந்த் என்ற பெண்மணி. இவரே ‘Mother of American Valentine' என்றும் அழைக்கப்படுகிறார். அங்குதான் காதலர் தின அட்டைகளுடன் சாக்லெட்கள், பூக்கள் மற்றும் பரிசுகளும் சேர்த்து வழங்கும் பழக்கம் மிகவும் பிரபலமானது. பின்னாளில் அதுவே அங்கு பெரிய தொழிலாகவும் மாற்றப்பட்டது. சில ஆண்டுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தையே மிஞ்சும் அளவிற்கு காதலர் தினமானது அங்கு கொண்டாடப்பட்டு வருகிறது. பல நாடுகளில் காதலர் தினத்தன்று அரசு விடுமுறை வழங்கப்படுகிறது. அந்த நாளில் காதலர்கள் மட்டுமல்லாமல் திருமணமானவர்களும்கூட குடும்பத்துடன் வெளியே சென்று உணவு உண்டு மகிழ்கின்றனர்.
அமெரிக்காவில் அதிக காதலர்களை சேர்த்துவைத்த எஸ்தர் ஹவ்லாந்த்
காதல் வாரம் முழுக்க கொண்டாட்டம்தான்!
ஆண்டுதோறும் காதல்தின கொண்டாட்டம் பிப்ரவரி 7ஆம் தேதிமுதல் தொடங்குகிறது. 7ஆம் தேதி ரோஜாப்பூ கொடுப்பதில் தொடங்கி 14ஆம் தேதி பெரிய கொண்டாட்டத்தில் முடிகிறது. காதல் என்றாலே ரோஜாப்பூதான் என்றாகிவிட்டது. ஒருவர்மீதுள்ள அன்பு, பாசம் மற்றும் விருப்பத்தை குறிக்கும் மலர்களில் ஒன்றாக ரோஜா கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக, சிவப்பு ரோஜாவையும், இதயத்தையும் ஒப்பிடுவதை நாம் பார்க்கிறோம். அதனாலேயே அன்பை வெளிப்படுத்த நினைப்பவர்கள் ரெட் ரோஸ் கொடுக்கின்றனர். மனதிலுள்ள உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் குறிக்கும்விதமாக சிவப்பு அல்லது பிங்க் ரோஜாவையும், நட்பை குறிக்கும்விதமாக மஞ்சள் ரோஜாவையும் கொடுக்கின்றனர். இந்த நாளில் வெள்ளை மற்றும் கருப்புநிற பூக்களை கொடுக்கக்கூடாது. பிப்ரவரி 8ஆம் தேதி ப்ரபோஸ் டே என்று சொல்லப்படுகிறது. உணர்ச்சிகளின் அடையாளமாக ரோஜாவை கொடுத்துவிட்டு, அதை அவர்கள் ஏற்றுக்கொண்டால் அடுத்த நாள் தனது மனதில் இருக்கும் உணர்ச்சிகளை வார்த்தைகளால் வெளிப்படுத்த வேண்டும். அந்த வார்த்தைகளை ஏற்றுக்கொள்பவர்கள் ஓகே சொல்ல காதல் மலர ஆரம்பிக்கும். பிப்ரவரி 9ஆம் தேதியானது சாக்லெட் டே என்று அழைக்கப்படுகிறது. எந்த ஒரு நல்ல ஆரம்பமாக இருந்தாலும் இனிப்பு கொடுப்பது வழக்கம் என்பதால் காதல் ஓகே ஆனவர்கள் அடுத்த நாள் தங்களுடைய ஜோடிக்கு பிடித்தமான ஸ்வீட் அல்லது சாக்லெட்டை வாங்கிக்கொடுக்கிறார்கள். இதுபோன்று செய்வதன்மூலம் ஜோடிகளுக்கிடையேயான குழப்பங்கள் நீங்குவதாக சொல்கின்றனர்.
மனதில் உள்ள உணர்வுகளை வெளிப்படுத்த சிவப்பு ரோஜா மற்றும் வாழ்த்து அட்டை கொடுக்கும் வழக்கம்
பிப்ரவரி 10ஆம் தேதியை டெடி டே என்கின்றனர். பொதுவாக டெடியானது பாசம், அரவணைப்பு மற்றும் ஆறுதலை குறிக்கும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த நாளில் காதலர்கள் ஒருவருக்கொருவர் பெரிய டெடியை பரிசாக கொடுத்து மகிழ்கின்றனர். பிப்ரவரி 11ஆம் தேதியை ஒருவருக்கொருவர் வாக்குறுதி அளித்துக்கொள்ளும் நாளாக பின்பற்றுகின்றனர். இது இருவருக்குமிடையே உள்ள நெருக்கம் மற்றும் அன்பை காட்டுவதுடன், ஒருவருக்கொருவர் பக்கபலமாக இருப்பதையும், ஏற்றத்தாழ்வுகளில் உடன் இருப்பதற்காக நம்பிக்கையையும் கொடுக்கிறது. இப்படி வாக்குறுதிகளை கொடுப்பதன்மூலம் ஆழமான உறவை உருவாக்கவும், இருவரின் மதிப்பை கூட்டவும் முடியும் என நம்புகின்றனர். வார்த்தைகளில்லாத சமயத்தில் ஒருவர் மீதுள்ள அன்பை, காதலை வெளிப்படுத்தும் பேராயுதமாக கட்டிப்பிடித்தல் பார்க்கப்படுகிறது. பிப்ரவரி 12ஆம் தேதியை hug day என்று அழைப்பது மட்டுமல்லாமல், இந்த நாளில் தங்களது இணையை ஆரத்தழுவி அரவணைத்து அன்பை வெளிப்படுத்துகின்றனர். அன்பு, பாசம் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான தருணங்களை பகிர்ந்துகொள்ள விரும்புகிறவர்கள் உடனே தங்களது இணையை கட்டிப்பிடிக்கின்றனர். பிப்ரவரி 13, கிஸ் டே. தங்களுடைய மனதுக்கு நெருக்கமானவர்களை கட்டிப்பிடிப்பதும், முத்தம் கொடுப்பதும் மன அழுத்தத்தை குறைக்கும் என்பது அறிவியல்பூர்வமாக நிரூபணமான உண்மை. காதலர்களிடையே உறவை வலுப்படுத்தவும், அன்பை வெளிப்படுத்தவும் சிறந்த வழி முத்தமிடுதல். வெளிநாடுகளில் காதலர்கள் உதட்டில் முத்தமிடுவதை வெளிப்படையாகவே பொதுவெளியில் பார்க்கலாம். கடைசியாக, பிப்ரவரி 14ஆம் தேதி வாலண்டைன்ஸ் டே அல்லது காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. ஒரு வாரம் முழுக்க கொஞ்சம் கொஞ்சமாக பகிர்ந்த அன்பு மற்றும் காதலை மொத்தமாக வெளிப்படுத்தும் சிறந்த நாளாக பார்க்கப்படுகிறது. இந்த நாளில் காதலர்கள் ஒன்றாக சாப்பிடுவதையும், வெளியே சுற்றுவதையும் பெரிதும் விரும்புகின்றனர். பரிசுகள் கொடுத்து தங்களது இணையை மகிழ்விப்பது இந்த நாளில் பிரதானமாக பார்க்கப்படுகிறது.
![ராணி ராணி](/images/authorplaceholder.jpg?type=1&v=2)