இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

40 வயதை தொடும் பலருக்கு இருக்கும் பயமே சுகர், பிபி வந்துவிடக்கூடாது என்பதுதான். ஆனால் இப்போது 30 வயதிலேயே நிறையப்பேருக்கு இந்த பிரச்சினை வருகிறது. அதற்கு உடல் உழைப்பின்மை, உணவு கட்டுப்பாடின்மை, வாழ்க்கை முறை மாற்றங்கள் போன்ற பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் நீரிழிவு வருவதை எப்படியும் தடுக்கமுடிவதில்லை. ஒருவருக்கு நீரிழிவு வந்துவிட்டாலே அவருக்கு மாரடைப்பு, ஸ்ட்ரோக் போன்ற பெரிய பிரச்சினைகளும் எளிதில் வர வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. நீரிழிவு பிரச்சினை இருப்பவர்கள் எப்படி கட்டுப்பாட்டுடன் இருப்பது? இதனால் உடலில் எந்தெந்த உறுப்புகள் பாதிக்கப்படும்? நீரிழிவு வராமல் இருக்க என்ன செய்யலாம்? என்பது போன்ற பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கிறார் நீரிழிவு சிறப்பு சிகிச்சை நிபுணர் ஷேக் சுலைமான் மீரன்.

வெள்ளை சர்க்கரையை தவிர, வெள்ளை நிறத்தில் இருக்கும் எந்த உணவை சாப்பிட்டாலும் சுகர் வருமா?

வெள்ளைநிறத்தில் இருக்கும் எதுவாக இருந்தாலும் அது உடலுக்கு நல்லதல்ல. சர்க்கரை, க்ரீம், மைதா, சால்ட், வெள்ளை அரிசி சாதம் போன்ற அனைத்துமே சர்க்கரை நோய் வர காரணமாகின்றன. மற்ற அனைத்தையும் தவிர்க்க முடியாவிட்டாலும் மைதாவையும் வெள்ளை சர்க்கரையையும் தவிர்க்கவேண்டும். சர்க்கரைக்கு பதிலாக கற்கண்டு அல்லது பனங்கருப்பட்டியை பயன்படுத்தலாம்.

இட்லி, தோசையை தொடர்ந்து சாப்பிட்டாலும் டயாபட்டீஸ் வருமா?

அதுவும் அரிசிதானே. பெரும்பாலான டயாபெட்டிக் நோயாளிகளுக்கு டயட் அட்வைஸ் கொடுக்கும்போது அரிசி நிறைய சாப்பிடவேண்டாம் என்று சொல்வோம். அதற்கு அவர்கள் டிஃபன் மட்டும்தான் சாப்பிடுவதாக சொல்வார்கள். இட்லி, தோசையும் அரிசியை அரைத்து செய்வதுதானே. நாம் பொதுவாகவே அரிசி உட்கொள்ளும் அளவை குறைக்கவேண்டும். தென்னிந்தியர்கள் அனைவருமே அரிசியை அதிகளவில் எடுத்துக்கொள்கிறோம். ஒரு மீல்ஸ் என்று எடுத்துக்கொண்டாலே சாம்பார், வத்தக்குழம்பு, ரசம், தயிர் என அனைத்துக்கும் தனித்தனியாக சாதம் வைத்து சாப்பிடுவோம். இப்படி பல்க்காக அரிசி எடுத்துக்கொள்வதை தவிர்க்கவேண்டும். டயட் உணவை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டுமன பிளேட் முறை இருக்கிறது. அதாவது ஒரு தட்டில் பாதி காய்கறிகள் மற்றும் பழங்கள், கால் பகுதிக்கு இறைச்சி, கால் பகுதிக்குத்தான் அரிசி அல்லது கோதுமை எடுத்துக்கொள்ள வேண்டும்.


வெள்ளை சர்க்கரை மற்றும் மைதா அனைவரும் கட்டாயம் தவிர்க்கவேண்டியவை

கோதுமை சாப்பிட்டால் டயாபட்டீஸ் வராமல் தவிர்க்கமுடியுமா?

இல்லை. அரிசி, கோதுமை எல்லாமே கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள்தான். அந்த கார்போஹைட்ரேட் அளவை குறைக்கத்தான் பிளேட் முறையை பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறது.

டயாபட்டீஸ் வந்துவிட்டாலே மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று சொல்கிறார்கள். அது உண்மையா?

100% உண்மை. ஏனென்றால், டயாபட்டீஸ் வந்துவிட்டாலே பிபி, கொலஸ்ட்ரால் போன்றவை அதிகரிக்கும். நீரிழிவு வருவதற்கான காரணமே மெட்டபாலிக் சிண்ட்ரோம் பிரச்சினைதான். அதாவது உடற்பருமன், பிபி, சுகர், கொலஸ்ட்ரால் போன்றவை ஒன்றன்பின் ஒன்றாக வந்துவிடும். இதில் முக்கியமானதே உடலில் சுகர் அளவு அதிகரிப்பதால் இன்சுலின் சுரந்தாலும் அது சரியாக வேலைசெய்யாத காரணத்தால் ரத்த நாளங்கள் பாதிப்படைந்து, உடல் முழுக்க அழற்சி ஏற்பட்டு கொழுப்பு படிந்து திடீரென அது அடைக்கும்போது மாரடைப்பு வரும். மாரடைப்பு வருவதற்கான முக்கிய காரணி நீரிழிவு என்பதில் சந்தேகமில்லை.

நீரிழிவு இருப்பவர்களுக்கு ஏதேனும் புண் வந்தால் அது சரியாக நீண்ட காலமாகும் என்றும், சிலருக்கு சரியே ஆகாது என்றும் சொல்கிறார்கள். இதற்கு முழுமையான தீர்வு இல்லையா?

டைப் 1 நீரிழிவுக்கு அறிகுறிகள் இருக்கும். சிறுவயதிலேயே அதிக எடை குறையும், அடிக்கடி சிறுநீர் கழிப்பர், பசி அதிகமாக இருக்கும், இன்சுலின் போடாவிட்டால் மயங்கிவிடுவர். அதுவே டைப் 2விற்கு அறிகுறிகள் இருக்காது. எனவேதான் அடிக்கடி பரிசோதித்து தெரிந்துகொள்ளவேண்டும். ரத்தத்தில் சர்க்கரை அளவு 200க்கும் மேல் இருந்தால் எப்படி இதயத்திற்கு செல்லும் ரத்தநாளங்களில் அடைப்பை ஏற்படுத்துமோ அதுபோல், கால்களுக்கு செல்லும் ரத்தநாளங்களிலும் அடைப்பை ஏற்படுத்திவிடும். அந்த அடைப்பைத் தாண்டி ரத்த ஓட்டம் இருக்காது என்பதால் அங்குள்ள திசுக்கள் இறந்துவிடும். அதனால்தான் அந்த இடத்தில் புண்கள் மற்றும் தொற்றுகள் வருகின்றன. எனவே உடனடியாக அந்த விரல் அல்லது காலையே அகற்றிவிடவேண்டும். இதுபோன்று ஏற்படாமல் இருக்க சர்க்கரை வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படியே வந்துவிட்டால் அதை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவேண்டும்.


சர்க்கரை நோயாளிகளுக்கு காயம் ஆறாமல் போக காரணம்

ஒருவருக்கு அடிபட்டு காயம் ஏற்பட்டால் அது ஆறுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டா?

பொதுவாகவே நீரிழிவு நோயாளிகளிடம் காலை கண் போன்று பார்த்துக்கொள்ளும்படி சொல்வோம். சர்க்கரை இருப்பதால் ரத்த ஓட்டம் சரியாக இருக்காது. நரம்பும் பாதிப்படையும். இதனால் கால்களில் உணர்ச்சி இருக்காது. இவர்கள் வெறும்காலில் நடக்கும்போது எதையாவது மிதித்தால்கூட தெரியாது. குறிப்பாக, சூடாக இருக்கும் இடத்தில் நடந்தால் சூட்டை உணரமாட்டார்கள். அதனால் தோல் பாதிப்படைந்து புண் வரும். எனவே சௌகர்யமான ஷூ அல்லது செருப்பு போடவேண்டும். அதேபோல் சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலே இதுபோன்ற பிரச்சினைகளை வராமல் தவிர்த்துவிடலாம்.

சுகர் வந்தவர்களின் தாம்பத்திய உறவில் பிரச்சினை வரும் என்று சொல்கிறார்கள். இது உண்மையா?

உண்மைதான். எல்லா பிரச்சினைகளுக்குமே ரத்தநாளங்களில் அடைப்பு ஏற்படுவதுதான் காரணம். உயிர்ப்பகுதிக்கு ரத்த ஓட்டம் அதிகமாவதால்தான் விறைப்புத்தன்மை வரும். அந்த பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லையென்றால் விறைப்புத்தன்மை குறைந்து தாம்பத்திய உறவில் பிரச்சினைகள் வரும். எனவே சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் இந்த பிரச்சினையை தவிர்த்துவிடலாம். அதுவே சர்க்கரை வந்துவிட்டால் ஆண்மையை அதிகரிப்பதற்கான மருந்துகள் இருக்கின்றன.

சுகர் வந்தவர்களுக்கு ப்ரெய்ன் ஸ்ட்ரோக் வருவதாக சொல்வது எந்த அளவிற்கு உண்மை?

ஹார்ட் அட்டாக் போன்று மூளையில் வருவதுதான் ஸ்ட்ரோக். மூளையில் ஸ்ட்ரோக் வருவதில் 2 வகைகள் இருக்கின்றன. ஒன்று ரத்தக்கசிவு. இது 15 முதல் 20% வரைதான். ஆனால் 75 - 80% அடைப்பால்தான் வருகிறது. ஏற்கனவே சொன்னதுபோன்று ஸ்ட்ரோக், ஹார்ட் அட்டாக், சிறுநீரக பிரச்சினைகள், கண் பார்வை, கால் புண் போன்றவற்றிற்கு சர்க்கரை முக்கிய காரணியாக இருக்கிறது.


சர்க்கரை கட்டுப்பாட்டில் இல்லாவிட்டால் மாரடைப்பு வர வாய்ப்புகள் மிகவும் அதிகம்

திடீரென கை, கால் மரத்துப்போதல், உணர்ச்சியின்மை போன்றவை டயாபட்டீஸின் அறிகுறிகளா?

நமது உடல் முழுக்க ரத்த ஓட்டம் இருக்கிறது. அந்த ரத்தத்தில் சுகர் அளவுக்கு அதிகமாக இருக்கும்போது அது உடலின் எல்லா இடங்களுக்கும்தான் போகும். இதனால் நரம்புகளும் பாதிப்படையும். நரம்புகள் பாதிப்படையும்போது ஒருசிலருக்கு மரத்துப்போகலாம், ஒருசிலருக்கு பாதம், கை, கால் எரிச்சல் வரலாம்.

நீரிழிவு நோயாளிகள் என்னென்ன காய்கறிகளை எடுத்துக்கொள்ளலாம்?

பூமிக்கு மேல் விளையும் காய்கறிகளை நிறைய சாப்பிடலாம். அதுவே பூமிக்கு கீழ் விளைகிற கிழங்குவகைகளை அளவாக சாப்பிடவேண்டும். அசைவம் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் தோலுரித்த சிக்கன், குழம்பு மீன், அளவாக மட்டன் என எடுத்துக்கொள்ளவேண்டும். கார்போஹைட்ரேட் அளவை குறைத்து, காய்கறிகளின் அளவை அதிகரித்து, இறைச்சியை அளவாக சாப்பிட்டாலே போதும். பொதுவாகவே சரிவிகித உணவு எடுப்பதுதான் எல்லாருக்குமே நல்லது. அடுத்து நடைபயிற்சி மிகவும் அவசியம். நிறையப்பேர் கிழங்குவகைகளை சாப்பிடக்கூடாது என்று நினைப்பார்கள். ஆனால் அளவுக்கதிகமாக சாப்பிட்டுவிட்டு உடலுழைப்பு இல்லாமல் இருக்கும்போதுதான் அது பிரச்சினையாக மாறுகிறது.


நீரிழிவு நோயாளிகளுக்கு அதிகம் வரும் கண்பார்வை பறிபோதல், கால் மரத்துப்போதல் போன்ற பிரச்சினைகள்

டயாபட்டீஸ் வந்தாலே உடனே கண்பார்வை பறிபோகுமா?

உடனே பறிபோகும் என்பது தவறானது. நாள்பட்ட டயாபட்டீஸ்தான் எல்லா பிரச்சினைகளுக்கும் காரணமாகிறது. 10, 20 வருடங்கள் சர்க்கரை கட்டுப்பாட்டில் இல்லாதபோதுதான் இதுபோன்ற பிரச்சினைகள் வரும். குறிப்பாக, 20 வருடங்கள் கழித்து ஸ்ட்ரோக், ஹார்ட் அட்டாக், ரெட்டினா பாதிப்பு, சிறுநீரக செயலிழப்பு, கால் புண் என எது வேண்டுமானாலும் திடீரென வரலாம். சர்க்கரை அதிகரிக்கும்போது இந்த உறுப்புகள் மட்டுமல்லாமல் கல்லீரலிலும் பாதிப்பை ஏற்படுத்தும். அதாவது சுகர் அதிகமாக இருக்கும்போது கொழுப்பு அதிகரித்து அது கல்லீரலில் சென்று சேரும். இதுதான் ஃபேட்டி லிவர் பிரச்சினைக்கு காரணமாகிறது. குறிப்பாக, Non-alcoholic fatty liver பிரச்சினையானது கல்லீரல் செயலிழப்பு வரை கொண்டுசெல்லும்.

கம்ப்யூட்டர் முன்பே அமர்ந்து வேலைசெய்பவர்களுக்கு உங்களுடைய அறிவுரை என்ன?

உடற்பயிற்சி தவிர்க்கமுடியாதது. Sitting is the new smoking என்று சொல்வதன் காரணமே நீண்டநேரம் உட்கார்ந்தே இருக்கக்கூடாது என்பதை அறுவுறுத்தத்தான். எனவே ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை எழுந்து நடக்கவேண்டும். நடந்தால்தான் கெண்டைக்கால்களிலிருந்து ரத்த ஓட்டம் மேல்நோக்கி இருக்கும். எனவே நடப்பது அவசியம்.


கர்ப்பகாலத்தில் பெரும்பாலானோருக்கு வருகிற ஜெஸ்டேஷனல் டயாபட்டீஸ்

சுகர் கட்டுப்பாட்டுக்குள் வந்தபிறகும் மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டுமா?

டோசேஜ் மாற்றித்தரப்படும். டயாபட்டீஸ் ஒரு தீராநோய். ஒருமுறை வந்துவிட்டால் வாழ்நாள் முழுக்க மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். டயட், எக்ஸர்சைஸ், மெடிசன்ஸ் போன்றவற்றில் கட்டுப்பாட்டுக்குள் வராவிட்டால் இன்சுலின் எடுக்கவேண்டும். இதை தொடர்ந்து பரிசோதித்து பார்த்து டோசேஜ் மாற்றிக்கொள்ள வேண்டும். சமீபத்தில் நீரிழிவு நோயை குணமாக்க சீனாவில் வழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஸ்டெம்செல் டிரான்ஸ்ப்ளாண்ட் செய்து, அது ரத்தத்தில் கலந்து, கணையத்திற்கு சென்று பீட்டா செல்களை உற்பத்தி செய்து இன்சுலின் சுரக்க வழிவகை செய்கிறது. இந்த முறைமூலம் 50 வயது நபர் ஒருவருக்கு நீரிழிவு குணமாக்கப்பட்டிருக்கிறது.

ஸ்டெம்செல் என்றால் என்ன? அதைவைத்து எப்படி குணமாக்குவது?

உடலிலுள்ள செல்லை எடுத்து அதை உடலின் எந்தவொரு திசு அல்லது உறுப்பாக மாறக்கூடிய சிறப்பு செல்களாக மாற்றி மீண்டும் உடலில் செலுத்தும் முறை. அப்படி நமது ரத்தத்திலுள்ள செல்களையே கொண்டுசென்று கணையத்தில் சேர்த்து, பீட்டா செல்களாக மாற்றி இன்சுலின் சுரக்கவைக்கப்படும். இதனால் நீரிழிவு கட்டுப்பாட்டுக்குள் வரும்.

கருவிலேயே குழந்தைகளின் டயாபட்டீஸை சரிசெய்யமுடியுமா?

முடியாது. டைப் 1 டயாபட்டீஸ் முன்கூட்டியே வரக்கூடியது. கர்ப்பகாலத்தில் தாய்மார்களுக்கு வரக்கூடிய ஜெஸ்டேஷனல் டயாபட்டீஸ் என்பது குழந்தை வயிற்றிலிருக்கும்வரை இருக்கும். குழந்தை வெளியே வந்ததும் குறைந்துவிடும். இவர்களுக்கு பின்னாளில் டைப் 2 டயாபட்டீஸ் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். ஜெஸ்டேஷனல் டயாபட்டீஸ் அளவுக்கு அதிகமாக இருந்தால் அம்மாவுக்கும் கெடுதல் குழந்தைக்கும் கெடுதல் உண்டாக்கும். குறிப்பாக, குழந்தைகள் அளவில் பெரிதாகவோ அல்லது முழுமையான வளர்ச்சி இல்லாமலோகூட பிறக்கலாம். டெலிவரி கடினமாக இருக்கும்.

Updated On 25 March 2025
ராணி

ராணி

Next Story