இந்த பிரச்சினை இருப்பவர்கள் ரத்த தானம் செய்யவே கூடாது! - மருத்துவர் தமிழ்மணி திருநாராயாணன்
‘ரத்த தானம் செய்வோம் இன்னுயிர் காப்போம்’ என்பது போன்ற விளம்பரங்களை நாம் நிறைய இடங்களில் பார்க்கிறோம். ஆனால் நிறையப்பேருக்கு அவர்களுடைய ரத்த வகை குறித்தே தெரிந்திருப்பதில்லை. மேலும் யாரெல்லாம் ரத்த தானம் செய்யலாம், யாரெல்லாம் கொடுக்கக்கூடாது என்பது பற்றிய புரிதல் நம்மில் பலருக்கு இல்லை. ரத்த தானம் குறித்தும், அதன் அவசியம் குறித்தும், ரத்தத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறித்தும், அவற்றுக்கான தீர்வுகள் குறித்தும் நம்முடன் உரையாடுகிறார் ராயபேட்டை அரசு மருத்துவமனையின் தலைமை ரத்த வங்கி அதிகாரி மருத்துவர் தமிழ்மணி திருநாராயாணன்.
ரத்த தானம் கொடுப்பதற்கே நிறையப்பேர் பயப்படுகிறார்கள். அவர்களுக்கு உங்களுடைய அறிவுரை என்ன?
தானத்திலேயே சிறந்த தானம் ரத்த தானம் என்பார்கள். விஞ்ஞானத்தின் மூலம் எல்லாமே கண்டுபிடிக்கப்பட்டாலும் இதுவரை கண்டுபிடிக்கமுடியாத ஒன்று என்றால் அது ரத்தம்தான். ஒரு மனிதன் உயிரோடு இருக்க இதயத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதோ அதே அளவு ரத்தத்திற்கும் இருக்கிறது. ஒருவரின் உடல் எடையை பொருத்து ரத்தம் இருக்கும். சராசரியாக 5.5 லிட்டர் ரத்தம் இருக்கும். விபத்து அல்லது பிற பிரச்சினைகளால் பாதிக்கப்படுவோருக்கு ரத்த தானம் செய்வதன்மூலம் உயிரையே காப்பாற்ற முடியும். ஆனால் யாரெல்லாம் ரத்த தானம் செய்யலாம்? எந்த வயதில் கொடுக்கலாம்? யாரை அணுகுவது? எப்படி ரத்த தான முகாம் அமைப்பது? என்பது போன்ற பல கேள்விகள் நிறையப்பேருக்கு இருக்கும். அவர்களுக்கான விளக்கம் இது. 18 வயதிலிருந்து 65 வயதுவரைக்கும் யார் வேண்டுமானாலும் விருப்பப்பட்டு கொடுக்கலாம். ஒரு தொடர் ரத்த கொடையாளி வருடத்திற்கு 4 முறை ரத்தம் கொடுக்கலாம். அதுவே பெண்ணாக இருந்தால் மாதவிடாய் காரணத்தால் வருடத்திற்கு 3 முறை கொடுக்கலாம். அதுதவிர ரத்தம் கொடுப்பவரின் எடை 45 கிலோவிற்கு மேல் இருக்கவேண்டும். உடலின் வெப்பநிலை நார்மலாக இருக்கவேண்டும். இதயத்துடிப்பு 72லிருந்து 74கிற்குள் இருக்கவேண்டும். மேலும் 24 மணிநேரத்திற்கு முன்பு ஆல்கஹால் எடுத்து இருக்கிறார்களா? என்பது போன்ற சில முக்கிய கேள்விகளும் கேட்கப்படும். அவை அனைத்தும் சரியாக இருந்தால் மட்டுமே ரத்த தானம் செய்யமுடியும். கொடுக்கப்படும் ரத்தம் 350 மி.லி எனில் முழு ரத்தமாகவும், 450 மி.லி எனில் ரத்தக்கூறுகளாகவும் பிரித்து எடுக்கப்படும். ஒவ்வொரு முறை ரத்த தானம் செய்யும்போது அது தரமாக இருக்கிறதா என்பதை பரிசோதித்துதான் பெறப்படும். குறிப்பாக மஞ்சள் காமாலை, ஹெச்.ஐ.வி, பால்வினை நோய், மலேரியா போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

ரத்த தானம் கொடுப்பதற்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்
ரத்தத்தில் எத்தனை வகைகள் இருக்கின்றன? அதில் அரிய வகைகள் என்னென்ன?
ரத்தத்தில் ஆன்டிஜென் மற்றும் ஆன்டிபாடி என 2 மூலக்கூறுகள் இருக்கின்றன. ஆன்டிஜெனை பொருத்துதான் ரத்தத்தின் வகைகள் பிரிக்கப்படும். ஏ ஆன்டிஜென் இருந்தால் ஏ குரூப் எனவும், பி ஆன்டிஜென் இருந்தால் பி குரூப் எனவும், இரண்டும் இருந்தால் ஏபி எனவும், இரண்டுமே இல்லாமல் ஆன்டிபாடிகள் மட்டும் இருந்தால் அது ஓ குரூப் எனவும் பிரிக்கப்படும். இதுதவிர பாம்பே குரூப் என சிறப்பு ரத்தவகை ஒன்று இருக்கிறது. இது 7500 பேரில் ஒருவருக்குத்தான் இருக்கும். பாம்பேயில் வசிக்கிற ஒரு குறிப்பிட்ட வகை மக்களுக்குத்தான் இந்த வகை ரத்தம் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டதால் இது ஒரு சிறப்பு வகை ரத்தம். இதுபோக, அனைத்துவகை நெகட்டிவ் ரத்தங்களுமே அரிய வகைகள்தான். கார்ல் லான்ஸ்டீனெர் என்பவர்தான் 1901ஆம் ஆண்டு ரத்தங்களை வகைபடுத்தினார். இதற்கான நோபல் பரிசும் பெற்றிருக்கிறார். அவருடைய பிறந்தநாளை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் ஜூன் 14ஆம் தேதியை தன்னார்வ ரத்த தானம் செய்பவர்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ரத்த சேகரிப்பு மையங்களில் 35 நாட்கள் ரத்தத்தை சேமித்து வைக்கமுடியும். அதற்காக 2-6 டிகிரி வெப்பநிலையில் இயங்கக்கூடிய குளிர்சாதனப்பெட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வெப்பநிலையில் 2, 3 மணிநேரத்திற்கு ஒருமுறை பரிசோதித்துக்கொண்டே இருக்கவேண்டும். சேமித்து வைக்கப்படும் ரத்தங்களில் உராய்வுத்தன்மையை கட்டுப்படுத்தும் கெமிக்கலை சேர்த்தால் 42 நாட்கள்வரை சேமித்து வைக்கமுடியும். இப்படி ஏ,பி, ஏபி, ஓ போன்ற ரத்த வகைகள் பொதுவாக சேமித்து வைக்கப்படும்.

அரிய வகை ரத்தங்கள் - ரத்த தானம் செய்வதால் மாரடைப்பு வரும் வாய்ப்புகள் குறைவு
Rh நெகட்டிவ் ப்ளட் குரூப் என்றால் என்ன?
Rh நெகட்டிவ் என்பதும் ஒருவிதமான ஸ்பெஷல் குரூப்தான். ஓ நெகட்டிவ் ரத்தம் உள்ளவர்களுக்கு அந்த வகை ரத்தம் மட்டும்தான் செலுத்தமுடியும். ஆனால் இந்த வகை ரத்தம் உள்ளவர்கள் மற்ற அனைத்து வகை ரத்தம் உள்ளவர்களுக்கும் தானமாக கொடுக்கமுடியும். இதை யுனிவர்சல் டோனர் என்கின்றனர். அதுவே ஏபி பாசிட்டிவை யுனிவர்சல் ரெசிபியண்ட் என்றும் சொல்வர். அதாவது இந்த வகை ரத்தம் எல்லாவகை ரத்தத்தையும் ஏற்றுக்கொள்ளும். பாம்பே ஓ குரூப்பில் h என்ற ஆன்டிஜென்னே இருக்காது. இதுவும் ஓ குரூப்பின் துணை குரூப்தான். Rh என்ற காரணியே இல்லாதவர்களை Rh நெகட்டிவ் குரூப் என்று சொல்வர். டெலிவரி நேரத்தில் இதுபோன்ற ரத்த வகைகளை தெரிந்து வைத்திருப்பது மிகமிக அவசியம்.
ஒரு சாதாரண நபர் ரத்த தானம் செய்வதால் என்ன நன்மை கிடைக்கும்?
ஒருமுறை நாம் கொடுக்கும் ரத்தம் 4 உயிர்களை காப்பாற்றும் என்று சொல்ல கேட்டிருக்கிறோம். ஆனால் அதனால் நமக்கு என்ன பலன் என்று பலருக்கும் தெரிவதில்லை. தொடர் ரத்த கொடையாளிக்கு 48 மணிநேரத்தில் அந்த ரத்தம் உடலில் சுரந்துவிடும். 3 மாதத்திற்கு ஒருமுறை ரத்த தானம் செய்வதால் தொடர் மருத்துவ பரிசோதனை மேற்கொள்வர். மேலும் தொடர்ந்து ரத்தம் கொடுப்பவர்களுக்கு வாழ்க்கை முறையில் ஒழுக்கம் ஏற்படும். அதனால் அவர்களுக்கு கேன்சர் வருவதற்கான வாய்ப்பு 85% குறைவு. அதேபோல் மறதி, நரம்பியல் பிரச்சினைகள் வருவதற்கான வாய்ப்புகள் 80% குறையும். மேலும் ஹார்ட் அட்டாக் வருவதும் கணிசமாக குறைந்துவிடும். எனவே 18 வயதானால் வாக்களிப்பதை போன்று ரத்த தானமும் செய்ய கற்றுக்கொள்ள வேண்டும்.

ரத்தம் உறைதல் பிரச்சினை இருப்பவர்கள் ரத்த தானம் செய்யக்கூடாது
கடினமான சூழ்நிலையில் வந்த பேஷண்டுக்கு ரத்தம் கொடுத்து காப்பாற்றிய தருணம் குறித்து பகிரமுடியுமா?
நிறைய மருத்துவமனைகள் மற்றும் ரத்த வங்கிகள் கல்லூரி மாணவர்களை நம்பித்தான் இயங்கும். அவர்களிடம் இருந்துதான் நாங்கள் ரத்தத்தை வாங்கி சேகரித்து வைத்திருப்போம். அப்படி புதுக்கோட்டையிலிருந்து 45 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் தனது 21 வயது மகளை ரத்த புற்றுநோய் சிகிச்சைக்காக இங்கு அழைத்துக்கொண்டு வந்திருந்தார். அந்த பெண் என்னிடம் வந்து தனது மகளின் நிலைமையை பற்றி கூறியதுடன், தனது மகளுக்காக ரத்தம் கொடுப்பதாக சொன்னார். அந்த பெண் சோர்வாக இருப்பதைப் பார்த்து அருகிலிருந்த கல்லூரி மாணவர்களிடம் ரத்தம் கொடுக்கச் சொல்லி கேட்டேன். 20 நிமிடங்களுக்குள் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்து அடுத்தடுத்து ரத்தம் கொடுத்தார்கள். அந்த பெண்ணுக்கு தேவையான ப்ளேட்லெட்கள் மற்றும் ப்ளாஸ்மா போன்றவற்றை நாங்கள் உடனடியாக சேகரித்தோம். அப்போது அந்த இளம்பெண்ணின் தாய் காலில் விழுந்து நன்றி சொன்னார். அதேபோல் சிறுநீரக நோயாளி ஒருவருக்கு ஒரே நாளில் 83 யூனிட் ரத்தம் தேவைப்பட்டது. குறிப்பாக, அது ஞாயிற்றுக்கிழமை நாளாக இருந்தபோதும் அவ்வளவு ரத்தத்தை சேகரித்து கொடுக்க முடிந்தது. 40 வயதுக்குள் இருந்த அந்த நபரும் காப்பாற்றப்பட்டார். ஒருவர் கிணற்றில் விழுந்ததால் மண்ணீரலில் அடிபட்டு அது கிழிந்து வந்தார். அவருக்கு ஏபி நெகட்டிவ் ப்ள்ட் குரூப். ஒரே நாளில் அவருக்கு 14 யூனிட் ரத்தம் கொடுத்து காப்பாற்றினோம்.
ரத்தம் உறைதல் குறைவாக இருப்பது எதனால்? அதை எப்படி சரிசெய்வது?
யார் வேண்டுமானாலும் ரத்தம் கொடுக்கலாம் என்றாலும் ஒருசிலர் ரத்தம் கொடுக்கவே கூடாது என்பார்கள். அதில் முக்கியமானவர்கள் ரத்த உறைவு தன்மை இல்லாதவர்கள். ஏனென்றால் இவர்களுக்கு ஒருமுறை ஊசியால் குத்தினாலே ரத்தம் வழிந்துகொண்டே இருக்கும். அதேபோல் ஹீமோஃபிலியா என்ற பிரச்சினை இருப்பவர்களும் ரத்த தானம் செய்யமுடியாது. ரத்தம் வடியும்போது அதை தடுப்பது ரத்தத்தில் உள்ள தட்டணுக்கள்தான். யாருக்கெல்லாம் அது குறைவாக இருக்கிறதோ அவர்களால் ரத்த தானம் செய்யமுடியாது. இதுபோன்ற பிரச்சினைகள் மரபணு ரீதியாகவோ அல்லது தனிப்பட்ட காரணங்களாலோ வரலாம். எனவே முன்கூட்டியே பரிசோதனை செய்து இதை கண்டறிந்து அதை சரிசெய்ய சிகிச்சை எடுக்கவேண்டும்.
