இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

1988ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகமான மருத்துவமுறை அக்குபஞ்சர். சீனாவில் தோன்றியதாக சொல்லப்படும் இந்த மருத்துவமுறை தற்போது உலகளவில் பல நாடுகளில் பின்பற்றப்படுகிறது. மயிரிழை போன்ற ஊசிகளை பயன்படுத்தி உடலில் உள் மற்றும் வெளி உறுப்புகளின் எனர்ஜி ஓட்டப்பாதைகளில் இருக்கும் தடைகளை நீக்கிவிட்டாலே அந்தந்த உறுப்புகள் சரியாக இயங்கி பிரச்சினைகள் நீங்கிவிடும் என்பதுதான் அக்குபஞ்சர் மருத்துவத்தின் சாரம்சம். இந்த மருத்துவத்தை பொருத்தவரை வியாதி என்பதே கிடையாது. குளிர் மற்றும் சூடு பிரச்சினைகள் என வியாதிகள் இரண்டாக பிரிக்கப்படுகிறது. உடலில் எந்தெந்த உறுப்புகள் குளிருடனும், எந்தெந்த உறுப்புகள் சூட்டுடனும் தொடர்புடையது என்பதை வைத்து, எந்த இடத்தில் என்ன பிரச்சினைக்கு எந்த உறுப்பின் பாதையை சரிசெய்யவேண்டும் என்பதை கைதேர்ந்த நிபுணர்கள் கண்டறிகின்றனர். அதற்கு உடலில் மொத்தம் 2 இடங்களில் இருக்கும் முக்கிய நாடித்துடிப்புகளை வைத்து பரிசோதிக்கின்றனர். அக்குபஞ்சரை பொருத்தவரை உடலில் மொத்தம் 12 உறுப்புகளை முக்கிய உறுப்புகளாக கருதுகின்றனர். அவற்றில் 6 உறுப்புகளை ஒரு நாடியிலும் மற்ற 6 உறுப்புகளை மற்றொரு நாடியிலும் தொடர்புபடுத்துகின்றனர். இப்படி உடலில் எந்த இடத்தில் என்ன பிரச்சினை என்பதை கண்டறிந்து அதற்கு சரியான இடத்தில் எனர்ஜியை தூண்டிவிடுவதன்மூலம் பிரச்சினைகள் சரிசெய்யப்படுகின்றன. அக்குபஞ்சர் சிகிச்சைமுறையில் சிறப்பு என்னவென்றால் இதில் மருந்து மாத்திரைகள் எடுக்கத் தேவையில்லை. குறைந்த செலவில் பெரும்பாலான பிரச்சினைகளை 100% குணப்படுத்தமுடியும். உடலில் ஏற்படும் எல்லா வியாதிகளுக்குமே அக்குபஞ்சர் மருத்துவத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தியாவில் விரைவில் இந்த மருத்துவமுறையும் அரசால் அங்கீகரிக்கப்பட்டு, அதற்கென பிரத்யேக படிப்புகள் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி அக்குபஞ்சர் மருத்துவம் குறித்தும் அதிலுள்ள சிறப்புகள் மற்றும் சிகிச்சைமுறைகள் குறித்தும் முந்தைய பகுதிகளில் நம்முடன் பகிர்ந்த அக்குபஞ்சர் நிபுணர் லூதர் சேத், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த என்னென்ன வழிகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்து நம்முடன் பகிர்கிறார்.

வெரிகோஸ் வெயின் எதனால் ஏற்படுகிறது?

வெரிகோஸ் வெயின் என்பது பெரிய வியாதி கிடையாது. உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதுதான் அதற்கு காரணம். இதை மருத்துவத்துறையில் மண்ணீரல் எனர்ஜி குறைவு அல்லது spleen qi deficiency என்று சொல்கின்றனர். ரத்தத்தை உடலில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டுபோதல் உள்ளிட்ட சில வேலைகளை மண்ணீரல் செய்கிறது. அது சரிவர வேலைசெய்யாதபோது வெரிகோஸ் வெயின் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இது அக்குபஞ்சர் மருத்துவத்தில் ஒருசிலருக்கு ஒன்றரை மாதங்களில் சரியாகும், ஒருசிலருக்கு 3 மாதங்கள்கூட ஆகும். ஆனால் 100% சரியாகிவிடும்.


மண்ணீரல் பிரச்சினையால் உருவாகும் வெரிகோஸ் வெயின்

அக்குபஞ்சரில் ஆண்மை குறைபாடு, பிசிஓடி போன்ற பிரச்சினைகளையும் சரிசெய்யமுடியுமா?

இந்த பிரச்சினைகளும் உள்ளுறுப்புகள் சம்பந்தப்பட்டதுதான். பிசிஓடி என்பது ஒரு கட்டி. உடலில் எங்கெல்லாம் கட்டி இருக்கிறதோ அதை குளிர் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்று சொல்கிறோம். கர்ப்பப்பையில் இருக்கும் குளிரை நீக்கினாலே போதும். அதேபோல் ஆண்மை குறைபாட்டை இரண்டு வகைகளில் பிரிக்கலாம். உடல்ரீதியாக எனர்ஜியாக இல்லையென்றால் ஆண்மை குறைபாடு ஏற்படலாம். மனரீதியாக தன்னால் இயலாது என்ற தாழ்வு மனப்பான்மையை வைத்திருந்தாலும் இந்த பிரச்சினை ஏற்படும். மனமும் உடலும் ஒரே சீராக இருந்தாலே இந்த பிரச்சினையை சரிசெய்துவிடலாம். குழந்தையின்மை பிரச்சினையைக்கூட அக்குபஞ்சரில் சரிசெய்ய முடியும்.

மற்ற மருத்துவமுறைகளில் சிகிச்சைக்கு பிறகு சில நாட்கள் கழித்து வரச்சொல்கிறார்கள். அதுபோல் அக்குபஞ்சரில் இருக்கிறதா?

அப்படியெல்லாம் கிடையாது. உடலில் ஒவ்வொரு உறுப்பும் மற்ற உறுப்புகளுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. ஒரு உறுப்பு வேலை செய்யவில்லை என்றால் அது அடுத்த உறுப்பின் எனர்ஜி ஓட்டத்தையும் தடுத்துவிடும். எனவே அந்த எனர்ஜி ஓட்டப்பாதையை சரிசெய்ய ஒருசிலர் 5 முதல் 10 முறைவரை வரவேண்டி இருக்கும். ஆனால் வலி என்பதை முதல்முறை வரும்போதே குறைக்கமுடியும்.


உடல்நலத்தை பாதுகாக்க சாப்பிடக்கூடாத ஜங்க் உணவுகள்

உடல்நலத்தை பேணிகாக்க என்னென்ன செய்யவேண்டும்?

எளிதில் செரிக்கக்கூடிய உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடவேண்டும். என்னென்ன உணவுகளை சாப்பிடக்கூடாது என்பது பெரும்பாலானோருக்குத் தெரியும். அதிக சுவையுள்ள உணவுகள் உடலுக்கு கேடுதான். நன்றாக பசித்தால் மட்டுமே சாப்பிடவேண்டும். உதாரணத்திற்கு 4 மணிநேரம் சாப்பிடாமல் வயிற்றுக்கு இடைவெளி கொடுக்கவேண்டும். காலை, மதியம், இரவு என நேரத்திற்கு சாப்பிடவேண்டும் என்றில்லாமல் பசிக்கும்போது சாப்பிட்டால் போதும். வேளைக்கு சாப்பிடாமல் இருந்தால் அசிடிட்டி உருவாகும் என்று சொல்வார்கள். ஆனால் அசிடிட்டியை உருவாக்கக்கூடிய உணவுகளை சாப்பிடுவது, முந்தையநாள் செய்த உணவுகளை சூடுசெய்து சாப்பிடுவது போன்றவை வாயுத்தொல்லையை அதிகரித்து அசிடிட்டியை ஏற்படுத்தும். எனவே இதுபோன்ற விஷயங்களை தவிர்த்தாலே போதும். அதுபோக, பசிக்கும் நேரத்தில் சரியாக சாப்பிடாமல் விட்டால் இடைப்பட்ட நேரங்களில் பசிக்க ஆரம்பிக்கும். உதாரணத்திற்கு மதிய உணவை சரியாக சாப்பிடவில்லை என்றால் 4 மணிக்கு பசிக்கும். அப்போது பஜ்ஜி, போண்டா போன்ற எண்ணெய் உணவுகளை சாப்பிடத் தோன்றும். ஆனால் அந்த உணவுகள் உடலுக்கு போதுமான எனர்ஜியை தராது என்பதால் சிறிது நேரத்தில் மீண்டும் பசிக்க ஆரம்பிக்கும். எனவே பசிக்கும்போது ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொண்டாலே இதுபோன்று இடைப்பட்ட நேரங்களில் பசிக்காது.

ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு பொதுவாகவே மன அழுத்தம் அதிகமாக இருக்கும் என்று சொல்வதுண்டு. அதற்கு என்ன தீர்வு?

ஒருசிலருக்கு உடல் மற்றும் மனரீதியான பிரச்சினைகள் வருவதில்லை என்றாலும், பெரும்பாலானோருக்கு இந்த பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு முதலில் ஒபிசிட்டி என்று சொல்லக்கூடிய உடற்பருமன் பிரச்சினை ஏற்படும். அப்படி உடல்பருமன் ஏற்படும்போது அது வேறு பிரச்சினைகளை கொண்டுவந்துவிடும். எனவே ஒரே இடத்தில் அமர்ந்து வேலைசெய்பவர்கள் ஒருமணிநேரத்திற்கு ஒருமுறை எழுந்து ஓரிரு நிமிடங்கள் கொஞ்ச தூரம் நடந்துவிட்டு வருவது நல்லது.

Updated On 23 Dec 2024 5:23 PM IST
ராணி

ராணி

Next Story