குழந்தையின்மை பிரச்சினைக்கு இதுதான் தீர்வு! - மகப்பேறு மருத்துவர் மனு லட்சுமி
இன்றைய சூழலில் திருமணமான பெண்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது குழந்தையின்மை பிரச்சினைதான். அறிவியல் வளர்ச்சியின் மூலம் இதை சரி செய்வதற்கான பல சிகிச்சை முறைகள் இன்று வந்துவிட்டாலும், அது குறித்த சரியான புரிதல் இல்லாத நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். காரணம் கல்வி அறிவை தாண்டி இப்படியான சிகிச்சையின் மீது இருக்கும் பயம்தான். அந்த வகையில் செயற்கை கருத்தரித்தல் என்றால் என்ன? இதில் எந்தெந்த மாதிரியான சிகிச்சை முறைகள் உள்ளன? இப்படியான சிகிச்சைகள் எடுத்துக்கொள்ளும் போது உடலளவிலும், மனதளவிலும் எப்படி நம்மை நாமே தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் போன்ற பல்வேறு விஷயங்களை மகப்பேறு மருத்துவர் திருமதி மனு லட்சுமி நம்மோடு பகிர்ந்து கொண்டார். அந்த நேர்காணலின் முதல் பகுதியை இங்கே காணலாம்.
இன்று பெண்களுக்கு மிக முக்கியமான பிரச்சினையாக இருப்பது குழந்தையின்மைதான். இதற்கு காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்?
இந்த பிரச்சினைக்கு மிக முக்கிய காரணமாக இருப்பது மிக தாமதமாக நடைபெறும் திருமணங்கள்தான். இது தவிர திருமணத்திற்கு பிறகும் கூட சிலர் குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளி போடுகிறார்கள். பொதுவாக 20 முதல் 30 வயதுக்குள் திருமணம் நடந்து குழந்தை பெற்றுக்கொள்வது என்பது மிக எளிதான விஷயமாக இருக்கும். இதனால்தான் நம்முடைய தாத்தா, பாட்டி காலத்தில் 16, 18 வயதிலேயே திருமண பந்தத்திற்குள் நுழைந்து, அதிகப்படியான குழந்தைகளை அவர்கள் பெற்றார்கள். ஆனால் இன்று அப்படி இல்லை. அனைவருமே கல்வி அறிவை பெற வேண்டும், வாழ்க்கையில் ஒரு இடத்தை அடைந்த பின்புதான் திருமணம், குழந்தை போன்ற விஷயங்களை பற்றியே சிந்திக்க வேண்டும் என்கிற முடிவில் இருக்கிறார்கள். இது ஆரோக்கியமான பொருளாதாரத்தை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தாலும், இயற்கை அவர்களுக்காக காத்திருப்பது கிடையாது. அந்தந்த நேரங்களில் அந்தந்த விஷயங்களை சரியாக செய்தால்தான் இந்த பிரச்சினை வராமல் நாம் பார்த்துக்கொள்ள முடியும்.
தாமதமாக நடைபெறும் திருமணமும் குழந்தை இன்மைக்கு முக்கிய காரணம்
சிலர் சரியான வயதில் திருமணம் செய்திருந்தாலும் பி.சி.ஓ.டி போன்ற ஒரு சில உடல் உபாதைகளின் காரணமாக குழந்தை பெற்றுக் கொள்வதில் சில சிக்கல்களை சந்திக்கிறார்களே?
உண்மைதான் பி.சி.ஓ.டி போன்ற ஒரு சில உடல் உபாதைகளின் காரணமாகவும் சமீபகாலமாக குழந்தையின்மை பிரச்சினை என்பது பலருக்கு ஏற்படுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் நம்முடைய வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்தான். நாம் சாப்பிடும் உணவு தொடங்கி உடற்பயிற்சிவரை பல விஷயங்களில் நாம் சரியாக கவனம் செலுத்துவதில்லை. குறிப்பாக நாம் உட்கொள்ளும் துரித உணவினால் பலவித சிக்கல்களை நம் உடல் சந்திப்பதோடு, ஹார்மோனல் மாற்றங்களும் நமக்குள் நேரிடுகிறது. இது நம் உடல் எடையை அதிகரிக்க செய்து, அன்றாடம் நாம் செய்யும் வேலைகளை கூட சரியாக செய்ய முடியாத சூழ்நிலைக்கு கொண்டு சென்று விடுகிறது. இது நாளடைவில் கருத்தரிப்பதிலும் சில சிக்கல்களை ஏற்படுத்தி குழந்தையின்மை பிரச்சினைக்கு மூல காரணமாக மாறிவிடுகிறது.
ஐ.வி.எஃப். எனும் செயற்கை கருத்தரித்தல் சிகிச்சைக்கு வருபவர்கள், எப்படி தங்களை தயார் படுத்திக்கொண்டு வரவேண்டும்?
நீங்கள் குழந்தையின்மை பிரச்சினை வந்த பிறகு மருத்துவமனைக்கு வருவதை பற்றி பேசுகிறீர்கள். ஆனால் திருமணத்திற்கு முன்பாகவே நாம் உடல் அளவில் குழந்தை பெற்றுக் கொள்வதற்கு தகுதியாக இருக்கிறோமா என்பதை ஒவ்வொருவரும் சுய பரிசோதனை செய்ய வேண்டும். தேவைப்பட்டால் மருத்துவமனைக்கு சென்றும் பரிசோதனை செய்து கொள்வது நல்லதே. இது ஆண், பெண் என இருவருக்குமே பொருந்தும். காரணம் எந்த ஒரு பிரச்சினையுமே ஆரம்பத்திலேயே கண்டறிந்து சரி செய்வது என்பது மிக எளிதான விஷயமாக இருக்கும். உதாரணமாக பெண்களுக்கு ஏற்படும் ஹீமோகுளோபின் பிரச்சினை, சர்க்கரை நோய் சிக்கல் போன்றவைகளை திருமணத்திற்கு முன்பே கண்டறிந்து, அதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டால் குழந்தை பெற்றுக்கொள்வதில் எந்த சிக்கலும் ஏற்படாமல் மிக எளிதாக மகப்பேறு காலத்தை நம்மால் கடந்து செல்ல முடியும்.
ஹீமோகுளோபின், சர்க்கரை நோய் உள்ளிட்ட பிரச்சினைகளை திருமணத்திற்கு முன்பே கண்டறிவது நல்லது
அதேபோல் நீங்கள் கேட்ட ஐ.வி.எஃப் சிகிச்சைக்கு வரும் முன் நாம் எந்த அளவுக்கு நம்மை தயார் படுத்திக்கொண்டு வர வேண்டும் என்ற கேள்விக்கு. பெரியளவில் எதுவும் இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும். காரணம் இயற்கையாக கருத்தரிக்க முயற்சி செய்து பலனளிக்காதபோது, இங்கு மருத்துவமனைக்கு வருகிற அனைவரையுமே ஐ.வி.எஃப் சிகிச்சை எடுத்துக் கொள்ள நாங்கள் பரிந்துரைப்பது கிடையாது. துவக்கத்தில் அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்படும். மேலும் அவர்கள் மேற்கொள்கின்ற முயற்சியில் ஏதேனும் தவறு இருக்கிறதா? தவறான மருந்துகள், கிரீம்கள் எதுவும் பயன்படுத்துகிறார்களா? என்பது பற்றியெல்லாம் கேட்டறிந்து முடிந்தவரை இயற்கையாக கருத்தரிக்கவே நாங்கள் வழிகாட்டுவோம். முடியாத பட்சத்தில்தான் ஐ.வி.எஃப், அறுவை சிகிச்சை போன்ற விஷயங்களை கையில் எடுப்போம். அதற்கும் சில வழிமுறைகள் இருக்கின்றன. படிப்படியாக ஒவ்வொரு கட்டமாக நகர்ந்த பிறகுதான் முழுமையான சிகிச்சை அவர்களுக்கு கொடுக்கப்படும்.
இயற்கையாக கருத்தரிக்கவே முதலில் வழிகாட்டுவோம் - மருத்துவர் மனு லட்சுமி
ஐ.வி.எஃப் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் அனைவருக்குமே குழந்தை நிற்பது என்பது சுலபமாக நடந்துவிடுவது கிடையாது. சிலருக்கு கருக்கலைப்பு செய்யக்கூடிய நிலை கூட ஏற்படுகிறது. இதற்கு காரணம் என்ன?
இயற்கை முறையில் கருத்தரிக்க முயற்சிக்கும் போதே, 10-ல் ஒருவருக்குத்தான் சரியாக கருத்தரிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அப்படி இருக்கும்போது ஐ.வி.எஃப் போன்ற செயற்கை கருத்தரித்தல் சிகிச்சையிலும் சில சிக்கல் இருக்கத்தான் செய்யும். சொல்லப்போனால் ஐ.வி.எஃப் சிகிச்சை எடுக்கும்போது 50-லிருந்து 70 சதவிகிதம்தான் சரியாக கருத்தரிக்க வாய்ப்புள்ளது. அதனால் இந்த சிகிச்சை துவங்குவதற்கு முன்பாகவே அந்த தம்பதியினரின் வாழ்க்கை சூழல் குறித்து நாங்கள் கேட்டு தெரிந்து கொள்வோம். மேலும் அவர்களுக்கு ஏதேனும் உடல் உபாதை இருக்கிறதா? அதற்கான சிகிச்சை என்ன? ஐ.வி.எஃப் சிகிச்சை எந்த அளவுக்கு அவர்களுக்கு பலன் தரும். இந்த சிகிச்சை எடுத்துக் கொண்டாலே எல்லோரும் கருத்தரித்து விடுவது கிடையாது. சிலருக்கு குழந்தை வளர்ந்த பிறகு கூட கருக்கலைப்பு செய்ய வேண்டிய சூழ்நிலை வரலாம் போன்ற அனைத்து விஷயங்களையும் மிக தெளிவாக அவர்களிடம் சொல்லிவிடுவோம். இதற்கெல்லாம் அவர்கள் ஒத்துழைப்பு தர தயார் ஆன பிறகுதான் ஐ.வி.எஃப் சிகிச்சையே அவர்களுக்கு வழங்கப்படும்.
ஐ.வி.எஃப் போன்ற செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை (எ.கா) புகைப்படங்கள்
ஒரு சிலர் ஐ.வி.எஃப் சிகிச்சையை இரண்டு, மூன்று முறை கூட செய்கிறார்கள். அப்படிப்பட்ட சூழலில் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறதா?
பொதுவாக ஐ.வி.எஃப் சிகிச்சையின்போது பயன்படுத்தப்படும் ஊசிகள், அவரவர் உடல் தகுதி, வயது, எடை போன்றவற்றை கருத்தில் கொண்டே ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதத்தில் செலுத்தப்படும். அப்படி பயன்படுத்தப்படும் ஊசிகளால் எந்த பக்கவிளைவும் ஏற்படாது என்பதே மருத்துவ அறிவியல் கூறும் தகவல். இதனால் எந்த பயமும் இன்றி நிச்சயமாக சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்.