இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

மருத்துவத்துறையில் பல்வேறு முன்னேற்றங்கள் மற்றும் அதிநவீன சிகிச்சைமுறைகள் வந்துவிட்டாலும் குறிப்பிட்ட சில நோய்களின் பெயரைக் கேட்டாலே நமக்குள் ஒருவித பயம் வந்துவிடும். அவற்றில் முக்கியமானது புற்றுநோய். இந்நோயின் சிகிச்சைமுறைகளில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டே இருந்தாலும் இதற்கு ஆகும் செலவும் அதே அளவிற்கு அதிகரித்துக்கொண்டே போகிறது. அதேசமயம் அதிகம் செலவழிக்க முடியாதவர்களும் அலோபதி சிகிச்சைமுறைகளால் குணப்படுத்த முடியாத சிலவகை புற்றுநோய்களையும் இயற்கை மருந்துகளால் செலவே இல்லாமல் குணப்படுத்த முடியும் என்கிறார் அரசு புற்றுநோய் பிரிவு சித்த மருத்துவர் வெண்தாமரை செல்வி. குறிப்பாக, பெண்களுக்கு அதிகம் வரக்கூடிய மார்பக மற்றும் கருப்பை புற்றுநோய்களுக்கான காரணங்கள் குறித்தும், அவற்றிற்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் உரையாடுகிறார்.

புற்றுநோய் சிகிச்சைக்கு வருபவர்களுக்கு சித்த மருத்துவத்தில் என்னென்ன உணவு கட்டுப்பாடுகள் கொடுக்கப்படுகின்றன?

உணவு கட்டுப்பாடு என்பது எதில்தான் இல்லை? நீரிழிவு நோயாளியை ஸ்வீட் சாப்பிடவேண்டாம் என்று சொல்கிறோம். அதுவே ஹைப்பர் டென்ஷன் இருப்பவர்களுக்கு உப்பு எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று சொல்கிறோம். இப்படி எல்லா மருத்துவத்திலுமே இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அதற்கு சித்த மருத்துவத்தில் பத்தியம் என்று சொல்கின்றனர். அதேசமயம் இதை சொல்லியே பலரை பயமுறுத்துகின்றனர். சித்த மருத்துவத்தில் கொடுக்கின்ற மருந்துக்கு ஏற்றவாறு பத்தியம் இருக்கும். இருந்தபோதிலும், சித்த மருத்துவ சிகிச்சையை எடுத்துக்கொள்ளும் அசைவ பிரியர்கள், முட்டை, வெள்ளாட்டுக் கறி, காடை, சுறா ஆகிய உணவுகளை தாராளமாக எடுத்துக்கொள்ளலாம். மற்ற அசைவ உணவுகளை தவிர்த்துவிட வேண்டும். அதேபோல், சித்த வைத்தியம் பார்ப்பவர்கள் பாகற்காய் மற்றும் அகத்திக்கீரையை எடுத்துக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனென்றால் இவை இரண்டும் மருந்தை முறித்துவிடும். அதேபோல் உடலில் மருந்து சேருவதற்கான தன்மையை புளி குறைக்கும் என்பதால் அதையும் முடிந்தவரை வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. அதற்கு பதிலாக எலுமிச்சை, தக்காளி எடுத்துக்கொள்ளலாம். புற்றுநோயை பொருத்தவரை ஒவ்வொரு வகைக்கும் ஒரு பத்தியம் இருக்கிறது. உதாரணத்திற்கு, வயிற்றில் புற்றுநோய் என்றால், அவர்கள் 2 வேளை நீர்மோர் எடுத்துக்கொள்ளவேண்டும். பாதாம் பிசினை இரவு ஊறவைத்து அதை மோருடன் கலந்து குடிக்கவேண்டும். இரவே வெந்தயத்தை ஊறவைத்து காலையில் அதை அரைத்து பாலுடன் சேர்த்து கூழ் காய்ச்சி குடிக்கவேண்டும். சோற்று கற்றாழை ஜூஸ், வதக்கிய சின்ன வெங்காயம் போன்றவை எடுத்துக்கொள்ள வேண்டும். ‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்ற சித்தர்களின் கோட்பாட்டை வைத்துதான் ஒவ்வொரு நோய்க்கும் உணவே மருந்தாக்கி தரப்படுகிறது.


வயிற்றில் புற்றுநோய் இருப்பவர்கள் அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டியது கற்றாழை ஜூஸ்

பெண்களுக்கு மார்பக புற்றுநோய் அதிகளவில் வர காரணம் என்ன? பெண்கள் எப்படி விழிப்புணர்வுடன் இருப்பது?

மார்பகத்தில் ஏதேனும் அசாதாரண வலி இருந்தாலோ அல்லது கட்டியை உணர்ந்தாலோ அல்லது 35 வயதை தாண்டியிருந்தாலோ உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதிக்கும்படி அரசு பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. உணவுமுறை மற்றும் தூக்க ஒழுக்க மாறுபாடுகள்தான் இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. முன்பெல்லாம் 40 வயதை தாண்டியவருக்குத்தான் மார்பக புற்றுநோய் வரும் என்ற சொன்னது போலில்லாமல் இப்போது திருமணமாகாதவர்களுக்கும்கூட வருகிறது. அதிகளவு துரித உணவுகள் மற்றும் பொரித்த உணவுகளை எடுத்துக்கொள்வதே இதற்கு முக்கிய காரணம் என்று ஆய்வு விவரங்கள் தெரிவிக்கின்றன. புற்றாக மாறுவதற்கு முன்பே தொட்டு பார்க்கும்போது கட்டி கழலையாக இருக்கும்போதே கண்டறிந்துவிடலாம். அதை மேமோகிராம் எடுத்து பார்க்கும்போதே அது சாதாரண கட்டியா அல்லது புற்றுநோய்க்கட்டியா என மருத்துவர்கள் சோதித்து சொல்லிவிடுவார்கள். அது புற்றுநோயாக இல்லாவிட்டாலும் உடனடியாக அறுவைசிகிச்சை செய்து அதை அகற்றிவிடும்படி மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால் திருமணமாகாத பெண்கள் அறுவைசிகிச்சை மேற்கொள்ளவே தயங்குகின்றனர். சிலருக்கு சாதாரண கட்டிகள் அறுவைசிகிச்சைக்கு பிறகும் மீண்டும் வருகின்றன. இதிலிருந்து, உணவுமுறை மற்றும் வாழ்க்கைமுறையில் மாற்றங்களை ஏற்படுத்தாமல் புற்றுநோயை சரிசெய்யமுடியாது என்பது தெரியவருகிறது.


மார்பக புற்றுநோய் கழலையாக இருக்கும்போது கண்டறியும் முறை

கர்ப்பப்பை புற்றுநோயை தவிர்க்க என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்?

இப்போதுள்ள நிறைய பெண்கள் கோவிலுக்கு போவதற்கோ அல்லது வேறு எங்காவது செல்வதற்கோ மாதவிடாய் தள்ளிப்போகும் மாத்திரைகளை பயன்படுத்துகின்றனர். அவையெல்லாம் மருத்துவர்களால் அறிவுறுத்தப்படுவதில்லை. கர்ப்பப்பை உருவாக்கப்பட்டிருக்கிறதென்றால் அதில் மாதாந்திர சுழற்சியும் இயற்கையான ஒன்று. அதை மாற்றியமைக்கும்போது அதில் மாற்றங்கள் உருவாக ஆரம்பிக்கின்றன. ஹார்மோன் மாற்றங்களை பொருத்தவரை மார்பகமும் கர்ப்பப்பையும் நெருங்கிய தொடர்புடையவை. அதனால் உணவும் ஒழுக்கமும் மிகவும் முக்கியம். அதேபோல் நிறைய இளம்பெண்களுக்கு சினைப்பை கட்டிகள் ஏற்படுகின்றன. அந்த கட்டிகள் 6, 7 செ.மீ என வளரும்போது அதுவே 20களிலேயே புற்றுநோயாகவும் மாறுகின்றன. இதற்கு அதிக கலோரி டயட் மற்றும் குறைந்த உடல் சார்ந்த வேலைகளே முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது. உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி மேற்கொள்பவர்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்கின்றன ஆய்வுகள். நம் முன்னோர்கள், 70, 80 வயது வரை ஆரோக்கியமாக இருந்ததற்கு காரணம் அவர்களுடைய உடலுழைப்புதான். ஆனால் இப்போதுள்ள பிள்ளைகள் கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் முன்புதான் அதிக நேரம் செலவிடுகின்றனர். அதேபோல் பள்ளிகாலத்திலிருந்தே அதிகப்படியான மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். எனவே பள்ளியிலேயே விளையாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்க ஆசியர்களுக்கு முதலில் பயிற்றுவிக்கவேண்டும். மாணவர்களுக்கும் இதுபோன்ற நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அப்படி செய்தால் இனிவரும் தலைமுறைகள் ஆரோக்கியமாக வாழ வழி வகுக்கப்படும்.


அதிகப்படியான செல்போன் பயன்பாட்டால் இளம்தலைமுறையினரிடையே குறையும் உடலுழைப்பு

புற்றுநோய் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லும்போது அதிக செலவாகிறது. அரசு மருத்துவமனைகளில் அதன் செலவு எப்படி குறைக்கப்படுகிறது?

புற்றுநோய்க்கு வைத்தியம் பார்த்தே நிறையப்பேர் கடனாளியாகிவிடுகின்றனர். காப்பீடுகள் இருந்தாலுமே அதைமீறி செலவாகின்றது. அரசு மருத்துவமனையில் புற்றுநோய்க்கு சித்த மருத்துவ சிகிச்சை எடுப்பவர்களுக்கு முழுக்க முழுக்க இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதற்கான ஆய்வுகளையும் பெரிய அரசு மருத்துவமனைகளில் எடுத்துக்கொள்ளலாம்.

புற்றுநோய் உள்ளவர்கள் என்ன மாதிரியான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்?

என்னவகையான புற்றுநோய் என்பதை பொருத்து உடற்பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டும். அடிப்படையில் பிராணயாம பயிற்சி மேற்கொள்ளவேண்டும். ஏனென்றால் உணவின்றி, நீரின்றி கூட நம்மால் சில நாட்கள் உயிர்வாழ முடியும். ஆனால் காற்றில்லாமல் வாழமுடியாது. எனவே பிராண சக்தியை திசுக்களுக்கு இழுத்து செல்லக்கூடிய பயிற்சிகளை எல்லா புற்றுநோயாளிகளும் செய்யவேண்டும். அதுவே நோயாளியின் உடல் அசைவுகள் நன்றாக இருக்கும்பட்சத்தில் யோகாசன பயிற்சிகள் மேற்கொள்ளலாம்.


புற்றுநோய் இருப்பவர்கள் கட்டாயம் மேற்கொள்ளவேண்டிய பிராணயாம பயிற்சி

புற்றுநோய் சிகிச்சைக்கு சித்த மருத்தவத்தை நாடுகிறவர்கள் தங்களை எப்படி தயார் செய்துகொள்ளவேண்டும்?

முதலில் பயப்படக்கூடாது. புற்றுநோய் என்றதுமே பயப்பட்டாலே அது நோய் எதிர்ப்பாற்றலை குறைத்துவிடுகிறது. புற்றுநோய்க்கு சித்த மருத்துவத்தில் கடுமையான பத்தியம் கிடையாது. காசு செலவில்லாமல் சிகிச்சை பெறமுடியும். எனவே மன அமைதியுடன் வந்தாலே போதுமானது. புற்றுநோய் சம்பந்தப்பட்ட சித்த ஆய்வுகளுக்கு அரசு இன்னும் உதவ வேண்டும்.

புற்றுநோய்க்கான மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் எப்படி கொடுக்கப்படுகின்றன?

மருந்துகளின் பெயரை பொதுவெளியில் குறிப்பிட்டால் மருத்துவர்களின் பரிந்துரையின்றி மக்கள் வாங்கி சாப்பிடுவார்கள். சில மருந்துகளை பாலிலோ அல்லது மோரிலோ கலந்து சாப்பிடவேண்டி இருக்கும். அதை மருத்துவர்களின் பரிந்துரைப்படிதான் சாப்பிடவேண்டும். இல்லாவிட்டால் மிகையினும், குறையினும் நோய் செய்யும் என்பது மருந்துக்கு பொருந்தக்கூடியது.

சித்த மருந்துகளை சமூக ஊடகங்களை பார்த்து வாங்கி சாப்பிடலாமா?

சமூக ஊடகங்களில் யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் நாம்தான் பகுத்தறிவுடன் செயல்பட வேண்டும். மருத்துவர் அல்லாதோர் மருந்து பற்றி பேசுவது ஏற்புடையதல்ல. உணவு பற்றி தாராளமாக சொல்லலாம். ஆனால் மருந்தை மருத்துவர் ஆலோசனைப்படிதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

Updated On 25 Feb 2025 11:26 AM IST
ராணி

ராணி

Next Story