இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

எத்தனை மருத்துவ வசதிகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்டாலும் சில நோய்களுக்கு முழுமையான தீர்வை இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. விழிப்புணர்வுகள், சிகிச்சை முறைகளில் முன்னேற்றங்கள், குறிப்பிட்ட நிலைவரை முழுமையான தீர்வு, தீவிர நிலையிலும் வலியை குறைக்க மருந்துகள் என பல இருந்தாலும் இன்றுவரை உயிரை அச்சுறுத்தும் நோயாகவே பார்க்கப்படுகிறது புற்றுநோய். உலகளவில் புற்றுநோய் பாதிப்பு பெருமளவில் இருந்தாலும், இந்தியாவை பொருத்தவரை ஆண்டுதோறும் 1.1 மில்லியன் பேருக்கு புதிதாக புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்படுவதாக உலக சுகாதார அமைப்பின் அறிக்கை கூறுகிறது. மேலும் மரணத்தை ஏற்படுத்தும் இரண்டாவது கொடிய நோயாகவும் பார்க்கப்படுகிறது. இதனால்தான் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்விதமாக ஆண்டுதோறும் நவம்பர் 7ஆம் தேதி தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தில் ஆண் மற்றும் பெண்களுக்கு அதிகம் வரக்கூடிய புற்றுநோய்கள் குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்தும் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படுகின்றன.

தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தின் முக்கியத்துவம்

புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் முழுமையாக குணப்படுத்தி விடலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் முதல் இரண்டு நிலைகள் வரை பெரும்பாலானோருக்கு புற்றுநோய் குறித்த புரிதல் இல்லாமல் இருப்பதாகவும் கூறுகின்றனர். மூன்று மற்றும் நான்காம் நிலைகளில் அதன் அறிகுறிகள் மற்றும் விளைவுகள் மோசமடையும்போதுதான் சிகிச்சைக்கு வருவதால் நிறையப்பேரை காப்பாற்ற முடியாத சூழல்தான் இங்கு நிலவுவதாக கூறுகின்றனர். குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. எனவேதான் புற்றுநோய் குறித்த போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அறிகுறிகள் மற்றும் சிகிச்சைகள் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்தவும் தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை அனுசரிக்கும் வழக்கத்தை கொண்டுவந்தார் முன்னாள் மத்திய சுகாதார துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன். மேலும் புற்றுநோயை கட்டுபாட்டிற்குள் கொண்டுவர மாநில அளவிலான இயக்கங்களையும் ஏற்படுத்தி, அதன்மூலம், அருகிலிருக்கும் நகராட்சி மருத்துவமனைகளில் இலவச பரிசோதனை செய்துகொள்ளும்படியும் பொதுமக்களை ஊக்குவித்தார்.


புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகள்

அதன்படி புற்றுநோய் சிகிச்சையில் பெரும் பங்களிப்பை கொடுத்த புகழ்பெற்ற விஞ்ஞானி மேரி கியூரியின் பிறந்தநாளான நவம்பர் 7ஆம் தேதியை புற்றுநோய் விழிப்புணர்வு தினமாக அறிவித்தார். அதன்படி, 2014ஆம் ஆண்டு முதல் இந்த நாள் இந்தியாவில் புற்றுநோய் விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் பொதுமக்கள் அனைவரும் தாமாக முன்வந்து அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் இலவச பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று ஊக்குவிக்கப்படுகின்றனர். புற்றுநோய் வராமல் தடுத்தல், ஆரம்ப நிலையிலேயே நோயை கண்டறிதல் போன்றவை இதன்மூலம் அதிகரிக்கும். இப்படி விழிப்புணர்வை ஏற்படுத்துவதன்மூலம் புற்றுநோய் இறப்பை கணிசமாக குறைக்கமுடியும். இதற்கு முன்பிருந்தே ஆண்டுதோறும் பிப்ரவரி 4ஆம் தேதி உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்படுகிறது. அதுபோக, உலகளவில் பெண்களிடையே மார்பக புற்றுநோய் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துவருவதால் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் ‘பிங்க் அக்டோபர்’ என்றும் அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவில் அதிகம் கண்டறியப்படுகிற புற்றுநோய் வகைகள் மற்றும் அவற்றின் அறிகுறிகள் குறித்தும், புற்றுநோய் விழிப்புணர்வின் முக்கியத்துவம் குறித்தும் தெரிந்துகொள்ளலாம்.

புற்றுநோய்களின் வகைகளும் அறிகுறிகளும்

நமது உடலானது எண்ணற்ற செல்களால் ஆனது. உடலில் சீரான முறையில் பழைய செல்கள் இறந்து புதிய செல்கள் உருவாகிக்கொண்டே இருக்கும். அதில் செல்களின் வளர்ச்சி மற்றும் இறப்பை கட்டுப்படுத்தும் மரபணுக்களில் மாற்றம் ஏற்படும்போது பழைய செல்கள் இறக்காமல் இருப்பது அல்லது அளவுக்கதிகமாக புதிய செல்கள் தோன்றுவது அல்லது இறந்த செல்கள் ஒரே இடத்தில் ஒன்று சேர்வது போன்ற காரணங்களால் கட்டி உருவாகிறது. இவை ஓரிடத்திலிருந்து உடலின் மற்றொரு இடத்திற்கு படிப்படியாக பரவுவதால் புற்றுநோய் கட்டிகள் எனப்படுகின்றன. புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் முழுமையாக குணப்படுத்திவிடலாம் என்கின்றனர் மருத்துவர்கள். ஆனால் நிறையப்பேருக்கு அறிகுறிகள் தென்பட்டாலும் புற்றுநோய் உறுதியாகிவிடுமோ என்ற பயத்திலேயே பரிசோதனைக்கு வர மறுப்பதாக மருத்துவர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. இப்படி தாமதமாக பரிசோதனை மேற்கொள்ளும்போது அதனை முழுமையாக குணப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளும் குறைவதாக சொல்கின்றனர்.


புற்றுநோயின் ஆரம்பகட்ட அறிகுறிகள்

புற்றுநோயில் பல வகைகள் இருக்கின்றன என்பது நம் அனைவருக்குமே நன்கு தெரியும். தலை, மார்பகம், தொண்டை, வாய், கழுத்து, கருப்பை வாய், நுரையீரல், இரைப்பை, குடல், கல்லீரல், கணையம், சிறுநீரகம், தோல் என பலவகை புற்றுநோய்கள் இருக்கின்றன. இவற்றில் மார்பகம் மற்றும் கருப்பைவாய் புற்றுநோய் பெண்களிடையே அதிகமாகவும், தொண்டை, வாய், நுரையீரல், சிறுநீரகம் மற்றும் வயிறு உள்ளுறுப்புகள் சம்பந்தப்பட்ட புற்றுநோய்கள் ஆண்களிடையே அதிகமாகவும் கண்டறியப்படுவதாக தரவுகள் கூறுகின்றன. உடலில் என்னவகை புற்றுநோய் ஏற்பட்டாலும் முதலில் விறுவிறுவென எடை குறைதல், குறிப்பிட்ட இடங்களில் திடீரென பெரும்பாலும் வலியில்லாத கட்டி அல்லது வீக்கம், ஏற்கனவே உடலிலிருக்கும் மச்சம் அல்லது மருவில் நீர் அல்லது சீழ் வடிதல், சாப்பிடுவதில் சிரமம், தூக்கமின்மை, இரவில் அதிகம் வியர்த்தல் போன்ற அறிகுறிகள் தென்படும். இவை மற்ற உடல்நல பிரச்சினைகளுடன் தொடர்பு பட்டிருப்பதாலேயே நிறையப்பேருக்கு இவையும் புற்றுநோய்க்கான அறிகுறிகள் என்று தெரிவதில்லை.

போதிய விழிப்புணர்வு உள்ளதா?

உலகளவில் புற்றுநோய் பாதிப்பு அதிகம் இருக்கும் நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. இதுபோன்ற வளர்ந்த நாடுகளைவிட இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு மிகவும் குறைவாகத்தான் இருந்தாலும், பரிசோதனை மற்றும் நோயை கண்டறிதலில் தாமதம் ஏற்படுவதால் இறப்பு விகிதம் இங்கு அதிகமாக காணப்படுகிறது. எனவே புற்றுநோய் பரிசோதனை குறித்த போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய மற்றும் அந்தந்த மாநில அரசுகளின் சார்பில் பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. உலகளவில் புகைபழக்கம் மற்றும் பிற போதைப் பொருட்களின் பயன்பாடு அதிகமாக இருந்தாலும், இந்தியாவை பொருத்தவரை ஆண், பெண் இருபாலரிடையேயும் புகையிலை பயன்படுத்தும் பழக்கம் காலங்காலமாக இருந்துவருகிறது. இதனால் 40% புகையிலை பயன்படுத்துபவர்களுக்கும், 20% உடலில் ஏற்படும் தொற்றுகளாலும், 10% பிற காரணிகளினாலும் இந்தியர்களிடையே புற்றுநோய் வருவதாக தரவுகள் கூறுகின்றன. அதிலும் 8 நிமிடத்திற்கு ஒரு பெண் கருப்பைவாய் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக தரவுகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. எனவேதான் மார்பகம் மற்றும் கருப்பைவாய் புற்றுநோய் பரிசோதனை செய்துகொள்ள பெண்களிடையே அதிகமாக விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படுகின்றன.


புற்றுநோய் அதிகரிப்பதற்கான காரணிகள் மற்றும் மருத்துவ பரிசோதனைகள்

எனவேதான் 30 வயதை தாண்டிய பெண்கள் குறிப்பிட்ட ஆண்டு இடைவெளியிலும், 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் வருடத்திற்கு குறைந்தது இருமுறை மேமோகிராம் பரிசோதனையும், மாதந்தோறும் சுய பரிசோதனையும் செய்துகொள்வது அவசியம் என்று வலியுறுத்தப்படுகிறது. இப்போது புற்றுநோய் உருவாவதில் உணவு பழக்கவழக்கங்களும் முக்கியப்பங்கு வகிக்கின்றன. இரவு நேரங்களில் தூங்காமல் இருப்பது மற்றும் நினைத்த நேரத்திலெல்லாம் உணவு சாப்பிடுவது போன்றவற்றால் உடலில் வளர்சிதை மாற்றத்தில் தாக்கம் ஏற்பட்டு அதுவே புற்றுநோய் செல்கள் உருவாக முக்கிய காரணமாக மாறிவிடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இப்படி தவறான பழக்கவழக்கங்களால் புற்றுநோய் வருவது ஒருபுறம் என்றால், மரபணுரீதியாகவும் புற்றுநோய் வர வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே வீட்டில் பெற்றோர் அல்லது ரத்த சம்பந்தப்பட்ட உறவுகளுக்கு புற்றுநோய் ஏற்பட்டிருந்தால் அடுத்த தலைமுறையும் பரிசோதனை செய்துகொள்வது மிகவும் அவசியம். எனவேதான் புற்றுநோய் குறித்தும், அதன் பரிசோதனை முறைகள் குறித்தும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக நவம்பர் 7ஆம் தேதியன்று அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. புற்றுநோயை தவிர்ப்பது எப்படி? புற்றுநோய்க்கான அறிகுறிகள் என்னென்ன? சுய பரிசோதனைமூலம் சிலவகை புற்றுநோய்களை எப்படி கண்டறிவது? முறையான உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கைமுறையை பின்பற்றுவதன் அவசியம் என்ன? புற்றுநோய் கண்டறியப்பட்டவர்களுக்கு இருக்கும் சிகிச்சைமுறைகள் மற்றும் மருத்துவக் காப்பீடுகள் போன்றவை குறித்து அந்த நிகழ்ச்சிகளில் தெளிவாக விளக்கப்படுகின்றன.

Updated On 11 Nov 2024 11:33 PM IST
ராணி

ராணி

Next Story