பராம்பரியம் மிக்க கம்பு பால் கொழுக்கட்டை! இப்படி செய்து பாருங்க...
நாம் நாள்தோறும் உண்ணும் நெல்லரிசியைக் காட்டிலும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்ததுதான் சிறுதானியங்கள். அப்படிப்பட்ட சிறுதானியங்களில் உடலுக்குத் தேவையான சத்துக்கள் அதிகமாக இருந்ததால், நம் முன்னோர்கள் அதனை அதிகமாக பயன்படுத்தினர். இதனால்தான் அவர்கள் நோயற்ற வாழ்வையும், மருத்துவ செலவுகளற்ற வாழ்க்கை முறையையும் பின்பற்றி வாழ்ந்தனர். ஆனால், இன்று அப்படியில்லை. மாறிவரும் உணவு பழக்கவழக்கங்களால் சிறுதானியங்களின் பயன்பாடு பெரும்பாலும் குறைந்து ஜங் ஃபுட் உணவுகளின் ஆதிக்கம் அதிகமாகிவிட்டது. இருப்பினும் குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடுகளால் மீண்டும் நம் முன்னோர்கள் பயன்படுத்திய சிறுதானிய உணவுகள் கொஞ்சம் கொஞ்சமாக பயன்பாட்டு நடைமுறைக்கு வர தொடங்கியுள்ளது. இதனை நம் குழந்தைகளும் விரும்பி உண்ணும் வகையில் பல வகையான சிறுதானிய பலகாரங்கள் செய்யப்படுகின்றன. அந்த வகையில், இந்த வாரம் சிறுதானியங்களில் ஒன்றான கம்பு மாவை வைத்து பால் கொழுக்கட்டை செய்வது எப்படி என்பதை சொல்லிக்கொடுக்கிறார் சமையல் கலைஞர் சீதாராமன்.
கம்பு பால் கொழுக்கட்டை செய்முறை
கம்பை எடுத்து கடாயில் போட்டு பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். நன்கு பொரிந்து பொறி மாதிரியான பதம் வரும் தருணத்தில் கடாயில் இருந்து இறக்கி விடவேண்டும்.
வறுத்தெடுத்த கம்பை சூடு குறைந்தவுடன் மிக்சியில் போட்டு மாவாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அந்த கம்பு மாவை இரண்டு பாகங்களாக பிரித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு கால் பகுதி மாவை தேங்காய் பால் பதத்திற்கு தண்ணீரில் கரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
கம்பை கடாயில் போட்டு பொன்னிறமாக வறுக்கும் காட்சி
இன்னொரு கால் பகுதி மாவை சிறிதளவு சுடுதண்ணீர் சேர்த்து கொழுக்கட்டை பதத்திற்கு பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிசைந்த மாவை நமக்கு விருப்பப்பட்ட தோற்றத்தில் உருட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
இப்பொழுது கடாயில் ஒரு பாத்திரத்தை வைத்து நாம் எடுத்திருக்கும் மாவு அளவுக்கு ஏற்றார்போன்று அதில் மூன்று லிட்டர் தண்ணீரை ஊற்றிக் கொள்ளவும்.
தண்ணீர் நன்கு சூடாகி முட்டை முட்டையாக வரும் நேரத்தில் கரைத்து வைத்திருக்கும் கம்பு மாவை அதில் ஊற்றி கைவிடாமல் நன்கு கிளறிவிட வேண்டும்.
சிறிய சிறிய துண்டுகளாக உருட்டி எடுக்கப்பட்ட கம்பு மாவு
அது கஞ்சி பதத்திற்கு வந்தவுடன் உருட்டி வைத்துள்ள கம்பை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக அதில் போட்டு ஒரு 10 நிமிடம் வேகவிடவும்.
கம்பு உருண்டைகள் வெந்து மேலே வந்த பிறகு கரைத்து வைக்கப்பட்டுள்ள நாட்டு சர்க்கரையை ஊற்றி கிளறவும். அதனுடன், அரைத்து திக்கான பதத்தில் எடுத்து வைக்கப்பட்டுள்ள தேங்காய் பாலையும் ஊற்றி, சிறிதளவு ஏலக்காயையும் தூவி இறக்கினால் பாரம்பரியம் மிக்க, சுவையான கம்பு பால் கொழுக்கட்டை தயார்.
இப்பொழுது குழந்தைகளுக்கு எடுத்து பரிமாறினால், கம்பு சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.
சுவையான கம்பு பால் கொழுக்கட்டை
கம்பு பயன்கள்
கம்பில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. குறிப்பாக, கம்பில் அதிகமான அளவில் புரதம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து என பல உயிர்ச்சத்துகள் உள்ளன. இதனை கூழாகவோ, சாதமாகவோ தினமும் உட்கொள்ளும்போது நம் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகள் குறையும். கம்பில் உள்ள ஆண்டி ஆக்ஸிடன்ட்டுகள் வயது முதிர்வின் அறிகுறிகளை தாமதப்படுத்துகின்றன. கம்பில் புரதச்சத்து அதிகம் இருப்பதால் தலைமுடி உதிர்வை கட்டுப்படுத்தும். மேலும் கம்பை தினமும் நம் உணவில் சேர்த்துக் கொள்ளும்பொழுது, அது உடல் சூட்டை குறைப்பதுடன், இரத்த சோகையும் குணமாக்கும். அதேபோன்று கம்பில் நார்ச்சத்தும் அதிகம் இருப்பதால், மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படாமல் தடுப்பதுடன், உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது.