கோமா நிலைக்கு சென்றவர்கள் கண்டிப்பாக கண்விழிப்பார்கள்! - நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்
எந்தவொரு உயிராக இருந்தாலும் அதன் முழு உடலையும் கட்டுப்படுத்தும் ஒரு உறுப்பு என்றால் அது மூளை. அப்படிப்பட்ட மூளையில் சிறு பிரச்சினை வந்தாலே ஒட்டுமொத்த வாழ்க்கையுமே சீர்குலைந்து போய்விடும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என்னென்ன மாதிரியான மூளை பிரச்சினைகள் வருகின்றன. அவற்றிற்கான காரணங்கள் என்னென்ன? அவற்றை எப்படி குணப்படுத்துவது என்பதை எடுத்துரைக்கிறார் ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் சதீஷ் குமார். மேலும் வாகனம் ஓட்டும் இளைஞர்கள் பலருக்கு விபத்து ஏற்பட்டு மூளைச்சாவு ஏற்படுவதால் ஹெல்மட் அணியவேண்டும் என்பதன் முக்கியத்துவம் குறித்தும் அறிவுறுத்துகிறார் அவர்.
உடல்நிலை சரியில்லாமல் இருந்து கோமா நிலைக்கு சென்றவர்களை காப்பாற்றி இருக்கிறீர்களா?
விபத்து ஏற்பட்டு வருவோருக்கு சுய நினைவு குறைவாக இருக்கும். அதாவது நன்றாக இருப்பவர்களுக்கு அளவுகோலின்படி சுய நினைவு 15 என்றால், அதுவே விபத்து ஏற்பட்டோருக்கு 5, 6 என இருக்கும். இவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்து நடக்க வைத்திருக்கிறோம். 4, 5 என நம்பர்களில் சொல்லும்போது அவர்கள் கோமா நிலையில் இருப்பார்கள். அவர்களுக்கு வலியை கொடுத்தால்கூட கண் திறக்கமாட்டார்கள். பேச மாட்டார்கள். பெரும்பாலும் வெண்டிலேட்டரில்தான் வைக்கப்பட்டிருப்பார்கள். ஏதாவது ஒரு கை மட்டும் அசையலாம். இதில் முக்கியம் என்னவென்றால் அடிபட்ட 4 மணிநேரத்துக்குள் அறுவை சிகிச்சை செய்தால், அவர்களை காப்பாற்றிவிட முடியும். அப்போது அவர்களிடம் நல்ல முன்னேற்றம் தெரியும்.
Dyslexia அல்லது ஆட்டிஸம் என்று சொல்லக்கூடிய கற்றல் குறைபாடு என்பது பிறவியிலேயே வரக்கூடியதா? இதை அறுவை சிகிச்சைமூலம் குணப்படுத்த முடியுமா?
ஆட்டிஸம் என்பது அறுவை சிகிச்சைமூலம் குணப்படுத்தக்கூடிய வியாதி கிடையாது. அது பிறவியிலேயே வரக்கூடியது. இதை வியாதி என்றுகூட சொல்லமுடியாது. சாதாரண குழந்தைகளைவிட அவர்களுக்கு ஸ்பெஷல் கேர் தேவைப்படும். கொஞ்சம் வளர்ந்தபிறகு தெரபி மற்றும் சில மருந்துகள் கொடுக்கலாம். இதை வியாதி என்று சொல்லாமல் வித்தியாசமான குழந்தைகளுக்கு வித்தியாசமான கற்றல் தேவைப்படும் என்று சொல்லலாம்.
கோமா நிலைக்கு சென்றவர்கள் சுய நினைவுக்கு திரும்ப சிகிச்சை
ALS, அல்சைமர், பார்க்கின்சன் என்று ஒருசில மூளை வியாதிகளை சொல்கிறார்கள். அப்படி என்றால் என்ன?
இந்த மூன்றுமே வேறுவேறு வியாதிகள். ஆமியோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்ளிரோசிஸ் (Amyotrophic Lateral Sclerosis) என்பதன் சுருக்கம்தான் ALS. இது முதுகுத்தண்டு மற்றும் மூளையை பாதிக்கக்கூடிய ஒருவிதமான தன்னுடல் எதிர்ப்பு வியாதி. இதனால் உடலானது கொஞ்சம் கொஞ்சமாக செயலிழந்துகொண்டே வரும். இதை ஸ்டீராய்டுகள்மூலம் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அல்சைமர் என்பது முதுமையில் ஏற்படக்கூடிய ஞாபக சக்தி குறைபாடு. இந்த பிரச்சினையால் பாதிக்கப்படுபவர்களுக்கு நீண்டகாலமாக தெரியக்கூடியவை நன்றாக ஞாபகம் இருக்கும். ஆனால் அரை மணிநேரத்திற்கு முன்பாக சாப்பிட்டதை மறந்துவிடுவார்கள். இதை அல்சைமர் வியாதி என்கின்றனர். ஞாபக சக்தி குறைபாடு எல்லாருக்குமே வரும். இது வியாதி கிடையாது. ஒருவர் மறந்துபோவதே தெரியாமல் இருந்தால்தான் அது வியாதி. பார்க்கின்சன் வியாதி என்பது கை, கால் நடுக்கம் தரக்கூடியது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வரும். மூளையில் சுரக்கிற டோபமைன் என்ற ஹார்மோன் வயதாகும்போது குறைய ஆரம்பிக்கும். இதற்கு டோபமைன் மாத்திரைகள் கொடுத்து முன்னேற்றத்தை கொண்டுவரமுடியும். சிலருக்கு Deep brain stimulation என்ற அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். இதன்மூலம் சிகிச்சை மேற்கொண்ட உடனேயே நடுக்கம் சரியாகிவிடும்.
சாதாரணமாக இருக்கக்கூடிய ஒரு நபருக்கு டோபமைன் என்ற ரசாயன சுரப்பு அதிகரிக்க என்ன செய்யவேண்டும்?
நம் உடலில் இருக்கும் எல்லாமே கெமிக்கல்தான். அதில் டோபமைன் மற்றும் செரட்டோனின் என்பவை நரம்பியல் கடத்திகள். ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியாக பேசும்போதே டோபமைன் சுரக்கும். சந்தோஷமான செயல்கள் செய்துகொண்டிருந்தாலே இந்த கெமிக்கல் நன்றாக சுரக்கும். வாழ்க்கையும் நன்றாக இருக்கும்.
தூக்கமின்மை பிரச்சினைக்கும் மூளைக்கும் இடையேயான தொடர்பு
நிறையப்பேருக்கு தூக்கமின்மை பிரச்சினை இருக்கிறது. அதற்கும் மூளைக்கும் என்ன தொடர்பு?
சாதாரணமாக இருக்கக்கூடிய எல்லாருக்குமே இந்த பிரச்சினை இருக்கிறது. தூக்கத்தில் நிறைய நிலைகள் இருக்கின்றன. அதில் ஆழ்ந்த உறக்கம் என்பதில் எப்போதாவது கண்கள் உள்ளே அசையும். அப்படி போக முடியவில்லை என்றால் தூக்கமின்மை பிரச்சினை இருக்கும். தூக்கமின்மையில் சில வகைகள் இருக்கின்றன. சிலருக்கு படுத்தவுடன் தூக்கம் வராமல் சில மணிநேரங்கள் கழித்துதான் தூக்கம் வரும். இரண்டாவது அடிக்கடி விழிப்பு வந்துவிடும். மூன்றாவது சிலரால் ஆழ்ந்த தூக்கத்திற்கு போகமுடியாது. இவை அனைத்துமே தூக்கமின்மைதான். எனவே தூக்கம் என்பது மிகவும் அவசியம். மூளையில் ஏற்படும் காயங்கள், மூளையில் சேர்ந்திருக்கும் அழுக்கு போன்றவை தூங்கும்போதுதான் சரியாகும். தூக்கம் இல்லையென்றால் அடுத்து எந்த வேலையும் செய்யமுடியாது.
மூளையிலும் அழுக்கு சேருமா?
உடலில் எல்லா இடங்களிலுமே அழுக்குகள் வரும். அதுபோல மூளையிலும் வரும். அதை நீக்கவே மூளையில் சில செல்கள் இருக்கின்றன. அந்த செல்கள் வேலைசெய்து அழுக்கை எடுக்க தேவையான நேரம்தான் தூக்கம். அது சர்க்காடியன் சுழற்சியின்படியும் இருக்கவேண்டும். அப்படி தூங்காவிட்டாலும் மன அழுத்தம், பிபி போன்றவை வந்துவிடும். அது மட்டுமல்லாமல் குறட்டை விடுதலும் ஒருவித பிரச்சினைதான். இதை sleep apnea syndrome என்கின்றனர். குறட்டை விடுபவர்களால் ஆழ்ந்த தூக்கத்திற்கு போகவே முடியாது. ஏனென்றால் அவர்களுக்கு தூக்கம் அதிகமாகிக்கொண்டே போகும்போது குறட்டையால் ஒரு கட்டத்தில் மூச்சு சில விநாடிகள் நின்றுவிடும். பிறகு மீண்டும் மூச்சு வரும். அப்படி ஆகும்போது மூளை விழித்துவிடும். இதுவும் இன்சோம்னியாவிற்கான காரணிதான்.
இயற்கையான நல்ல தூக்கத்திற்கு என்ன செய்ய வேண்டும்?
நல்ல தூக்கத்திற்கு முதலில் பயிற்சி தேவை. சரியான நேரத்திற்கு முதலில் படுக்கவேண்டும். அடுத்து காபி, டீ போன்றவற்றை மாலைநேரத்திற்கு மேல் எடுத்துக்கொள்ளக்கூடாது. மூன்றாவது ப்ளூ ஸ்க்ரீன் என்று சொல்லக்கூடிய டிவி, செல்போன், லேப்டாப் போன்றவற்றை தூங்கச் செல்வதற்கு 2, 3 மணிநேரத்திற்கு முன்பே நிறுத்திவிட வேண்டும். பெட் ரூமில் ப்ளூ ஸ்க்ரீன் என்பதே இருக்கக்கூடாது. அடுத்து உடற்பயிற்சி மிகவும் அவசியம். பகல்நேரத்தில் நன்றாக உடற்பயிற்சி செய்தாலே இரவு படுத்தவுடன் தூக்கம் வந்துவிடும். இதுபோக, உடல்நல பிரச்சினைகள் இருந்தால் அதை மருந்து மாத்திரைகள்மூலம் சரிசெய்துகொள்ள வேண்டும்.
மூளைக்காய்ச்சல் வருவதற்கான காரணிகள்
உடலை கவனிக்க உணவுகள் இருப்பதுபோன்று மூளை சிறப்பாக செயல்பட உணவுகள் இருக்கிறதா?
அப்படி எதுவும் இல்லை. மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை நன்றாக வைத்துக்கொள்ள வேண்டும். அந்த ரத்தக்குழாய்கள் சீராக இருக்கவேண்டும். அதற்கு கொழுப்பு பொருட்களை குறைத்துக்கொள்ள வேண்டும். பிபி, சுகர் இருந்தால் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். நன்றாக தூங்கவேண்டும். உடற்பயிற்சி செய்யவேண்டும். சத்தான உணவை சாப்பிடவேண்டும்.
மூளைக்காய்ச்சல் எதனால் வருகிறது?
மூளைதான் உடல் முழுவதையும் கட்டுப்படுத்துகிறது. எனவே மூளைக்காய்ச்சல் வந்தால் கோமா நிலைக்கு செல்லும் வாய்ப்பு இருக்கிறது. மூளையில் கிருமிகள் தாக்கத்தை ஏற்படுத்தி காய்ச்சலை உண்டாக்குவதுதான் மூளைக்காய்ச்சல் என்று சொல்லப்படுகிறது. பிறக்கும்போதே கர்ப்பப்பைவாயிலிருந்து தொற்று ஏற்பட்டு பிறந்த குழந்தைக்குக்கூட இது வரலாம். ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொரு கிருமி தாக்குவதால் வரும். பெரியவர்களுக்கு பெரும்பாலும் நோயெதிர்ப்பு சக்தி குறைவதால் மூளைக்காய்ச்சல் வரும். நோயெதிர்ப்பு வியாதிகள் என்று சொல்லக்கூடிய ஹெச்.ஐ.வி எயிட்ஸ் இருப்போருக்கு மூளைக்காய்ச்சல் வரும் வாய்ப்புகள் மிகவும் அதிகமாகவே இருக்கிறது. சாதாரண மலேரியாகூட மூளைக்காய்ச்சல் வர வழிவகுக்கும். இந்த காய்ச்சல் வந்தால் தலையை தூக்கமுடியாது. கழுத்து இறுகிவிடும். உடனே முதுகிலிருந்து மூளையின் நீரை எடுத்து என்ன கிருமி என்று பரிசோதித்து, அதற்கேற்றாற்போல் மருந்துகள் கொடுக்கப்பட்டு சரிசெய்யப்படும்.
என்னென்ன செய்தால் மூளையை நன்றாக பார்த்துக்கொள்ள முடியும்?
தினசரி ஏற்படும் விபத்துகளால்தான் நிறையப்பேருக்கு மூளை பாதிப்புகள் ஏற்படுகின்றன. போலீசாருக்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ ஹெல்மட் போடக்கூடாது. நமக்காக போடவேண்டும். வண்டியை ஆன் செய்யும்போதே ஹெல்மட் போடவேண்டும் என்ற பழக்கத்தை பெற்றோரே கற்றுத்தர வேண்டும். இதன்மூலம் நிறைய மோசமான விபத்துகளை தடுக்கலாம்.
