30 வயதானாலே ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை அவசியம்! என்னென்ன பரிசோதனை முக்கியம்?
நோய் என்பது யாருக்கு வேண்டுமானாலும் எந்த வயதிலும் வரலாம். மோசமான உணவு பழக்கவழக்கங்கள், வாழ்க்கைமுறையில் ஏற்படுத்தப்படும் திடீர் மாற்றங்கள், போதைப்பொருட்களின் பயன்பாடு போன்றவை உள்ளுறுப்புகளின் ஆயுட்காலத்தை குறைப்பது மட்டுமன்றி, அனைத்து உறுப்புகளிலுமே பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் எந்த கெட்ட பழக்கங்களும் இல்லாமல் இருப்பவர்களுக்கும்கூட திடீரென உடல்நல பிரச்சினைகள் ஏற்படுவதை நாம் பார்க்கிறோம். அதற்கு வெளிப்புற காரணங்களும், மரபணு பிரச்சினைகளும் முக்கிய காரணிகளாக பார்க்கப்படுகின்றன. அதுபோக, அவ்வப்போது வரக்கூடிய நோய்த்தொற்றுகளும் நாள்பட்ட வியாதிகளுக்கு காரணமாகின்றன. சில சமயங்களில் அவற்றுக்கு அளிக்கக்கூடிய சிகிச்சைகளாலும் உள்ளுறுப்புகள் பாதிக்கப்படுகின்றன. உதாரணத்திற்கு, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வருவதாக பல்வேறு அறிக்கைகளில் சொல்லப்பட்டாலும், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்திய வீரியமிக்க மருந்துகளால்தான் பாதிப்பு ஏற்படுவதாகவும், மேலும் அதற்கு செலுத்தப்பட்ட தடுப்பூசிகளும் முக்கிய காரணம் என்றும் சொல்லப்படுகிறது.
இப்படி நோய் வந்தாலும் பாதிப்பு, அதற்கு சிகிச்சை அளித்தாலும் பக்கவிளைவாக மற்றொரு பாதிப்பு என்பதாலேயே பெரிய வியாதிகள் வந்தாலும் சிகிச்சை எடுக்க பலர் பயப்படுகின்றனர். கடந்த சில வாரங்களாக கொரோனாவை போன்றே HMPV என்ற வைரஸ் தொற்று சீனாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு பரவுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பதட்டத்தை ஏற்படுத்தின. குறிப்பாக, இந்த வைரஸால் சிறுநீரகம் பாதிக்கப்படுவதாக வெளியான செய்தி பலரையும் பயத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் இந்த வைரஸ் மிகவும் சாதாரணமானதுதான் என்றும், இதனால் சளி, இருமல், தும்மல் போன்ற அடிப்படை பிரச்சினைகள்தான் வருமே தவிர, கொரோனாவை போன்று தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் விளக்கமளித்தனர் மருத்துவர்கள். இந்த வைரஸ் இப்போது உருவானதல்ல என்றும், இது ஆண்டாண்டு காலமாக இருப்பதால் இதன் அறிகுறிகளுக்கு சிகிச்சை எடுத்தாலே வைரஸ் தொற்று தானாக குறையும் என்றும் கூறினர். இந்நிலையில் HMPV தொற்று குறித்தும், அதன் அறிகுறிகள் குறித்தும், அதற்கான சிகிச்சைமுறைகள் குறித்தும் விளக்கமளித்த பொதுநல மருத்துவர் சூலைமான், தொடர்ந்து உடலில் நமக்கு வரக்கூடிய பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிய என்னென்ன பரிசோதனைகளை எந்தெந்த வயதில் மேற்கொள்ள வேண்டுமெனவும், பிரச்சினைகளை கண்டறிந்து அவற்றுக்கான சிகிச்சைகள் எடுப்பதன் முக்கியத்துவம் குறித்தும் நம்முடன் உரையாடுகிறார்...
எந்தெந்த வயதில் ரத்தம் மற்றும் கண் போன்றவற்றை பரிசோதிக்க வேண்டும்? வயதுக்கு ஏற்றாற்போல் என்னென்ன பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்?
குழந்தைகளுக்கு முறையாக தடுப்பூசி செலுத்தினாலே போதுமானது. மற்றபடி உடலில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதுகுறித்து பரிசோதிக்கவேண்டும். பெரியவர்களை பொருத்தவரை முன்பெல்லாம் 40 வயதுக்கு மேல் annual check-up செய்துகொள்ள அறிவுறுத்தப்படும். ஆனால் இப்போது 30 வயதிலேயே இந்த பரிசோதனையை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. ஏனென்றால் தொற்றுவியாதிகளைவிட நீரிழிவின் தாக்கம் இந்தியாவில் மிகவும் அதிகம். நிறைய சிறுவர்களுக்குக்கூட நீரிழிவு வர ஆரம்பித்திருக்கிறது. இதற்கு நம்முடைய வாழ்க்கைமுறை, உணவுப்பழக்கங்கள் காரணமாக இருக்கின்றன.
இதய பிரச்சினை வருவதற்கு முக்கிய காரணங்கள்
அதாவது நிறைய ஃபாஸ்ட் புட்ஸ் எடுத்துக்கொள்வது போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளால் வருவதுதான். எனவே 30 வயதை தொட்டவுடனே விரிவான முழு உடல் மருத்துவ பரிசோதனை செய்துகொள்வது நல்லது. ஏனென்றால் உணவு பழக்கவழக்க மாற்றங்களாலும், நீரிழிவு இளம்வயதிலேயே வருவதாலும் சீக்கிரத்திலேயே இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளும் வர ஆரம்பித்துவிடுகின்றன. ஏனென்றால் முன்பெல்லாம் 40 - 45 வயதுக்கு மேல்தான் ஹார்ட் அட்டாக் வரும். ஆனால் இப்போது 30 வயதுக்குள் இருப்பவர்களுக்கே வருகிறது. அதற்கு புகைப்பிடித்தல், மது அருந்துதல் மற்றும் சாப்பிடும் உணவுகள் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. எனவே 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் முழு உடல் பரிசோதனை செய்தே ஆகவேண்டும்.
கண் பரிசோதனை எந்தெந்த வயதில் செய்யவேண்டும்?
பொதுவாக குழந்தைகளுக்கே கண் பரிசோதனை செய்யவேண்டும். குறிப்பாக, பள்ளியில் படிக்கும் குழந்தைகள் போர்டு தெரியாமல் அருகில் சென்று பார்த்தால் அவர்களுக்கு கண் பரிசோதனை செய்வது அவசியம். பெரியவர்களுக்கு தலைவலி, தூரத்தில் இருப்பது தெரியாமல் இருத்தல் போன்ற அறிகுறிகள் மூலமே கண் பரிசோதனை செய்யவேண்டுமென நமக்கே தெரிந்துவிடும்.
போர்டு தெரியாத குழந்தைகளுக்கு கண் பரிசோதனை செய்தல் அவசியம்
இதுவரை நீங்கள் அளித்த சிகிச்சையில் சிக்கலானதை சவாலாக்கி முடித்தது உண்டா?
கொரோனாவின்போது எல்லா மருத்துவமனைகளிலும் படுக்கைகளுக்கு தட்டுப்பாடுகள் ஏற்பட்டன. அப்போது ஒரு 35 வயது நபருக்கு எங்குமே படுக்கை கிடைக்கவில்லை. ஆனால் அவருக்கு 100% நுரையீரல் பாதிக்கப்பட்டிருந்தது. அவர் எங்களிடம் வந்தபோது பெரிய மருத்துவமனைக்கு போக அறிவுறுத்தினோம். ஆனால் எங்கும் படுக்கை கிடைக்கவில்லை என்று சொன்னார். அவரை அட்மிட் செய்து சிகிச்சை அளித்தோம். தீவிர சிகிச்சையின் பலனாக 3 நாட்களில் அவரிடம் முன்னேற்றம் காணப்பட்டது. அதன்பிறகு சிறிது நாட்களில் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினார். அதேசமயத்தில் 20% பாதிப்புடன் வந்து படிப்படியாக மோசமாகி உயிரிழந்த நோயாளிகளையும் பார்த்திருக்கிறோம்.
மருத்துவத்துறையில் நீங்கள் சாதித்தவை குறித்து கூறுங்கள்!
நானும் என்னுடைய டீமைச் சேர்ந்த தலைமை மருத்துவர்களும் ஒன்று சேர்ந்து டாக்சிக்காலஜி என்ற புத்தகத்தை எழுதி பப்ளிஷ் செய்தோம். ஏனென்றால் விஷம் சாப்பிட்டு வருபவர்கள், உணவே பாய்ஸனாகி பாதிக்கப்பட்டு வருபவர்கள் போன்றோருக்கு சிகிச்சை அளிப்பது குறித்து படிக்க இதுவரை தனியாக புத்தகங்கள் கிடையாது. அனுபவம் மூலமாகவோ, தடயவியல் மருத்துவப்படிப்பிலோதான் அதுகுறித்த பாடங்கள் இருக்கும். அதன்மூலமேதான் சிகிச்சை அளித்து வந்தோம். எனவே டாக்சிக்காலஜிக்கு என்றே பிரத்யேகமாக புத்தகம் எழுதியதையே பெரிய சாதனையாக பார்க்கிறோம்.