குழந்தைகளின் பால் பற்கள் நிறம் மாறினால் கவனம் தேவை - எச்சரிக்கும் மருத்துவர் ஐஸ்வர்யா அருண்குமார்
“அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” இந்த பழமொழியை நிறைய விஷயங்களோடு பலரும் பொருத்தி சொல்வது வழக்கம். அப்படிப்பட்ட அந்த முக அழகில் முக்கியமான பங்கு வகிப்பது பற்கள். ஏனென்றால், நாம் சிரிக்கும் போது நம் முகத்தை மிக அழகாகவும், பிரகாசமாகவும் காண்பிப்பது அந்த பற்கள்தான். அப்படிப்பட்ட அந்த பற்களை பராமரிப்பது என்பது மிகவும் அவசியமான ஒன்று. ஆனால், அந்த முறையான பராமரிப்புக்களை 100-ல் 2 பேர் கூட சரியாக செய்வது இல்லை என்கின்றனர் பல் மருத்துவர்கள். அதனால்தான் பல் சொத்தை, ஈறுகளில் தொற்று போன்ற பல பிரச்சினைகள் நமக்கு ஏற்படுகின்றன. இப்படியான நிலையில், வரும் முன் காப்போம் என்பதுபோல் பல் பிரச்சினைகள் வராமல் எப்படி தடுப்பது? பற்களை எப்படி பராமரிப்பது? குழந்தைகளின் பற்களை எப்படி பாதுகாப்பது? போன்ற பல் சம்மந்தமான பல கேள்விகளுக்கு பதில் அளித்து பேசியிருக்கிறார் பிரபல பல் மருத்துவர் திருமதி.ஐஸ்வர்யா அருண்குமார். அந்த நேர்காணலின் ஒரு பகுதியை இந்த கட்டுரையில் காணலாம்.
பல் பராமரிப்பு எந்த அளவுக்கு மிகவும் முக்கியமானது? ஒரு மருத்துவராக நீங்கள் கொடுக்கும் அட்வைஸ் என்னவாக இருக்கும்?
காலையில் எழுந்தவுடன் பல் துலக்குவது என்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஆனால், இன்று பெரும்பாலானவர்கள் தூங்கி எழுந்தவுடன் முதலில் கையில் எடுப்பது மொபைலைத்தான். ‘ஆலும் வேலும் பல்லுக்குறுதி’ என்ற ஒரு பழமொழி உண்டு. பிரஷ் என்ற ஒன்று கண்டுபிடிக்கப்படாத அந்த காலத்தில் இரண்டு மரக்குச்சிகளையும் கொண்டு பல் துலக்கினால் பல் உறுதியாகும் என்பது நமது முன்னோர்களின் எண்ணமாக இருந்தது. ஆனால், இன்று அப்படி இல்லை. எல்லாவற்றிற்கும் ஒரு கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது போல் பல் துலக்குவதற்கும் புதிய புதிய பரிமாணங்களில் பிரஷ்கள் சந்தைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. அவை நம் பல்துலக்கும் வேலையை எளிதாக்கி விட்டன. இதனால் ஒருநாளைக்கு இரண்டு முறை பல் துலக்கலாம். ஆனால், நிறைய பேர் செய்யும் தவறு பிரஷ்ஷில் அதிகமாக பேஸ்ட் வைத்து துலக்குவதுதான். அதிலும் குழந்தைகளுக்கு பல் துலக்கி விடும்பொழுது அவர்கள் துப்ப தெரியாமல் பேஸ்டை அப்படியே முழுங்கிவிடுவார்கள். அதற்குத்தான் பட்டாணி சைஸ் அளவு பேஸ்ட் வைத்து அவர்களுக்கு துலக்கினாலே போதுமானது. ஒரு சிறிய குழந்தைக்கு ஆறு மாதத்தில் பல் முளைக்க தொடங்கும். அப்போதிலிருந்தே அந்த குழந்தைக்கு பல்லை கிளீன் செய்துவிடுவது நல்லது. பற்களே இல்லாமல் பல்செட் வைத்திருக்கும் முதியவர் கூட இரண்டு வேலையும் குறிப்பாக இரவு தூங்க போவதற்கு முன் அந்த பல் செட்டை கழற்றி கிளீன் செய்து வைத்துவிட்டு தூங்குவது நல்லது.
குழந்தைகளுக்கு ஆறு மாதத்தில் பல் முளைக்க துவங்கும்போதே பல்லை கிளீன் செய்துவிடுவது நல்லது - மருத்துவர்
பல் துலக்குவதற்கு என்றே சில வழிமுறைகள் இருக்கின்றன. பொதுவாக பல் துலக்கும் பொழுது உள்ளே வெளியே, உள்ளே வெளியே என்றுதான் தேய்ப்போம். ஆனால், அப்படி செய்வது தவறு. குழந்தைகளுக்கு பல் துலக்க சொல்லி கொடுக்கும் பொழுது பெயிண்ட் செய்வது போன்ற முறையில் வட்டம் போட்டு தேய்க்க சொல்லி கொடுக்க வேண்டும். அப்போதுதான் உள்பக்கம், வெளிப்பக்கம் என்று எல்லா பக்கங்களிலும் கிளீன் ஆகும். இது குழந்தைகளுக்கான முறை. பெரியவர்களுக்கு என்று எடுத்துக்கொண்டால் மேல் பற்களை மேல் இருந்து கீழ் வாக்கிலேயும்; கீழ் பற்களை கீழே இருந்து மேல் வாக்கிலேயும் தேய்ப்பது நல்லது. அதேமாதிரி பல் தேய்க்க வேண்டும் என்பதற்காக அரைமணிநேரம் தேய்க்கக்கூடாது. வெறும் 2 நிமிடத்தில் துலக்கி முடிக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு ஒரு பல் வரும்போதே பல்துலக்க ஆரம்பிக்க வேண்டும் என்று கூறினீர்கள். ஆனால், பெற்றோர்கள் பெரிதாக கவனம் செலுத்த மாட்டார்கள். இதனால் கீழ்வரிசை பற்களில் சிலநேரம் மொத்தமாக சொத்தை ஏற்பட்டுவிடும். அப்படிப்பட்டவர்கள் தங்கள் பற்களுக்கு எப்படியான கவனிப்பை கொடுக்க வேண்டும்?
இயற்கை ஒரு விஷயத்தில் இரண்டு முறை கொடுக்கும் வாய்ப்பு என்றால் அது பற்களுக்கு மட்டும்தான். நமது உடம்பில் வேறு எதற்கும் அப்படியொரு வாய்ப்பு கிடையாது. அப்படிப்பட்ட அந்த பற்கள் ஆறு மாதத்தில் பால் பற்களாக முளைக்க ஆரம்பித்து ஆறு வயதில் விழுந்து முளைக்கும். இதற்கு இடையில் குழந்தைகளுக்கு பல் தொடர்பாக நிறைய பிரச்சினைகள் வரும். அதற்கு முக்கிய காரணம் இரவில் குழந்தையை தூங்க வைக்கும் முன் அம்மாக்கள் ஒரு பாட்டிலில் இரண்டு ஸ்பூன் சர்க்கரை கலந்து பால் கொடுப்பார்கள். அதில் ஒரு சில தாய்மார்கள் அந்த பால் பாட்டிலோடு சேர்த்து தூங்க வைத்துவிடுவார்கள். அப்படி செய்யும் பொழுது ஒருவித ரசாயன சேர்க்கை மாதிரியான நிகழ்வு நடைபெற்று அந்த பால் மற்றும் சர்க்கரையில் இருக்கும் டெபாசிட்ஸ் பற்களில் படியத்தொடங்கும். இந்த நிகழ்வு தொடர்ந்து நடைபெறும்போது முளைத்த 20 பால் பற்களில் 16, 17 பற்கள் சொத்தையாகி விடுகின்றன. இதனை நாம் ஆரம்பத்திலேயே சரி செய்யவில்லையென்றால் விழுந்து முளைக்க தயாராகும் பற்களுக்கும் அது அப்படியே பரவும் சூழ்நிலை ஏற்படும். இது பால் குடிக்கும் குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரிய குழந்தைகளுக்கும் வரும். அது எப்படியென்றால் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடும் குழந்தைகள் மிகமிக குறைவாகிவிட்டார்கள். இப்போது பீட்சா, பர்கர், பிஸ்கட், சாக்லேட், கேக் இப்படியானவற்றை சாப்பிடும் குழந்தைகள் அதிகமாகிவிட்டார்கள். இப்படியான உணவுமுறை மாற்றங்களாலும் பல் சொத்தை வருகிறது.
இரவில் இனிப்பாக பாலை குடித்துவிட்டு அப்படியே தூங்குவதால் ஏற்படும் பல்சொத்தை
ஒரு 20 வருடத்திற்கு முன்பெல்லாம் குழந்தைகளுக்கு பல்சொத்தை வருவது என்பது குறைவாக இருந்தது. பள்ளிக்கூடங்களில் ஒரு வகுப்பில் இருக்கும் மாணவர்களை மொத்தமாக கணக்கில் எடுத்துக்கொண்டாலே அதில் ஒன்று அல்லது இரண்டு மாணவ குழந்தைகளுக்குத்தான் பல் சொத்தை என்பது இருந்தது, ஆனால் இன்று அப்படியில்லை; 10 குழந்தைகளில் மூன்று பேருக்கு பல் சொத்தை இருக்கிறது. அதற்கு காரணம் மாறிப்போன உணவு முறைகள். ஆரோக்கியமான உணவுமுறைகளை தவிர்த்து அதிகமான ஜங்ஃபுட்களை சாப்பிடுவது; ஒழுங்காக தண்ணீர் குடிக்காதது போன்றவைகளும் காரணம். குறிப்பாக, பீட்சா போன்ற அதிக கெமிக்கல் கலந்த உணவுகளை சாப்பிட்டுவிட்டு பல் தேய்க்காமல் படுப்பதும் சொத்தை ஏற்படுவதற்கான வழியாக உள்ளது. பற்களில் ஆரஞ்சு நிற கரை படியும்போதே கண்டறிந்து சரி செய்துவிட்டால் குழந்தைக்கும் அதுகுறித்த ஒரு விழுப்புணர்வு ஏற்பட்டுவிடும். இல்லையென்றால் அந்த ஆரஞ்சு கறை பின்னர் கருப்பாக சொத்தையாக மாறி, இறுதியாக பெரிய சொத்தையாக மாறிவிடும். மக்கள் எப்போதும் பல் மருத்துவத்திற்கு வந்துவிட்டு ரொம்ப செலவு ஆவதாக கூறுவார்கள். ஆனால், ஆரம்பத்திலேயே விழுப்புணர்வோடு செயல்பட்டு பல்சொத்தையை சரி செய்துவிட்டால் அதற்கு ஆகும் செலவு குறைவுதான். மொத்த பற்களும் சொத்தையாகி பற்களே இல்லாமல் கரைந்த பிறகு வந்தால் ஒன்றும் செய்ய முடியாது. அப்படி வரக் கூடிய குழந்தைகளும் இருக்கிறார்கள்.
முழு பற்களும் சொத்தையாகி வரும் குழந்தைகளுக்கு ஒரு மருத்துவராக நீங்கள் கொடுக்கும் அட்வைஸ் என்னவாக இருக்கும்?
அப்படி வரும் குழந்தைகளுக்கு அவர்களின் வயது வித்தியாசம் அறிந்துதான் சிகிச்சை அளிப்போம். தேவைப்பட்டால் ரெகுலராக பில் செய்து அந்த பல்லை அடைக்க முடியும் என்றால் அடைத்துவிடுவோம். இல்லையென்றால் பெரியவர்களுக்கு 'ரூட் கனால்' சிகிச்சை இருப்பது போன்று குழந்தைகளுக்கு என்றும் 'ரூட் கனால்' சிகிச்சை இருக்கிறது. அந்த முறையை பின்பற்றி அவர்களுக்கான சிகிச்சையை வழங்குவோம். எல்லாமே சரி பண்ணக்கூடிய விஷயங்கள்தான்.
பற்களை சரியாக பராமரிக்காததால் அனைத்து பற்களும் சொத்தையாகி பாதிக்கப்படும் குழந்தைகள்
சிறு வயதிலேயே பல் கட்டுவது.. எனாமல் போய்விட்டது.. பல் நுணுங்கி கொட்டுகிறது இப்படி பல பிரச்சினைகளோடு வருபவர்களுக்கு நீங்கள் கொடுக்கக்கூடிய அட்வைஸ் என்னவாக இருக்கும்?
பால் பற்கள் வெள்ளை நிறத்தில்தான் இருக்கும். ஆனால், அந்த பால் பற்களில் நாம் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன. பால் பற்கள் மொத்தமாக வெள்ளையாக இல்லாமல் கொஞ்சம் மஞ்சள் நிறத்தில் இருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் ஆங்காங்கு வெள்ளை பேட்ச் மாதிரி இருக்கும். அதற்கு அந்தந்த ஏரியா தண்ணீரும் ஒரு காரணமாக சொல்லப்படும். அதனை புளூரோசிஸ் என்றும் சொல்வார்கள். அதன் காரணமாக நம் பற்களில் இருக்கும் எனாமல் கொஞ்சம் வீக்காக இருக்கும். அந்த மாதிரியாக இருக்கும் குழந்தைகளுக்கு பல் சொத்தை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. அதனால், அந்த மாதிரியான குழந்தைகளுக்கு பல் சொத்தை வராமல் இருக்க ஆறு மாதத்திற்கு ஒருமுறை அதற்கான வழிமுறைகளை தெரிந்து பின்பற்றுவது நல்லது.
ஞானப்பல் சிரமத்தை ஏற்படுத்தும் பட்சத்தில் எடுத்துவிடுவதுதான் சிறந்தது - மருத்துவர்
30 வயதை கடந்த ஒரு சிலருக்கு ஞானப்பால் என்பது முளைக்கும். அதனால் என்ன மாதிரியான பிரச்சினைகள் வரும்? அதற்கு நீங்கள் என்ன மாதிரியான சிகிச்சைகளை மேற்கொள்ளுகிறீர்கள்?
ஞானப்பல் என்பது 18 வயதிலேயே வெளியே வர ஆரம்பிக்கும். அது எல்லோருக்குமே வெளியில் வருவது கிடையாது. நான்கு பக்கமும் ஞானப்பல் வெளியில் வந்துவிட்டது என்றால் பிரச்சினைகள் ஏதும் இல்லை. ஆனால், ஒருசிலருக்கு எலும்புக்குள் மாட்டியது போல் சரியாக வெளியில் வராமல் இருக்கும். அப்படி வெளியில் வர முடியாமல் சிரமத்தை ஏற்படுத்தும் பட்சத்தில் அது அருகில் இருக்கும் பல்லை இடித்து சொத்தையை உண்டாக்கும். அதற்கு ஒரேவழி அந்த பல்லை எடுத்துவிடுவதுதான்.