இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

கொங்கு நாட்டிற்கு என்று சில பிரத்யேகமான, ஆரோக்கியமான உணவு வகைகள் உண்டு. அதில் மிக முக்கியமாக இருப்பது கம்பு. வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த இந்த கம்பை கொண்டு பல்வேறு வகையான உணவு வகைகள் செய்யப்படுகின்றன. அதிலும், அரிசியில் இருப்பதை விட 8 மடங்கு இரும்புச்சத்து அதிகம் உள்ள கம்பை கூழாக செய்து மோருடன் கலந்து சாப்பிட்டால் உடலுக்கு அவ்வளவு குளிர்ச்சி கிடைக்கும். அந்த வகையில் நம் முன்னோர்களின் ஆரோக்கிய உணவுகளில் முதலிடம் பிடிக்கக் கூடிய கம்பு மாவை வைத்து, கம்பு சிமிலி உருண்டை செய்வது எப்படி என்பதை செய்து காட்டுகிறார்கள் சமையல் கலைஞர்கள் கலாவதி மற்றும் கௌரி.

கம்பு சிமிலி


கம்பு சிமிலி செய்முறை

கம்பை பொன்னிறமாக வறுத்து சூடு ஆறியதும் மிக்ஸியில் போட்டு மாவாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

அதேபோன்று வேர்க்கடலை மற்றும் எள்ளையும் வறுத்து மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும்.

அரைத்து வைக்கப்பட்டுள்ள கம்பு மாவில், ஒரு சிட்டிகை உப்பை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அடை மாவு பதத்திற்கு பிசைந்து எடுத்து கொள்ளவும்.

இப்போது அடுப்பில் தோசைக்கல்லை வைத்து கல் சூடானதும் இரண்டு ஸ்பூன் அளவு என்னை ஊற்றி அதில், பிசைந்து வைக்கப்பட்டுள்ள கம்பு மாவில் இருந்து ஒரு உருண்டை அளவு எடுத்து அடை போன்று தட்டி போடவும்.


கம்பு மாவை அடை போன்று தட்டி வேகவைத்தல்

இரண்டு பக்கமும் திருப்பி போட்டு பொன்னிறமாக நன்கு வெந்ததும் எடுத்து ஆற வைத்து அதனை தூளாக எடுத்துக்கொள்ளவும்.

வேகவைத்து தூளாக்கப்பட்டுள்ள கம்புடன், பொடி செய்து வைக்கப்பட்டுள்ள வேர்க்கடலை, எள்ளு மற்றும் நாட்டு சர்க்கரையை கலந்து உருண்டை பிடிக்கும் பதத்திற்கு நன்கு கிளறிக் கொள்ளவும்.

இப்போது சிறு சிறு உருண்டைகளாக பிடித்து எடுத்தால் கம்பு சிமிலி தயார்.

இந்த கம்பு சிமிலியை ஒரு டப்பாவில் போட்டு மூன்று நாட்களுக்கு வெளியிலேயே வைத்து சாப்பிடலாம். பிரிட்ஜில் 5 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம்.

மிகவும் ஆரோக்கியமான இந்த உணவை நாம் அடிக்கடி எடுத்துக் கொள்ளும் போது இடுப்பு வலி, கை கால் வலி போன்ற பிரச்னைகளுக்கு மிகவும் நல்லது. குறிப்பாக குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து கம்பு மாவில் அதிகம் உள்ளது.


கம்பு அடையை தூளாக்கி வேர்க்கடலை, எள்ளு சேர்த்து உருண்டைகளாக பிடிக்க வேண்டும்

கம்பு, வேர்க்கடலை, எள்ளில் உள்ள பயன்கள்

கம்பு, உடலில் உள்ள கெட்ட கொழுப்பகளை நீக்குவதோடு, உடலையும் வலிமையாக்கும். நீரிழிவு நோயால் ஏற்படும் இதய நோய் மற்றும் மாரடைப்பு போன்ற பிரச்கினைகளையும் சரி செய்யும்.

வேர்க்கடலை நமது தலைமுறையை காக்க உதவும் மிகச்சிறந்த தானியமாகும்.

எப்பொழுதும் விலை மலிவாக கிடைக்கக் கூடிய இந்த வேர்க்கடலையில், புரோட்டீன் ஆரோக்கியமான கொழுப்புகள், அத்தியாவசியமான வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் என நமது உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

வேர்க்கடலை, "ஏழைகளின் பாதாம்" என்றும் சொல்வதுண்டு.


கம்பு சிமிலி உருண்டை

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் ஏதோவொரு வகையில் எள்ளை எடுத்துக்கொண்டால் உடல் சார்ந்த பல பிரச்சினைகளுக்கு தீர்வாக இருக்கும்.

குறிப்பாக எள்ளு சாப்பிடுவதால், புற்றுநோய் வராமல் தடுக்கப்படுவதுடன், புற்றுநோய் வந்தவருக்கு கூட மிகச்சிறந்த அருமருந்து எள்ளு எனவும் கூறப்படுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட இந்த எள்ளை சரியான அளவில் எடுத்துக்கொண்டால் முழுமையான பலன்களை அடைய முடியும்.

கருப்பு எள் புற்றுநோய் உருவாகாமலும், மூளை செல்களை மறு உற்பத்தி செய்யவும் உதவுகிறது.

Updated On 27 Dec 2024 2:23 PM IST
ராணி

ராணி

Next Story