குழந்தையின்மை பிரச்சினைக்கு IVF சிகிச்சைதான் தீர்வா? - நிபுணர் விளக்கம்
இன்றைய பெண்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்று கருத்தரிப்பு. கடந்த 10 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இப்போது குழந்தையின்மை பிரச்சினை கணிசமாக அதிகரித்திருக்கிறது. அதற்கு வாழ்க்கைச்சூழல், உணவு பழக்கம் மற்றும் போதிய தூக்கமின்மை போன்றவை முக்கிய காரணங்களாக சொல்லப்படுகின்றன. இவை அனைத்தையும் சரியாக பின்பற்றினாலும் ஒருசிலருக்கு கருத்தரிப்பதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. குழந்தையில்லை என்றாலே IVFதான் சரியான சிகிச்சைமுறை என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் அதற்கு முன்பே இயற்கை முறையில் கருத்தரிக்க வைக்க பல்வேறு சிகிச்சைமுறைகள் இருக்கின்றன. அவற்றில் ஒவ்வொரு படிநிலைகளாக செயல்படுத்தி எதிலும், சாத்தியமடையாதபோதுதான் IVF பரிந்துரைக்கப்படும் என்கிறார் செயற்கை கருத்தரிப்பு நிபுணர் ராஜலட்சுமி. செயற்கை கருத்தரித்தலில் உள்ள சாத்தியக்கூறுகள் மற்றும் சிக்கல்கள் குறித்து நமக்கு தெளிவாக விளக்குகிறார்.
குழந்தையின்மை பிரச்சினை இப்போது அதிகமாக காணப்பட காரணம் என்ன?
இந்த காலகட்டத்தில் குழந்தையின்மை பிரச்சினை அதிகமாக காணப்படுகிறது. அதற்கு சூழ்நிலை மாற்றம், உடல் உழைப்பில்லாத வாழ்க்கைமுறை, ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கங்கள் போன்றவை முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன. ஜங்க் உணவுகளை அதிகம் சாப்பிடும்போது உடற்பருமன் அதிகரிக்கிறது. இதனால் பிசிஓஎஸ், ஹைபோ தைராய்டு போன்ற அதுசார்ந்த ஹார்மோன் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இப்போதுள்ள பெரும்பாலான பெண்கள் வேலைக்குச் செல்வதால் ஒருவித மன அழுத்தத்திலேயே இருக்கிறார்கள். அதுவும் உடற்பருமனுக்கு காரணமாக அமைகிறது. ஸ்க்ரீன் டைம் அதிகமாக இருப்பதால் எல்லாருக்குமே தூக்கமின்மை பிரச்சினை இருக்கிறது. இதுபோன்ற காரணங்களால்தான் பெண்களுக்கு குழந்தையின்மை பிரச்சினை இருக்கிறது. ஆண்களை பொருத்தவரை புகைப்பழக்கம் மற்றும் மது அருந்துதல் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதுபோக, ஆண்களுக்கும் உடற்பருமன் அதிகமாக இருந்தால் அதனால் விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் வீரியம் குறைந்து அதுவும் குழந்தையின்மை பிரச்சினைக்கு காரணமாகிறது. குழந்தை இல்லை என ஒரு தம்பதி வரும்போது எதனால் இல்லை என்பதை ஆராய வேண்டும். பெண்களுக்கு மாதவிடாய் சரியாக இருக்கிறதா என்பதை பார்க்கவேண்டும். அடுத்து அல்ட்ரா சவுண்டு செய்து வயதிற்கேற்ப கருமுட்டை எண்ணிக்கை சரியாக இருக்கிறதா என்று பார்க்கவேண்டும். அதை பார்த்து உறுதி செய்ய anti mullerian hormone என்ற டெஸ்ட் எடுக்கப்படும். அதில் நார்மல் என வந்துவிட்டால் பிரச்சினை எதுவும் பெரிதளவில் இல்லை என்று அர்த்தம். அதுபோக, புரோலாக்டின், தைராய்டு போன்ற பரிசோதனைகளையும் செய்துபார்க்க வேண்டும்.
குழந்தையின்மை சிகிச்சைக்கு முன் எடுக்கவேண்டிய முதற்கட்ட பரிசோதனைகள்
ஆண்களுக்கு விந்து பரிசோதனை செய்துபார்க்காமல் சிகிச்சை அளிக்கவே முடியாது. விந்தணுக்களின் எண்ணிக்கை 15 million per ml இருக்கவேண்டும். அதற்கும் கீழ் இருந்தால் எண்ணிக்கை குறைபாடு இருப்பதாக அர்த்தம். விந்தணுவின் உந்துதல் தன்மை 32% இருக்கவேண்டும். அதற்கும் கீழ் இருந்தால் விந்து குறைபாடு இருப்பதாக அர்த்தம். இதுபோன்ற சில பரிசோதனைகளை மேற்கொண்டு படிப்படியாக சிகிச்சை அளிக்கப்படும். பெண்களின் வயது, ஆண்களின் விந்துக்களில் ஏதேனும் பிரச்சினை இருக்கிறதா? திருமணமாகி எத்தனை ஆண்டுகள் ஆகின்றன? இதுதவிர வேறு என்னென்ன ஹார்மோன் பிரச்சினைகள் இருக்கின்றன? சுகர், பிபி போன்றவை இருக்கிறதா போன்றவற்றை ஆராய்ந்து கருமுட்டை வளர்வதற்கான மருந்துகள் கொடுக்கப்படும். இது முதல்படி சிகிச்சை. அதில் ரிசல்ட் கிடைக்காதபோது IUI செய்யப்படும். இதில் திறன்மிக்க விந்தணுக்களை தேர்ந்தெடுத்து கருப்பைக்குள் செலுத்துதல்தான் Intrauterine insemination. இதை மூன்றிலிருந்து ஆறு சுழற்சிவரை செய்யலாம். இதிலேயும் பலன் கிடைக்காத பட்சத்தில்தான் IVF பரிந்துரை செய்யப்படும். வயது அதிகமானவர்களுக்கு IVF மூலம் கருத்தரித்து அதுவே இரட்டைக்குழந்தைகளாக வரும்போது அவர்களுக்கு பிபி, சுகர் போன்ற பிரச்சினைகள் வரும். இதன்காரணமாக மருத்துவரீதியாக குறை மாதத்தில் டெலிவரி ஆகும் நிலை வருவதை ப்ரீ டெர்ம் டெலிவரி என்று சொல்வர். அப்படி பிறக்கும் குழந்தைகள் NICU என்று சொல்லக்கூடிய பச்சிளம் குழந்தைகள் சிறப்பு பிரிவில் வைத்து பராமரிக்கப்படுவார்கள்.
செயற்கை கருத்தரிப்புக்கு வருவோர் தங்களை எப்படி தயார்செய்துகொண்டு வரவேண்டும்?
குழந்தையில்லை என்று சொன்னாலே தம்பதியருக்கு ஒருவித பதட்டம் ஏற்படுகிறது. 30 வயதிற்குள் திருமணமாகிவிட்டால் குழந்தை பெறுவதை தள்ளிப்போடக்கூடாது. வயது ஆக ஆக கருமுட்டை எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கும். இதனால் செயற்கை கருத்தரித்தலுக்கு செல்லவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அடுத்து மாதவிடாய் சரியாக இருக்கிறதா என்பதை பார்த்து ஹார்மோன் பிரச்சினைகளை சரிசெய்ய வேண்டும். உடற்பருமன் இருந்தால் எடையை குறைக்க அறிவுரைகளை வழங்கவேண்டும். அதேபோல் ஆண்கள் புகைப்பழக்கம், மது அருந்துதல் போன்றவற்றை நிறுத்தவேண்டும். சிலர் கருத்தரிப்பதற்கு முன்பே சுகர், பிபிக்கான மாத்திரைகளை எடுத்திருப்பார்கள். அது கருவுக்கு தொந்தரவாக இருக்குமென்பதால் சிலகாலம் அவற்றையெல்லாம் மாற்றி பாதுகாப்பான வழியில் எடுக்க அறிவுரை வழங்கப்படும். ஃபோலிக் ஆசிட் மருந்து பரிந்துரைக்கப்படும்.
கருத்தரித்தலுக்கு ஆரோக்கியமான உணவுப்பழக்கம் மற்றும் உடற்பயிற்சி அவசியம்
உடல் எடை BMI-க்குள் இல்லாவிட்டால் டயட் இருந்து எடையை குறைக்கவேண்டும். எடையை குறைக்கவேண்டும் என்று சொன்னாலே ஜிம், யோகா என்று யோசிப்பார்கள். ஆனால் அதெல்லாம் தேவையில்லை. நாம் உட்கொள்ளும் கார்போஹைட்ரேட் அளவை குறைத்துக்கொண்டு புரதத்தின் அளவை அதிகரித்து முறையான டயட் பின்பற்றினாலே போதுமானது. எடையை சரியாக வைத்துக்கொண்டு வாரத்திற்கு 5 நாட்களுக்கு உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அடுத்து நல்ல தூக்கம் இருந்தாலே போதும். மாதவிடாய் சீராக இருப்பவர்களுக்கு கருத்தரிப்பதற்கு ஏற்ற காலத்தை குறித்து கொடுத்து அந்த நாட்களில் உடலுறவு வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படும். இப்படி இயற்கையான முறையில் மூன்றிலிருந்து ஆறு மாதம் முயற்சிக்கலாம். இது திருமணமாகி ஓரிரு வருடங்கள் ஆன தம்பதியருக்கு பரிந்துரைக்கப்படும்.
செயற்கை கருத்தரித்தல் சிகிச்சைக்கு வரும்போதே செலவு, வெற்றியடையும் தன்மை குறித்தெல்லாம் கேள்வியுடனும், பயத்துடனும்தான் வருவார்கள். இதை எப்படி கையாளுகிறீர்கள்?
மற்ற சிகிச்சைகளுடன் ஒப்பிடும்போது இந்த சிகிச்சைக்கு ஆகும் செலவானது ஒவ்வொரு கட்டத்திற்கும் மாறுபடும். IVFஐ பொருத்தவரை சக்ஸஸ் ரேட் இதுதான் என்பதை கருமுட்டையின் தரம், கரு உருவாதல் போன்றவற்றை வைத்து சொல்லிவிட முடியும். அதைத் தாண்டி சிகிச்சை எடுப்பவர்களுக்கு சில பதட்டங்கள் வரும். அவை எல்லாவற்றையும் தாண்டித்தான் சிகிச்சை அளிக்கப்படும். சிகிச்சைக்கு வர ஆரம்பித்தது முதல் முடியும் வரை தொடர்ந்து கவுன்சிலிங் அளிக்கப்படுவதால் பதட்டம் குறைக்கப்படும். சக்சஸ் ரேட் குறித்த பயம் வரும்போது, ஏற்கனவே சிகிச்சை எடுத்து குழந்தை பெற்றவர்களிடம் பேச வைப்பதன்மூலம் அவர்களுக்குள் நம்பிக்கை வரும்.
செயற்கை கருத்தரிப்பு என்றாலே பெரும்பாலும் இரட்டை குழந்தைகள்தான் பிறக்கின்றன. இது எதனால்?
IVF என்றாலே இரட்டைக்குழந்தைகள் வந்துவிடும் என்ற பயம் பலருக்கு இருக்கிறது. இதில் கணிக்கமுடியாத சக்ச்ஸ் ரேட் இருக்கும் சிகிச்சை முறை என்பதால் முதலில் ஒரு கருவை உள்ளே வைத்து பாசிடிவ் ஆகவில்லை என்றால் இரண்டு கருக்கள் உள்ளே வைக்கப்படும். அப்போது பாசிடிவ் வருகிற தன்மை அதிகம் ஆகின்றது. இதனால் எல்லாருக்கும் இரட்டைக்குழந்தைகள் வருகிற வாய்ப்பு இல்லையென்றாலும் சிலருக்கு வருகிறது. தற்போது IVFலும் அதிநவீன சிகிச்சைகள் வந்துவிட்டன. அதில் 3 நாள் கரு, 5 நாள் கரு என்று பிரிக்கப்படுகிறது. 5 நாள் கருவில் ஒன்றை மட்டும் உட்செலுத்தினாலே ஒரு குழந்தை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. அதுவே ஒருமுறை IVF ஃபெயில் ஆகி இரண்டாவது முறை சிகிச்சைக்கு வரும்போது 5 நாள் கருவாக இருந்தாலும் ஒன்றுக்கும் மேற்பட்ட கருக்கள் உட்செலுத்தப்படும். இதனால் இரட்டைக்குழந்தைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
IVF சிகிச்சையில் பெரும்பாலும் இரட்டைக்குழந்தைகள் பிறக்க காரணம்
சிகிச்சைக்கு வந்து சில மாதங்கள் ஆனபிறகும் சக்சஸ் ஆகாவிட்டால் அடுத்து அவர்களுக்கு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கப்படும்?
IVF செய்து ஒருமுறை தோல்வியடைந்துவிட்டாலே அடுத்து சிகிச்சைக்கு வர தயங்குவார்கள். அப்படி வரும்போது அடுத்து என்ன வித்தியாசமாக செய்வீர்கள் என்று கேட்பார்கள். கருவை உட்செலுத்துவதற்கு முன்பு 5 நாட்கள் வரை இன்குபேட்டரில் கரு வளர வைக்கப்படும். 5 நாள் வளர்ந்த கருவுக்கு பிளாஸ்டோசிஸ்ட் என்று பெயர். அந்த கருவை பயாப்ஸி செய்து பார்க்கும்போது கரு நன்றாக இருந்தால் அது உட்செலுத்தப்படும். அடுத்து எம்ப்ரியோ டைம் லாப்ஸ் என்ற ஒன்று இருக்கிறது. கருவை இன்குபேட்டரில் வைத்து எக்ஸி செய்ததிலிருந்து 5 நாட்கள் வரை அது எப்படி வளருகிறது என்ற வேகம் கணக்கெடுக்கப்படும். அடுத்து எம்ப்ரியோ க்ளூ என்ற ஒன்று இருக்கிறது. இதை உட்செலுத்தி அதனுடன் கருவை செலுத்தும்போது கருவானது சரியாக கருப்பை சுவரில் சென்று ஒட்டிக்கொள்ள வாய்ப்புகள் அதிகம். அடுத்து frozen embryo transfer என்று சொல்லக்கூடிய முறை. கரு உருவானவுடன் வயிற்றினுள் வைக்காமல் 2, 3 மாதங்கள் இடைவெளி விட்டு உட்செலுத்தப்படும். இதற்கு சக்சஸ் ரேட் சற்று அதிகம். இந்த முறைகளை பின்பற்றி நிறைய பாசிட்டிவ் ஆகி இருக்கின்றன.
IVF சிகிச்சைமுறைக்கு வயது வரம்பு இருக்கிறதா?
கண்டிப்பாக இருக்கிறது. அரசின் விதிமுறைகளின்படி பெண்களுக்கு 23 வயதிலிருந்து 50 வயது வரை IVF சிகிச்சை மேற்கொள்ளலாம். ஆண்களுக்கு 55 வயதுதான் வரம்பு.
IVF சிகிச்சைமூலம் கருத்தரித்த பிறகு என்னென்ன மாதிரியான உணவுமுறைகளை பின்பற்ற வேண்டும்?
IVF முறைமூலம் கருத்தரித்த பிறகு முதல் 3 மாதங்களுக்கு ஃபோலிக் ஆசிட் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். IVF சிகிச்சையை பொருத்தவரை எக்டோபிக் என்று சொல்லக்கூடிய கருக்குழாயிலேயே கருமுட்டை தங்கிவிடக்கூடிய சிக்கல் ஏற்படலாம். அதை கண்டுபிடிக்க டேட்டிங் ஸ்கேன் என்ற ஒன்றை முன்கூட்டியே செய்யவேண்டும். பொதுவாகவே முதல் 3 மாதங்களில் வாந்தி, குமட்டல் இருக்கும் என்பதால் உணவு நன்றாக சாப்பிடமுடியாது. அதனால் குழந்தை வளர்ச்சி பாதிக்கப்படுமா என்று நிறைய தம்பதியர் கேட்பார்கள். ஆனால் அப்படி கிடையாது. 3 மாதங்கள் கழித்து வாந்தி நின்றபிறகு அயர்ன், கால்சியம், ஃபோலிக் ஆசிட் மாத்திரைகளுடன், புரதம், நார்ச்சத்துமிக்க உணவுகளை எடுத்துக்கொண்டாலே குழந்தை ஆரோக்கியமாக வளரும். இரண்டாவது ட்ரைமெஸ்டரில் குழந்தையின் தலை முதல் கால் வரை அனாமலி ஸ்கேன் செய்யப்படும். அந்த சமயத்தில் கர்ப்பப்பையின் அடிப்புறம் திறக்கும் பிரச்சினை சிலருக்கு வரும். அதுவும் பரிசோதிக்கப்படும். அடுத்து 24வது வாரத்தில் பரிசோதனை செய்யப்படும். அதுபோக பிபி, சுகர் இருக்கிறதா என்பது குறித்தும் பரிசோதிக்கப்படும்.
IVF இல் கருத்தரிக்கும் சாத்தியக்கூறுகளை அதிகரிக்க செய்யப்படும் சிகிச்சைமுறைகள்
IVFஇல் நார்மல் டெலிவரிக்கு வாய்ப்புகள் இருக்கிறதா?
35 வயதுக்குள் கர்ப்பந்தரித்து ஒரு குழந்தையாக இருந்து, பிரவசத்தின்போது தலை கீழ்நோக்கி இருந்தால், அதேபோல் மற்ற எந்த பிரச்சினைகளும் இல்லையென்றால் சுக பிரசவத்திற்கு வாய்ப்புண்டு. IVF என்றாலே சி-செக்ஷன்தான் போகவேண்டுமென்ற அவசியமில்லை.
கருமுட்டையை உட்செலுத்திய பிறகு எப்படி கவனமுடன் இருக்கவேண்டும்?
IVF மூலம் கருத்தரித்த பிறகு முதல் 3 மாதங்களுக்கு மிகவும் கவனமாக இருக்கவேண்டும். குறிப்பாக, நீண்ட தூரம் பயணிக்கக்கூடாது. அலுவலகம் வெகு தொலைவில் இருந்தால் வொர்க் ஃப்ரம் ஹோம் எடுத்துக்கொள்ளலாம். சிலருக்கு IVF மூலம் கருத்தரித்து 2, 3 முறை கருச்சிதைவு ஏற்பட்டிருக்கும். அவர்கள் மிக மிக கவனமாக இருக்கவேண்டும். இவர்களுக்கு குறை மாதத்தில் டெலிவரி ஆவதை தடுக்க கர்ப்பப்பையின் கீழ்ப்புறத்தில் தையல் போடவேண்டி இருக்கும். IVF மூலம் கருத்தரித்த சிலர் எந்த வேலையும் செய்யாமல் எப்போதும் படுத்தே இருப்பார்கள். குளிப்பதற்குக்கூட அடுத்தவரின் உதவியை நாடுவார்கள். ஆனால் அப்படி இருக்கவேண்டிய அவசியமில்லை. 6 வாரத்திலிருந்து 12 வாரம்வரை மருந்து, மாத்திரைகளின் சப்போர்ட் கொடுப்பதால் கர்ப்பகாலத்தை மகிழ்ச்சியாக கழிக்கலாம்.
