இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

உடல் ஆரோக்கியமாக இருக்க மன ஆரோக்கியம் மிகவும் அவசியம். உடலுக்கு அதிக கவனிப்பு கொடுத்தும் மன நிம்மதி இல்லாமல் இருந்தால் உடலில் பிரச்சினைகள் வருவதை தவிர்க்க முடியாது. இப்போது பொதுவான பிரச்சினைகளாக பார்க்கப்படுகிற தைராய்டு, பிபி போன்றவற்றிற்கு மாத்திரைகள் எடுத்துக்கொள்ளாமல் வீட்டிலிருக்கும் உணவுப்பொருட்களை முறையாக எடுத்துக்கொண்டாலே இயற்கை வழியில் குணப்படுத்த முடியும் என்கிறார் பல்துறை வல்லுநர் தாமரை செல்வி. மேலும் ஒல்லியாக இருக்கும் குழந்தைகள் எடை அதிகரிக்க எப்படி டயட்டை மாற்றியமைக்கலாம், கண் பிரச்சினைகள் மற்றும் சிறுநீரக ஆரோக்கியத்திற்கு என்னென்ன உணவுகளை எடுத்துக்கொள்ளலாம் என்பது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விளக்கமளிக்கிறார்.

தைராய்டு பிரச்சினை வராமல் தவிர்ப்பது எப்படி?

தைராய்டு பிரச்சினையானது இப்போது குழந்தைகளுக்கும் கூட வருகிறது. தைராய்டு நேரம் என்றால் காலை 6 -7. அந்த நேரத்தில் கொத்தமல்லி நீர் குடிக்கவேண்டும். அதற்கு வர கொத்தமல்லியை வாங்கி நன்றாக வறுத்து, அரைத்து பொடியாக்கி ஒரு டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். காலை எழுந்தவுடன் 2 தம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் கொத்தமல்லி பவுடரைப் போட்டு நன்கு கொதிக்கவிட வேண்டும். அது ஒரு தம்ளர் ஆனதும் அதில் பனங்கற்கண்டு அல்லது கருப்பட்டியை சேர்த்து குடித்துவிட வேண்டும். இதை சூடாக இருக்கும்போதே டீ, காபி குடிப்பதை போன்று கொஞ்சம் கொஞ்சமாக குடிக்கவேண்டும். இப்படி தொடர்ந்து குடித்துவர ஒரே வாரத்தில் தைராய்டு கணிசமாக குறையும். அதனால்தான் தைராய்டு மாத்திரை எடுப்பவர்கள் காலை நேரத்தில் எடுத்துக்கொள்கிறார்கள். அதேபோல் பிபி அதிகமாக இருப்பவர்கள் ஒரு சிறிய பீஸ் முள்ளங்கியை பச்சையாக அப்படியே சாப்பிடவேண்டும். 2, 3 நாட்களில் பிபி இறங்கிவிடும். அதனால்தான் பிபி மாத்திரை போடுபவர்கள் காலை 11 மணிக்கு எடுத்துக்கொள்கிறார்கள். வொர்க் டென்ஷன் அதிகமாக இருப்பவர்கள் தினமும் காலை பல் துலக்கியவுடன் மஞ்சள் பூசணிக்காயை 3 துண்டுகள் சாப்பிடவேண்டும். டென்ஷன் ஆனாலோ, அழுதாலோ அல்லது கோபப்பட்டாலோ நமக்குத்தான் கஷ்டம் என்பதால் அவற்றை தவிர்க்க மஞ்சள் பூசணியை எடுத்துக்கொள்வது நல்லது. அதேபோல் உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்கள் ‘காய்’ என முடிகிற காய்கறிகளை அதிகம் சேர்த்துக்கொள்ளவேண்டும். இப்போது ஆர்கானிக் உணவுகள் என்ற பெயரில் வித்தியாசமான உணவுகளை திடீரென எடுத்துக்கொள்ளும்போது அது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கிறது. எனவே சாதாரணமாக நாம் சாப்பிடக்கூடிய சாதம், ரசம், மோர், சாம்பார், பொரியல் என எடுத்துக்கொண்டாலே போதுமானது.


தைராய்டு பிரச்சினை இருப்பவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்

சில குழந்தைகள் நன்றாக சாப்பிட்டாலும் மிகவும் ஒல்லியாக இருப்பார்கள். அவர்கள் சற்று எடை அதிகரிக்க என்ன செய்யவேண்டும்?

2 பாதாம், 3 வால்நட், 2 பிஸ்தா, 6 உலர் திராட்சை, 1 பேரீச்சம்பழம் ஆகியவற்றை இரவு சிறிது தண்ணீர் ஊற்றி ஊறவைத்துவிட வேண்டும். காலை எழுந்தவுடன் இதை அரைத்து அந்த தண்ணீரை, சிறிது சூடாக்கியோ அல்லது சூடான பாலில் கலந்தோ குடிக்கக் கொடுக்கலாம். இதை குடிக்கும்போது உடல் எனர்ஜி, மூளை செயல்பாடு மற்றும் சரும ஆரோக்கியம் போன்ற அனைத்தும் அதிகரிக்கும். மேலும் தேகம் புஷ்டியாக இருக்கும். ஜெய்ன் மக்கள் தினமும் இந்த பாலுடன் சிறிது குங்குமப்பூ கலந்து குடிப்பதால்தான் அவர்களுடைய சருமம் பளபளப்பாக இருக்கிறது. மேலும் சருமம் வறண்டுபோகாது. குழந்தையின்மை பிரச்சினை இருப்பவர்களும் இந்த பாலை குடிக்கலாம். அதேபோல் வாயுத்தொல்லை அதிகம் இருப்பவர்கள் தினமும் இரவு ஒரு தம்ளர் தண்ணீரில் 4 ஏலக்காய் தட்டிப்போட்டு கொதிக்கவைத்து குடிக்கலாம். இதனால் ரத்த ஓட்டமும் சீராகும், வறட்டு இருமலும் போகும். நல்ல தூக்கம் வரும், குறட்டை வராது. ஒரு வாரம் இந்த தண்ணீரை குடித்தால் ஒரு வாரத்திலேயே நல்ல மாற்றத்தை காணமுடியும். உடல் ஆரோக்கியமாக இருக்கவேண்டுமானால் மன ஆரோக்கியம் சரியாக இருக்கவேண்டும். அதற்கு தண்ணீரை சூடாக்கி, அதை ஒரு கிளாஸ் தம்ளரில் ஊற்றி அதில் 5 சங்குப்பூவை போட்டு மூடிவைத்துவிட வேண்டும். தண்ணீரின் நிறம் மாறியவுடன், சூடாக இருக்கும்போதே மெல்ல குடிக்கவேண்டும். சங்குப்பூ நீரானது மன அழுத்தத்தை குறைத்து, மன அமைதியை கொடுக்கும். மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். ரத்த ஓட்டத்தை சீராக்கும். நீரிழிவு நோய்க்கும் அருமருந்து.


கண் ஆரோக்கியத்திற்கு தொப்புளில் எண்ணெய் விடுதல் - உடல் குளிர்ச்சியடைய இளநீர் குடித்தல்

கண் பிரச்சினைகள் சரியாக என்ன செய்வது?

வைட்டமின் ஏ அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும். நான் வெஜ் அதிகம் சாப்பிடுபவர்கள் ஒமேகா 3 அதிகமுள்ள மீன்கள், முட்டை மற்றும் கேரட் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவேண்டும். கேரட்டை அப்படியே சாப்பிடாமல், அதை வேகவைத்து பாலில் சேர்த்து, தேன் கலந்து குடித்தால் நல்லது. தினமும் அரை கிலோ கேரட்டை அரைத்து ஜூஸ் எடுத்து, கொதிக்கும் பாலில் ஊற்றி, ஏலக்காய் சேர்த்தோ அல்லது பிடித்தமான சுவையிலோ பாயசம்போல் செய்து சாப்பிடலாம். பெரியவர்கள் துருவிய கேரட்டுடன் வெங்காயத்தை நறுக்கி சேர்த்து சாப்பிடலாம். தூக்கமின்மையால் கருவளைய பிரச்சினை இருப்பவர்களும் இப்படி தொடர்ந்து சாப்பிட்டுவர, சரும நிறமும் கூடும். கண்ணில் காட்ராக்ட் பிரச்சினை இருக்கும் பெரியவர்கள் நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும் நேத்ர பூண்டு தைலத்தை வாங்கி பயன்படுத்தலாம். சௌ சௌ, பீர்க்கங்காய் போன்ற நீர்க்காய்களை அதிகம் எடுத்துக்கொண்டால் கண்ணுக்கு நல்லது. அதேபோல் நாம் தூங்கும்போது மட்டும்தான் கண்களையே மூடுகிறோம். அப்படி இல்லாமல் தினமும் 11.45 - 12 மணியானது விஷன் டைம் என்று சொல்லப்படுகிறது. அந்த நேரத்தில் கண்களை மூடிக்கொண்டு சுழற்றலாம் அல்லது ரெஸ்ட் கொடுக்கலாம். கண்கள் வறண்டால் கிளிசரின் அல்லது விளக்கெண்ணெயை கண்களைச் சுற்றி தடவலாம். வயதானவர்களுக்கு வேண்டுமானால் நேத்ர பூண்டு தைலத்தை கண்களுக்கு பயன்படுத்தலாம். கண்களில் பிரச்சினை என்றாலே சுத்தமான நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் அல்லது நெய்யை தொப்புளில் தடவேண்டும். இப்படி தொடர்ந்து செய்துவர ஒரே வாரத்தில் நல்ல மாற்றம் தெரியும்.

அதேபோல் எப்போதும் ஷூ போட்டுக்கொண்டே இருக்கும் ஆண்கள், சிறுநீர் கழிக்காமல் இருப்பவர்கள் ‘காய்’ என்று முடிகிற எல்லா காய்கறிகளையும் சாப்பிடவேண்டும். வாழைத்தண்டை வாரத்திற்கு ஒருமுறை எடுத்துக்கொள்ளவேண்டும். அதேபோல் ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை சிறுநீர் கழித்துக்கொண்டே இருந்தால் சிறுநீரகம் மற்றும் பித்தப்பையில் இருக்கும் கற்கள் கரைந்துவிடும். குறிப்பாக, நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும். கல் பிரச்சினை இருப்பவர்கள் சீரக தண்ணீரை ஃப்ளாஸ்க்கில் வைத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக குடித்துக்கொண்டே இருக்கவேண்டும். தண்ணீரை கடகடவென குடிக்கக்கூடாது. சிறுநீரக கல் பிரச்சினை இருப்பவர்கள் சுரைக்காய், பீர்க்கங்காய், வாழைக்காய், கத்தரிக்காய் போன்றவற்றை பொரியல் செய்து அதிகமாக சாப்பிடவேண்டும். நிறைய இளநீர் குடிக்கவேண்டும். அதேபோல் நிறைய கீரை வகைகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.


உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்கும் அச்சு வெல்லத் தண்ணீர்

பிசிஓடி பிரச்சினையை எப்படி தவிர்ப்பது?

நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும் கழற்சிக்காய் பொடி மற்றும் அசோகப்பட்டை பொடி அல்லது சூரணம் ஆகியவற்றை வாங்கி வைத்துக்கொண்டு, தினமும் காலை 6 - 7 மணிக்கு கழற்சிக்காய் பொடியை 5 கிராமும், அரை மணிநேரம் கழித்து அசோகப்பட்டை சூரணத்தையும் கால் தம்ளர் தண்ணீரில் கலந்து குடிக்கவேண்டும். இதையே மாலை 4 -5 மணிக்கும் குடிக்கலாம். கர்ப்பப்பையில் இருக்கும் கட்டிகளை நீக்கக்கூடிய வல்லமை அசோகப்பட்டைக்கு உண்டு. அதேபோல், கர்ப்பப்பையில் இருக்கும் அழுக்குகளை நீக்கக்கூடியது கழற்சிக்காய். பிசிஓடி பிரச்சினையை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சரிசெய்துவிட்டால் பின்னாளில் கர்ப்பப்பை பிரச்சினைகள் வராமல் தவிர்க்கலாம். உடலுக்கு இரும்புச்சத்து தேவைப்படுபவர்கள் அச்சு வெல்லத்தை ஒரு தம்ளர் தண்ணீரில் போட்டு இரவே ஊறவைக்க வேண்டும். காலை எழுந்ததும் அந்த நீரில் ஏலக்காய் தூள் சேர்த்து குடிக்கலாம்.

மெனோபாஸ் பீரியடில் இருக்கும் பெண்களுக்கென்று பிரத்யேக உணவுகள் இருக்கிறதா?

மெனோபாஸால் பலர் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். சிலருக்கு ரத்தப்போக்கு அதிகமாக இருக்கும். சிலருக்கு ரத்தப்போக்கே இருக்காது. அவர்களை வீட்டிலிருப்பவர்கள்தான் புரிந்துகொள்ள வேண்டும். அந்த நேரத்தில் நான் வெஜ் சாப்பிடாமல் எளிமையான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அத்திப்பழம், மாதுளம்பழ ஜூஸ் குடிக்கவேண்டும். இந்த ஜூஸ்களில் தேன் கலந்து சாப்பிடவேண்டும். ஏதேனும் ஒரு கீரை மற்றும் மஞ்சள் பூசணி தினசரி எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால் மன அழுத்தம் குறைந்து ஒருவித அமைதி கிடைக்கும்.

பிராய்லர் சிக்கன் குழந்தைகளுக்கு கொடுப்பது சரியா?

இப்போது 10, 11 வயதிலேயே பெண் பிள்ளைகள் பூப்பெய்தி விடுகிறார்கள். அவர்களுக்கு பீரியட்ஸ் என்றாலே என்னவென்று தெரிவதில்லை. இப்படி கஷ்டப்பட முக்கிய காரணம் சிக்கன் வகைகள்தான். சிக்கன் அதிகம் சாப்பிடும்போது உடல் சூடு அதிகரிக்கும். இதனால் சிறுவயதிலேயே வயதிற்கு வந்துவிடுவதால் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கிறார்கள்.

Updated On 18 Feb 2025 12:00 AM IST
ராணி

ராணி

Next Story