இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

மாலை நேரத்தில் பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பும் ஒவ்வொரு குழந்தைகளும் வீடு வந்து சேர்ந்ததும் ஏதாவது நொறுக்கு தீனிகளை எதிர்பார்ப்பார்கள். அதற்காக பெரும்பாலான பெற்றோர்கள் வீட்டில் செய்து கொடுக்க சோம்பேறித்தனம் பட்டுக்கொண்டு உடலுக்கு தீங்கை ஏற்படுத்தும் நொறுக்கு தீனிகளை கடையில் வாங்கி கொடுப்பார்கள். அப்படியான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மிகவும் எளிமையாகவும், அதேநேரம் ஆரோக்கியமான வகையிலும் மாலை நேர தீனிகள் செய்து கொடுக்க நிறைய பலகாரங்கள் இருக்கின்றன. அந்த வகையில், நமது குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் படியாக வெறும் 15 நிமிடத்தில் அத்திக்காய் பலகாரம் செய்வது எப்படி என சொல்லிக்கொடுத்து விளக்குகிறார்கள் சமையல் கலைஞர்கள் லதா மற்றும் கௌரி.


அத்திக்காய் பலகாரம் செய்முறை

கருப்பு உளுந்தை எடுத்து குறைந்தது ஒருமணி நேரம் ஊற வைத்து, பிறகு அதனை கழுவி மாவாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

அரைத்து எடுத்து வைத்துள்ள உளுந்த மாவில், தேவையான அளவில் பச்சரிசி மாவையும், ஒரு சிட்டிகை உப்பையும் சேர்த்து உருண்டையாக உருட்டும் பதத்தில் கலந்து கொள்ளவும்.


அத்திக்காய் பலகாரத்திற்கான மாவு கலவை

பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதில் ஒரு கடாயை வைத்து தேவையான அளவில் எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.

எண்ணெய் சூடானதும் கலந்து வைக்கப்பட்டுள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொறித்து எடுத்துக்கொள்ளவும்.

உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொறித்து எடுக்கும் பொழுது அடுப்பை முழுவதுமாக குறைத்து வைத்து கொள்வது நல்லது.


சூடான எண்ணெயில் பொறித்து எடுக்கப்பட்ட அத்திக்காய் பலகாரம்

இப்பொழுது தேங்காயை எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அரைத்து சாறாக பிழிந்து எடுத்து அதில் சிறிதளவு ஏலக்காய் பொடி, நாட்டு சர்க்கரை, ஒரு சிட்டிகை உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து எடுத்துக்கொள்ளவும்.

தயார் நிலையில் உள்ள தேங்காய் பாலில் பொன்னிறமாக வறுத்து எடுத்த உளுந்து உருண்டைகளை போட்டு ஒரு ஐந்து நிமிடம் ஊற வைக்கவும். 15 நிடத்தில் அத்திக்காய் பலகாரம் தயார்.

இதனை குழந்தைகளுக்கு எடுத்து பரிமாறினாள் விரும்பி சாப்பிடுவார்கள். அவர்களின் உடலுக்கும் வலு சேர்க்கும் வகையில் இந்த பலகார உணவு இருக்கும்.


பொறித்து எடுக்கப்பட்ட பலகாரத்தை தேங்காய் பாலில் ஊற வைத்தல்

கருப்பு உளுந்தின் நன்மைகள்:

கருப்பு உளுந்தில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் , இரும்புச் சத்து மற்றும் நார்சத்து அதிகம் உள்ளன. இந்த உளுந்தை அடிக்கடி சாப்பிட்டு வருவதன் மூலம் நம் உடலில் எலும்புகள், மூட்டுகளின் வலிமை அதிகரிக்கும். செரிமான பிரச்சினை, மலச்சிக்கல் பிரச்சினை உள்ளிட்டவற்றை சரி செய்யும். இதுதவிர இரத்த சர்க்கரை அளவை சீராக்குவதுடன், பெண்களின் உடலுக்கு வலிமை தந்து கூந்தல் வளர்ச்சியை அதிகப்படுத்தும்.

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று நம் முன்னோர்கள் சும்மாவா சொன்னார்கள். பல ஆரோக்கிய நன்மைகளை தரும் இந்த கருப்பு உளுந்தை அளவுக்கு அதிகமாக உட்கொண்டாலும் கற்கள் போன்ற பிரச்சினைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே உடல்நலப் பிரச்சினை உள்ளவர்கள் எந்த அளவில் உளுந்து சார்ந்த பொருட்களை நம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை உணவியல் நிபுணர்களிடம் கேட்டு தெரிந்து அதற்கு தகுந்தாற்போன்று எடுத்துக்கொள்வது நல்லது.

Updated On 27 Dec 2024 2:24 PM IST
ராணி

ராணி

Next Story