இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

சீனாவில் புதிய வைரஸா? கொரோனா போன்ற மற்றொரு தொற்று வரப்போகிறதா? மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்போகிறார்களா? என்பது போன்ற கேள்விகள்தான் திரும்பும் பக்கமெல்லாம் கேட்கிறது. அந்த அளவிற்கு பயத்தை கொடுத்திருக்கிறது HMPV தொற்று. ஆம், சீனாவில் பல இடங்களில் இந்த வைரஸ் தொற்று தாக்கத்தால் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாகவும், எங்கு பார்த்தாலும் மாஸ்க் அணிந்தபடி மக்கள் நடமாடும் புகைப்படங்களும்தான் தற்போது உலக நாடுகளிடையே புதிய தொற்று அச்சத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. ஆனால் HMPV என்பது பல ஆண்டுகளாக இருக்கும் ஒரு வைரஸ்தான் என்றும், குளிர்காலத்தில் இந்த தொற்றின் தாக்கம் பொதுவாகவே அதிகமாக இருக்கும் என்றாலும் கொரோனாவை போன்று இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தாது என்கின்றனர் மருத்துவர்கள். ஆரம்பத்தில் கொரோனா குறித்தும் இவ்வாறுதான் கூறப்பட்டதால் பலர் இதை நம்ப மறுக்கின்றனர். HMPV தொற்று என்பது என்ன? இதன் அறிகுறிகள் எப்படியிருக்கும்? இதற்கான சிகிச்சைமுறைகள் இருக்கின்றனவா? என்பது குறித்தெல்லாம் நமக்கு விளக்குகிறார் பொதுநல மருத்துவர் சூலைமான் மீரான்.

HMPVக்கும் கொரோனாவுக்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமைகள் என்னென்ன?

இரண்டு வைரஸ்களுமே நுரையீரலை தாக்கக்கூடியவை. சளி, காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் இரண்டுக்கும் பொதுவானவை. ஆனால் HMPVஆனது வைரஸின் லேசான வடிவம் என்று சொல்லலாம். இந்த வைரஸ் இப்போது கண்டுபிடிக்கப்பட்டதல்ல. 1958லேயே அமெரிக்காவில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டது. இது சளி, இருமல், தும்மல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு சாதாரண RSV (Respiratory Syncytial Virus) வைரஸ்தான். இந்தியாவில் ஒருசிலருக்குத்தான் இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டிருந்தாலும் இதுவரை பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

HMPVஐ தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

கொரோனாவிற்கு செய்தது போன்றே கைகளை கழுவுதல், முகத்தை தொடாமல் இருத்தல், மாஸ்க் அணிதல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தாலே போதுமானது. மேலும் இது அச்சப்படவேண்டிய வைரஸ் இல்லை. ஏனென்றால் பொதுவாகவே அமெரிக்கா போன்ற குளிர் அதிகமுள்ள நாடுகளில் குளிர்காலத்தில் இந்த வைரஸ் அதிகமாக பரவும். இவை வெயில்காலத்தில் இருக்காது. குளிர்காலத்தில் மட்டுமே பரவக்கூடியது.


கொரோனா - HMPV இரண்டுமே நுரையீரலை பாதிக்கக்கூடிய வைரஸ்கள்

இப்போது பரவக்கூடிய வைரஸ் எல்லாமே சீனாவிலிருந்துதான் பரவுவதாக சொல்கிறார்கள். அதற்கு காரணம் என்ன?

கொரோனாவிற்கு அப்படி சொல்லப்பட்டது. ஏனென்றால் சீனர்கள் விலங்குகளுடன் அதிகம் தொடர்பில் இருப்பதும், அதிகப்படியான இறைச்சி உணவுகளை எடுத்துக்கொள்வதும் வைரஸ் பரவுவதற்கு காரணமாக பார்க்கப்பட்டது. ஆனால் HMPV சீனாவில் உருவானதல்ல. இது உலகம் முழுவதுமே இருக்கக்கூடிய வைரஸாகும். எனவே ஒரு நாட்டை குற்றஞ்சாட்டுவது சரியல்ல.

HMPV-இன் அறிகுறிகள் என்னென்ன?

வைரஸ் தொற்று ஏற்பட்டவுடன் முதலில் சளி பிடிக்கும். அடுத்து தும்மல், தொண்டை வலி, லேசான காய்ச்சல் போன்ற அறிகுறிகள் வரலாம். அதுவே தொற்று தீவிரமடையும்போது நுரையீரலை பாதித்தால் மூச்சுத்திணறல் ஏற்படலாம். இந்த வைரஸ் குழந்தைகள், வயதானவர்களை எளிதில் தாக்கலாம். அதுபோக, நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள கேன்சர் நோயாளிகள், கீமோதெரபி எடுப்பவர்கள், நீரிழிவு நோயாளிகளை இந்த வைரஸ் பாதிக்கும் வாய்ப்புகள் மிகவும் அதிகம். சிகிச்சை அளிக்கும்போது மற்றவர்களுக்கு 2 நாட்களில் சரியாகக்கூடிய ஜுரமானது இவர்களுக்கு 4 நாட்களில் சரியாகும். எனவே நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் பொது இடங்களுக்கு செல்லும்போது மாஸ்க் அணிந்துகொள்வது நல்லது. கொரோனா காலத்தில் கோவிட் தவிர மற்ற அனைத்து சுவாசப்பாதை தொற்றுகளின் எண்ணிக்கையும் குறைவாக இருந்தது. அதற்கு காரணம் அனைவரும் மாஸ்க் அணிந்திருந்ததுதான்.

சிறுகுழந்தைகள் மற்றும் முதியவர்களை வைரஸ் தாக்காமல் இருக்க அவர்கள் என்ன செய்யவேண்டும்?

HMPV வைரஸ் மூச்சுக்காற்றின்மூலமாக பரவக்கூடியது என்பதால் கொரோனாவிற்கு சொன்னதைப்போன்றே கூட்ட நெரிசல் அதிகம் இருக்கும் மார்க்கெட் போன்ற இடங்களுக்கு செல்லக்கூடாது. ஏனென்றால் ஒருவர் இருமினாலோ அல்லது தும்மினாலோ காற்றின்மூலம் இந்த வைரஸ் எளிதில் பரவும். அப்படி செல்ல நேர்ந்தால் வந்தவுடன் முகம் மற்றும் கைகளை சுத்தமாக கழுவுவது, முகத்தை தொடாமல் இருப்பது, வெளியே செல்லும்போது மாஸ்க் போடுவது அவசியம். இந்த வைரஸ் கொசு மூலம் பரவாது.


வைரஸ் பரவாமல் இருக்க அடிக்கடி கைகளை சோப் கொண்டு சுத்தமாக கழுவுதல்

HMPV வைரஸால் இறப்பு வாய்ப்புகள் உள்ளதா?

இறப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு HMPVக்கு குறைவு. இதுவரை இந்த வைரஸால் இறப்புகள் ஏற்பட்டிருக்கிறதா என்ற விவரங்கள் எதுவும் இல்லை. ஆனால் பொதுவாக இந்த வைரஸ் இறப்பை ஏற்படுத்தாது.

வைரஸ் தாக்கம் ஏற்பட்டால் என்னென்ன உணவுகளை சாப்பிடவேண்டும்? என்னென்ன சாப்பிடக்கூடாது?

உணவுக்கும் வைரஸ் தாக்கத்திற்கும் சம்பந்தமில்லை. பொதுவாக நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய புரதச்சத்துமிக்க உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். நாம் பொதுவாக கார்போஹைட்ரேட் அதிகம் எடுத்துக்கொள்வதால் நீரிழிவு போன்ற நோய்கள் வரும். எனவே அதுதவிர்த்து காய்கறிகள், பழங்களை நிறைய எடுத்துக்கொள்ள வேண்டும். குளிர்ந்த உணவுகளை தவிர்த்து விடுவது நல்லது.

ஒருவருக்கு காய்ச்சல் தொடர்ந்து இருந்தால் அது HMPVஆக இருக்குமா?

HMPVஐ விட டெங்கு, ஸ்க்ரப் டைஃபஸ் போன்ற பிற ஜுரங்களும் இருக்கின்றன. எனவே காய்ச்சல் தொடர்ந்து இருந்தால் உடனடியாக நாம் டெஸ்ட் எடுத்துவிட வேண்டும். அதேபோல் சிகிச்சையும் எடுக்கவேண்டும்.

மலேரியாவைப் போன்று டெங்குவையும் முழுமையாக ஒழிக்கமுடியுமா?

கொசுவை ஒழித்தால்தான் டெங்குவை ஒழிக்க முடியும். டெங்குவில் மொத்தம் நான்கு வகைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று ஒருமுறை வந்துவிட்டால் திரும்ப வராது. ஆனால் மற்ற மூன்று வகைகள் வரலாம். ஆனால் டைப் 1 தொற்று வந்தபிறகு, ஒருவருடம் கழித்து டைப் 2 தொற்று வந்தால் அது மிகவும் தீவிரமாக இருக்கும்.


சளி மற்றும் பிற பிரச்சினைகள் தொற்றாமல் இருக்க மாஸ்க் அணிதல்

ஸ்க்ரப் டைஃபஸ் தொற்று எதனால் வருகிறது?

இது மைட் என்று சொல்லக்கூடிய பூச்சிக்கடியினால் வரக்கூடியது. அந்த பூச்சி கடிக்கும்போது தெரியாது. ஆனால் காய்ச்சல் வந்த நபரை பரிசோதித்து பார்த்தால் அவருடைய உடலில் சிறிய பூச்சிக்கடிக்கான தடயம் இருக்கும். ஸ்க்ரப் டைஃபஸ் தொற்றுக்கு சிகிச்சைகள் இருக்கின்றன. இதை குணப்படுத்த முடியும். ஸ்க்ரப் டைஃபஸ் பூச்சிகள் பொதுவாக வீட்டில் இருக்காது. செடி, கொடி போன்றவற்றில்தான் இருக்கும்.

HMPV வைரஸ் குறித்து பொதுமக்களுக்கு கூறும் ஆலோசனை என்ன?

இந்த வைரஸ் குறித்து பயப்பட தேவையில்லை. இது கொரோனாவைப் போன்று உயிரிழப்பை ஏற்படுத்த கூடியதல்ல. சாதாரணமாக சளியை ஏற்படுத்தக்கூடிய சுவாசப்பாதை வைரஸ்தான். இது குளிர்சமயங்களில் வரக்கூடியதுதான். இந்த தொற்று பரவாமல் தடுக்க கொடுக்கப்பட்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றினாலே போதுமானது.

குளிர்காலத்தில் அதிகமாக சளி பிடிப்பது எதனால்?

பொதுவாக குளிர்காலத்தில் எல்லாரும் வீட்டிற்குள்ளேயே இருப்போம். அதனால் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் மற்றவருக்கும் அது பரவிவிடும். மேலும் வெயில்காலத்தில் சூட்டினால் வைரஸ்கள் இறந்துவிடும். அதுவே குளிர்காலத்தில் அது வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்பதால் தொற்றுகளின் தாக்கமும் அதிகமாக இருக்கும்.

கொரோனாவை போன்று HMPV தொற்றால் பாதிக்கப்பட்டவரையும் தனிமைப்படுத்த வேண்டுமா?

சாதாரணமாக சளித்தொற்று ஏற்பட்டாலே நாம் தனியாக இருப்பது நல்லது. பொதுவாக ஒரு நோய் பரவாமல் தடுக்க தனிமைப்படுத்தலாம்.


காய்ச்சல் மற்றும் தொற்று ஏற்பட்டால் மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

மருத்துவமனைக்கு போகமுடியாத இடத்தில் வசிக்கும் ஒருவருக்கு HMPV தொற்று ஏற்பட்டால் வீட்டிலிருக்கும் பொருட்களை வைத்தே அதை குணப்படுத்த முடியுமா?

இது ஒரு வைரஸ் தொற்றுதான் என்பதால் இதற்கென தனிப்பட்ட மருந்து, மாத்திரைகள் கொடுக்கமுடியாது. அறிகுறிகளுக்குத்தான் சிகிச்சை அளிக்கமுடியும். அப்படி அடிப்படை சிகிச்சை எடுத்துக்கொண்டாலே நமது உடலே அந்த வைரஸிலிருந்து மீண்டுவிடும். வீட்டிலிருக்கும் இஞ்சி, மஞ்சள், தேன் போன்றவற்றின் மருத்துவகுணங்களையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

குளிர்காலத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய ஆரோக்கியமான உணவுகள் என்னென்ன?

எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு போன்ற வைட்டமின் சி அதிகமுள்ள சிட்ரஸ் பழங்களை எடுத்துக்கொள்ளலாம். ஆப்பிள், மாதுளை போன்றவையும் நோயெதிர்ப்பு சக்தியை கொடுக்கக்கூடியவைதான். அசைவம் சாப்பிடுபவர்கள், சிக்கன், மீன் போன்ற புரோட்டீன் அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். இதுதவிர, மஞ்சள், இஞ்சி, தேன் போன்றவற்றையும் இவற்றுடன் சேர்த்துக்கொள்ளலாம்.

பள்ளி செல்லும் மாணவர்களுக்கான அறிவுரை என்ன?

உடல்நிலை சரியில்லை என்றால் விடுப்பு எடுத்து வீட்டிலேயே ரெஸ்ட் எடுக்கலாம். அட்டன்டன்ஸுக்காக பள்ளிக்குச் சென்றால் மற்ற மாணவர்களுக்கும் எளிதில் தொற்று பரவிவிடும்.

கொரோனாவைப் போன்று HMPV பரவலும் திடீரென வேகம் எடுக்குமா?

கோவிட்டை பொருத்தவரை அதில் நிறைய பிறழ்வுகளும், அவற்றின் தாக்கமும் மிகவும் அதிகமாக இருந்தன. ஆனால் HMPV அந்த அளவிற்கு வேகமாக பரவாது, தாக்கமும் அவ்வளவு இருக்காது. கொரோனா அளவிற்கு HMPV க்கு ஆக்ஸிஜன் தேவை இருக்காது என்றாலும் கொரோனாவிற்கு பிறகு பெரும்பாலான மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் சப்ளை அளவு அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

Updated On 21 Jan 2025 12:00 AM IST
ராணி

ராணி

Next Story