இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

மழை மற்றும் குளிர்காலத்தில் அனைவருக்கும் சளி பிரச்சினைகள் வந்துபோகும். ஆனால் சிலருக்கு அதுவே தொற்றாக மாறி நீண்ட நாட்களுக்கு உடலில் பல்வேறு தொந்தரவுகளை கொடுக்கும். தொற்றானது நுரையீரலை தாக்கும்போது அது ஆஸ்துமா, வீசிங் போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்று பலர் பயப்படுவர். ஆனால் நுரையீரலில் வரக்கூடிய ஆஸ்துமா, வீசிங், காசநோய் மற்றும் கேன்சர் என பல பெரிய பிரச்சினைகளுக்கு முதற்கட்ட அறிகுறிகள் பெரும்பாலும் ஒரேமாதிரிதான் இருக்கும் என்பதால் நிறையப்பேர் உடனே மருத்துவரிடம் செல்லாமல் கடைகளில் மருந்து, மாத்திரைகளை வாங்கி பயன்படுத்துவர். ஆனால் அப்படி செய்யக்கூடாது, என்ன பிரச்சினை என்பதை ஆரம்பத்திலேயே கண்டறியவேண்டும் என அறிவுறுத்துகிறார் நுரையீரல் நிபுணர் அவினாஷ்.

குளிர்காலத்தில் வரக்கூடிய சளி மற்றும் வீசிங் பிரச்சினைகளுக்கு தீர்வு என்ன?

குளிர் மற்றும் மழைகாலத்தில் ஏன் சளித்தொல்லை வருகிறது என்பதை முதலில் பார்க்கவேண்டும். ஒவ்வொருவருடைய உடலின் தன்மையும் வேறுபடும். குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு உடலின் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இவர்களுக்கு வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். மழை மற்றும் பனிக்காலத்தில் நாம் பெரும்பாலும் வெளியே செல்லமாட்டோம். அதனால் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டாலும், அது வீட்டிலிருக்கும் அனைவருக்கும் பரவிவிடும். சிலருக்கு பூம்பொடி, தூசு மற்றும் ஜில்லான பொருட்களை அதிகம் சாப்பிட்டால் அலர்ஜி தன்மை அதிகமாக இருக்கும். எனவே யாருக்காவது சளி, இருமல் தொல்லை இருப்பின் அவர்களிடமிருந்து தள்ளியிருக்க வேண்டும். மாஸ்க் போட வேண்டும். கைகளை நன்றாக கழுவ வேண்டும். கொரோனா தொற்றுகாலத்தின்போது எப்படி இருந்தோமோ அதேபோல் அனைத்து வைரல் தொற்றுகளுக்கும் கடைபிடிக்கவேண்டும். அடுத்து அலர்ஜி தொல்லை இருந்தால் மருத்துவரை அணுகி அதற்கான முறையான மருந்துகளை தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோல், சளித்தொற்றை ஏற்படுத்துகிற இன்ஃப்ளூயன்சா வைரஸுக்கு ‘ஃப்ளூ தடுப்பூசி’யை ஆண்டுதோறும் போட்டுக்கொண்டால் தொற்று வந்தாலும் தீவிரமடையாது.


இன்ஃப்ளூயன்சா வைரஸுக்கு ‘ஃப்ளூ தடுப்பூசி’ செலுத்துதல்

வீசிங் பிரச்சினைக்கு தீர்வே கிடையாதா?

வீசிங் என்பது காய்ச்சல் போன்று ஒரு நோயின் அறிகுறியே தவிர அது ஒரு நோய் கிடையாது. இது அலர்ஜி, புகைபிடித்தல், நுரையீரல் தொற்று, இதய பிரச்சினைகள், உடற்பருமன் போன்ற நிறைய காரணங்களால் வரலாம். ஆனால் பெரும்பாலானோருக்கு அலர்ஜியால் வீசிங் வருகிறது. முதலில் எதனால் அலர்ஜி வருகிறது என்பதை கண்டுபிடிக்கவேண்டும். அது மிகவும் சிரமமானது. ஏனென்றால் நூறில் 40 பேருக்குத்தான் எதனால் அலர்ஜி வருகிறது என்பதை துல்லியமாக சொல்லமுடியும். 60 பேருக்கு சரியான காரணத்தை கண்டுபிடிக்க முடியாது. உதாரணத்திற்கு, டெல்லி போன்ற மெட்ரோ சிட்டிகளில் மாசு அளவு அதிகமாக இருக்கும். இதுபோன்ற காரணங்களால் அலர்ஜி வந்தால் எதுவும் செய்யமுடியாது. முடிந்தவரை இடத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். அதுவே தூசு, சாப்பாடு போன்றவற்றால் அலர்ஜி ஏற்பட்டால் அதனை தவிர்த்துவிடலாம். இரண்டாவது வீசிங் எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை பார்க்கவேண்டும். ஆஸ்துமாவை எடுத்துக்கொண்டால் அவர்களுக்கு வாழ்நாள் முழுக்க சிகிச்சை அளிக்கவேண்டியதில்லை. முதலில் சிகிச்சை ஆரம்பித்து அதனை படிப்படியாக மருத்துவர்கள் குறைப்பர். இப்படி 40% பேருக்கு முழுமையாக குணப்படுத்த முடியும். ஆனால் சிகிச்சையின் ஆரம்பத்திலேயே குணமானதுபோன்று தோன்றுவதால் மருந்துகளை சரிவர எடுக்காமல் விட்டுவிட்டு எடுப்பார்கள். அப்போது பிரச்சினை முழுமையாக குணமடையாமல் மீண்டும் வரும். வீசிங் பிரச்சினை இருப்பவர்களுக்கு பெரும்பாலும் மாத்திரைகளை கொடுக்காமல் இன்ஹேலர்கள் கொடுக்கப்படும். ஏனென்றால் மாத்திரை சாப்பிடும்போது அது வயிற்றுக்குள் போய் கரைந்து ரத்தம் வழியாக உடம்பு முழுக்க போகும்போது நுரையீரலுக்கும் போகும். ஆனால் அந்த மருந்தின் தேவையே நுரையீரலுக்கு போகவேண்டும் என்பதுதான். அந்த மருந்து உடலின் மற்ற பாகங்களுக்கு தேவைப்படாது என்பதால் நேரடியாக நுரையீரலுக்கு கொடுப்பதுதான் பாதுகாப்பானது. இதனால் டோஸ் குறைவாக எடுத்துக்கொள்ளலாம். பக்கவிளைவுகளும் குறைவு. அதுவே புகைப்பிடிப்பவர்களை எடுத்துக்கொண்டால் அவர்களுடைய பிரச்சினையே வேறு. சில நேரங்களில் அதை COPD என்று சொல்வர். புகைப்பிடித்ததால் ஏற்பட்ட சேதாரத்தை சரிசெய்யமுடியாது. அவர்களுக்கு மருந்துகளை குறைத்து நிறுத்துவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. இதய பிரச்சினை இருப்பவர்களுக்கு அதற்கான சிகிச்சை எடுக்கும்போதே இந்த மருந்துக்கான தேவை குறைந்துவிடும். உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் எடையை குறைத்தால்தான் வீசிங் அளவை கட்டுக்குள் கொண்டுவர முடியும். எனவே வீசிங்கை பொருத்தவரை ஒவ்வொருவருக்கு ஏற்றபடிதான் சிகிச்சை இருக்கும்.


வீசிங் பிரச்சினைக்கு இன்ஹேலர் மருந்து கொடுக்க காரணம்

Sarcoidosis மற்றும் idiopathic என்று சொல்கிறார்களே... அப்படியென்றால் என்ன?

Sarcoidosis-ஐ ஒரு சவாலான வியாதி என்று சொல்லலாம். ஏனென்றால் இது காசநோய் போலவே உள்ள ஒரு வியாதி. இது நுரையீரலை பாதிக்கும். அதாவது நுரையீரல் அருகிலிருக்கும் நிணநீர் கணுக்களில் தொற்று உருவாகும். இதயம், வயிறு, மூளை என உடலின் வேறு எந்த பகுதியிலிருக்கும் நிணநீர் கணுக்களிலும் Sarcoidosis வரலாம். ஆனால் Sarcoidosis-இன் பயோப்ஸியில் வரக்கூடிய க்ராண்ட்ளோமா என்பது காசநோயிலும் இருக்கலாம். வெளிநாடுகளில் காசநோய் எண்ணிக்கை மிகவும் குறைவு. எனவே அவர்களுக்கு ஸ்கேன் பார்க்கும்போது Sarcoidosis போன்று இருந்தாலோ, க்ராண்ட்ளோமஸ் தொற்று பயோப்ஸியில் தெரிந்தாலோ உடனே சிகிச்சை அளிக்கலாம். ஆனால் நமது ஊரை பொருத்தவரை Sarcoidosis-ஆ அல்லது காசநோயா என்பதை கண்டுபிடித்து சிகிச்சையளிப்பதே சற்று சிரமம். ஏனென்றால் காசநோய்க்கு அளிக்கும் சிகிச்சை வேறு; Sarcoidosis-க்கு அளிக்கும் சிகிச்சை வேறு. அதுவும் Sarcoid எந்த உறுப்பில் வருகிறது என்பதை பொருத்து சிகிச்சையும் மாறுபடும். நுரையீரலில் மட்டும் இந்த வியாதி வந்திருந்து அறிகுறிகள் எதுவும் இல்லாமல், சிடி ஸ்கேன் மூலம் கண்டறியப்பட்டால், 60 முதல் 80% பேருக்கு அது படிப்படியாக குறைந்துவிடும். ஆனால் இதயம் மற்றும் மூளை போன்ற பகுதிகளில் Sarcoid பிரச்சினையால் பாதிப்பு ஏற்பட்டாலோ அல்லது அதனால் உடலில் கால்சியம் அதிகரிப்பு போன்ற பிற பக்கவிளைவுகள் ஏற்பட்டாலோ ஸ்டீராய்டு மாத்திரைகள் கொடுக்கப்படும். அதுவும் படிப்படியாக குறைக்கப்படும். இருப்பினும் இந்த சிகிச்சை நீண்டநாட்கள் அளிக்கப்படும்.

ஒரு வியாதிக்கு காரணம் கண்டுபிடிக்க முடியாததைத்தான் idiopathic என்று சொல்கின்றனர். எந்த காரணத்தால் வியாதி வருகிறது என்பதை கண்டுபிடிக்க முடியாத நிறைய வியாதிகள் idiopathic என்பதன்கீழ் வரும். அந்தந்த பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளிக்கலாமே தவிர, அதற்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியாது.


நுரையீரலில் வரும் நோய்களை அறிகுறிகள் மூலம் கண்டறிதல்

ஆஸ்துமாவுக்கும், காசநோய்க்கும், நுரையீரல் புற்றுநோய்க்குமுள்ள வேறுபாட்டை கண்டறிவது எப்படி? இவற்றிற்கு முழுமையான தீர்வு கிடையாதா?

மூன்றுமே வேறு வேறு பிரச்சினைகள் என்றாலும் ஒருவருக்கு இதில் ஒரு வியாதி இருந்தால் இன்னொன்று இருக்காது என்று சொல்லமுடியாது. அதேசமயம் இரண்டு வியாதிகளும் சேர்ந்தும் இருக்கலாம், தனித்தனியாகவும் இருக்கலாம். அதாவது காசநோய் இருப்பவர்களுக்கு ஆஸ்துமா வரலாம், அதேபோல் ஆஸ்துமா இருப்பவர்களுக்கு காசநோய் வரலாம். இவை இரண்டுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. ஆஸ்துமா குளிர், மழை போன்ற காலங்களில் அதாவது சில சமயம் இருக்கும், சில சமயங்களில் இருக்காது. இந்த பிரச்சினையால் காய்ச்சலோ, எடை குறைவோ, பசி குறைபாடோ இருக்காது. ஆனால் காசநோயில் எப்போதும் இருமல், தும்மல் இருக்கும், சளியில் ரத்தம் கலந்து வரும், அடிக்கடி காய்ச்சல் வரும், பசி குறைவாக இருக்கும், எடை குறைந்துவிடும். காசநோய் பாக்டீரியா கிருமியால் வரக்கூடியது. அதற்கு 6 மாதங்கள் மாத்திரை எடுத்தால் குணமாகிவிடும். ஆனால் ஆஸ்துமா எப்போது வருகிறது? எந்த காரணத்தால் வருகிறது? என்பதை கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படும்.

ஆஸ்துமா, காசநோய் ஆகிய இரண்டின் அறிகுறிகளுடனும் நுரையீரல் புற்றுநோய் வரலாம். இதற்கான சிகிச்சை முற்றிலும் மாறுபட்டது. புற்றுநோய் எந்த ஸ்டேஜில் இருக்கிறது என்பதை பொருத்து சிகிச்சை மாறும்.

புகைபிடிக்கும் எல்லோருக்குமே கேன்சர் வருமா?

அப்படி சொல்லமுடியாது. ஆனால் கேன்சர் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். புகைபிடிக்காதவர்களைவிட புகைபிடிப்பவர்களுக்கு 60லிருந்து 80% கேன்சர் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. அதேசமயம் புகைபிடிக்காதவர்களுக்கும் நுரையீரல் கேன்சர் வரலாம். வீட்டில் ஒருவர் புகைபிடிப்பதால் வீட்டிலுள்ள மற்றவர்களுக்கும் (Passive smoking) பாதிப்பு ஏற்படும்.


புகைபிடிப்பதால் நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம்

நுரையீரல் புற்றுநோய்க்கான காரணிகள் மற்றும் அறிகுறிகள் என்னென்ன? அதை தடுப்பது எப்படி?

நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான சில முக்கிய காரணிகள் இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று புகைபிடித்தல். Asbestos exposure இருப்பவர்கள், குறிப்பிட்ட தொழிற்சாலைகளில் வேலைசெய்வோர் போன்றோருக்கும் நுரையீரல் புற்றுநோய் வரலாம். சிலருக்கு பரம்பரை வியாதியாகவும் இது இருக்கும். இது 70லிருந்து 80% தான். மீதமுள்ள 20% பேருக்கு idiopathic என்று சொல்லக்கூடிய காரணமே தெரியாமல் இருக்கும். கேன்சரில் நிறைய வகைகள் இருக்கின்றன. small cell cancer மற்றும் non small cell cancer என்று சொல்லப்படுகிறது. இதில் non small cell cancer-லேயே அடினோகார்சினோமா(adenocarcinoma) மற்றும் squamous cell carcinoma என இரண்டு வகைகள் இருக்கின்றன. இதில் அடினோகார்சினோமா என்பது புகைப்பிடிக்காத பெண்களுக்கு நுரையீரலில் கட்டி போன்று இல்லாமல் நீர் கோர்த்தது போன்று வரக்கூடிய புற்றுநோயாகும்.

அனைத்துவிதமான கேன்சருக்கும் 4 நிலைகள் பொருத்து சிகிச்சை அளிக்கப்படும். முதல் 2 நிலைகளுக்கு அறுவை சிகிச்சை செய்து கீமோதெரபி அளித்து குணமாக்கிவிடலாம். ஆனால் முதல் 2 நிலைகளில் நிறையப்பேர் சிகிச்சைக்கு வருவதில்லை. 3 மற்றும் 4-ஆம் நிலைகளில் வரும்போது பெரும்பாலும் அறுவைசிகிச்சை செய்யமுடியாது. இந்த நிலைகளில் உடலின் மற்ற உறுப்புகளுக்கும் கேன்சர் பரவிவிடும். அப்போது குணப்படுத்த முடியாது என்பதால் நோயாளிக்கு வலியை குறைக்கக்கூடிய சிகிச்சைகள்தான் அளிக்கப்படும். கேன்சர் சிகிச்சையில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. உலக அளவில் இறப்பு விகிதம் அதிகமாக இருக்கக்கூடிய கேன்சர் என்றால் அது நுரையீரல் கேன்சர்தான். எனவே சளியில் ரத்தம் வருதல், எடை குறைவது போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி முன்கூட்டியே பிரச்சினையை கண்டறிவது நல்லது.


நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையின் சாத்தியக்கூறுகள்

நுரையீரல் fibrosis என்பது என்ன பிரச்சினை?

இதை industrial lung disease (ILD) என்று சொல்வர். Idiopathic pulmonary fibrosis என்பதுதான் உலகளவில் பொதுவான பிரச்சினை. புகைபிடிக்கும் ஆண்களுக்கு இந்த பிரச்சினை அதிகமாக வரும். இதை 100% குணப்படுத்தமுடியாது. ஆனால் குறைக்கமுடியும். இந்த பிரச்சினை அதிகமானால் நுரையீரல் மாற்று அறுவைசிகிச்சை செய்யவேண்டி இருக்கும். 300க்கும் மேலான வியாதிகள் ILD-க்குள் வரும். அதில் IPF-உம் ஒன்று. நோயெதிர்ப்பு பிரச்சினை, மூட்டு வலி போன்ற காரணங்களாலோ அல்லது சில மாத்திரைகளாலோ, கேன்சர் சிகிச்சைகளாலோ, குறிப்பிட்ட வேலைகளாலோ, பரம்பரையாகவோ நுரையீரல் சுருக்கம் வரலாம். இதுபோன்ற காரணங்களை பொருத்து சிகிச்சையும் மாறுபடும். IPF பிரச்சினைக்கு சிகிச்சைகள் குறைவாகத்தான் இருக்கின்றன. அதுவே நோயெதிர்ப்பு சக்தி குறைபாட்டு மூட்டு பிரச்சினையால் வரக்கூடிய நுரையீரல் சுருக்கத்துக்கு நல்ல சிகிச்சைகள் இருக்கின்றன. மூட்டுக்கு எடுக்கக்கூடிய சிகிச்சையே நுரையீரலுக்கும் வேலை செய்யும்.

நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை சாத்தியமானதா? அதில் சாத்தியக்கூறுகள் எவ்வளவு?

கல்லீரல், சிறுநீரகம் போன்றே நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையும் நிறைய இடங்களில் செய்யப்படுகிறது. உயிரோடு இருக்கும் நபரிடமிருந்து கல்லீரல், சிறுநீரகம் போன்றவற்றை பெறமுடியும். ஆனால் நுரையீரலை இறந்தவரிடமிருந்தோ அல்லது மூளைச்சாவு ஏற்பட்டவரிடமிருந்தோதான் பெறமுடியும். இதில் சவாலான விஷயம் என்னவென்றால், டிரான்ஸ்ப்ளான்ட் சென்டரில் ஒரு நோயாளி பதிவு செய்யும்போது, பல விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அதில் யாருக்கு உடனடியாக தேவைப்படுகிறதோ அவர்களுக்கு யாராவது நுரையீரல் தானமாக கொடுக்கும்போது கொடுக்கப்படும். அப்படியே கிடைத்தாலும் அந்த நுரையீரல் நோயாளிக்கு மேட்ச் ஆகவேண்டும். அறுவை சிகிச்சை செய்தபிறகும் உடல் அதை நிராகரிக்காமல் இருப்பதற்கு தடுப்பு சக்தியை குறைக்கும் மருந்துகள் கொடுக்கப்படும். அந்த மருந்தை எடுத்துக்கொள்ளும்போது தொற்று வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே இவை இரண்டையும் சமநிலையில் வைத்திருக்கவேண்டும். எனவே கல்லீரல், சிறுநீரக மாற்றுடன் ஒப்பிடும்போது நுரையீரலுக்கான சாத்தியக்கூறுகள் கொஞ்சம் குறைவு. 40 வருடங்களுக்கும் மேலாக மற்ற மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் அவற்றில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் 1980-இல்தான் கனடாவில் முதன்முதலில் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இப்போது அதில் முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகிறது.

Updated On 24 Dec 2024 12:01 AM IST
ராணி

ராணி

Next Story