இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

உடலில் நோய் வருவதற்கு 80 சதவீதத்திற்கும் அதிகமான காரணம் வாய் சுத்தமின்மைதான். சாதாரண பல் சொத்தைதானே என்று விட்டுவிட்டால் அதுவே பின்னாளில் கேன்சர் வரைகூட கொண்டுசென்று விட்டுவிடும் என எச்சரிக்கிறார் பிரபல பல் மருத்துவர் ஐஸ்வர்யா அருண்குமார். மேலும் பற்கள் சொத்தையாகும்போதும் அல்லது தானாக விழும்போதும் என்னென்ன மாதிரியான சிகிச்சைகளை மேற்கொள்ளலாம் என்றும், இம்ப்ளான்ட் சிகிச்சைமுறையில் உள்ள நன்மை தீமைகள் குறித்தும் நமக்கு தெளிவாக எடுத்துரைக்கிறார் அவர்.

பல் பிரச்சினைகளை ஆரம்பத்தில் சரிசெய்யாமல் விட்டுவிட்டு பின்னர் நிலைமை மோசமாகும்போது சரிசெய்தால் சந்திக்கவேண்டிய பிரச்சினைகள் என்னென்ன?

பல் சிகிச்சை காஸ்ட்லி கிடையாது. ஆனால் அதை ஆரம்பத்தில் பார்க்காமல் விட்டுவிட்டு பின்னர் சரிசெய்யும்போது அதிக செலவு செய்யவேண்டிய நிலை ஏற்படுவதுடன், வலியும் மிக அதிகமாக இருக்கும். உதாரணத்திற்கு, பல் சொத்தைக்கு ஆரம்பத்திலேயே மருத்துவரிடம் சென்று காட்டினால் சொத்தையை சுத்தம் செய்து, பல்லின் தன்மைக்கு ஏற்ப ஃபில்லிங் செய்துவிடுவார்கள். இதில் வலி அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலைமை மோசமாகும்போது ரூட் கேனால் செய்யவேண்டி இருந்தாலோ அல்லது பல்லை எடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டாலோ வலி அதிகமாக இருக்கும். ஆனால் இப்போது வலி குறைக்கும் சிகிச்சை முறைகள் வந்துவிட்டன.

40 வயதை கடந்த சிலருக்கு பற்கள் தானாகவே நுணுங்கி கொட்டிவிடுவதாக சொல்கிறார்கள். இது எதனால்?

இதற்கு காரணம் சொத்தைதான். சொத்தை வெளியே தெரியாமல் பல்லில் ஓட்டை மட்டும் இருக்கும். அந்த ஓட்டையில் உணவு துகள்கள் மாட்டி மாட்டி, படிப்படியாக நுணுங்கி, பல் இருந்த அடையாளமே தெரியாமல் கடைசியில் வேர்க்கால்கள் மட்டும் இருக்கும்.


பல் சொத்தையை ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால் ஏற்படும் பிரச்சினைகள்

நிரந்தர செயற்கை பற்களை பொருத்தினால் தொற்றுகள் வராதா? அவற்றை பராமரிப்பது எப்படி?

ஒரு பல் கூட வாயில் இல்லை என்பவர்களுக்கு இரண்டு வகையில் பற்களை பொருத்தலாம். ஒன்று, எல்லாருக்கும் தெரிந்த கழற்றி மாட்டும் பல் செட். கழற்றி மாட்ட விரும்பாதவர்களுக்கு, ஒவ்வொருவரின் பல்லுக்கு அடியிலிருக்கும் எலும்புக்கு ஏற்றவாறு மேல் மற்றும் கீழ்ப்பகுதி என 4 அல்லது 6 இம்ப்ளான்ட்ஸ் போட்டு அனைத்து பற்களையும் கட்டலாம். ஆனால் இதை நன்றாக பராமரிக்க வேண்டும். ஒருசிலருக்கு இயற்கை பற்கள் பலவீனமாகி ஆடி விழுந்திருக்கும். அதுபோல் நன்றாக பராமரிக்காதவர்களுக்கு இம்ப்ளான்ட் பற்களிலும் பிரச்சினைகள் வரும். இம்ப்ளான்ட் போட்டதால் சிலர் பல் துலக்காமலேயே இருப்பார்கள். அப்படியிருந்தால் இம்ப்ளான்ட் கழன்று கையோடு வந்துவிடும். எனவே இம்ப்ளான்ட்டை சுற்றி அழுக்கு சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படி அழுக்கு சேரும்போது இம்ப்ளான்ட்டை சுற்றி உருவாகும் எலும்புகள் சரியாக உருவாகாது. அப்படி எலும்புகள் சரியாக உருவானபிறகும் நன்றாக பற்களை துலக்கி சுத்தமாக வைக்காவிட்டால் ஏற்கனவே உருவாகியிருக்கும் எலும்புகள் பலவீனமடைந்து இறங்க ஆரம்பித்து, இம்ப்ளான்ட்டை பலவீனமாக்கிவிடும். அதேபோல் இம்ப்ளான்ட் செய்தபிறகு புகைபிடித்தால் அதுவும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இம்ப்ளான்ட் மூலம் பற்களை கட்ட எவ்வளவு செலவாகும்?

முதலில் எத்தனை இம்ப்ளான்ட் போடுகிறோம் என்பதை பார்க்கவேண்டும். மேலும் இம்ப்ளான்ட்ஸில் பல ப்ராண்டுகள், வகைகள் மற்றும் விலைகள் இருக்கின்றன. அதிகம் செலவழிக்க முடியாதவர்கள் இலவசமாக சிகிச்சையளிக்கும் கல்லூரிகளுக்குச் சென்று பல்லை கட்டிக்கொள்ளலாம்.


இம்ப்ளான்ட் பல் பொருத்தியவர்கள் புகைபிடிக்கக்கூடாது

இயற்கை பற்களால் கடினமான உணவுகளை சாப்பிட்டதை போன்று இம்ப்ளான்ட் பற்களாலும் சாப்பிட முடியுமா?

நாம் ஒரு புது செருப்பை வாங்கி பயன்படுத்தும்போது ஆரம்பத்திலேயே செட்டாகாது. அதுபோலத்தான் இம்ப்ளான்ட்டும். ஆரம்பத்தில் சாஃப்ட்டான இட்லி, இடியாப்பம் போன்றவற்றை சாப்பிட்டு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சாதம், சப்பாத்தி, பூரி என சாப்பிட ஆரம்பிக்க வேண்டும். இம்ப்ளான்ட் செட் ஆன பிறகு அனைத்து உணவுகளையுமே சாப்பிடலாம்.

உடலில் எவையெல்லாம் பற்கள் தொடர்புடையவை? பல்லில் ஒரு பிரச்சினை ஏற்பட்டால் அது உடலில் எங்கெல்லாம் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்?

உடலில் எங்கு வேணாலும் பக்கவிளைவுகள் ஏற்படலாம். நமது உடலுக்கு தேவையான எனர்ஜியை நாம் சாப்பிடும் உணவு கொடுக்கிறது. அந்த உணவு செரிப்பதில் முக்கியப்பங்கு வகிப்பவை பற்கள். பற்கள் இல்லாவிட்டால் சரியாக மென்று சாப்பிடமுடியாது. அதனால் செரிமானம் ஆவதில் சிக்கல் ஏற்படும். வாயில் புண் இருந்தால் வயிற்றில் அல்சர் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே பற்களை பாதுகாக்காவிட்டால் பல்வேறு பிரச்சினைகள் வர வாய்ப்புகள் இருக்கின்றன.


வாய்ப்புண்ணால் வயிற்றில் உருவாகும் அல்சர்

பல்லுக்கும், இதயத்துக்கும் உள்ள தொடர்பு என்ன? பல் சொத்தையால் ஹார்ட் அட்டாக் வர வாய்ப்பு இருக்கிறதா?

பல்லில் இருக்கும் சொத்தையை கண்டுகொள்ளாமல் விட்டால் அதனால் ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் அதனால் கட்டாயம் வரும் என்று சொல்லமுடியாது.

பற்களை அழகாக்க மேற்கொள்ளப்படும் சிகிச்சைகளால் உடலுக்கு பிரச்சினைகள் வருமா?

பற்கள் வரிசையாக இல்லை, பற்களின் நடுவே இடைவெளி இருக்கிறது அல்லது முன்பகுதியில் இருக்கும் பற்கள் உடைந்து அசிங்கமாக இருப்பதாக சொல்லும் நிறையப்பேர் சிகிச்சைக்கு வருவதுண்டு. பற்களை வரிசைப்படுத்த கம்பி கட்டலாம் அல்லது கழற்றி மாற்றும் அலைனர்களை பயன்படுத்தலாம். இதில் முழுமையான ரில்சட் கிடைக்க கிட்டத்தட்ட 2 வருடங்கள் ஆகும். ஆனால் ஒருசிலர் முன்பக்க பற்கள் மட்டும் உடைந்திருக்கிறது அல்லது இடைவெளி இருக்கிறது என்றும் அதனை உடனே சரிசெய்ய வேண்டுமென்றும், க்ளிப் போட நேரமில்லை என்றும் கேட்பதுண்டு. அவர்களுக்கு லேமினேட் ஒட்டி பற்களை வரிசைப்படுத்தியதுபோன்று காட்டலாம். இந்த சிகிச்சையை முறையாக செய்யும்போது 10-15 வருடங்கள் அப்படியே இருக்கும்.

பற்களை வாரத்திற்கு ஒருமுறை என அடிக்கடி சுத்தம் செய்தால் எனாமல் போய்விடாதா?

வாரத்திற்கு ஒருமுறை பற்களை சுத்தம் செய்வது கிடையாது. அதற்கான அவசியமும் கிடையாது. பல் மருத்துவரிடம் 6 மாதத்திற்கு ஒருமுறை சென்று சுத்தம் செய்தாலே போதுமானது.


பல் சொத்தையால் ஹார்ட் அட்டாக் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு

வாய் புற்றுநோய்க்கும் பல்லுக்கும் தொடர்பு உள்ளதா?

பல்லினாலும் புற்றுநோய் வர வாய்ப்புகள் உள்ளன. சில பல் உடைந்து வேர்கள் மட்டும்தான் இருக்கும். அதை மருத்துவர்கள் எடுக்கச் சொன்னாலும் சிலர் எடுக்காமல் விட்டுவிடுவார்கள். மேலே பல் இருக்கும்போது வலி தெரியும். ஆனால் வேர் மட்டும் இருக்கும்போது அதில் தொற்று ஏற்பட்டாலும் வலி இல்லாத காரணத்தால் அந்த தொற்றானது உள்பகுதியில் பரவி கேன்சராக மாற வாய்ப்புகள் இருக்கின்றன. மேற்பகுதி பல் போனபிறகு வேர்க்கால்களை மட்டும் எடுக்கச்சொல்லி ஒரு நபரிடம் சொல்லியும் எடுக்காததால் 5 வருடங்கள் கழித்து அந்த வேர்க்காலின் கீழ்ப்பகுதியில் காலிஃப்ளவர் அளவிற்கு கட்டி உருவானது. அதை பரிசோதித்து பார்த்தபோது கேன்சர் இருப்பது உறுதியானது. வேர்க்கால்களை முன்பே நீக்கியிருந்தால் கேன்சரே வந்திருக்காது. சிலருக்கு எலும்பு இருக்கும் பகுதியில் கேன்சர் உறுதியானால் எலும்பையே நீக்கவேண்டிய கட்டாயம் ஏற்படும்.

விபத்தால் தாடைப்பகுதியில் பாதிப்பு ஏற்படுவோருக்கு என்னென்ன மாதிரியான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன?

பற்கள் விழுந்துவிட்டால் பல் கட்டுவதுதான் சரியான வழி. தாடையை அழகுபடுத்த சரிசெய்ய நினைத்தால் அதற்கான சிகிச்சை முற்றிலும் வேறுபட்டது. அதுவே விபத்தில் தாடை உடைந்திருந்தால் அதனை உடனடியாக சரிசெய்யவேண்டும்.


6 மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரிடம் சென்று பரிசோதிப்பது அவசியம்

முதன்முதலாக பல் சிகிச்சைக்கு வர நினைப்போருக்கு உங்களுடைய அட்வைஸ் என்ன?

ஆறு மாதங்களுக்கு ஒருமுறையாவது பல் மருத்துவரிடம் சென்று பற்களை காட்டவேண்டும். அப்படி காட்டும்போது சொத்தை சிறிதாக இருந்தாலே அவர் சொல்லிவிடுவார். அதனை உடனடியாக சரிசெய்துவிடலாம். நிறையப்பேர் பல் வலி வந்தால் மட்டுமே மருத்துவரிடம் செல்வார்கள். ஆனால் ரெகுலர் செக்கப்பிற்கு சென்றால் வலி வருவதை தவிர்க்கலாம்.

கட்டாயம் பின்பற்றவேண்டிய பல் பராமரிப்பு பற்றி கூறுங்கள்!

காலை, இரவு இரண்டு வேளையும் பல் துலக்க வேண்டும். அதுபோக ஃப்ளாஸ் என்னும் ஒரு கயிறு போன்ற அமைப்பை பயன்படுத்தி பற்களுக்கு இடையே சுத்தப்படுத்த வேண்டும். குறிப்பாக கீரை போன்ற உணவுகளை சாப்பிடும்போது இதுபோன்று செய்வது நல்லது. இதனால் பற்களுக்கு இடையே சொத்தை வராமல் தடுக்கமுடியும். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரை அணுகி பரிசோதிப்பது நல்லது.

Updated On 2 Dec 2024 6:13 PM IST
ராணி

ராணி

Next Story