இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

ஒருவரை பார்த்ததும் உடனே கவனம் ஈர்க்கக்கூடிய பற்களை அழகாகவும், முறையாகவும் பராமரிக்கவேண்டும் என்ற ஆசை நம் அனைவருக்குமே இருக்கும். ஆனால் பல்லில் பிரச்சினை வந்தால் மட்டும்தான் நாம் பல் மருத்துவரை சென்று பார்க்கிறோம். அதுவரை பற்கள்குறித்து அதிக கவனம் செலுத்துவதில்லை. நாம் நம்முடைய பற்களை சீராக பராமரிக்க என்னென்ன அதிநவீன சிகிச்சைகள் வந்திருக்கின்றன என்பது குறித்து நம்முடன் உரையாடுகிறார் பல் மருத்துவர் ஹரிஹரன். மேலும் இவர் சினிமாக்களிலும் பணியாற்றிவருவதால், நடிகர்களுக்கு குறிப்பிட்ட கதாபாத்திரங்களுக்காக பிரத்யேக பற்கள் மற்றும் பல் செட்கள் செய்த அனுபவத்தையும் பகிர்கிறார்.

தெத்துப்பல் என்று சொல்லக்கூடிய தூக்கியிருக்கும் முன்பல்லை கட்ட அட்வான்ஸுடு சிகிச்சைமுறைகள் வந்திருக்கிறதா?

எல்லாத்துறைகளிலுமே முன்னேற்றங்கள் ஏற்படுவதைப் போன்றே orthodontics-லும் நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. முன்பெல்லாம் ஒவ்வொரு பல்லிலும் ஒரு ப்ராக்கெட் ஒட்டி, அதன்மீது கம்பி பொருத்தி, அதன்மீது ரப்பர்பேண்டு போடப்படும். அதை 4 நாட்களுக்கு ஒருமுறை மாற்றவேண்டும். ஆனால் இப்போது ரப்பர்பேண்டு இல்லாமல், built-in chain elastics பயன்படுத்தப்படுகின்றன. அதிலும் மெட்டல், செராமிக் என சில வகைகள் இருக்கின்றன. பார்ப்பதற்கு வெளியே அவ்வளவு தெரியக்கூடாது என நினைப்பவர்கள் செராமிக் தேர்ந்தெடுக்கிறார்கள். அதுவே தெரியவே கூடாது என நினைப்பவர்கள் வெளியே ஒட்டுவதற்கு பதிலாக அதையே உட்புறத்தில் ஒட்டிக்கொள்கிறார்கள். இதற்கு லிங்குவல் என்று பெயர். அதுபோக, கடந்த சில வருடங்களில் பிரபலமாகி வருகின்றன அலைனர்ஸ். இது முழுக்க முழுக்க ட்ரான்ஸ்ப்ரன்ட்டாக இருப்பதால் சுத்தமாக வெளியே தெரியாது. இதை 10 நாட்களுக்கு ஒருமுறை மாற்றிக்கொண்டே இருக்கவேண்டும். ஒவ்வொருவரின் பல்லையும் 3டி ஸ்கேன் செய்து அதற்கேற்றாற்போல் எத்தனை நாட்களுக்கு அலைனர்ஸ் பயன்படுத்தவேண்டுமென பரிந்துரைக்கப்படும். இதில் கம்பி மாட்டுவதில் வரக்கூடிய அசௌகர்யங்கள் இருக்காது என்றாலும் இதற்கு கூடுதல் செலவாகும்.

பல் இம்ப்ளாண்ட் செய்வதில் என்னென்ன அட்வான்ஸ்டு சிகிச்சை முறைகள் வந்திருக்கின்றன?

பல் இல்லாத இடத்தில் பொருத்தக்கூடியவை இம்ப்ளாண்ட்ஸ். ஒரு பல்லிற்கு வேர் முக்கியம். பல் இல்லாத இடத்தில் மெட்டலால் ஆன ஒரு டைட்டானியம் ஸ்க்ரூவை வேராக பொருத்தி, அது பதிந்து செட் ஆனபிறகு 3 மாதங்கள் கழித்து பல் பொருத்தப்படும். இதிலும் அட்வான்ஸ்டு சிகிச்சைகள் இருக்கின்றன. 3 மாதங்கள் காத்திருக்க முடியாதவர்களுக்கு மூன்றே நாட்களில்கூட பல்லை பொருத்தமுடியும்.


ப்ரேஸ் போட்டிருப்பது வெளியே தெரியாமல் இருக்க பயன்படுத்தும் ட்ரான்ஸ்பரன்ட் ப்ரேஸ் மற்றும் டூத் அலைனர்ஸ்

பல்லில் நிறமாற்றம் எதனால் ஏற்படுகிறது?

பல் சொத்தை ஆகும்போது அதை கவனிக்காமல் விட்டுவிட்டால் அது கருப்பாகிவிடும். அது சொத்தையால் வரக்கூடியது. மற்றபடி ஃப்ளூரோசிஸ் என்ற ஒரு நிலை இருக்கிறது. தமிழ்நாட்டில் சேலம், தருமபுரி போன்ற மாவட்டங்களில் நிலத்தடி நீரில் ஃப்ளூரைடு அதிகமாக இருக்கும். உடலுக்கு தேவையான ஃப்ளூரைடைவிட அதிகமாக ஃப்ளூரைடை எடுத்துக்கொள்ளும்போது அது எனாமல் மற்றும் பல்லைச் சுற்றிலும் தேங்கிவிடும். இதை ஃப்ளூரோசிஸ் என்கின்றனர். அதற்கு cap or veneer போட்டுதான் மாற்றமுடியும். க்ளீன் செய்து எடுக்கமுடியாது. பான் மசாலா, புகைப்பிடித்தல் போன்ற பழக்கங்களால் ஏற்படக்கூடிய கறையை குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை சுத்தம்செய்தால் போய்விடும். சிலருக்கு க்ளீன் செய்தாலும் சரியாகவில்லை என்றால், ப்ளீச் செய்து சரி செய்யப்படும்.

ரூட் கேனால் செய்து பல் வைக்கும்போது எத்தனை நாட்களுக்கு ஒருமுறை அதை பரிசோதிக்கவேண்டும்?

6 மாதம் அல்லது வருடத்திற்கு ஒருமுறை பல் மருத்துவரிடம் சென்று பரிசோதிப்பது நல்லது. ஆனால் சிறந்த முறையில் ரூட் கேனால் செய்து நல்ல கேப் பொருத்திவிட்டால் அதை அடிக்கடி பரிசோதிக்கவேண்டிய அவசியமில்லை. சாதாரண பல்லை போன்று தினமும் இரண்டு வேளை பல் துலக்கி பராமரித்துவந்தாலே போதுமானது. ஏனென்றால் அந்த பற்கள் 20 முதல் 30 வருடங்கள் வரை நன்றாக இருக்கும்.

சாப்பிடும்போது உணவுத்துகள்கள் ரூட் கேனால் செய்த பற்களில் மாட்டிக்கொண்டால் வாய்ப்புண் அல்லது பிற தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறதா?

உணவுத்துகள்கள் அதிகளவில் அந்த பற்களில் சிக்குகிறது என்றாலே உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதித்து உணவுத்துகள்கள் மாட்டாத வகையில் வேறு மாதிரி கேப் பொருத்திக்கொள்ளலாம். எனவேதான் ஒவ்வொரு பல்லிற்கு மேலும் தனித்தனியாக கேப் போடுவதற்கு பதிலாக அனைத்தையும் இணைத்து bridge போட்டு ஒரே கேப்பாக போட்டால் இந்த பிரச்சினை இருக்காது.


நிறம் மாறிய பற்களை ப்ளீச்சிங் செய்து வெண்மையாக்குதல்

பற்களை வலிமையாகவும், ஆரோக்கியமாகவும் பராமரிக்க பின்பற்ற வேண்டியவை என்னென்ன?

குழந்தை பருவத்திலிருந்தே பற்களை முறையாக துலக்கி சுத்தமாக வைத்திருந்தாலே போதுமானது. அதேசமயம், வரிசையாக இல்லாத பற்களை க்ளிப் போட்டு சரிசெய்துவிட வேண்டும். இல்லாத பற்களை பொருத்திக்கொள்ள வேண்டும். பற்கள் முழுமையாக நல்ல நிலைமையில் இருந்தால் 100 வயது வரை நன்றாக இருக்கும்.

பற்களை வெண்மையாக்க வீட்டிலேயே ஏதாவது செய்யமுடியுமா?

பற்களை வீட்டிலேயே வெண்மையாக்க வழிகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. எதனால் பல்லின் நிறம் மாறியிருக்கிறது என்பதை கண்டறிந்து அதை மருத்துவரிடம் சென்று காண்பித்து சரிசெய்துகொள்ளவேண்டும்.

பல் மருத்துவத்தில் உங்களுக்கு ஆர்வம் வந்தது எப்படி?

நான் பல் மருத்துவராக வேண்டுமென்று எப்போது ஆசைப்பட்டேன் என்று எனக்கே தெரியாது. நான் 6ஆம் வகுப்பு படித்தபோதே எழுதச்சொன்ன கட்டுரையில்கூட நான் பல் மருத்துவர் ஆகவேண்டும் என்றுதான் எழுதினேன். என்னுடைய பள்ளி மேலாளரும் என் அப்பாவின் பேஷண்ட் என்பதால் பல் மருத்துவரின் பையன் இப்போதே தானும் பல் மருத்துவர் ஆகவேண்டுமென்று நினைக்கிறான் என்று சொன்னார். 1962இல் இருந்தே என் அப்பாவும் பல் மருத்துவராக பணிபுரிந்தவர்.


நடிகர்கள் நம்பியார் & கார்த்திக்கு திரைப்படங்களுக்காக செய்யப்பட்ட செயற்கை பற்கள்

உங்களுடைய அப்பா காலத்திலிருந்தே நிறைய சினிமா பிரபலங்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறீர்கள். அப்பா சினிமாவிலும் பணிபுரிந்திருக்கிறார். அதுகுறித்து அப்பா உங்களிடம் பகிர்ந்துகொண்ட நினைவுகள் இருக்கிறதா?

நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் ஒரு சண்டைக்காட்சிக்காக நம்பியார்சாமிக்கு அப்பா ஒரு தங்க கோரைப்பல் பொருத்தினார். அந்த படம் முடிந்து வெளியானபிறகு, என்னை கூப்பிட்டு அந்த காட்சியை அவரிடம் நடித்துக்காட்ட சொன்னார். அந்த பல்லைக்கூட பல வருடங்களாக அப்பா வைத்திருந்தார்.

இதுபோன்ற பற்களை உருவாக்க எவ்வளவு நாட்களாகும்?

இயக்குநர் கேட்பதை பொருத்து அதை எப்படி செய்தால் நன்றாயிருக்கும் என 2, 3 மாடல்களை செய்துகொடுப்போம். அதில் எது பொருத்தமாக இருக்கிறதோ அதை இயக்குநர் தேர்ந்தெடுப்பார். சமீபத்தில் ‘கங்குவா’ படத்திற்கு நான் கார்த்திக்கு தங்கப்பல் செய்துகொடுத்திருக்கிறேன். இதுபோல் செய்ய நிறைய யோசித்து மெனக்கெட வேண்டி இருக்கும்.

சாதாரணமாக செயற்கை பற்கள் உருவாக்குவதற்கும் சினிமாவுக்காக செய்வதற்கும் உள்ள வித்தியாசம் மற்றும் சிரமங்கள் என்ன?

சிரமம் என்று கிடையாது. அளவெடுக்கும் முறையானது இரண்டுக்குமே ஒரேமாதிரிதான் இருக்கும். ஆனால் சினிமாவுக்காக செய்யப்படும் பல்லுக்கு அத்தியாவசிய தேவை இருக்காது. அதுவும் ஒரு ஸ்பெஷல் எஃபெக்ட் போன்றதுதான். ஒரு படத்தில் ராதா ரவி சாருக்கு கொடூரமான வில்லன் கதாபாத்திரத்துக்காக, கீழ்தாடை வெளியே இருப்பதுபோன்று பல் செட்டப் செய்திருந்தேன். அதேபோல் காமெடி நடிகர் சதீஷுக்கு ஒரே படத்தில் வெவ்வேறு கெட்டப்களுக்காக 2, 3 பல் செட்டப் செய்திருந்தேன். அது பார்ப்பதற்கே சிரிப்பாக இருந்தது. ‘அரவாண்’ படத்தில் அனைத்து கதாபாத்திரங்களுக்குமே பற்கள் கருப்பாக இருக்கும். அதற்காக அனைவருக்குமே செட் பற்கள் செய்திருந்தோம். அதுபோல் கதாபாத்திரங்கள் மற்றும் இயக்குநர்களின் தேவைக்கேற்ப செய்து தரப்படும். இதுபோன்ற பற்கள் செய்ய குறைந்தது 15 முதல் 20 நாட்கள் தேவைப்படும். சண்டைக் காட்சிகளில் சிலருக்கு பற்கள் உடைந்துவிடும். அவர்களுடைய பழைய தோற்றத்தை கொண்டுவர முன்பிருந்தது போன்றே பற்கள் செய்து பொருத்தப்படும். ‘ஆணை’, ‘கண்களால் கைது செய்’ போன்ற படங்களில் டாக்டராகவே சிறிய ரோலில் நடித்திருக்கிறேன்.


திரைப்பிரபலங்களுக்கு பல் சிகிச்சை அளித்த அனுபவம்

பல் மருத்துவத்துறையில் என்னென்ன சிகிச்சைமுறைகள் புதிதாக வந்துள்ளன?

பல் சீரமைப்பதில் அலைனர்ஸ்தான் இப்போது ட்ரெண்டில் இருக்கின்றன. முன்பெல்லாம் பல் விழுந்துவிட்டாலோ உடைந்துவிட்டாலோ பல் செட் கொடுக்கப்படும். ஆனால் இப்போது நிரந்தர இம்ப்ளாண்ட் செய்யப்படுகிறது. வாய்க்குள் வரக்கூடிய வீக்கம் போன்ற கட்டிகளை கத்தி வைத்து எடுப்பதற்கு பதிலாக ஸ்ப்ரே செய்து எடுக்கக்கூடிய லேசர் சிகிச்சைகள் வந்துவிட்டன. இதனால் வலியே தெரியாது. அதுபோல் என்ன புது டெக்னாலஜி வந்தாலும் அதை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

பல் மருத்துவம் படிக்கவிரும்பும் மாணவர்களுக்கு உங்களுடைய அட்வைஸ் என்ன?

எந்த துறையை தேர்ந்தெடுத்தாலும் அதில் அர்ப்பணிப்புடன் இருக்கவேண்டும். 1962இல் என் அப்பா பல் மருத்துவராக க்ளினிக் ஆரம்பித்தபோது, பல்லுக்கெல்லாம் ஒரு டாக்டர் வந்துட்டான் என்று சொல்வார்களாம். அதையெல்லாம் தாண்டித்தான் இப்போது இந்த இடத்தில் இருக்கிறேன் என்று சொல்வார். அவர் சொன்னதைப்போன்று பொறுமையாக நமது வேலையை செய்துகொண்டே இருந்தால் அதற்கான பலன் கண்டிப்பாக கிடைக்கும்.

ஞானப்பல் நிறையப்பேருக்கு பிரச்சினையாக மாறுகிறதே ஏன்?

கீழே முளைக்கக்கூடிய ஞானப்பல்லானது நிறையப்பேருக்கு குறுக்காக வளரும். அதை வெளியே எடுக்கவேண்டுமானால் எலும்புகளையெல்லாம் நீக்கி எடுக்கவேண்டும். அது மிகப்பெரிய செயல்முறை. பொதுவாக ஒரு பல்லை எடுக்க 2 முதல் 3 நிமிடங்கள்தான் ஆகுமென்றால், இதுபோன்ற பற்களை எடுக்க 40 நிமிடங்கள்கூட ஆகும்.

பற்களுக்கு மெட்டல் பொருத்தும்போது அதை எப்படி கவனமுடன் கையாள்வது?

இப்போது மெட்டல் அதிகளவில் பயன்படுத்துவதில்லை. அப்படியே பொருத்தினாலும் நீண்ட நாட்கள் கழித்து அதன் நிறம் மாறும்.

Updated On 11 Feb 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story