மூளை அழுகல் நோய் யாருக்கெல்லாம் வரும்? தவிர்ப்பது எப்படி?
மனித உடலில் உள்ள உறுப்புகளில் மிக நுணுக்கமானதும், அதிசயமானதும் – மூளை. ஒரு கணத்தில் எண்ணத்தை உருவாக்கி, இன்னொரு கணத்தில் அதனை செயல்படுத்தும் இந்த அதிவேக அமைப்பை புரிந்து கொள்வது பெரும் சவாலான ஒன்றே. ஆனால், இந்த நுட்பமான உறுப்பில் ஏற்படும் பிரதான சிக்கல்களான மூளை கட்டி, வீக்கம், அழற்சி, புற்றுநோய் மற்றும் காக்க வலிப்பு போன்றவை அனைத்தும் ஒரே வார்த்தையில் சொல்லும் போது எளிதாகக் கேட்டாலும், அவற்றின் பின்னணி, தாக்கம் மற்றும் சிகிச்சைகள் தீவிர கவனத்தை பெறுகின்றன. அந்த வகையில் இந்த தொகுப்பில் நம்முடன் இணைந்து, மூளை பற்றிய விஷயங்களை தெளிவாகவும், பயமின்றி புரிந்து கொள்ளும் விதமாகவும் பல தகவல்களை பகிர்ந்துள்ளார் மூளை மற்றும் நரம்பியல் மருத்துவத்தில் சிறப்பு நிபுணத்துவம் பெற்ற மருத்துவர் சதீஷ் குமார்.
செல்போன்களை அதிக நேரம் பயன்படுத்துவதால் எந்தளவுக்கு மூளையில் பாதிப்புகள் ஏற்படுகின்றன?
செல்போன்களை வளர்ச்சிக்காக பயன்படுத்தினாலோ, தகவல் பரிமாற்றத்திற்காக பயன்படுத்தினாலோ பெரியளவில் எந்த பாதிப்பும் ஏற்பட போவதில்லை. ஆனால் சமீபகாலமாக சமூக ஊடகங்களின் மீது நமக்கு ஏற்பட்டுள்ள நாட்டத்தின் காரணமாக நம் மூளையை மழுங்கடிக்கக் கூடிய பதிவுகளையும், வீடியோக்களையும் தொடர்ந்து பார்த்து வருவதால், மூளையின் உண்மையான செயல் திறனை இழந்து வருகிறோம். இது ஒரு அடிக்ஷன் மனநிலைக்கு சென்று, நம்முடைய சிந்திக்கும் செயல்திறன் முற்றிலுமாக பாதிக்கப்படுகிறது. இதனை தவிர்க்கும் வகையில் செல்போன்களை அளவோடு பயன்படுத்துவது நல்லது.
செல்போன்களை அதிக நேரம் பயன்படுத்தினால் மூளையின் செயல்திறன் பாதிக்கப்படும் - மருத்துவர் சதீஷ்
நம் மூளையில் எந்த மாதிரியான பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளது? மூளையில் ஏற்படும் நோய்கள் குறித்து தெளிவாக சொல்ல முடியுமா?
பொதுவாக விபத்தினால் மூளையில் பாதிப்பு ஏற்பட்டு பிரச்சினைகள் வரலாம். இல்லையென்றால் கட்டிகளால் அல்லது மூளையில் உள்ள ரத்தக் குழாயில் ஏற்படும் பிரச்சினைகளால் பாதிப்புகள் வரலாம். இதில் ரத்தக் குழாய்களில் ஏற்படும் பாதிப்பில் இன்றைய சூழலில் பிரதானமாக இருப்பது ‘ஸ்ட்ரோக்’. இதை தவிர்த்து ஆட்டோ இம்யூன் நோய்கள் அதாவது நம்முடைய நோயெதிர்ப்பு அமைப்பு தவறான புரிதலால் நம் உடலைப் பாதுகாப்பதற்கு பதிலாக தாக்கும் போது ஏற்படும் பிரச்சினை மற்றும் பிறவியிலேயே இருக்கும் சில மூளை சார்ந்த சிக்கல் போன்றவையே மூளையில் ஏற்படும் மிக முக்கியமான நோய்களாக பார்க்கப்படுகிறது.
மூளையில் வரக்கூடிய கட்டிகளை எப்படி வித்தியாசப்படுத்துவீர்கள்? அதோடு இது சாதாரண கட்டியா அல்லது புற்றுநோய் கட்டியா என்பதை எப்படி வேறுபடுத்தி பார்ப்பீர்கள்?
பொதுவாக ரத்தக்கட்டு என்பது கட்டி வடிவில் வராது. அது பக்கவாத நோய் காரணியாகதான் உருமாறும். ஆனால் மூளையில் வரும் கட்டிகள் பல வகைகளில் உள்ளன. அது சாதாரண கட்டி, பிறவியிலேயே இருக்கக்கூடிய கட்டி, புற்றுநோய் கட்டி என பல விதங்களாக பிரிக்கப்படுகின்றன. இதில் மூளைக்கும் மற்ற உறுப்புகளுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால். மற்ற உறுப்புகளில் ஏற்படும் சாதாரண கட்டியை அப்படியே கூட விட்டு விடலாம். அது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால் மூளை அப்படி அல்ல, அது பாதிப்பை தரும். மேலும் சாதாரண கட்டியும், புற்றுநோய் கட்டியும் ஏற்படுத்தக் கூடிய சிக்கல் என்பது ஒன்றுதான். காரணம் அந்த கட்டி மூளையை அழுத்த அழுத்த உடலில் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இதனால் அந்த கட்டியை அகற்ற வேண்டியது கட்டாயம்தான். ஆனால் சாதாரண கட்டியை அகற்றிவிட்டால் மீண்டும் பிரச்சினை வராது. ஒருவேளை அது புற்றுநோய் கட்டி என்றால், மீண்டும் மீண்டும் கட்டிகள் வர அதிக வாய்ப்புள்ளது. அதனால் அதற்கேற்ற கதிரியக்கம் மற்றும் மருந்துகள் கொடுக்க வேண்டியது அவசியம். இந்த மாதிரியான கட்டிகள் வர, மரபணு கோளாறுகள் காரணமாக இருக்கின்றன.
மூளை கட்டிகளால் உண்டாகும் வலிகளை பிரதிபலிக்கும் படம்
மூளை வீக்கம் என்றால் என்ன? அந்த பிரச்சினையை நம்மால் குணப்படுத்த முடியுமா?
மூளை வீக்கம் என்பது, நமது பிற உறுப்புகளில் எப்படி அடிபட்டால் வீக்கம் வருகிறதோ அது போலதான். இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். தலையில் மோசமாக அடிபட்டதாலோ, மூளைக் காய்ச்சல் போன்ற நோய் பாதிப்புகளாலோ, சில சமயம் தற்கொலை செய்ய முயல்பவர்கள் தூக்கு போட்டு தப்பித்தாலோ, அதனால் மூளையில் பாதிப்பு ஏற்பட்டு கூட, மூளை வீக்கம் பிரச்சினை வரலாம். ஆனால் மூளைக்கும் மற்ற பகுதிக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், அடிபட்டு வீக்கம் ஏற்படும்போது மற்ற உறுப்புகள் வீங்கி பின் காயம் ஆறியவுடன் சாதாரண நிலைக்கு வர முடியும். ஆனால் மூளை அப்படி அல்ல. மூளை மண்டை ஓட்டுக்குள் பாதுகாப்பாக இருப்பதனால், இந்த மாதிரியான சிக்கல் வரும்போது அதனால் வீங்க முடியாது. இதனால் மருந்து கொடுத்து வீக்கத்தை குறைக்க முயலலாம். அல்லது உச்சபட்சமாக மண்டை ஓட்டை திறந்து மூளை வீங்குவதற்கான சூழலை உருவாக்கி, காயம் ஆறியவுடன் மீண்டும் மண்டை ஓட்டுக்குள் பாதுகாப்பாக வைத்துவிடலாம். இந்த இரண்டு வாய்ப்புகள் மட்டும்தான் இந்த பிரச்சனைக்கு தீர்வு.
மூளை தொடர்பான பரிசோதனை
காக்கா வலிப்பு பிரச்சினை எதனால் வருகிறது? அந்த நோய் உள்ளவர்கள் முழுமையாக அதிலிருந்து விடுபட முடியுமா?
காக்கா வலிப்பு பிரச்சினை என்பது மூளையின் மின்னியக்க வரைவு நகர்வில் ஏற்படும் பாதிப்பு காரணமாக வரும் சிக்கலாகும். அப்படி இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காக்கா வலிப்பு வரும்போது நாம் மிக கவனமாக இருக்க வேண்டும். வலிப்பு வரும்போது அவரை சுற்றி கூட்டம் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கையில் இரும்பு கொடுக்க தேவையில்லை. நல்ல ஆக்சிஜன் அவருக்கு கிடைக்கும்படி, எந்த பொருளிலும் அவர் அடிபட்டு கொள்ளாதவாறு பார்த்துக் கொண்டாலே, சில நிமிடங்களில் அவர் சகஜ நிலைக்கு திரும்பி விடுவார். இந்த நேரங்களில் நோயாளியை ஒருக்களித்து படுக்க வைப்பது நல்லது. அப்போதுதான் அவரது உமிழ்நீர் தொண்டைக்குள் சென்று மூச்சு திணறல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளலாம். பொதுவாக ஒருவருக்கு வலிப்பு வருகிறது என்றால் அது சாதாரண வலிப்பா அல்லது தொடர்ந்து வரக்கூடிய காக்கா வலிப்பா என்பதை நாங்கள் பரிசோதித்து பார்ப்போம். காரணம் சிலருக்கு சர்க்கரையின் அளவு குறைவதாலோ அல்லது ஃபுட் பாய்சன் பிரச்சினை காரணமாகவோ கூட இந்த வலிப்பு பிரச்சனை ஏற்படலாம். ஆனால் அது தற்காலிகமானதுதான். இது வலிப்பு நோய் கிடையாது, அதற்கு தொடர்ச்சியான மருந்துகளும் தேவைப்படாது. ஒருவேளை அது தொடர்ந்து தொந்தரவு தரக்கூடிய வலிப்பு நோயாக இருந்தால், அந்த பாதிப்பிலிருந்து வெளிவர மாத்திரை மருந்துகள் தருவோம். பின்னர் அந்த வலிப்பு பிரச்சனைக்கான காரணத்தை ஆராய்ந்து சில சமயம் அறுவை சிகிச்சை கூட செய்வோம். ஆனால் அதிகப்படியான வலிப்பு நோய்கள், மாத்திரை மருந்துகள் மூலமாகவே சரி செய்யப்படுகின்றன. சில சமயம் குழந்தைகளுக்கு வரக்கூடிய வலிப்பு, அவர்கள் வளர வளர தானாகவே சரியாகக் கூடிய வாய்ப்புகளும் இருக்கின்றன. இதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
