இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

உலகளவில் நிறையப்பேருக்கு தெரிந்திராத, அதேசமயம் பல வியாதிகளுக்கு குறைந்த செலவில் தீர்வு அளிக்கக்கூடிய மருத்துவமுறைகளில் ஒன்றுதான் அக்குபஞ்சர். இந்த சிகிச்சைமுறையில் மருந்து மாத்திரைகள் எதுவும் சாப்பிட தேவையில்லை. இருப்பினும் இதன்மூலம் மற்ற மருத்துவமுறைகளால் குணப்படுத்த முடியாது என்று சொல்லப்பட்ட பல வியாதிகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்கிறார் அக்குபஞ்சர் மருத்துவர் லூர்து சேத். குறிப்பாக, ஆஸ்துமா, முதுகெலும்பு மற்றும் கழுத்து போன்ற பகுதிகளில் இருக்கும் வலி, பிடிப்பு மற்றும் இறுக்கம் போன்ற பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு கிடைக்கும் என்கிறார் அவர். மேலும் வேறு எந்த மருத்துவ முறைகளாலும் குணப்படுத்த முடியாத என்னென்ன வியாதிகளை அக்குபஞ்சர் மூலம் குணப்படுத்தலாம் என்பது குறித்து நம்முடன் உரையாடுகிறார்.

அக்குபஞ்சரில் என்னென்ன வியாதிகளுக்கு உடனடியாக முழுமையான தீர்வு கிடைக்கும்?

வலி வந்தால்தான் ஒரு நோயாளி மருத்துவரையே பார்க்க வருவார். நான் சரியாக வேலை செய்யவில்லை என்பதை உள்ளிருக்கும் ஒரு உறுப்பு உணர்த்துவதைத்தான் வலி என்று மருத்துவர்கள் சொல்கின்றனர். அந்த வலியை நீக்குவதுதான் ஒரு மருத்துவர் நோயாளிக்கு செய்யும் முதல் சிகிச்சையாக இருக்கவேண்டும். அக்குபஞ்சரில் சரியான நரம்பை தூண்டிவிடுவதன்மூலம் அந்த வலி போய்விடும். சில நோயாளிகளுக்கு ஒன்று முதல் 3 நிமிடங்களுக்குள்ளாகவே வலி நீங்கிவிடும். அதை நோயாளிகள் பாசிட்டிவாக நினைப்பார்கள். குறிப்பாக, ஆஸ்துமா நோயாளிகளுக்கு 30 நொடிகளில் பிரச்சினை சரிசெய்யப்படுவதால் நிறையப்பேர் அக்குபஞ்சர் சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்கள். அதேபோல் நாள்பட்ட இதய நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மார்பில் இருக்கும் இறுக்கம் மற்றும் வலி போன்றவற்றை 5 நிமிடங்களில் சரிசெய்துவிட முடியும். ஆனால் அந்தந்த உறுப்புகளில் இருக்கும் பிரச்சினைகளை சரிசெய்ய சிறிது நாட்கள் தேவைப்படும். ஆனால் நிறையப்பேர் வலி போனால் போதும் என்று மேற்கொண்டு சிகிச்சையெடுக்க மறுக்கின்றனர்.


ஆஸ்துமாவுக்கு அக்குபஞ்சரில் சிறந்த சிகிச்சை

அக்குபஞ்சர் மருத்துவத்தில் நீங்கள் சந்தித்த சவாலான நோயாளிகள் குறித்து கூறுங்கள்!

ஒரு அம்மாவிற்கு வலதுபக்க மார்பகத்தில் கட்டி இருந்தது. ஒரு குறிப்பிட்ட நாளில் அவர்களுக்கு அறுவைசிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர் ஏற்கனவே என்னிடம் ஆஸ்துமா, கழுத்து பிரச்சினை போன்றவற்றிற்கு சிகிச்சை எடுத்திருந்தார். அறுவைசிகிச்சையன்று காலை என்னிடம் ஃபோன் செய்து, தனக்கு இருக்கும் பிரச்சினை குறித்தும் அறுவைசிகிச்சை குறித்தும் கூறினார். அவரை என்னிடம் சிகிச்சைக்கு வரும்படி கூப்பிட்டேன். அவருடைய மார்பகத்தில் இருந்த கட்டி ஒரே நிமிடத்தில் இல்லாமல் போய்விட்டது. அதேபோல் இன்னொரு நபருக்கு கழுத்தில் கட்டி இருந்தது. 6 மாதங்களாக பல்வேறு சிகிச்சைகள் எடுத்தும் பலன் கிடைக்கவில்லை. என்னிடம் சிகிச்சையெடுத்து குணமடைந்தார்.

வேறு எந்த சிகிச்சைகளாலும் குணப்படுத்த முடியாத பிரச்சினையை அக்குபஞ்சரில் குணப்படுத்த முடியும் என்று உங்களால் உறுதியாக சொல்லமுடியுமா?

உடலில் ஏற்படும் எந்த வியாதியையும் முழுமையாக குணப்படுத்த முடியும் என்று அறிவியல் மருத்துவத்தில் இதுவரை யாரும் உத்தரவாதமாக எழுதி கொடுத்ததில்லை. இருந்தபோதிலும் ‘நோய் முழுமையாக குணமடையாவிட்டால் பணம் முற்றிலும் திருப்பி அளிக்கப்படும்’ என நோட்டீஸ் அடித்து கொடுத்தேன். வியாதியுடன் வரும் ஒருவருக்கு அந்த வியாதி குணமாகுமா ஆகாதா என்பது முதல் நாளே நமக்கும் தெரிந்துவிடும் நோயாளிக்கும் தெரிந்துவிடும். சிகிச்சை பெற்ற உடனேயே சில மாற்றங்கள் தெரியும். உதாரணத்திற்கு, உட்கார்ந்தால் எழுந்துகொள்ளவே முடியாது என்ற நிலையில் ஒரு நோயாளி வந்தார். சிகிச்சை முடிந்தவுடன், அவர் திரும்ப திரும்ப உட்கார்ந்து எழுந்து பார்த்தார். சிகிச்சையால் பலன் கிடைக்கிறது என்பதை அவர் அப்போதே புரிந்துகொண்டார். அக்குபஞ்சரை பொருத்தவரை நூறில் 99 பேருக்கு சிகிச்சை நல்ல பலனளிக்கும். இதை மனதில் வைத்துதான் அப்படி நோட்டீஸ் கொடுத்து விளம்பரம் செய்தேன். சிகிச்சையளித்தும் நோயாளிக்கு பலன் கிடைக்கவில்லை என்றால் அவரிடமிருந்து பணம் பெறுவது தவறு. வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்துவிடுவேன். இதுவரை நான் சிகிச்சையளித்ததில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நோயாளியிடம் வாங்கிய பணத்தை முதல் நாளிலேயே திருப்பிக் கொடுத்தேன். அந்த நபருக்கு டூவீலர் ஆக்ஸிலேட்டர் கொடுக்கும்போது கரன்ட் ஷாக் அடிப்பதுபோன்ற உணர்வு ஏற்படும். இதே பிரச்சினையை மற்றொரு நபருக்கு நான் சரி செய்திருந்தேன். ஆனால் இந்த நபருக்கு குணப்படுத்த முடியவில்லை. ஏனென்றால் குறிப்பிட்ட பிரச்சினைக்கு எந்த இடத்தை தூண்டிவிட வேண்டும் என்று இருக்கும். அந்த இடத்தை தூண்டும்போது அது ரியாக்ட் ஆகவேண்டும். அப்படி ஆகாவிட்டால் எத்தனை முறை செய்தாலும் ஆகாது என்று அர்த்தம். அப்படித்தான் முதல் நாளிலேயே அந்த நபருக்கு சிகிச்சை பலனளிக்காது என்று தெரிந்துவிட்டது.


சரியான நரம்பை தூண்டுவதன்மூலம் சில நிமிடங்களில் குணமாக்கப்படும் கட்டிகள்

அக்குபஞ்சர் சிகிச்சைமூலம் என்னென்ன வியாதிகளை முழுமையாக குணப்படுத்த முடியும்?

நிறைய வியாதிகளை குணப்படுத்த முடியும். ஒருசில வியாதிகளில் நிலைகள் மாறி இறுதிகட்டத்தில் இருக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில்லை. ஆஸ்துமா, வீஸிங், வெரிக்கோஸ் வெய்ன், முதுகுத்தண்டு பிரச்சினைகள் போன்றவற்றை 100% குணப்படுத்த முடியும்.

மூல வியாதி, உடற்சூடு போன்றவற்றிற்கு அக்குபஞ்சரில் சிகிச்சை உண்டா?

மூல வியாதிகளுக்கு அக்குபஞ்சரில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ரத்தமூலத்திற்கு ஒரே ஒரு ஊசி போடுவதன்மூலம் ரத்தம் வெளியேறுவதை உடனடியாக நிறுத்தமுடியும். அதிகப்படியான உடற்சூட்டால்தான் மூலவியாதி வருகிறது. உடலில் சூடு அல்லது குளிர் என எது அதிகமானாலும் பிரச்சினைதான்.


உள்ளுறுப்புகளை அறுவைசிகிச்சை செய்யாமலேயே குணப்படுத்தும் அக்குபஞ்சர் மருத்துவம்

அலோபதியில் இதுபோன்ற வியாதிகளுக்கு உடனடியாக அறுவைசிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்கிறார்கள். மேலும் சில பிரச்சினைகளுக்கு உறுப்பையே அகற்றவேண்டும் என்று சொல்கிறார்கள். அவர்களுக்கு அக்குபஞ்சரில் என்னமாதிரியான தீர்வு அளிக்கப்படுகிறது?

உறுப்பை அகற்றாமல் வரும்போது அக்குபஞ்சரில் குணப்படுத்தமுடியும். அதுவே உறுப்பை அகற்றிவிட்டால் குணப்படுத்த முடியாது. உதாரணத்திற்கு பித்தப்பையில் கல் இருந்தால் அதை எடுக்கும் முன்பே நான்-வெஜ் உணவுகளை சாப்பிடக்கூடாது என்று சொல்லமாட்டார்கள். பித்தப்பை என்பது ஒரு பை போன்றது. அதில் கல்லீரலிலுள்ள நீர் எல்லாம் வந்து தேங்கும். அதுதான் பித்தநீர். அதிகப்படியான நான்-வெஜ் அல்லது எண்ணெய் உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது அது ஜீரணமாகாது. அதன்மீது பித்தநீர் கொட்டப்படும்போது ஜீரணமடைந்துவிடும். இப்படித்தான் உணவு செரிமானங்கள் நடக்கிறது. பித்தப்பையை நீக்கிவிடும்போது செரிமானம் நடக்காது. அதேபோலத்தான் கர்ப்பப்பையும்.

புற்றுநோயை அக்குபஞ்சரில் குணப்படுத்தமுடியுமா?

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஸ்டேஜ் தாண்டிவிட்டால் அவர்களுடைய மரணம் திடீரென ஏற்படும். உதாரணத்திற்கு, ஒரு புற்றுநோயாளியின் அம்மாவிற்கு வீட்டிற்கு சென்று நான் சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தேன். ஒருநாள் அவர்கள் என்னை சிகிச்சைக்கு கூப்பிடாததால் நான் அவர்களுக்கு நெருங்கிய ஒருவரை அழைத்து விசாரித்தேன். அப்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பெண் இறந்துவிட்டதாக என்னிடம் சொன்னார்கள். அதற்கும் இரண்டு நாட்களுக்கு முன்புகூட அவர் நன்றாக சிரித்து பேசிக்கொண்டு, தனக்கு அளிக்கப்பட்ட கீமோதெரபி சிகிச்சை குறித்து என்னிடம் பேசிக்கொண்டே எனக்கு காபி போட்டு கொடுத்தார். இந்த அனுபவத்திற்கு பிறகு நான் புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில்லை.

Updated On 3 Dec 2024 5:44 AM GMT
ராணி

ராணி

Next Story