இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

மனித உறுப்புகளில் உள்ளுறுப்புகள் மட்டுமின்றி வெளிப்புற உறுப்புகளிலும் மிக முக்கிய பங்கு வகிப்பது பற்கள். ஒரு மனிதனை அவனது புன்னகை வழியாக அழகாக காண்பிப்பதிலும் பற்கள் முக்கிய பங்காற்றுகின்றன. அப்படி முக்கியத்துவம் வாய்ந்த இந்த பற்களை பராமரிப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. என்னதான் நாம் பற்களை பார்த்து பார்த்து பராமரித்தாலும் பற்களின் அமைப்பு, அதனால் உண்டாகும் பிரச்சினைகள், பல் சொத்தை, பல் கூச்சம் இப்படியான தொந்தரவுகளை அடுக்கிக்கொண்டே போகலாம். அதற்கெல்லாம் தீர்வளிக்கும் விதமாக நமது ஆரோக்கியம் பகுதியில் அவ்வப்போது பல் மருத்துவர்களின் ஆலோசனைகளை கேட்டு தெரிந்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் பல் மருத்துவத்துறையில் சிறந்து விளங்கும் பல் மருத்துவரான திரு ஜே. ஹரிஹரனின் நேர்காணல் தொகுப்பை இங்கே காணலாம்.

பல் பராமரிப்பில் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

பல் போச்சு என்றால் சொல் போச்சு என்ற பழமொழி உண்டு. அது பழமொழியாக இருந்தாலும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வார்த்தை. பற்கள் உபயோகம் என்பது மூன்று வகைகளாக உள்ளன. ஒன்று அழகு, இரண்டாவது உச்சரிப்பு, மூன்றாவது மென்று சாப்பிடுவது. மூன்றுக்கும் சமமான பங்கு இருந்தாலும் இதில் பிரதானமாக இருப்பது மென்று சாப்பிடுவதற்குதான். ஏனென்றால் நாம் சாப்பிடும் உணவை நன்கு மென்று உள்ளே தள்ள நமது பற்கள்தான் பெரிதும் உதவுகின்றன. நாம் நம் உணவை வாயில் போட்டு நன்கு மென்று கொழகொழ பதத்திற்கு உள்ளே தள்ளும்போதுதான் செரிமான பிரச்சினை ஏற்படாமல் இருக்கும். உணவை சரியாக மெல்லாமல் ராவாக உள்ளே தள்ளும்போது செரிமானம் ஆகாது. அதேபோன்று ஒருவரிடம் அவரின் புன்னகையை பார்த்தவுடன்... அவள் அழகா இருக்கா.. அவன் அழகா இருக்கான்.. என்று சொல்லுவோம். அப்படிப்பட்ட அந்த அழகு புன்னகைக்கு இரண்டாவதாகத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆனால், இன்று பெரும்பாலானவர்கள் அந்த புன்னகைக்குதான் முதலில் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இதுதவிர பல் போச்சுன்னா நமது உச்சரிப்பு சரியாக இருக்காது. அதனால் பற்களில் இந்த மூன்று விஷயங்களை எப்போதும் கவனத்தில் கொள்வது நல்லது.


ஆரோக்கியம் மட்டுமல்லாமல் புன்னகை வழியாகவும் நம்மை அழகாக காண்பிப்பதில் முக்கிய பங்காற்றும் பற்கள்

பல் கூச்சத்தில் தொடங்கி பல் சொத்தை, ஈறுகளில் வீக்கம் என்று பல தொந்தரவுகள் ஏற்படும். இதனை ஆரம்ப நிலையிலேயே எப்படி சரி செய்வது?

நாம் உண்ணும் உணவு பொருட்கள் இரவு முழுவதும் பற்களில் தங்கும்பொழுது எளிதாக பல் சொத்தை ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் தூங்க செல்லும் முன் பல் துலக்கிவிட்டு படுப்பது நல்லது. இதுதான் நாம் முதலில் செய்ய வேண்டியது. சரி இதையும் நாம் செய்ய தவறிவிட்டோம், இப்பொழுது பற்களில் கருப்பு கருப்பு புள்ளிகள் தெரிகிறது என்றால், புத்திசாலித்தனமாக உடனே உங்களின் பல் மருத்துவரிடம் சென்று கருப்பு புள்ளிகளை நீக்கிவிட்டு பல் கலரிலேயே ஃபில்லிங் செய்துவிட வேண்டும். அப்படி செய்யும்பொழுது அந்த பற்கள் நிரந்தரமாக காப்பாற்றப்பட்டுவிடும். ஆனால், அதையும் செய்ய மாட்டார்கள். பல் கூச்சமாக இருந்தது... உப்பு தண்ணி போட்டு கொப்பளித்தேன் சரியாகிவிட்டது என்று சாதாரணமாக கடந்து போய் விடுவார்கள். இதற்கு பிறகுதான் பல்லின் உண்மையான வலியே ஆரம்பிக்கும். அப்போதுதான் ரூட் கேனல் என்ற சிகிச்சை ஆரம்பிக்கும். இந்த நவீன சிகிச்சைகள் எல்லாம் சாதாரண ஃபில்லிங், அதாவது பல் அடைப்புக்கு செய்யும் சிகிச்சையை விட அதிக செலவை வைப்பவை. அதனால்தான் பல்லில் கருப்பு புள்ளி தெரிய ஆரம்பிக்கும்போதே அதனை சரிசெய்து கொள்ளச் சொல்லி அறிவுறுத்துகிறோம்.

பற்கள் தொடர்பாக குழந்தைகளிடம் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன?


குழந்தைகளுக்கு பற்களில் வரும் கருப்பு புள்ளிதான் சொத்தையாக மாறுகிறது - மருத்துவர் ஹரிஹரன்

குழந்தைகளை தூங்க வைக்கும்போது பெரும்பாலான தாய்மார்கள் ஃபீடிங் பாட்டில் மூலமாக பால் கொடுப்பார்கள். அப்படி கொடுக்கப்படும் பால் அப்படியே அதனுடைய பற்களில் தங்கும். குறிப்பாக, குழந்தைகளுக்கு பற்கள் முளைக்க ஆரம்பித்துவிட்டாளே பல்துலக்க ஆரம்பித்துவிட வேண்டும். அப்படி தேய்க்க முடியாவிட்டால், பால் குடித்துமுடித்த கொஞ்சம் நேரம் கழித்து ஒரு டம்ளர் தண்ணீர் கொடுத்து விடுங்கள். அப்படி கொடுத்துவிட்டால் குழந்தை குடித்த பால், பற்களில் தங்காமல் கிளீன் ஆகிவிடும். அப்படி செய்யாமல் விடும்போதுதான் நான்கு வயது குழந்தைகள் சிலருக்கு பற்கள் விழுவதற்கு முன்பாகவே அவர்களின் பற்களில் கருப்பு கருப்பு புள்ளியாக சொத்தைகள் வர ஆரம்பித்து பார்ப்பதற்கு அசிங்கமாக காட்சியளிக்கும். அதனை ராம்பன்ட் கேரிஸ் என்று சொல்லுவார்கள். பால் பொருட்கள் மட்டுமல்ல எந்த உணவு கொடுத்தாலும் அவர்களை பல் துலக்க பழக்க வேண்டும். இல்லையென்றால் வாய் கொப்பளிக்கவாவது பழக்க வேண்டும். அப்படி செய்யும்பொழுது சொத்தை வராமல் தவிர்க்க முடியும்.

பற்களில் கால்சியம், எனாமல் குறையும்போது என்ன மாதிரியான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது?

குழந்தை அம்மாவின் வயிற்றில் இருக்கும்போதே அதற்கு தேவையான கால்சியம் சென்றுவிடும். அதற்கு கருவுற்றிருக்கும் போதே தாய்மார்களும் சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். குழந்தை பிறந்த பிறகு பல்லுக்கு தனியாக கால்சியம் என்று எதுவும் தனியாக கொடுக்க முடியாது. ஃப்ளூரைடு வேண்டுமானால் கொடுக்கலாம். அது எப்படி என்றால் பற்களுக்கென்று ஃப்ளூரைடு அதிகமாக உள்ள பேஸ்ட், மவுத்வாஷ் போன்றவற்றை கொடுத்து அதை அவர்கள் பயன்படுத்தும் போது சொத்தைகள் ஏற்படும் தன்மை குறைவாகும்.


குழந்தை கருவில் இருக்கும்போதே தாய்மார்கள் சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும்

நாம் சரியான பேஸ்ட்டைதான் பயன்படுத்துகிறோமா என்பதை எப்படி தெரிந்துகொள்வது?

அனைத்து பேஸ்ட்டுகளுக்கான அடிப்படை இன்கிரிடியன்ஸ் ஒன்றுதான். இன்னும் சொல்லப்போனால் நீங்கள் சாப்பிட ரைஸ் வேண்டும் என்றால் அது புழுங்கல் அரிசியா, பச்சரிசியா, சிவப்பா என்பது நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அதுமாதிரிதான் டூத் பேஸ்டும். நீங்கள் வாங்கும் பேஸ்ட் அனைத்துமே தரம் வாய்ந்ததுதான். ஃபிளேவர்ஸ், ஸ்மெல், இன்கிரிடியன்ஸ் மட்டும்தான் மாறுபடும். அதேபோன்று குழந்தைகளுக்கான பேஸ்டில் ஃப்ளூரைடு அதிகமாக இருக்கும். அது பெரியவர்களுக்கு தேவை இல்லை. ஈறுகளில் பாதிப்பு, ரத்தம், பல் கூச்சம் என ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் ஏற்ற வகையில் ஒரு பேஸ்ட் இருக்கிறது. அது அனைத்துமே மெடிக்கல் எலமென்ட்டாக மாறிவிடும். அப்படி மாறும்பொழுது உங்களது டென்டிஸ்ட் எந்த பிரச்சினைக்கு என்ன பேஸ்ட் பயன்படுத்த வேண்டும் என்பதை அறிவுறுத்துவார். அதை தாண்டி காலை, மாலை பல் துலக்குவதற்கு நாம் எந்த பேஸ்டை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அதனால் எந்த பாதிப்பும் இல்லை.


எந்த பேஸ்டை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் - மருத்துவர் ஹரிஹரன்

வாய் துர்நாற்றம் பிரச்சினையை தவிர்க்க என்ன மாதிரியான விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்? அந்த பிரச்சினையை எப்படி முழுமையாக சரி செய்வது?

வாய் துர்நாற்றத்தை உள்ளூர் காரணிகள், அமைப்பு ரீதியான காரணிகள் என இரண்டாக பிரிக்கலாம். இதில் லோக்கல் ஃபேக்டர்ஸ் வாயில் இருந்து வரக்கூடிய பிரச்சினைகள். சிஸ்டமிக் ஃபேக்டர்ஸ் என்பது வயிற்றில் இருந்து வரக்கூடியவை. இதை இன்னும் எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் SECONDARY TO SOME OTHER PRIMARY ELEMENT அதாவது இரண்டாம் நிலை முதல் வேறு சில முதன்மை நிலைகள் காரணமாக இப்படி உண்டாகலாம். இதை தாண்டி ஒரு பல் மருத்துவரிடம் சென்று துர்நாற்றம் வருகிறது என்று கூறினால் அவர் லோக்கல் ஃபேக்டர்ஸ்கான சிகிச்சை முறைகளான பல் துலக்குதல், மவுத் வாஷ் செய்தல் போன்ற முறைகளை பின்பற்ற அறிவுறுத்துவார். மேற்கொண்டு வருடத்திற்கு ஒருமுறையாவது பல் மருத்துவரிடம் நேரடியாக சென்று கிளீன் செய்து கொள்வது நல்லது. அப்படி தொடர்ந்து செய்வதன் மூலம் லோக்கல் ஃபேக்டர்ஸை தடுத்து நிறுத்தலாம். அதேபோன்று வாய் வழியாக நாம் பயன்படுத்தும் சிகரெட், குடி, பான்மசாலா, வெற்றிலை போன்றவற்றாலும் வரக்கூடிய துர்நாற்றமும் இருக்கிறது. இதையெல்லாம் சரியாக கவனித்து சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.

வெற்றிலை பாக்கு போடுவதால் செரிமான பிரச்சினையை சரி செய்வதோடு, நமது பல் கெட்டிப்படும் என்று கூறுகிறார்களே அது உண்மையா?

கண்டிப்பாக இல்லை. செரிமானத்திற்கு வேண்டுமானால் உதவலாமே தவிர பல் ஸ்ட்ராங் அதாவது கெட்டிப்படுவதற்கும், அதற்கும் சம்பந்தம் இல்லை. ஒருவேளை அப்படி சொல்லி வெற்றிலை போடுபவர்கள் ஏதோ ஒரு பொய்யை சொல்லி அதை பயன்படுத்த முயற்சிக்கிறார்கள் என்று அர்த்தம். எதையும் அளவோடு பயன்படுத்துவது நல்லது. வெற்றிலையில் நிறைய நன்மைகள் இருக்கின்றன. ஆனால், அதனை பயன்படுத்திய பிறகு உடனே பல்துலக்கி விடுவது இன்னும் சிறந்ததாக இருக்கும்.


வாய்ப்புண்கள் போன்ற உள்ளூர் காரணிகளாலும் வாய் துர்நாற்றம் வரும் - மருத்துவர் ஹரிஹரன்

நமது பல்லுக்கும், இதயத்துக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா?

அப்படி ஏதும் நான் படித்தது இல்லை. எந்த புத்தகத்திலும் அப்படி கூறவும் இல்லை. ஆனால், சிலர் தொடர்பு இருக்கிறது என்று எப்படி கூறுகிறார்கள் என்றால், வாய் வழியாகத்தான் நாம் அனைத்து உணவுகளையும் உட்கொள்கிறோம். அப்படி சாப்பிட்ட பிறகு அதனை நாம் சரியாக கிளீன் செய்யாமல் விடும்பொழுது வாயில் உண்டாகும் பாக்டீரியா நமது உடம்பில் எல்லா இடங்களுக்கும் செல்லும். அப்படி செல்லும்போது அந்த பாக்டீரியா நமது ரத்தத்தில் கலந்து எல்லா உறுப்புகளுக்கும் போவதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன. அப்படித்தான் ஒரு உறுப்போடு தொடர்புபடுமே தவிர நேரடியாக இதயத்துக்கும், பல் நரம்புக்கும் தொடர்பு இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

வாய் புற்றுநோய்க்கும், பல் பிரச்சினைகளுக்கும் சம்பந்தம் இருக்கிறதா?

பல்லை சரியாக பராமரிக்க வில்லை என்பதால் மட்டும் வாய் புற்றுநோய் வந்துவிடாது. பல் இல்லாதவர்கள் பல் செட் மாட்டுவார்கள். அப்படி மாட்டும் பொழுது ஒரு அழுத்தம் என்பது ஈறுகளில் இருக்கும். அப்படி அந்த பல்செட் ஈறுகளை அழுத்தி ஏற்படும் புண்களாலும், ஸ்மோக்கிங், ஆல்கஹால் போன்ற பயன்பாடுகளாலும் வாய் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதே தவிர சரியான கிளீனிங் இல்லாததால் வருகிறது என்று கூற முடியாது.

Updated On 14 Jan 2025 12:00 AM IST
ராணி

ராணி

Next Story