பொதுவாகவே மழைக் காலங்கள் என்றில்லாமல் பனி, குளிர் போன்ற பருவநிலை மாற்றங்களின் போதும் பெரியவர்கள் தொடங்கி சிறியவர்கள் வரை அனைவருக்கும் மிக எளிதாக உடல்நல பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய பிரச்சினைகளில் தலையாய பிரச்சினையாக இருப்பது உடல் வலி, தலைவலி, காய்ச்சல், ஜலதோஷம், இருமல் போன்றவைதான். இந்த மாதிரியான உடல்நல பிரச்சினைகளில் இருந்து நம்மை முழுவதுமாக பாதுகாத்துக்கொள்ள நாம் செய்ய வேண்டிய முதல் விஷயம் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வதுதான். உணவே மருந்து, மருந்தே உணவு என்ற பழமொழியை பலரும் சொல்ல கேள்விப்பட்டிருப்போம். ஆனால், நாம் அதனை பின்பற்றுகிறோமா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அந்த வகையில், பிரசவித்த தாய்மார்களுக்கு பிரதானமாக செய்து கொடுக்கப்படும் மருந்து குழம்பு மற்ற பிரச்சினைகளுக்கு தீர்வை தரும் வகையிலும் அதற்கு தகுந்த மாதிரியும் நம் வீட்டில் பெரியவர்கள் செய்து கொடுப்பார்கள். நம் சமயலறையில் இருக்கும் இயற்கை மூலிகைகள் கொண்டு செய்யப்படும் இந்த மருத்துவ குணங்கள் நிறைந்த மருந்து குழம்பு எப்படி செய்யப்படுகிறது என்பதை செய்து காட்டுகிறார் சமையல் கலைஞர் தாமரை செல்வி.
மருந்து குழம்பு
மருந்து குழம்பு செய்முறை
கடாயில் ஒரு சட்டியை வைத்து, அதில், எடுத்து வைத்துள்ள நாட்டு மருந்து பொருட்கள் அனைத்தையும் போட்டு கருக்கி விடாமல் குறைந்த தீயில் வைத்து வாசம் வரும்வரை பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
இந்த பொருட்களுடன் காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலையையும் சேர்த்து வறுத்து கொள்ளவும்.
பிரசவித்த பெண்களுக்கு மருந்து குழம்பு வைத்து கொடுப்பதாக இருந்தால் காய்ந்த மிளகாயை சேர்க்காமல் தவிர்த்துவிடுவது நல்லது.
இப்பொழுது வறுத்த பொருட்களை சூடு ஆறியதும் மிக்சியில் போட்டு அரைத்து, திப்பி திப்பியாக இல்லாமல் நன்கு சலித்து பவுடராக எடுத்துக்கொள்ளவும்.
தேவையான பொருட்களை மிதமான சூட்டில் வறுத்தல்
இதனை தொடர்ந்து, கடாயில் ஒரு சில்வர் பாத்திரத்தை வைத்து அதில் செக்கில் ஆட்டிய 150 கிராம் அளவிலான நல்லெண்ணெய்யை ஊற்றிக்கொள்ளவும்.
எண்ணெய் சூடானதும் எடுத்து வைத்துள்ள கருவடகத்தை போட்டு அது பொரிந்ததும், இரண்டு துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள 200 கிராம் சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக மாறும் தருணத்தில் உரித்து வைத்துள்ள பூண்டு, கறிவேப்பிலை, தக்காளி ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.
இவை அனைத்தும் நன்கு வதங்கியதும் ஊறவைத்துள்ள ஆரஞ்சுப்பழ அளவு புளியை கரைத்து அதில் ஊற்றி கொதிக்க விடவும்.
இப்பொழுது நன்கு கொதித்து, புளி வாசனை போனதும் அதில் நாம் வறுத்து பொடி செய்து வைத்துள்ள மருந்து பொடியை இரண்டு ஸ்பூன் அளவுக்கு போட்டு, மேலாக நான்கு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு ஒரு கொதி வைத்து இறக்கினால் போதும் மருந்து குழம்பு தயார்.
வெங்காயம், பூண்டு, தக்காளி ஆகியவற்றை வதக்கிய பிறகு புளிக்கரைசலை ஊற்றும் தருணம்
சாதம், இட்லி ஆகியவற்றிற்கு போட்டு சாப்பிட்டால் அவ்வளவு சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.
மருந்து குழம்பு பயன்பாடு மற்றும் அதில் உள்ள நன்மைகள்
மாதத்தில் இரண்டு முறையாவது இந்த குழம்பு எடுத்துக்கொள்வது நல்லது.
வாரத்தில் ஒரு முறையாவது ஓமத்தை காய்ச்சி குடிப்பது நல்லது.
கருஞ்சீரகம் கர்ப்பப்பை, மாதவிடாய் போன்ற பெண்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு நல்லது.
அரிசி திப்பிலி நோய் எதிர்ப்பு சக்தி, நுரையீரல் பிரச்சினைகள் போன்றவற்றிற்கு உகந்தது.
தலைக்கு குளித்துவிட்டு வாரத்தில் இரண்டு முறையாவது இந்த மருந்து குழம்பு வைத்து சாப்பிடுவது சிறந்தது.
தலைவலி, கை, கால் வலி, வாய்வு பிடிப்பு, பித்தம் தொடர்பான பிரச்சினைகளுக்கு மருந்து குழம்பு மிகவும் நல்லது.
குழந்தைகளுக்கும் வாரத்தில் இரண்டு முறை இந்த குழம்பை கொடுக்கலாம்.
பூண்டு நெஞ்சு சளி பிரச்சினைகளுக்கு மிகவும் நல்லது.
மருந்து குழம்பில் காய்கள் எதுவும் சேர்க்கக்கூடாது. அப்படி சேர்த்தால் பிடிக்கும் என்பவர்கள் நாட்டு கத்தரிக்காய் மட்டும் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளலாம். அதை வெங்காயம், தக்காளி வதக்கும்போதே போட்டு வதக்கி கொள்வது நல்லது.
மருந்து குழம்பு, பருப்பு துவையலுக்கு தாளிப்பை போடும் தருணம்
மருந்து குழம்புக்கு ஏற்ற பருப்பு துவையல் செய்வது எப்படி என்பதை இங்கு பார்ப்போம்.
பருப்பு துவையல் செய்முறை
ஒரு கடாயில் செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் ஒரு ஸ்பூன் விட்டு அதில் துவரம் பருப்பு, சீரகம், மிளகு, பூண்டு, வரமிளகாய், புளி, துருவிய தேங்காய் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
துவரம் பருப்பு, சீரகம், மிளகு, பூண்டு, வரமிளகாய், புளி, துருவிய தேங்காயை வறுக்கும் தருணம்
வறுத்தெடுக்கப்பட்ட அனைத்து பொருட்களையும் சூடு ஆறியதும் மிக்சியில் போட்டு சிறிதளவு உப்பு சேர்த்து கொரகொரப்பாக கெட்டியான பதத்தில் அரைத்து எடுத்து, அதில் தாளிப்பு போட்டால் மருந்து குழம்புக்கு ஏற்ற சுவையான பருப்பு துவையல் ரெடி.